NationNews

அம்மா தி.மு.க.,வுக்கு பிரசாரம் -மகள் நா.த.க. வேட்பாளர்

Getting your Trinity Audio player ready...

“இலங்கைத் தமிழர்கள் விடயத்தில் நாம் தமிழர் கட்சி எடுக்கும் நிலைப்பாடுதான் இக்கட்சியில் நான் இணைவதற்கு முக்கிய காரணம். ‘தமிழ் தேசம்’ என்பது வேலுப்பிள்ளை பிரபாகரனின் கருத்தியல் அடிப்படை. அதுவே என் தந்தையினதும் இப்போது தலைவர் சீமானினதுமாகும். – வித்யாராணி”

சந்தனக் கட்டை கடத்தலில் பிரபலமானவரும் தமிழ்நாடு காவல்துறையினால் வஞ்சகமான முறையில் கொல்லப்பட்டவருமான வீரப்பனின் மகள் வித்யாராணி நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கிருஷ்ணகிரி தொகுதியில் களமிறங்குகிறார். நான்கு வருடங்களுக்கு முன்னர் பா.ஜ.க. வின் இளையோர் தலைவியாக இருந்து நரேந்திர மோடியைத் தந்தையெனப் போற்றிவந்த வித்யாராணி நாம் தமிழர் கட்சியில் இணைந்ததுமே அவருக்கு கிருஷ்ணகிரி வேட்பாளர் அனுமதி கிடைத்துவிட்டது.

தொழிலால் வழக்கறிஞரான, 34 வயதுடைய வித்யாராணி 2020 இல் பாரதீய ஜனதா கட்சியின் இளையோர் அணித் தலைவியாக நியமிக்கப்பட்டிருந்தார். கிருஷ்ணகிரி மாவட்ட மலைவாழ் மக்களின் உரிமைகளுக்காகப் போராடிய தனது தந்தை கொல்லப்பட்டு இருபது ஆண்டுகளுக்குப் பின் அவர் பாதையில் பயணித்து மக்களின் சேவையத் தொடர விரும்புவதாக அவர் கூறுகிறார்.

கர்நாடகாவை மேற்கு எல்லையாகவும் ஆந்திராவை வடக்கு எல்லையாகவும் கொண்ட கிருஷ்ணகிரி கிரனைட் கரும்பாறைகளுக்குப் பெயர்போனது. இங்கு வாழும் மக்கள் சந்தனக்கட்டை வீரப்பன் மற்றும் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆகியோர்மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருப்பவர்கள். இந்த இருவரையும் போற்றிக் கொண்டாடும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை ‘மாமா’ என அழைக்கும் வித்யாராணிக்கு தமிழ்த் தேசிய ஆதரவு வாக்குகள் கணிசமாகக் கிடைப்பதற்கு வாய்ப்புகள் உண்டு.

ஆரம்பத்தில் சந்தனக் கட்டை கடத்தல் மற்றும் யானைக் கொலைகளில் ஈடுபட்டு வந்த வீரப்பன் பின்னர் தமிழ்நாடு விடுதலை இராணுவம் என்ற அமைப்பைத் தோற்றுவித்து மலைவாழ் மக்களின் உரிமைகளுக்காகவும் , தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிடும்படி கோரிக்கையை முன்வைத்தும், தமிழீழ விடுதலைப் போராட்டத்தை ஆதரித்தும் பல கோரிக்கைகளை முன்வைத்திருந்தார். தேயிலைத் தோட்டங்களில் பணிபுரியும் மலைவாழ் மக்களின் ஊதியத்தை அதிகரிக்கும்படி கேட்டு அவர் போராடியிருந்தார். இதற்காக அவர் கன்னட பிரபல திரைப்பட நடிகர் ராஜ் குமார் மற்றும் ஜனதா தள கட்சியின் தலைவர் எச். நாகப்பா ஆகியோர்களைக் கடத்தி சில நிபந்தனைகளை முன்வைத்திருந்தார். இச்சம்பவத்தைத் தொடர்ந்து நாகப்பா உயிரிழந்திருந்தார். இதன்காரணமாக கர்நாடக மற்றும் தமிழ்நாடு விசேட காவல்படையினர் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின்போது அக்டோபர் 2004 இல் அவர் கொல்லப்பட்டார்.

“எனது தந்தையார் சம்பாதித்த பணத்தின் ஒரு பைசாவைக்கூட நான் அனுபவித்ததில்லை. இக்காடுகளில் வாழும் உங்களுக்குத்தான் அப்பணம் பயன்பட்டது” என வித்யாராணி மேற்கொண்டுவரும் தேர்தல் பிரசாரம் கிருஷ்ணகிரி மாவட்ட மக்களிடையே அவருக்கான ஆதரவை அதிகரித்து வருகிறது.

“எனது தந்தையைக் கைதுசெய்ய எடுத்த முயற்சிகளின்போது கொல்லப்பட்டும் காயமடைந்தும் போன அரச அதிகாரிகளுக்கு அரசாங்கத்தால் நட்ட ஈடு வழங்கப்பட்ட போதிலும் இந்நடவடிக்கைகள் காரணமாகக் கொல்லப்பட்ட அப்பாவி மக்களின் குடும்பங்களுக்கு அரசாங்கம் எந்தவித உதவிகளையும் வழங்கவில்லை. இதனால் அக்குடும்பங்களிலுள்ள குழந்தைகள் உரிய கல்வியைப் பெறமுடியாமல் திண்டாடவேண்டியிருந்தது. இப்போது அவர்களுக்குக் கிடைக்கவேண்டிய நீதிக்காகப் போராட நான் களமிறங்கியிருக்கிறேன். இலங்கைத் தமிழர்கள் விடயத்தில் நாம் தமிழர் கட்சி எடுக்கும் நிலைப்பாடுதான் இக்கட்சியில் நான் இணைவதற்கு முக்கிய காரணம். ‘தமிழ் தேசம்’ என்பது வேலுப்பிள்ளை பிரபாகரனின் கருத்தியல் அடிப்படை. அதுவே என் தந்தையினதும் இப்போது தலைவர் சீமானினதுமாகும். சாதி அடிப்படையில் வேறுபாடுகள் இல்லாது ஆயுதங்களை எடுக்காமல் எங்கள் வார்த்தைகளையும், திடமான எண்ணக்களையும் மட்டுமே வைத்துக்கொண்டு மக்களுக்காக நாம் இந்தக் கருத்துருவாக்கத்தை நோக்கிப் பயணிக்க முடியுமென நான் நம்புகிறேன்” எனக் கூறுகிறார் வித்யாராணி.

இதே வேளை, பாட்டளி மக்கள் கட்சி வீரப்பனுக்காக கருணை மனு சமர்ப்பித்தது முதல் அவரின் மனைவி முத்துலட்சுமியைத் தமது கட்சியில் இணைத்து ஆதரவு வழங்கியிருந்தாலும் வித்யாராணி அக்கட்சியில் இணைய விரும்பவில்லை.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மலைக்காடுகளிலும் அண்டிய பிரதேசங்களிலும் படையாச்சி கவுண்டர் சாதியைச் சேர்ந்த மக்கள் அதிகம் வாழ்வதால் அதே சாதியைச் சேர்ந்த வித்யாராணிக்கு அங்கு ஆதரவு கிடைக்குமெனினும் அவர் ஒரு தலித்தைத் திருமணம் செய்தபடியால் கவுண்டர் சாதியினரின் வாக்குகள் அவர்க்குக் கிடைக்காமல் போகலாமெனவும் உண்மையான போட்டி தி.மு.க. விற்கும் அ.இ.அ.தி.மு.க. விற்குமிடையில்தான் எனவும் அறியப்படுகிறது. இதற்கு முன்னர் நடைபெற்ற தேர்தல்களில் கிருஷ்ணகிரியில் தி.மு.க. ஐந்து தடவைகளும், காங்கிரஸ் ஒன்பது தடவைகளும் வெற்றியீட்டியிருந்தன. 2019 இல் நடைபெற்ற தேர்தலில் காங்கிரசிற்கு 56% மும், அ.இ.அ.தி.மு.க. விற்கு 36% வாக்குகளையும் பெற்றிருந்தந. நா.த.க. இங்கு 2.7% வாக்குகளையே பெறமுடிந்தது

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!