ArticlesNationகட்டுரை

இலங்கை போரில் இருந்து தப்பி எம்.வி. சன் சீயில் வந்தவர்களுக்கு நாம் தவறிழைத்தோம்

ஹரி ஆனந்தசங்கரி

கடந்த சில ஆண்டுகளாக ஐக்கிய அமெரிக்காவுக்கும் மெக்சிக்கோவுக்கும் இடையிலான எல்லையில் சிறு பிள்ளைகள் அவர்களது பெற்றோரிடம் இருந்து பிரிக்கப்படுவதைக் காட்டும் நிழற்படங்கள், குடிவரவாளர்களும், அகதிக் கோரிக்கையாளர்களும், தாம் பிறந்த சூழ்நிலைகளை விட மேம்பட்ட வாழ்க்கையை நாடும் ஏனையோரும் எதிர்கொள்ளும் குரூரங்களை அதிர்ச்சிதரும் வகையில் வெளிப்படுத்தின. அவர்களது வேதனையும், உதவி கோரி எழுந்த அவர்களது அவலக் குரலும் நாம் வாழும் இந்த உலகம் குறித்தும், இந்தக் காலகட்டம் குறித்தும் எம்மைக் கண்ணீர் சிந்த வைத்தன.

ஆனால், கனடா சிறிது காலத்திற்கு முன்பு இத்தகைய குருரத்தின் மையமாக விளங்கியது. இத்தகைய கொடுமையான படங்களை எமது தொலைக்காட்சித் திரைகளிலோ, டுவிட்டர் பக்கத்திலோ நாம் காணாதமையால் இது எமது நாட்டில் நடக்குமென நாம் கருதவில்லை, அல்லது அவ்வாறு நடக்காதென நாம் நம்பினோம்.

புகலிடம் தேடி வரும் அகதிகளது – முக்கியமாகச் சிறுவர்களது -உரிமைகளை மதிக்கும் நியாயமான மனிதர்கள் நாமென அனைவரும் கூறுகிறார்கள். ஆனால், இந்த விபரிப்புத் தவறானது.

எம்.வி. சன்யில் வந்தவர்களுக்கு உதவியளிப்பதற்காக 2010 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 13 ஆந் திகதி நான் எஸ்குவிமோல்ட் கனேடியப் படைத் தளத்தில் (CFB Esquimalt) இருந்தேன். இந்தக் கப்பலில் 49 சிறுவர்கள் உட்பட, இலங்கையில் இருந்து வந்த 492 தமிழ் அகதிகள் இருந்தார்கள்.

கப்பல் கரையை அடைந்தபோது, ஆண்களும் பெண்களும் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டுப் பெருநிலப்பரப்பில் இருந்த வெவ்வேறு தடுப்பு நிலையங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டார்கள். பிள்ளைகளுடன் இருந்த பெண்கள் (வாழ்க்கைத் துணைகளிடம் இருந்தும், தந்தைகளிடமும் இருந்து பிரிக்கப்பட்டு) பேர்ணபி இளையோர் தடுப்பு நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டார்கள். தனியாக வந்த இளையோர் ஆறு பேர் பிரிட்டிஷ் கொலம்பிய சிறுவர் உதவிச் சங்கத்தால் பொறுப்பேற்கப்பட்டார்கள். தந்தையுடன் மட்டும் வந்த சிறுவன் பிரிக்கப்பட்டு பேர்ணபி இளையோர் தடுப்பு நிலையத்திற்கு அனுப்பப்பட்டான்.

குடும்பங்கள் பல மாதங்கள் பிரிந்திருந்தன. தந்தையுடன் வந்த தனியான சிறுவன், கனடாவில் அவருக்கிருந்த ஒரே ஒரு பெற்றோரிடம் இருந்து பிரிக்கப்பட்டிருந்தார். இந்தச் சிறுவர்கள் அனைவரும் அவர்களது தாய்நாட்டில் போரின் கொடூரங்களால் மிகச் சிறிய வயதில் இருந்தே பாதிக்கப்பட்டிருந்தார்கள். கைக்குழந்தை ஒன்றின் தலையில் வெடிகுண்டின் சிதறு துண்டு ஒன்று இருந்தமை, அந்தக் குழந்தையின் இளம்பராய போர்ப் பாதிப்புக்கான அப்பட்டமான சான்றாக விளங்கியது. எம்மால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாத வடுக்களை ஏனையோர் கொண்டிருந்தார்கள், தற்போதும் கொண்டிருக்கிறார்கள்.

எம்.வி. சன் சீயிலும், அதற்கு ஒரு வருடம் முன்பு ஓஷன் லேடியிலும் வந்தவர்களின் பயணம் குறித்துப் பலமுறை நான் கருத்து வெளியிட்டுள்ளேன். நாங்கள் இந்த ஆண்களையும், பெண்களையும், சிறுவர்களையும் நடத்திய முறை என்னை ஆழமாகப் புண்படுத்துகிறது.

இந்த அகதிகள் ஆபத்தானவர்கள், விரும்பப்படாதவர்கள், வரவேற்கப்படாத அந்நியர்களென்ற விபரிப்பு எம்.வி. சன் சீ வந்தடைவதற்குச் சில வாரங்களுக்கு முன்பே பரப்பப்பட்டது. அப்போதைய குடிவரவு அமைச்சர், கப்பலில் பயங்கரவாதிகள் இருக்கலாமெனக் கனேடியர்களைப் பயமுறுத்தினார். இந்த அகதிகள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களெனவும், குற்றவாளிகளெனவும், சட்டவிரோத ஆட்கொணர்வாளர்களெனவும், போலிகளெனவும் அவர் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார்.

அகதிக் கோரிக்கையாளர்கள் மீது இந்த முத்திரை இறுகப் பதிந்தது. அவர்கள் கரைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது, நான்கு மாத காலத்திற்கு விடுவிக்கப்பட்டாத கட்டாய தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்கள். அவர்களுக்கு B001 தொடக்கம் B492 வரையான அடையாள இலக்கங்கள் கொடுக்கப்பட்டு, அவர்களின் மனித இயல்பு பறிக்கப்பட்டது. அவர்களது பெயர்களும், தனிப்பட்ட அவர்களது கதைகளும் கண்ணுக்குப் புலப்படாதுபோயின.

தடுப்புக் காவலில் அவர்கள் கனேடிய எல்லைச் சேவை முகமை, ஆர்சீஎம்பி ஆகியவற்றின் விசாரணைகளில் மிரட்டலையும், தொடர்ச்சியான தொந்தரவுகளையும் எதிர்கொண்டார்கள். அவர்களது மனதையும், அவர்களது ஆன்மாவையும் உடைத்த பின்பே நாம் அவர்களை விடுதலை செய்தோம்.

இந்த அகதிகள் கையாளப்பட்டபோது அகதிகள் சாசனத்தை எமது கனேடிய அரசு எண்ணற்ற தடவைகள் மீறியது. அது இலங்கை அரசைத் தொடர்பு கொண்டு, இங்கு வந்தவர்களின் அடையாளங்களின் இரகசியத்தைச் சிக்கலுக்குள்ளாக்கியது. அகதிக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட ஒருவரை நாம் நாடு கடத்தி, இலங்கை அதிகாரிகளின் கைகளில் அவர் மரணமாகவும் வழிவகுத்தோம்.

எம்.வி. சன்சீயிலும், ஓஷன் லேடியிலும் வந்தவர்களில் பெரும்பாலானவர்கள் அனேகமான அகதிக் கோரிக்கையாளர்கள் ஒருபோதும் எதிர்கொள்ளாத சவால்களை எதிர்கொள்ளவேண்டியிருந்தது. பலரது விண்ணப்பங்கள், குடிவரவு மற்றும் அகதிகள் சபையால் விசாரணை செய்யப்படுவது காலவரையறை இன்றி, சில வேளைகளில் ஏழு வருடங்கள் வரை பிற்போடப்பட்ட, பழைய விண்ணப்பங்களுள் அடங்கியிருந்தன.

கனடாவுக்குள் தாம் அனுமதிக்கப்படக் கூடியவர்களென நிரூபிப்பதற்கு ஏனையோர் சட்ட வழியில் போராடவேண்டியிருந்தது. கப்பலில் வந்தவர்களுக்கு உணவு வழங்கியதற்காகவும், அவர்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்தமைக்காகவும் வேறு சிலர் மீது குற்றவியல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டபோதிலும், அந்தக் குற்றச்சாட்டுக்களை அவர்கள் தோற்கடித்தார்கள். தற்போதும் பலர் நிரந்தர வதிவிட உரிமைக்காகவும், கடந்த ஒரு தசாப்த காலத்தில் தாம் சந்திக்காத – கர்ப்பத்திலும், கைக் குழந்தைகளாகவும், சிறுவர்களாகவும் (அவர்கள் தற்போது பதின்ம வயதானவர்களாகவும், இளையோராகவும் மாறிவிட்டார்கள்) விட்டு வந்தவர்கள் உட்பட்ட தமது உறவினர்களுடன் மீள இணைந்து கொள்வதற்கும் காத்திருக்கிறார்கள். குடும்ப மீளிணைவுக்குக் கோவிட்-19 தற்போது அவர்கள் எதிர்கொள்ளும் மற்றொரு சவாலாக மாறியுள்ளது.

இந்த இரண்டு கப்பல்களிலும் வந்தவர்களில் மிகப் பெரும்பாலானவர்களை இந்தப் பத்து வருட காலத்தில் நான் சந்தித்துள்ளேன். இன்று கனடாவில் ஒரு தசாப்தத்தை நிறைவு செய்யும் அவர்கள், பிள்ளைகள் வாழ்க்கைத்துணை ஆகியோரிடம் இருந்து நீண்டகாலமாகப் பிரிந்திருப்பது, மன அழுத்தம், போதையூட்டும் பொருட்களுக்கு அடிமையானமை, போரின் நீடித்த அதிர்ச்சி என்பவற்றின் சவால்களை எதிர்கொள்கிறார்கள். தந்தையர் பலருக்கு அவர்களது பிள்ளைகளைத் தெரியாதென்பதுடன், மேலும் பலர் பிள்ளைகளுடன் எந்த உறவும் இல்லாதிருக்கிறார்கள்.

அகதியாக இருப்பது ஒருவரின் தெரிவோ, குற்றமோ அல்ல அது அவசியமாகிறது. மக்கள் பாதுகாப்பான இடங்களை அடைவதற்கு அவர்களது உயிர்களைப் பெரும் ஆபத்துக்களுக்கு உட்படுத்தும்போது, அதில் வெற்றிபெற அவர்களுக்கு நியாயமான சந்தர்ப்பத்தை நாம் வழங்கவேண்டும். எம்.வி. ஓஷன் லேடி, எம்.வி. சன் சீ ஆகியவற்றைப் பொறுத்தவரை எமது கட்டமைப்புத் தவறிழைத்தது. அந்தப் பிள்ளைகளுக்குத் தவறிழைத்த நாம், இறுதியில் எமது சொந்த நெறிமுறைகளையும் மீறினோம். இதே தவறை நாம் மீண்டும் ஒருபோதும் செய்யாதிருப்போமாக.

ஸ்காபறோ ரூஜ் பார்க் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான ஹரி ஆனந்தசங்கரி,

கனடாவுக்கு அகதியாக வந்தவர்.

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!