News

இலங்கையில் மீளிணக்கம், பொறுப்புக்கூறல், மனித உரிமைகள் ஆகியவற்றை முன்னேற்றுதல்

மனித உரிமைப் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடர்

இலங்கையில் மீளிணக்கம், பொறுப்புக்கூறல், மனித உரிமைகள் ஆகியவற்றை முன்னேற்றுதல்

தமிழ் வடிவம், ஆங்கில மூலப் பிரதியில் இருந்து தகவல் நோக்கத்துக்காக மட்டும் மொழிபெயர்க்கப்பட்டது. முரண்பாடுகள் எவையாவது இருந்தால், ஆங்கில மூல வடிவமே
சரியானதாகக் கருதப்படவேண்டும்.

மனித உரிமைப் பேரவை,

PP1: ஐக்கிய நாடுகள் சாசனத்தின் நோக்கம், கொள்கைகள் என்பவற்றால் வழிநடத்தப்பட்டு, மனித உரிமைகள் குறித்த சர்வதேச பிரகடனத்தை மீள உறுதிசெய்து, மனித உரிமைகள் தொடர்பான சர்வதேச சாசனங்களையும், தொடர்புடைய ஏனைய சாசனங்களையும் நினைவிற்கொண்டு,

PP2: இலங்கையில் மீளிணக்கம், பொறுப்புக் கூறல், மனித உரிமைகள் ஆகியவற்றை முன்னேற்றுதல் தொடர்பான மனித உரிமைப் பேரவையின் 19/2, 22/1, 25/1, 30/1, 34/1 மற்றும் 40/1 ஆகிய தீர்மானங்களை நினைவிற்கொண்டு,

PP3: இலங்கையின் இறைமை, சுதந்திரம், ஐக்கியம், பிரதேச ஒருமைப்பாடு ஆகியவற்றுக்கான கடப்பாட்டை மீள உறுதிசெய்து,

PP4: மனித உரிமைகளை மேம்படுத்துவதும், ஈடேற்றுவதும் மட்டுமின்றி நாட்டில் உள்ள அனைவரும் மனித உரிமைகளையும், அடிப்படை உரிமைகளையும் முழுமையாக அனுபவிப்பதை உறுதி செய்யும் முதன்மையான பொறுப்பு அந்தந்த நாடுகளின் அரசுகளுக்கே உரியது என்பதையும் மீள உறுதிசெய்து,

PP5: இலங்கையில் 2019 ஆம் ஆண்டு ஏப்ரலில் பெரும் எண்ணிக்கையானோருக்கு மரணத்தையும், காயங்களையும் ஏற்படுத்திய பயங்கரவாதச் செயல்களைக் கடுமையாகக் கண்டித்து,

PP6: சுதந்திரமானவையும், வெளிப்படைத் தன்மையுள்ளவையுமான ஜனநாயக தேர்தல்கள் 2019 ஆம் ஆண்டு நொவம்பரிலும் 2020 ஆம் ஆண்டு ஓகஸ்ட்டிலும் இடம்பெற்றதை ஏற்புத்தெரிவித்து,

PP7: இலங்கை அரசியலமைப்பின் 20 ஆந் திருத்தம் நிறைவேற்றப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளதைக் கருத்திற்கொண்டு, ஜனநாயக ஆட்சி, முக்கிய அமைப்புக்களின் செயற்பாடுகள் மீது சுதந்திரமான மேற்பார்வை ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, மாகாணசபைகளுக்கான தேர்தல்களை நடத்துவது உள்ளடங்கலாக உள்ளாட்சி அமைப்புக்களை மதிக்குமாறு அரசை ஊக்குவித்து, இலங்கை அரசியலமைப்பின் 13 ஆந் திருத்தத்திற்கு அமைவாக அனைத்து மாகாணசபைகளும் செயற்திறனுடன் இயங்குவதை உறுதிசெய்யுமாறு ஊக்குவித்து,

PP8: அனைத்து இலங்கையர்களும் மதம், நம்பிக்கை, இனம் போன்ற எவ்வித பாகுபாடுகளும் இன்றி, அமைதியான, ஒன்றுபட்ட நாட்டில் அவர்களது மனித உரிமைகளை முழுமையாக அனுபவிக்கும் உரிமை கொண்டவர்களென்பதை மீளஉறுதிசெய்து,

PP9: உட்கட்டுமானங்களை மீளக் கட்டியெழுப்புதல், கண்ணிவெடியகற்றல், காணிகளை மீள ஒப்படைத்தல், உள்நாட்டில் இடம்பெயர்க்கப்பட்டவர்களை மீளக் குடியரமர்த்துதல், வாழ்வாதாரங்களை மேம்படுத்துதல் ஆகியவற்றில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றத்துக்கு ஏற்புத்தெரிவித்து, இந்த விடயங்களில் மேலதிக நடவடிக்கைககளை ஊக்குவித்து,

PP10: ஐக்கிய நாடுகள் அமைப்புடனும், மனித உரிமைகள் ஆணைகள், பொறிமுறைகள் போன்றன உள்ளடங்கலாக அதன் முகவர் அமைப்புக்களுடனும் ஈடுபாட்டைப் பேணுவதற்கும், திறன் மேம்பாட்டு உதவி, தொழில்நுட்ப உதவி போன்றவற்றைப் பெறுவதற்கும் இலங்கை அரசு தொடர்ந்து வெளிப்படுத்தும் உறுதிப்பாட்டை வரவேற்று,

PP11: பயங்கரவாதத்திற்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகள் அனைத்தும், சர்வதேச சட்டங்களின் கீழ் நாடுகளுக்குள்ள கடப்பாடுகளுக்கு அமைவாகவும், குறிப்பாகச் சர்வதேச மனித உரிமைச் சட்டம், சர்வதேச அகதிகள் சட்டம் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டத்திற்கு அமைவாகவும் இருக்கவேண்டுமெனவும் மீள உறுதிசெய்து,

PP12: கடந்த காலத்திற்கு – பொறுப்புக் கூறல், நீதி வழங்குதல், பாதிக்கப்பட்டோருக்குத் தீர்வு வழங்குதல், மனித உரிமை மீறல்கள் மீண்டும் இடம்பெறுவதைத் தவிர்த்தல், ஆற்றுகை, மீளிணக்கம் ஆகியவற்றை முன்னேற்றுதல் என்பவற்றை உறுதி செய்வதற்கு, நீதித்துறை சார்ந்த மற்றும் நீதித்துறை சாராத நடவடிக்கைகள் அனைத்தையும் உள்ளடக்கிய முழுமையான செயற்பாடு முக்கியமானதென வலியுறுத்தி,

PP13: முன்னைய முறைகேடுகளுக்கும், மீறல்களுக்கும் தீர்வு வழங்குவதற்கான பொறிமுறைகள் அவை சுதந்திரமானவையாகவும், பக்கச்சார்பற்றவையாகவும், வெளிப்படைத்தன்மை உள்ளவையாகவும் இருக்கும்போதும்; பாதிக்கப்பட்டோர், பெண்கள், இளையோர், பல்வேறு மதங்களினதும், இனங்களினதும், பிராந்தியங்களினதும், விளிம்பு நிலைக் குழுக்களினதும் பிரதிநிதிகள் உட்பட்ட தொடர்புடைய அனைத்துத் தரப்பினரதும் கருத்துக்களும் அறியப்படுவதை உள்ளடக்கிய கருத்தறியும் மற்றும் பங்குபற்றும் முறைகள் பயன்படுத்தப்படும்போதுமே சிறப்பாகச் செயற்படுமென்பதைப் புரிந்து,

PP14: பாரதூரமான மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தின் மோசமான மீறல்கள் என்பவற்றுக்குப் பொறுப்பானவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு உள்ள கடப்பாடுகளுக்கு அமைவாக நடந்து கொள்வது அரசுகளின் கடமையென்பதை மீளநினைவுபடுத்தி,

PP15: இலங்கையில் மனித உரிமைகளையும், உண்மை, நீதி, மீளிணக்கம், பொறுப்புக்கூறல் என்பவற்றை முன்னேற்றுவதற்கும் பாதுகாப்பதற்கும் மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஆணையாளரின் அலுவலகம் ஆற்றிய பணியைப் பாராட்டிக் கருத்திற்கொண்டு,

OP1: மனித உரிமைப் பேரவையின் நாற்பத்து மூன்றாவது கூட்டத்தொடரில் மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஆணையாளர் சமர்ப்பித்த வாய்மொழி மூல இற்றைப்படுத்தும் அறிக்கையையும், நாற்பத்து ஆறாவது கூட்டத்தொடரில் மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஆணையாளரின் அலுவலகம் சமர்ப்பித்த அறிக்கையையும் வரவேற்று;

OP 2: இலங்கை அரசுக்கும் மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஆணையாளரின் அலுவலகத்திற்கும் இடையில் 2015 ஆம் ஆண்டுக்கும் 2019 ஆம் ஆண்டுக்கும் இடையில் நிலவிய ஆக்கபூர்வமான தொடர்புகளை வரவேற்று, அத்தகைய ஈடுபாட்டைத் தொடருமாறு கோரி, மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஆணையாளரின் அலுவலகத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு இலங்கையிடம் அழைப்புவிடுத்து;

OP3: காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகம், இழப்பீடுகளுக்கான அலுவலகம் ஆகியன அடைந்துள்ள முன்னேற்றத்துக்கு ஏற்புத்தெரிவிப்பதுடன், பாதிக்கப்பட்ட நலிவடைந்த குடும்பங்களுக்கு – பாலினம் மீது கவனம் செலுத்தி – இடைக்கால நிவாரணம் வழங்குவதற்கும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான பல சம்பவங்களுக்குத் தீர்வு காண்பதன் மூலம் அவர்களுக்கு என்ன நடந்தது, அவர்கள் எங்குள்ளார்களென்ற விடயத்தைக் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பத்தினர் அறியச் செய்வதற்காகவும் இந்த அலுவலகங்களுக்கான ஆதரவைத் தொடர்ந்து பேணுவதன் முக்கியத்துவத்தையும், அவற்றின் சுதந்திரமான, செயற்திறனுள்ள செயற்பாட்டை உறுதிசெய்து, இரண்டு அலுவலகங்களும் அவற்றின் பணிகளைச் செய்வதற்குப் போதுமான வளங்களையும், தொழில்நுட்ப வசதிகளையும் வழங்குவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தி;

OP4: 2015 ஆம் ஆண்டு செப்ரெம்பரில் வெளியிடப்பட்ட OISL அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டவாறு, தமிழீழ விடுதலைப் புலிகளின் மீறல்கள் உட்பட, இலங்கையில் இடம்பெற்ற அனைத்து மனித உரிமை மீறல்களுக்கும், அத்துமீறல்களுக்கும் பொறுப்புக் கூறுவதற்கான முழுமையான பொறிமுறையின் முக்கியத்துவதை வலியுறுத்தி;

OP5: உள்நாட்டுப் பொறிமுறைகள் ஊடாக பொறுப்புக்கூறல் இல்லாத நிலை தொடர்வதைக் கருத்திற்கொண்டு, 2021 ஜனவரி 22 அன்று அறிவிக்கப்பட்ட உள்நாட்டு விசாரணை ஆணைக்குழுவுக்குச் சுதந்திரமோ, பாரிய மனித உரிமை மீறல்களுக்கும் சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் மோசமான மீறல்களுக்கும் பொறுப்புக்கூறலைச் செய்வதற்கான ஆணையோ இல்லாதமைக்கு வருத்தம் தெரிவித்து,

OP6: பொறுப்புக்கூறலை முன்னேற்றும் நோக்கத்துடன், இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றம் அத்துமீறல்கள் என்பன தொடர்பான சான்றுகளைப் பாதுகாப்பது, பகுப்பாய்வு செய்வது என்பவற்றின் முக்கியத்துவதை உணர்ந்து, தகவல்களையும் சான்றுகளையும் திரட்டி பகுப்பாய்வு செய்து பாதுகாப்பதற்கும், பாரிய மனித உரிமை மீறல்கள், சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தின் மோசமான மீறல்கள் என்பவற்றின் பொறுப்புக்கூறலுக்கான எதிர்காலத் திட்டங்களுக்கான சாத்தியமான மூலோபாயங்களைத் தயாரிப்பதற்கும், பாதிக்கப்பட்டோருக்கும் உயிர்பிழைத்தோருக்கும் ஆதரவாகக் குரல் கொடுப்பதற்கும், உரிய நியாயாதிக்கத்தைக் கொண்ட உறுப்பு நாடுகளில் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதற்கும், மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஆணையாளரின் அலுவலகத்தின் வல்லமையைப் பலப்படுத்தத் தீர்மானித்து;

OP7: குடிசார் அரச செயற்பாடுகளின் இராணுவ மயமாக்கம் ஆர்முடுகுவது, நீதித்துறையினதும், மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்குமான முக்கிய அமைப்புக்களினதும் சுதந்திரம் தேய்வடைவது, “அடையாளச் சின்னங்களான” சம்பவங்களில் குற்றம் புரிந்தோர் தண்டிக்கப்படாத நிலை தொடர்வதும், அவற்றுக்குக் பொறுப்புக் கூறப்படுவதைத் தடுக்கும் தொடர்ந்த அரசியல் தலையீடுகளும், மதம், நம்பிக்கை ஆகியன தொடர்பான சுதந்திரத்தை எதிர்மறையாகப் பாதிக்கும் கொள்கைகளும், குடிசார் சமூகத்தின் மீதான கண்காணிப்பும் மிரட்டலும், குறுகிச் செல்லும் ஜனநாயக இடைவெளியும், தான்தோன்றித்தனமாகத் தடுத்து வைத்தலும், சித்திரவதை மற்றும் மனிதத்தன்மையற்ற குரூரமான செயல்களும், பாலியல் அல்லது பாலினம்சார் வன்முறையும் குறித்த குற்றச்சாட்டுக்களும் உள்ளடங்கலாக இலங்கையில் மனித உரிமை நிலைமை மோசமடைந்து செல்வதைத் தெளிவாகப் பிரதிபலிக்கும் வகையில் கடந்த ஒரு வருட காலத்தில் நிலவும் போக்குகள் குறித்தும், இந்தப் போக்குகள் அண்மைய ஆண்டுகளில் எட்டப்பட்ட – குறைந்த அளவானவையாக இருந்தாலும் முக்கியமானவையான -முன்னேற்றங்களைப் பின்னடையச் செய்யும் ஆபத்துக்குள்ளாக்குவதுடன், முன்னைய காலத்தில் பாரதூரமான மீறல்களுக்கு வழிவகுத்த கொள்கைகளும், வழக்கங்களும் மீண்டும் உருவாகுவதற்கும் வழிவகுக்குமென ஆழ்ந்த கவலையை வெளியிட்டு;

OP8: மேலும், கோவிட்-19 உலகத்தொற்றுநோய் மதம் அல்லது நம்பிக்கை குறித்த சுதந்திரத்தைப் பாதித்து, முஸ்லிம் சமூகம் தற்போது எதிர்கொள்ளும் ஒதுக்கிவைக்கப்படும் மற்றும் பாகுபாட்டுடன் நடத்தப்படும் நிலைமையை மோசமாக்கியுள்ளதெனவும், கோவிட்-19 காரணமாக மரணமான அனைவரையும் தகனம் செய்யுமாறு இலங்கை அரசு பணித்துள்ளமை முஸ்லிம்களும், ஏனைய மதங்களைச் சேர்ந்தோரும் அடக்கம் செய்தல் தொடர்பான அவர்களது மதச் சடங்குகளைக் கடைப்பிடிப்பதைத் தடுத்துள்ளதுடன், சிறுபான்மை மதத்தினரை அளவுக்கு அதிகமாகப் பாதித்து, துன்பத்தையும், பதட்டத்தையும் அதிகரித்துள்ளதாகவும் கவலையை வெளியிட்டுஇ

OP9: நீண்டகாலமாகத் தீர்வு வழங்கப்படாதுள்ள, அடையாளச் சி;ன்னங்களான குற்றங்கள் உட்பட, பாரிய மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தின் மோசமான மீறல்கள் தொடர்பான அனைத்துக் குற்றச்சாட்டுக்கள் குறித்தும் தாமதமின்றியதும், முழுமையானதும், பக்கச்சார்பற்றதுமான விசாரணைகளை உறுதி செய்து, தேவைப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை அரசிடம் அழைப்புவிடுத்து,

OP10: மேலும், தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழு, காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகம், இழப்பீடுகளுக்கான அலுவலகம் என்பன செயற்திறனுடனும், சுதந்திரமாகவும் செயற்படுவதை உறுதி செய்யுமாறு இலங்கை அரசிடம் கோரி;

OP11: மேலும், குடிசார் சமூக செயற்பாட்டாளர்களைப் பாதுகாக்குமாறும், அவர்கள் மீதான தாக்குதல்கள் குறித்து விசாரணை செய்யுமாறும், இடையூறுகள், பாதுகாப்பின்மை, பழிவாங்கல்கள் என்பன இன்றிக் குடிசார் சமூகம் செயற்படுவதற்கு உகந்ததும், பாதுகாப்பானதுமான சூழலை ஏற்படுத்துமாறும் இலங்கை அரசிடம் கோரிக்கைவிடுத்து;

OP12: பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மீளாய்வு செய்யுமாறும், பயங்கரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கான எந்தச் சட்டமும் சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமானச் சட்டங்களின் கடப்பாடுகளுக்கு அமைவாக இருப்பதை உறுதி செய்யுமாறும் இலங்கை அரசிடம் வேண்டுகோள்விடுத்து;

OP13: அனைத்து மதத்தினரும், அவர்களது மத போதனைகளைப் பின்பற்றுவதற்கான வல்லமையை ஊக்குவிப்பதன் மூலம் மதச் சுதந்திரத்தையும், பன்மைத்துவத்தையும் வளர்த்து, அவர்கள் சமத்துவமான நிலையில் சமூகத்திற்கு வெளிப்படையாகப் பங்களிக்க உதவுமாறு இலங்கை அரசிடம் வலியுறுத்துத்தி;

OP14: சிறப்புச் செயற்பாடுகளுக்கான ஆணை பெற்றோருடன் தொடர்ந்து ஒத்துழைக்குமாறும், அவர்கள் ஏற்கனவே சமர்ப்பித்த கோரிக்கைகளுக்கு உத்தியோகபூர்வமாகப் பதிலளிக்குமாறும் இலங்கை அரசை ஊக்குவித்து;

OP15: மேலும், இலங்கை அரசுடன் கலந்தாலோசித்தும், அதன் ஒத்திசைவுடனும் மேற்குறித்த நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தத் தேவையான ஆலோசனைகளையும், தொழில்நுட்ப உதவிகளையும் வழங்குமாறு மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஆணையாளரின் அலுவலகத்தையும், உரிய சிறப்புச் செயற்பாடுகளுக்கான ஆணை பெற்றோரையும் ஊக்குவித்து,

OP16: மீளிணக்கம், பொறுப்புக்கூறல் ஆகியவற்றின் முன்னேற்றம் உள்ளடங்கலாக, இலங்கையின் மனித உரிமை நிலைமை குறித்த கண்காணிப்பையும், அறிக்கையிடலையும் அதிகப்படுத்துமாறும், மனித உரிமைப் பேரவையின் நாற்பத்து ஒன்பதாவது கூட்டத்தொடரில் எழுத்து மூலமான அறிக்கை ஒன்றைச் சமர்ப்பிக்குமாறும், பொறுப்புக்கூறலுக்கான மேலதிக தெரிவுகள் என்பவற்றை உள்ளடக்கிய விரிவான அறிக்கை ஒன்றை ஐம்பத்தோராவது கூட்டத்தொடரில் சமர்ப்பிக்குமாறும் மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஆணையாளரின் அலுவலகத்திடம் கோருகிறது. இந்த இரண்டு அறிக்கைகளும் ஊடாடும் உரையாடல்களில் கலந்துரையாடப்படும்.

குறிப்பு:

PP –  Preamble Paragraph – முன்னுரைப் பந்தி

OP – Operational Paragraph – செயற்பாட்டுப் பந்தி

emblemetic cases – அடையாளச் சின்னமான குற்றங்கள்

OISL – OHCHR Investigation on Sri Lanka – மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஆணையாளர் அலுவலகத்தின் இலங்கை குறித்த விசாரணை

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!