“இலங்கையில் அரசியல் கைதிகள் எவரும் இல்லை”
இலங்கை பாராளுமன்ற கேள்வி பதில்களின் போது MP சாணக்கியன் பிரதமருடன் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் முகமாக நீதி அமைச்சர் அலி சப்ரி அவர்கள் எழுந்து பிரதமருக்கு பதிலாக தான் இதற்கான பதில் அளிப்பதாக கூறி பதில் அளிக்கத் தொடங்கினார்
“இலங்கையில் அரசியல் கைதிகள் எவரும் இல்லை”
ஒரு நாட்டின் அதிபர் இவ்வளவு காலமும் மற்றும் தனது தேர்தல் பிரச்சாரத்திலும் ஒரு அங்கமாக அரசியல் கைதிகளை விடுதலை என்று சொல்லிவிட்டு இப்போது இலங்கையில் அரசியல் கைதிகள் எவரும் இல்லை என்று சொன்னால்?
இன்றைய தினம் நடைபெற்ற இலங்கை பாராளுமன்ற கேள்வி பதில்களின் போது MP சாணக்கியன் பிரதம மந்திரி மஹிந்த ராஜபக்ஷவிடம் சில கேள்விகளை கேட்கப்பட்டது
- தற்பொழுது நாட்டில் இருக்கின்ற அரசியல் கைதிகளின் மொத்த எண்ணிக்கை எத்தனை என்பதையும், அக் கைதிகள் இருக்கின்ற முகாம்கள் எத்தனை என்பதையும்,
2.அவர்களை விடுவிப்பது தொடர்பாக ஏன் இதுவரை காலமும் விரைவான நடவடிக்கை எடுக்கவில்லை என்பதையும்,
3.நாடு முழுவதிலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் பாதுகாப்புப் படையினர் இருக்கின்ற காணிகளின் எண்ணிக்கை எத்தனை என்பதையும்,
4.பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் தனியார் காணிகள் மற்றும் அரசாங்க அலுவலக காணிகள் எத்தனை என்பதையும் பிரதம அமைச்சர் குறிப்பிடுவாரா?
இன்றேல் ஏன்?
அதற்குப் பதிலளித்த பிரதமர் அவர்கள்
இலங்கையில் அரசியல் கைதிகள் எந்த அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்னும் விடயத்தை நான் இங்கு குறிப்பிட விரும்புகின்றேன். இலங்கையிலுள்ள மாவட்டங்களில் காணப்படும் நிலங்கள் சம்மந்தமாக பேசுவது தேசிய பாதுகாப்பிற்கு தடையாக இருக்கின்றதாக தேசிய பாதுகாப்பு அமைச்சர் கூறியமையினால் நான் அதைப் பற்றி பேசினால் அது தேசிய பாதுகாப்பிற்கு பாதிப்பாக அமையும் என்பதனால் அதைப் பற்றி இங்கு கூறவில்லை என்றுரைத்தார்.
அவர் அளித்த பதிலில் எனக்கு திருப்தி இன்மையால் நான் அதனை விளக்கமாக அவருக்கு எடுத்துரைத்தேன். அரசியல் கைதிகளில் பலர் நான் பிறப்பதற்கு முதல் இருந்தே சிறைச்சாலைகளில் இருக்கின்றார்கள். அதிலும் தற்போது ஒரு சில வருடங்களாக அவர்கள் இறந்து கொண்டு வருகிறார்கள். உங்களது தேர்தல் விஞ்ஞாபனங்களில் ஒன்று அரசியல் கைதிகளை விடுவிப்பது ஆகும். வட கிழக்கு முழுவதிலும் இதனை சொல்லி இருந்தீர்கள். நாமல் ராஜபக்க்ஷ அவர்களும் சிறைச்சாலையில் இருந்து வெளிவரும்போது இதனை வலியுறுத்தி இருந்தார். அதிலும் JVP காலத்தில் நடந்த விடயங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்ட அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்பட்டிருந்தார்கள்.
அதே நேரம் கௌரவ ஜோன்சன் பெர்னாண்டோ அவர்கள் அன்றைய தினம் பிள்ளையான் அவர்கள் அரசியல் கைதி என்று கூறியிருந்தார்கள். ஆனால் அவர் அரசியல் கைதி அல்ல. மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் ஐயாவை சுட்டுக் கொன்றார் என்ற அடிப்படையில் கைது செய்யப்பட்டவராவார். சாஜன் ரத்னாயக்க அவர்களும் இதே மன்னிப்பு அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டார். இவ்வாறிருக்கையில் இன்னும் சிறைகளில் வாழும் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவில்லை. அவர்களுக்குரிய வழக்கும் ஒழுங்கான முறைகளில் தாக்கல் செய்யப்படவில்லை.
அனைவரும் அறிந்த விடயம் அதாவது கடந்த மூன்றாம் திகதி முதல் ஏழாம் திகதி வரை நடந்த பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான போராட்டத்தில் மிக முக்கியமாக உரைக்கப்பட்ட விடயம் அரசியல் கைதிகளின் விடுதலை ஆகும். அத்துடன் கடைசி யுத்தத்தில் கைது செய்யப்பட்டவர்களின் பெற்றோர்கள் சென்ற வருடம் முகப்புத்தகத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் படங்களை பதிவு செய்தார்கள் என்ற அடிப்படையில் கைது செய்யப்பட்டார்கள். அதாவது அவர்கள் கடந்த இறுதி யுத்தத்தின் போது 2009 இல் பலர் இராணுவத்திடம் சரணடைந்து இருந்தார்கள். அத்துடன் இங்கு ஒரு சில மாதங்களுக்கு முன்பு நவம்பர் மாதம் 2020 இல் பல இளைஞர்கள் படங்களை முகப்புத்தகத்தில் பதிவிட்டார்கள் என்று கைது செய்யப்பட்டு இருந்தார்கள். இவையும் இன்னும் முறையாக வழக்கு தாக்கல் செய்யப்படவில்லை. இதில் என்னுடைய கேள்வி எமது நாட்டில் ஏன் இரண்டு வகையான சட்டங்கள் உள்ளது? ஒரு சட்டம் ஒரு பக்கம் உள்ள மக்களுக்கும், இன்னொரு சட்டம் இன்னொரு பக்கம் உள்ள மக்களுக்கும். உங்களிடம் இதனை கேட்பதற்கான காரணம் உங்களுக்கு முழு ஆளுமையும், தகைமையும், அதிகாரமும் உள்ளது. இவை தொடர்பாக நடவடிக்கைகளை எடுப்பதற்காகவே உங்களிடம் நான் இக் கேள்விகளை தொடுக்கின்றேன். நீங்கள் இதனை பக்கச்சார்பற்ற முறையில் கையாண்டு அதற்கான தீர்வை பெற்றுத்தர வேண்டும். இது உங்களால் மாத்திரம் முடியுமே தவிர வேறு ஒருவராலும் இதனை செய்ய முடியாது . உங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் சொல்லப்பட்ட இவ் விடயத்தை நாமும் எமது மக்களும் நூறு வீதம் நம்பி உள்ளோம் நீங்கள் செய்வீர்கள் என்று. நாங்கள் எங்கள் கட்சி சார்பாக கேட்கவில்லை. பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட இலட்சக்கணக்கான மக்களின் கோரிக்கை இது. அத்தோடு இன்னும் ஈஸ்டர் குண்டு தாக்குதலோடு சம்பந்தப்பட்டவர்கள் கூட சரியான முறையில் விசாரிக்கப்பட்டு அவர்களுக்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இன்னும் அவர்கள் மேல் எந்த விதமான வழக்கும் தொடரப்படவில்லை. இதில் பல அப்பாவிகளும் உள்ளனர். நான் கேட்கிற முதல் கேள்வி இவர்களுக்கு என்ன நடக்கப் போகின்றது? அதாவது இவர்கள் விடுதலை செய்யப்பட போகின்றார்களா? அல்லது எவ்வித விசாரணைகளும் இன்றி அப்படியே தான் இருக்கப் போகிறார்களா? நீங்கள் இத்தேர்தலை வென்று விட்டீர்கள். ஆனால் கொடுத்த வாக்குறுதியை இன்னும் நிறைவேற்றவில்லை. இதனைக் கொண்டு நீங்கள் எவற்றை சாதிக்கப்போகின்றீர்கள்? மற்றும் முன் நிறுத்தப் போகின்றீர்கள்? அவர்களை உள்ளே வைத்திருப்பது உங்கள் அரசியல் இலாபத்துக்கான திட்டமா?. அல்லது நீண்ட கால உங்கள் திட்டத்துக்காக வைத்திருக்கிறீர்களா? இதுதான் எனது கேள்வியின் முழு வடிவம் என்று எடுத்துரைத்தேன்.
இதற்கு பதிலளிக்கும் முகமாக நீதி அமைச்சர் அலி சப்ரி அவர்கள் எழுந்து பிரதமருக்கு பதிலாக தான் இதற்கான பதில் அளிப்பதாக கூறி பதில் அளிக்கத் தொடங்கினார். 2009 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் 12,843 பேர் அரசாங்கத்திடம் சரணடைந்தார்கள். இவ்வாறு சரணடைந்தவர்களும் 600 சிறுவர் போராளிகளும் அரசாங்கத்தினால் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்தில் கூறினார். அதிலும் அவர் குறிப்பிட்டார் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களின் அறிக்கையின்படி இன்றளவில் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்படவில்லை. ஆனால் தடுத்து வைக்கப்பட்டவர்கள் வழக்கானது பயங்கரவாத தடைச் சட்டத்தின் அடிப்படையில் இவர்களுக்கான தீர்ப்பு வழங்கப்பட்டு தடுக்கப்பட்டு உள்ளார்கள். இவை சம்மந்தமான தகவல்கள் அடங்கிய ஆவணத்தை சில நாட்களுக்கு முன் அவரிடம் வினாவிய பாராளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் அவர்களுக்கு கையளித்து இருந்தார் என்றார். அதில் ஒரு பிரதியை நான் உங்களுக்குத் தருகின்றேன் என்றும் கூறினார்.
இவை தொடர்பான பிரச்சினைகளுக்கு நடவடிக்கைகள் எடுப்பதற்கு இவை சம்மந்தப்பட்டவர்களோடு இரு கிழமைகளுக்கு முன்பு தாங்கள் குழு கூடி கலந்தாலோசித்ததாகவும், இதனை துரிதப்படுத்துவதற்கு உரிய அனுமதியை தருமாறும் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷவிடம் வலியுறுத்தியிருந்தார்.
நான் கூறும்போது கௌரவ நீதி அமைச்சர் இதற்கு பதில் அளித்த விதம் முரணானது என்று எடுத்துரைத்தேன். அதிலும் அவர் சமூகம் சார்ந்த ஜனாஸா பிரச்சினையையே பிரதம மந்திரி உடன் கலந்து ஆலோசித்து தீர்க்க முடியவில்லை என்ற ஆதங்கத்தையும் வெளிப்படுத்தி இருந்தேன்.
அவர் கூறியிருந்த கருத்துக்களின் படி ஒரு சிலர் முகப்புத்தகங்களில் படங்கள் மற்றும் கவிதை எழுதியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்கள். சில மாதங்களுக்கு முன்னர் அவர்கள் என்ன வகையான குற்றம் செய்தார்கள் என்ற அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்கள்? என்று கேட்டேன்.
அடுத்ததாக நான் எடுத்துரைத்த விடயம் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டத்தின் போது நான் கவனித்த மிகப்பெரிய விடயம் கிழக்கு தொடக்கம் வடக்கு வரை பல இராணுவ சாவடிகள் இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. அவற்றின் எண்ணிக்கையை இங்கு நான் பிரதமர் கூறியதன் அடிப்படையில் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்றதினால் சொல்லவில்லை. அதிலும் தற்போதுள்ள அரசாங்கத்தின் மிக முக்கியமான கொள்கைகளில் ஒன்று நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தல் மற்றும் பலமடைய செய்வது ஆகும். ஆனால் இவ்வகையான பாதுகாப்பு முகாம்கள் அதிகளவில் வடகிழக்கில் மட்டும் அமைக்கப்படுவதற்கான காரணம் யாது? அதற்கான நோக்கமும் என்ன? ஏன் கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டை போன்ற இடங்களில் பாதுகாப்பை இப்படி பலப்படுத்தவில்லை?
படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் காணிகள் மற்றும் அரச காணிகள் தொடர்பாகவும் கேள்வியெழுப்பினேன். இதற்கு பதிலளித்த பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, 100 இல் 3 வீதமான காணிகள் தேசிய பாதுகாப்பு நோக்கங்களுக்காக அரசாங்கத்தினால் நிர்வகிக்கப்படுவதாக தெரிவித்தார்.
இதேவேளை இந்த விடயம் உளவுத்துறை ஆதாரங்கள் மற்றும் பாதுகாப்பு அமைச்சினால் பெறப்பட்ட செய்திகளை அடிப்படையாகக் கொண்டது என்றும் தேசிய பாதுகாப்பு குறித்து யாரும் கேள்வி கேட்க முடியாது என்றும் அமைச்சர் கூறினார். எவ்வாறாயினும், மீதமுள்ள 97 வீதமான நிலங்கள் அந்தந்த உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார். வட கிழக்கில் வாழும் தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகமா நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு எதிரானவர்கள்? மற்றும் அச்சுறுத்தலானவர்கள்? இது இல்லவே இல்லை. நமது நாட்டின் மிக முக்கிய பகுதிகளான கொழும்பு மற்றும் தென் மாகாணத்தில் உள்ள பல காணிகளை வெளிநாடுகளுக்கு வழங்கியுள்ளோம். (பல நாடுகளுக்கு) இவையே நமக்கு மிக பெரிய பிரச்சனையாக எதிர்காலத்தில் உருவெடுக்க உள்ளது. நமது அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் இது பாரிய தலையிடியாக வர உள்ளது. இவ்வாறான துறைமுகங்கள், இவ்வாறான இடங்களில் பாதுகாப்பை ஏன் மென்மேலும் அதிகரிக்கக் கூடாது .
இது என்னுடைய தனிப்பட்ட கருத்து இல்லை. இது பொதுவாக மக்களால் முன்வைக்கப்படும் பொதுவான கருத்துக்கள் ஆகும்.
எனது குடும்பத்தார் அல்லது நண்பர்களோ உறவினர்களோ அரசியல் கைதிகளாக இல்லை. இவற்றை நான் கேட்பது பாதிக்கப்பட்ட எனது மக்களுக்காக மாத்திரமே.
இவற்றை நாம் கூறிக் கொண்டு இருக்கும்போது என்னை பல உறுப்பினர்கள் இடைமறித்து என்னை கதைக்க விடாமல் செய்து கொண்டிருந்தார்கள். நான் வழங்கிய பதில் அவர்களுக்கு. இங்கே நான் கேட்கும் கேள்விகள் மக்களால் எனக்கு வழங்கப்பட்டு கேட்க வைக்கப்படும் கேள்விகள் இவற்றை நான் இங்கு கேட்பதற்கான முழு உரிமையும் உண்டு. என்னை குழப்பாதீர்கள். உங்களுடைய வேலை எதுவோ அதனை சரியாக செய்யுங்கள் என்று கூறினேன். நீங்கள் எனக்கு எதிராக கதைக்க விடாமல் செய்வதற்கு இவற்றுக்கான மறுப்பு கூறுவதற்கு நீங்கள் பிரதம மந்திரி அல்ல நான் அவரிடமே இக்கேள்விகளை தொடுகின்றேன். உங்களிடம் அல்ல அவர் அதற்கு பதில் சொல்லட்டும் நீங்கள் சும்மா இங்கு கூச்சலிட்டு நான் கேட்க வந்த விடயத்தை கேட்க முடியாதபடி செய்யாதீர்கள் என்றுரைத்தேன் .
கூடுதலாக சுரேன் ராகவன் அவர்கள் பலமுறை என்னை கதைக்க விடாமல் குழப்பி தலையிட்டு கொண்டிருந்தார். நான் சொல்ல வந்த விடயத்தை முடிக்க விடும்படி கேட்டிருந்தேன். அவர் அப்போதும் குழம்பியபடியே இருந்தார். சபாநாயகரிடம் இதனை முன்வைத்து எனக்கு மேலும் அதிக நேரம் ஒதுக்கி தரும்படி. இவர் குறுக்கிடுவதினால் உரிய நேரத்துக்குள் என்னால் சிலவற்றை கேட்க முடியவில்லை என்றுரைத்தேன். அதிலும் குறிப்பாக எமது பாராளுமன்ற சபையானது தேவையில்லாத கேள்விகளை தொடுத்து குழப்புவதன் மூலம் எல்லாருடைய நேரங்களும் வீணடிக்கப்படுகின்றது. தேவையான விடயங்களை கலந்தாலோசித்து அவற்றுக்கான நடவடிக்கைகள் மற்றும் செயற்பாடுகளை முன்னுரிமைப்படுத்த வேண்டும் என்றேன்.
இங்கு நான் பிரதம மந்திரி உடன் கதைப்பது சிலநேரங்களில் ஒரு வருடங்களுக்கு ஒரு முறையாவது கிடைக்கும் சந்தர்ப்பமாக இருக்கும் அப்படி இருக்கையில் இவர்கள் வேண்டும் என்றே குழப்பினால் என்னால் எனது மக்களின் உரிமைகள் சம்மந்தமான பிரச்சினைகளை எவ்வாறு இங்கு எடுத்துரைக்க முடியும்? இது சுரேன் ராகவனுக்கு விளங்கவில்லை. தேசியப் பட்டியல் மூலம் தெரிவு செய்யப்பட்ட சுரேன் ராகவன் அவர்கள் என்னை மென்மேலும் கதைக்க விடாமல் குழப்பிக் கொண்டிருந்தார் மக்கள் ஆதரவுடன் தெரிவு செய்யப்பட்ட நான் பாராளுமன்றத்தில் எனது மக்களின் பிரச்சினையை எடுத்துரைக்க முடியாமல் ஒரு தேசியப்பட்டியல் மூலம் வந்தவர் அதுவும் தமிழர் குழப்பிக் கொள்வது மிகவும் வேதனைக்குரிய விடயம். அவரது அரசியல் நடவடிக்கைகளை இதன் மூலம் அபிவிருத்தி செய்யலாம் என்று யோசிக்கிறார். ஆனால் நாங்கள் மக்களால் தெரிவு செய்யப்பட்டு தான் வந்தோம் என்பதனை அவர் மனதில் கொள்ளவேண்டும்.
அதனைத் தொடர்ந்து சபாநாயகர் என்னை கதைப்பதற்கான அனுமதியினை தந்தார். அடுத்ததாக கேட்டேன். இங்கு களுவாஞ்சிகுடியில் உள்ள சில அரச நிறுவனங்களுக்கு சொந்தமான காணிகள் மற்றும் கட்டடங்கள் கூட இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டு இருக்கின்றது. அத்துடன் அங்கு மட்டுமல்ல வடகிழக்கு முழுவதும் இப் பிரச்சினையானது காணப்படுகின்றது. எப்போது இவற்றை விடுவிக்கப் போகின்றார்கள். கிழக்கு அல்லது வடக்கு கிழக்கில் வாழும் மக்கள் இந்நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்க மாட்டார்கள். தென் பகுதிகளில் சொல்லப்படுவது போன்று இல்லை என்றேன் .
மேலும் சபையை குழப்பிய சுரேஷ் ராகவனிடம் கடைசியாக கூறினேன் நீங்கள் உங்களுடைய தேசிய நியமனத்துக்கு அமைய வேலை செய்யுங்கள் இங்கு என்னை குழப்ப வேண்டாம் என்றேன்.
அதன் பின்னர் பேசிய பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, நான் பொய் சொல்வதாகவும் அப்படி ஓர் கட்டிடங்களோ காணிகளோ கையகப்படுத்தப்பட்டு இல்லை என்றும் கூறியிருந்தார். 100 இல் 3 வீதமான காணிகள் தேசிய பாதுகாப்பு நோக்கங்களுக்காக அரசாங்கத்தினால் நிர்வகிக்கப்படுவதாக தெரிவித்தார். ஆனால் அங்கு பல காணிகள் கையகப்படுத்தப்பட்டு இருக்கின்றன என்பதை ஆணித்தரமாக கூறினேன். நான் பொய் சொல்லவில்லை. அவர் சில நிமிடங்களுக்கு முன் தான் அங்கே வந்திருந்தார். அவருக்கு நான் கேட்ட கேள்வியை முழுவதுமாக என்னவென்று தெரியாது என்றும் சொன்னேன். அத்துடன் இன்றைய கேள்வி பதில்கள் நிறைவுற்றன.
இங்கு வேடிக்கையான விடயம் என்னவெனில் எமது மக்களுக்கான பிரச்சினைகளை நாம் பாராளுமன்றத்தில் உரைக்கும் போது எமது சமூகம் சார்ந்தவர்களே இதற்கு எதிர்ப்பாக இருப்பது தான். இது வடக்கிலும் கிழக்கிலும் பொதுவாக காணப்படுகின்றது. எம்மவரே எமது மக்களுக்கான முதல் எதிரி.