இலங்கையின் இராஜதந்திரத்துக்குள் இந்திய-அமெரிக்க உத்திகள் தகர்ந்து போகுமா? மைக் பாம்பியோவின் விஜயம் ஏற்படுத்தப் போவது என்ன?
சீனத் தூதுக்குழுவின் வருகை இலங்கை சீன நட்புறவை மேலும் பலப்படுத்திய போதும் அமெரிக்காவையும் அதன் நட்பு நாடுகளையும் அதிகம் பாதித்துள்ளதை காணமுடிகிறது. குறிப்பாக சீனாவின் உதவிகளை கடன்பொறி எனக்கூறமுடியாதென்ற கருத்தினை இலங்கையின் ஜனாதிபதி வலியுறுத்தியதுடன் இலங்கையின் இறைமையை சர்வதேச அளவில் பாதுகாக்கும் என சீனாவின் உயர்மட்ட தூதுக் குழு தெரிவித்திருந்தது. கடந்த 26.09.2020 அன்று இந்திய இலங்கை பிரதமர்களது உரையாடலை அடுத்து பெரும் இராஜதந்திர நகர்வுகள் ஆரம்பமாகியது.இத்தகைய சந்திப்புக்கு வழிவகுத்த இந்தியத் தூதுவருடனான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உரையாடலாகும். அதன் பிரதியாகவே சீனாத் தூதுக்குழுவின் வருகை அமைந்திருந்தது. அதற்கு பதிலீடாக இலங்கையில் ஏற்பட்டுவரும் இராஜதந்திர நகர்வுகளை நோக்குவது பிரதானமானது.
அக்டோபர் 25 ஆம் திகதி அமெரிக்காவின் வெளிவிவகாரச் செயலாள் மைக் பாம்பியோ இலங்கைக்கு அரச முறை விஜயமாக வருகைதரவுள்ளதாக இலங்கை வெளியுறவுத் துறை தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.ஏற்கனவே 28 திகதி என குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் போது ஜனாதிபதி பிரதமர் ஆகியோரை சந்தித்து பேசவுள்ளதாகவும் மிலேனிய உடன்படிக்கை மற்றும் சோபா உடன்பாடு தொடர்பில் பேசவுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. அதே நேரம் கடந்த 13.10.2020 இல் அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு அதிகாரி இரு வேறு அதிகாரிகள் சகிதம் ஹம்பாந்தோட்டைத் துறைமுகத்திற்கு சென்றுள்ளனர். இதற்கு மேலும் வலுக் கொடுக்கும் விதத்தில் இந்தியாவின் இலங்கைத் தூதுவர் கோபால் பாக்லே இலங்கையின் புத்த சாசன அமைச்சுடனும் அதன் இராஜாங்க அமைச்சுடனும் தொடர்ச்சியான உரையாடலை ஏற்படுத்திவருவதுடன் பௌத்த மத நிறுவனங்களது கட்டுமானம் தொடர்டபிலும் உள்கட்டுமான விருத்தி தொடர்பிலும் உரையாடிவருகின்றார். இதன் பிரதான நோக்கம் அண்மையில் இந்திய இலங்கைப் பிரதமர்கள் மொய்நிகர் மகாநாட்டில் உரையாடும் போது இந்தியா பௌத்தமத விருத்திக்காக நிதி ஒதுக்கியிருந்தமையுடன் அதன் அமுலாக்கங்களை மேற்கொள்ள திட்டமிட்டு செயல்படுவதாகவே தெரிகிறது. இதனூடாக இந்தியாவின் அணுகுமுறைகளை இலங்கையில் அதிகரிக்கவும் அதிக தொடர்பாடலை பராமரிக்கவும் இந்தியா முனைகிறது என்பதை காட்டுவதாக அமைந்துள்ளது.
இதே நேரம் அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மைக்கல் பாம்பியோவின் விஜயம் தொடர்பில் அமெரிக்காவுக்கான தென்னாசிய தூதுவர் டீன் தோம்சன் தெரிவித்து;ளளமை கவனத்திற்குரியதாகும். அதாவது மைக் பாம்பியோவின் வி-ஜயம் நான்கு விடயங்களில் முக்கியமானது என்கிறார்.. ஒன்று சுதந்திரமான இந்தோ-பசுபிக் திட்டத்திற்கான ஒத்துழைப்பு இரண்டு இலங்கையின் ஜனநாயக நடைமுறை சார்ந்தது. மூன்று மனித உரிமை பற்றியது. நான்கு மிலேனியம் மற்றும் சோபா உடன்பாடு சார்ந்தது. இவற்றைப் பற்றிய உரையாடலை முதன்மைப்படுத்துவதே அவரது விஜயத்தின் நோக்கம் என்பதுடன் வெளிப்படையான உறவை சார்ந்தும் நிலைத்திருக்கும் பொருளாதார அபிவிருத்தி சார்ந்ததுமான பரிமாற்றத்தை அமெரிக்கா மேற்கொள்ள விரும்புகிறது. ஆனால் சீனா கடன் பொறியையும் இரகசியமான உறவையும் இலங்கையுடன் பின்பற்ற முனைகிறதைக் காணமுடிகிறது என்பதனால் இலங்கை சீனா பொறுத்து கடினமான முடிபுகளை மேற்கொள்ள வேண்டும் எனக்குறிப்பிட்டிருந்தார்.
இவற்றை விட பிரித்தானிய அரசாங்கம் விடுதலைப் புலிகள் மீதான தடையை விலக்கிக் கொள்வதற்கான நகர்வுகளை நீதித்துறையிடமிருந்து பாராளுமன்றத்திடமும் அரசாங்கத்திடமும் ஒபட்படைத்துள்ளது. அப்படியான மூழலிலேயே மைக் பாம்பியோ இலங்கை வருகை தரவுள்ளார். எனவே இவை இரண்டும் இலங்கையை கையாளுவதற்கான பொறிமுறையாகவே தெரிகிறது.
இவ்வாறு அமெரிக்காவின் நகர்வுகள் இலங்கையில் அதிகரித்ததை அடுத்து இலங்கை தரப்பு சில உபாயங்களை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளது. அதில் பிரதான விடயமாகவே அரசாங்கத்தின் ஊடகப் பேச்சாளர் கெஹகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ள கருத்துக்கள் கவனத்திற்குரியதாகும். இலங்கைக்கு சாதகமான வர்த்தக அபிவிருத்திக் கொள்கையுடன் இணங்கும் நாடுகளுடன் சேர்ந்து செயல்படுவதற்கே நாம் எதிர்பார்கிறோம். அதற்கமையவே சீனாவுக்கு முன்னுரிமை கொடுக்கிறோம். இலங்கை நாட்டின் அபிவிருத்தித் திட்டங்களில் இந்தியா இணங்காத திட்டங்களையே சீனா தானாக முன்வந்து மேற்கொள்கிறது.இதனால் சீனாவின் பொருளாதாரக் கொள்கையுடன் நாம் நாம் பயணிப்பதே எமக்கு பயனள்ளதாக அமையும். இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கை மிகத் தெளிவானது. எந்தவொரு நாட்டுடனும் நாம் முரண்படும் கொள்கையில் செயல்பட நாம் தயாராக இல்லை.சீனா அமெரிக்கா இந்தியா இலங்கையுடன் நெருக்கமான நட்புறவைக் கொண்டுள்ள போதும் வர்த்தகம் அபிவிருத்தித் திட்டங்களில் எமக்கு சாதகமான நாடுகளுடன் நாம் இணைந்து பயணிகிறோம். சீனாவுக்கு முன்னுரிமை கொடுப்பதாக சில விமர்சனங்கள் எழுந்தாலும் அதில் உண்மையில்லை. ஹம்பாந்தோட்டைத் துறைமுகத்தை அபிவிருத்தி செய்து தெற்கின் கடல் ஆதிக்கத்தை பலப்படுத்த வேண்டும் என இலங்கை தீர்மானித்த போது முதலில் இந்தியாவுடனே பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டன.ஆனால் இந்திய அரசு அதற்கு இணக்கம் தெரிவிக்காததால் சீனா அதனை கையில் எடுத்தது எனத் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் பேச்சாளர் தெரிவித்த விடயங்கள் இராஜதந்திர உரையாடலாக அமைந்தாலும் விண்ணப்பங்கள் நியாயமானவையே.ஆனால் சீனா-இந்திய முரண்பாடே இங்கு கவனத்திற்குரியதாகும். கொழும்புத் துறைமுக நகரத்தின் தெற்கு முனையத்தை தொழிலாளர்கள் எதிர்க்கும் போது கைவிட்டதாக இலங்கை அரசாங்கம் அறிவித்தது போல் நுரைச்சோலை விடயத்தில் அரசாங்கம் செயல்படவில்லை என்பதுவும் இராஜீக முயற்ச்சிக்குள் பாரபட்சமான நடைமுறையாக அமைந்துள்ளதை காணமுடிகிறது. அது மட்டுமன்றி ஹம்பாந்தோட்டை விடயம் ஜப்பானிடமும் கையளிக்கப்பட்டது. நோர்வேயே அதற்கான ஆய்வுகளை மேற்கொண்டு துறைமுகத்தை விரிவாக்கம் செய்வதற்கான அனுமதியை தென் இலங்கைப் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து மேற்கொண்டு முடிபினை அறிவித்தது தெரிந்ததே.ஆனால் இங்கு பொருளாதார அபிவிருத்தியோ உள்கட்டுமான வளர்ச்சி பற்றிய விடயமோ முதன்மையல்ல. மாறாக சீனா இலங்கை ஊடாக இந்தியாவுக்கு நெருக்கடியான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்ற அச்சமே அடிப்படையானதாகும். இராணுவ ரீதியான பாதுகாப்புப் பொறுத்தே அத்தகைய குழப்பத்தை இந்தியா ஏற்படுத்துகிறது. அது இந்தியா –சீன-இலங்கை சார்ந்த பவிசார் அரசியல் உட்பட்ட விடயமாகவே தெரிகிறது. புவிசார் அரசியலும் இராணுவமுமே புவிசார் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் வல்லமையுடையதாக உள்ளது.
இது மட்டுமன்றி இலங்கை அரசாங்கம் இந்தியாவுடனான ஒத்துழைப்பினை பலப்படுத்தும் விதத்தில் கூட்டு கடற்படைப பயிற்சியை நிகழ்த்தியது.அதாவது 19.10.2020 தொடக்கம் மூன்று நாட்களுக்கு இலங்கை-இந்திய கடற்படைக் கூட்டுப் பயிற்சி (ளுடுஐNநுஓ) திருகோமலைத் கடற்படைத் தளத்தில் ஆரம்பமாகி நிகழ்ந்துள்ளது. இந்த கூட்டுப் பயிற்சியில் இந்திய கடற்படை சார்பில் நீர்மூழ்கிக் கப்பல்களை அழிக்கும் ஐஎன்எஸ் கமோத்தா மற்றும் ஐஎஸ்என் கில்டன் ஆகிய போர்க் கப்பல்கள் கலந்து கொண்டன.மேலும் இந்திய நவீன போர்க்கப்பல்களில் இருந்து நவீன இலகுரக ஹெலிகொப்பர்கள் கடற்படையின் டோர்னியா நோந்து விமானங்கள் ஆகியவை கலந்து கொண்டன. இலங்கையின் சார்பில் எஸ்எல்என் சய10ரா எனும் ரோந்துக் கப்பலும் மற்றும் கஜபாகு எனும் பயிற்சிக்கப்பலும் ஈடுபடுத்தப்பட்டன.
இந்த கூட்டுப்பயிற்சியானது இரு நாட்டுக்குமான நெருக்கத்தினை அதிகரித்துள்ளதாகவும் ஆழமான ஈடுபாட்டையும் கடல்சார் களத்தில் பரஸ்பரம் ஒத்துழைப்பினை ஏற்படுத்துமளவுக்கு வலிமையானது என இந்திய கடற்படை பேச்சாளர் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவுக்கும் போது சமீபத்திய ஆண்டுகளில் இரு கடற்படைகளுக்கும் இடையிலான தொடர்புகள் கணிசமாக வளர்ச்சியடைந்துள்ளன எனவும் இது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் சகார் (ளுயுபுயுசு- ளுநஉரசவைல யனெ புசழறவா யடட in வாந சுநபழைn ) பிரகடனத்தின் கீழ் உருவானது எனவும் அயல்நாடுகளுடான நெருக்கத்தினை ஏற்படுத்தும் பிரதமரது பார்வை எனவும் குறிப்பிட்டார். இரு நாட்டுக்குமான மூலோபாய நனலன்கள் சார் ஒத்துழைப்பினையும் பிராந்தியம் சார் ஒத்துழைப்பினையும் ஏறட்படுத்துவதே பிரதான நோக்கம் என இரு நாட்டுக் கடற்படையின் அதிகாரிகள் தெரிவித்தன. இதில் இரண்டு போர் உத்திகள் பிரயோகிக்கப்பட்டதாக அவ்வதிகாரிகள் குறிப்பிட்டனர். அதாவது விமான எதிர்ப்பினையும் கடற்படையின் நீர்மூழ்கிகளுக்கு எதிரான போர் உத்திகளையும் அதிகம் மையப்படுத்தியிருந்ததை காணமுடிந்தது. அத்துடன் கரையேர ரோந்து நகர்வுகளும் முதன்மைப்படுத்தப்பட்டதை அவதானிக்க முடிந்தது.
இத்தகைய கடல்படைகளுக்கிடையிலான கூட்டுப் பயிற்சியின் ஊடாக இலங்கை இந்திய உறவை பலப்படுத்துவதுடன் கடல் பிராந்தியத்தை தமது கட்டுப்பாட்டின் வைத்துக் கொள்ள இந்தியத் தரப்பு முயலுகிறதென்பது தெளிவாக தெரிகிறது. அதனையே இலங்கையும் பயன்படுத்திக் கொள்ளும் உத்திகளை பிரயோகப்படுத்திவருகிறது. போர் அற்ற சூழலில் இலங்கை இந்தியாவுடன் இணைந்து ளுடுஐNநுஓ எட்டாவது தடவையாக மேற்கொண்டு வருகிறது. ஒன்பதாவது கூட்டுப் பயிற்சி திருவனந்த புரத்தில் தி-ட்டமிடப்பட்டுள்ளது. அவ்வாறே தரைப்படைகளுடனான கூட்டுப் பயிற்சியிலும் ஏழு தடவை இரு நாடுகளும் நிகழ்த்தியுள்ளன. அவ்வாறே இந்நியத் தரப்பு இலங்கைக்கு ஆயுத தளபாடங்களை வினியோகம் செய்யும் செய்முறையிலும் ஈடுபட்டுள்ளது. அது தொடர்பிலான உரையாடல்களை இரு தரப்பு பாதுகாப்பு பிரிவிஜனரும் மேற்கொண்டு வருகின்றனர். இவற்றுக்கூடாக இலங்கைத் தரப்புடன் நெருக்கமடைவதுடன் இந்து சமுத்திரப் பிராந்தியத்தி-ன் எல்லைக்குள் சீனாவின் பிரசன்னத்தை தவிர்ப்பதாகவே உள்ளது. அதற்கு ஆதாரமாக இந்தியா இந்தோ-பசுபிக் நாடுகளுடனான கூட்டு பயிற்சியைக் குறிப்பிட முடியும்.
இலங்கையின் இராஜதந்திரப் பலமானது கடந்த பல தசாப்தங்களாக தனித்துவமானதாக அமைந்துவருகிறது. அதிலும் பனிப் போருக்கு பிந்திய அரசியலில் இந்தியாவையும் அமெரிக்காவையும் கையாளும் முனைப்பில் வலுவான சக்தியாக இலங்கை இராஜதந்திரம் காணப்படுகிறது.குறிப்பாக இந்தியாவுக்கும் இலங்கைக்கும் விரிசல் ஏற்படும் போதெல்லாம் சீனாவிடம் கைகோர்ப்பதுவும் பின்பு இந்திய அமெரிக்க தரப்பு பின்வாங்குவதுமாக கடந்த இரு தசாப்தங்கள் நகர்வதனை காணமுடிகிறது. தற்போதும் அதற்கான ஒரு காலப்பகுதியை மீண்டும் காணமுடிகிறது. சீனத் தூதுக்குழுவின் வருகையை அடுத்து அமெரிக்காவும் இந்தியாவும் அதிக முரண்படும் போக்கினை வெளிப்படுத்தும் போது வேகமாக இலங்கை தனது நியாயப்பாட்டினை வெளிப்படுத்திவருகிறது. அத்தகைய நியாயப்பாடு சரியானதாகவும் தெரிகிறது. ஆனால் அதனுடன் அமெரிக்க இந்தியத் தரப்பு இலங்கையுடன் முரண்படவில்லை மாறாக அமெரிக்க இந்திய நலன்களுக்கு முரணபாடுடைய சீனாவுடனான இலங்கையின் நட்பே அவர்களது முரண்பாட்டுக்கு மூல வேராக அமைந்துள்ளது. சர்வதேச அரசியலில் அமெரிக்காவும் இந்தியாவும் வெளிப்படையாக நிராகரிக்கும் சீனாவுடன் இலங்கை கொண்டுள்ள நட்பே பிரச்சினைக்கு அடிப்படைக் காரணமாகும். இத்தகைய உபாயத்தை இலங்கை இராஜதந்திரிகள் மிக நீண்ட காலமாக கையாண்டு வருகிறார்கள்.
சுதந்திர இலங்கையில் பிரித்தானியா பக்கமிருந்த கொண்டு இந்தியாவை கையாண்டது போல் திறந்த பொருளாதாரக் கொள்கையின் பெயரால் அமெரிக்காவுடன் இருந்து கொண்டு இந்தியாவை கையாண்டது போல் தற்போது சீனா பக்கம் இருந்து கொண்டு இலங்கை அமெரிக்காவையும் இந்தியாவையும் கையாள வேண்டிய நிலைக்குள் தள்ளப்பட்டு;ள்ளது. இத்தகைய இராஜதந்திரமே இலங்கையின் இருப்பையும் ஆட்சி அதிகாரத்தையும் பாதுகாத்துவருகின்றது. அதனை அவதானிக்கும் போது இலங்கையின் இராஜதந்திரம் மிக உச்சமான விளைவைத் தரவல்லதாக மாறியுள்ளது.இலங்கை ஒரே தேசமாக இருக்கவும் இறைமையுடைய நாடாக விளங்கவும் இராதந்திரமே அடிப்படையாக உள்ளது. இது வரைகாலமம் இந்தியாவை மட்டுமே எதிர்கொள்ளவும் கையாளவும் தயாரான இலங்கை அதற்போது அமெரிக்காவுடனும் இந்தியாவுடனும் ஒரே நேரத்தில் கையாளுகையை மேற்கொள்கிறது. இத்தகைய நெருக்கடிக்குள் இலங்கையின் தற்போதைய ஆட்சியாளர்கள் இருதடவை தோற்றார்hகள். 2015 இல் ஆட்சிமாற்றத்தின் போதும் 2018 இல் பாராளுமன்ற நெருக்கடி ஏற்பட்ட போதும் தற்போதைய ஆட்சியாளர்கள் நெருக்கடிக்கு தள்ளப்பட்டார்கள். ஆனால் மீண்டும்’ எழுச்சி பெற்ற நிலையில் மீளவும் ஒரு நெருக்கடியா? அல்லது வெற்றி கரமான கையாளுகையா? என்பது அடுத்துவரும் வாரங்களில் தெரிந்துவிடும். அல்லது முழுமையாக சீன பக்கம் நின்று கொண்டு இந்திய அமெரிக்க தரப்பினை எதிர்ப்பதாக மாறும். அது அதிக நெருக்கடியானதாக அமையும் என்ற எதிர்பாக்கை உள்ளது.புவிசார் சக்தியுடன் மோதுவத இலகுவான விடயமாக அமையாது.
எனவே இலங்கை அமெரிக்க இந்திய சீனா முரண்பாடுடைய சக்திகளுக்குள் அதிக சவாலைச் சந்தித்துவருகிறது.அதனை வெற்றிகரமானதாக கையாளும் இராஜதந்திரமுடைய நாடு என்பதை கடந்த காலத்தில் நிறுவியுள்ளது. அதனையே செயல்படுத்துமா அல்லது முறிந்துபோகுமா என்பதே முக்கியமான கேள்வியாகும். இதில் தமிழ் தலைமைகள் பார்வையாளராகக் கூட காணமுடியாத சூழலுக்குள் தமிழ் மக்கள் அகப்பட்டுள்ளனர்.
கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்