ArticlesVideosகட்டுரைகௌசி

எங்கிருந்தோ வந்தான் – By : கௌசி காணொளியில் கதை

எங்கிருந்தோ வந்தான்

நிலைத்து நின்ற கண்கள், நிதானம் இழந்த உணர்வுகள், பேச்சிழந்த வாய், பித்துப் பிடித்ததுபோல் இருக்கையில் இருந்த எனது தந்தை, மெல்லக் கால்களை அசைத்தார். அமைதியாக பூப்பஞ்சணையிலே மலர்ந்த முகத்துடன் உறங்கிக் கொண்டிருந்த எனது தாய், ஓயாத அங்கங்களுக்கு ஓய்வு கொடுத்து மீளா உறக்கத்தில் உறங்கிக் கொண்டிருந்தாள். கடமைகள் முடிந்தன. இனி வரும் காலங்கள் பெற்ற பிள்ளைகளானாலும் ஒட்டி உறவாட முடியுமா! எட்ட நின்றே இன்பங் கண்டு களித்திருக்க அநுபவங்கள் ஆணையிட, யாருக்கும்  சுமையாக காலம் தள்ளும் சுகம் வெறுத்து மீளா உறக்கம் கொண்டு அழகாகத் தூங்கினாள். அருகே வந்தவர் அவள் கரங்களைப் பற்றினார். ஓ…….. என்று வெடித்தது குரல், கண்களுக்குள் மறைந்திருந்த கண்ணீர் மேகம் உடைத்துக் கொண்டு கொட்டத் தொடங்கியது.

https://www.youtube.com/watch?v=ihKLHdqb7Jk 

“உன்ன எங்கே நான் கூட்டிக் கொண்டு போகல்ல. எல்லா இடமும் ஒன்றாத்தானே போனோம். இப்ப மட்டும் தனியாப் போக எப்படி நினைச்சனீ. இந்தியாவிற்கு உன்னைக்கு கூட்டிக் கொண்டு போய்க் காட்ட வேண்டும் என்று தீராத ஆசை கொண்டிருந்தேனே. ஐயோ…..உன்ன அனுப்பிட்டு நான் ஏன் இஞ்ச… நிற்கிறன். நான் என்ன செய்வன்….. ´´ வார்த்தைகள் அடங்கவில்லை. அருகே இருந்தவர்கள் அணைத்துக் கொண்டு வெளியே கொண்டு வந்தார்கள். தனது தொழில் நிறுவனத்தில் கூட மாற்றங்கள் வரும் போதெல்லாம் மந்திரிகளின் துணையுடன் மனைவியை விட்டுப் பிரியாது பிரிவின்றி ஒன்றாக வாழ்ந்த தம்பதியினர். இறப்பு ஒன்றுதான் அவர்களைப் பிரிக்கும் என்பது நியதி. அதுவே நடந்தது.

      மனைவி தன் அரை உயிரைக் கொண்டு சென்ற உணர்வு அடுத்தடுத்த வாரங்களில் உடலுக்குள் ஒலித்தது. ஓடிக்கொண்டிருந்த இரத்தம் நிலைகுலைந்தது. செல்களுக்குள் ஒரு தவிப்பு பற்றிக் கொண்டது. அவள் இல்லையா! இனி வரமாட்டாளா! இனி எப்போதும் காணமாட்டோமா! தவியாய்த் தவித்தது மனம்.

“மனைவியோடு எவையும் போம்‘‘ என்பதை உடல் உணர்ந்தது. உள்ளத்தால் நொந்து போனார். மெல்ல மெல்ல உள்ளத்து உறுதியை மனைவி கொண்டு சென்று விட்டாள். நாடு விட்டு நானும் அனுப்பப்பட்டேன்.

 பறந்து செல்லும் சிகரெட் புகை என் தந்தையின் கருகிப் போன நுரையீரலுக்கு அடையாளமாகியது. இரத்தப் பரிசோதனை நுரையீரல் புற்றுநோயை அடையாளப்படுத்தியது. உறவுகள் துடித்தது. ஹீமோதெரபி செய்வதற்காக மருத்துவமனை சென்றவர் அன்றுதான் உணர்ந்தார். எமக்குள்ளே இருக்கும் இயந்திரங்களை நாம் தானே கெடுக்கின்றோம். உடலுக்குக் கேடு என்று அறிந்தும் இதை புகைத்துத் தள்ளினோமே என்று மனம் வேதனையடைந்தார்.

     அன்று ஒரு ஹீமோதெரபி நாள். உடலுக்குள்ளே உள்ள புற்றுநோய் செல்களை மின்சாரத்தால் சுட்டுப் பொசுக்குகின்றார்கள். இச்சமயம் நல்ல செல்களும் இறக்கின்றன. இதனால் உடலுக்குள்ளே உயிர் கொண்ட உறுப்புக்கள் வலியால் துடிக்கின்றன. தாங்கமுடியாத வேதனையால் வாய் புலம்புகின்றார் என் தந்தை.

                “இந்த சனியனை நான் ஏன் குடிச்சன். மூச்சு எடுக்க முடியல்ல. சத்தி எடுத்தெடுத்து தொண்டை புண்ணாகிப் போயிற்று. அரக்கனா இந்த வருத்தம். ஊருக்கெல்லாம் நல்லது செய்தேனே! எத்தனை குடும்பங்கள் என்னால் வாழுகின்றன. கோயிலுக்கெல்லாம் தலைவன் தருமகர்த்தா என்று பெயர் எடுத்தேனே! இந்தப் பொல்லாத வருத்தம் என்னக் கொல்லாமல் கொல்லுதே! இந்த சாமி தம்பிரான் எல்லாம் எங்க போயிற்று. விடை தேட முடியாத கேள்விகளுக்கு விடை எங்கே பெறப் போகின்றார். பழைய நினைவுகள் இடையிடையே வந்து அவர் வலியை இன்னும் மிதப்படுத்தும்.

     மனைவி சொன்ன பல வார்த்தைகள் மனதுக்குள் புண்ணாய்த் தைத்தன. அன்று கூறினாள். அவள் இதயத்துள் எத்தனை பாரங்களைச் சுமந்திருப்பாள். இன்று என் மனப் பாரங்களை இறக்கி வைக்க முடியவில்லையே.

           நோயாய் வந்திருக்கும் எமன் தீரா வலியைத் தராது என்னைத் தாமதிக்காது தூக்கிச் சென்றால் எவ்வளவு நன்றாக இருக்கும். அப்போதுதான் என் தந்தை செய்த புண்ணியம் தலை காத்தது. வருடக்கணக்கில் தலைமறைவாகிப் போன ஒரு திடகாத்திர மனிதனைத் தேடிக் கொண்டிருந்தார். அவன் உடல் வலிமை உணர்ந்தவர் என் தந்தை. அவன் இருந்தால், இன்று எனக்கு எத்தனை உதவியாக இருக்கும் என்று மனதால் நினைத்து வாய் விட்டுச் சொன்னார். அடுத்த நாள் அவர் கண்முன்னே வந்து நின்றான் அம் மனிதன். என்ன  ஆச்சரியம் இவர் நினைத்த எண்ண அலைகள் அவன் மனதுக்குள் புகுந்த ஆச்சரியம் தான் என்ன? அன்று தான் வந்தான் எந்தவித கேள்வியும் இன்றி தந்தையை மெல்லத் தாங்கலாய்த் தூக்கினான். யாருடைய அநுமதியுமின்றி பணிவிடை செய்யத் தொடங்கினான்.

         வைத்தியசாலையில் அநுமதிக்கப்பட்ட தந்தையை அருகே இருந்து கவனித்தான். அவர் உடலுக்கும் உயிருக்கும் அவன் வருகை ஒரு ஆறுதலாக இருந்தது. நோயின் பலம் குறைந்தது போன்று உணர்ந்தார். ஒரு நாள் இரவு. அவன் கையை தன் நெஞ்சில் வைத்துத் தடவும் படிப் பணித்தார் என் தந்தை. அவனும் தடவிக் கொண்டிருந்தான். ஆழ்ந்து உறங்கிப் போன அவர் உடல் குளிர்ந்து போவதை அவதானித்தவன். அவரை உற்றுப் பார்த்தான் எந்தவித சலனமுமின்றி மீளா உறக்கத்தில் உயிரற்ற உடலுடன் உறங்கிக் கொண்டிருந்த என் தந்தையை அவதானித்தான். நான்கு பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கி, ஊருக்காகப் பாடுபட்டு, உறவுகளை எல்லாம் அணைத்தெடுத்து வாழ்ந்த அந்த உயிர், அன்று நன்றிக்கடன் பட்டவன் மட்டுமே அருகிருக்க பிரிந்து போனது. எங்கிருந்தோ வந்தான். கடைசிக்காலத்தில் பணிபுரிந்தான். ஈமக்கிரிகைகள் முடிந்தவுடன் யாரிடமும் கூறாது, மறைந்து போனான். அவன் இன்று எங்கிருக்கின்றான் என்று யாருக்குமே தெரியாது. யார் அவன்? கடவுளா? இல்லை கடவுள் அனுப்பிய தூதுவனா?

   வாழும் போது நாம் செய்யும் நற்காரியங்கள் எங்கள் இயலாக் காலத்தில் வந்து கைகொடுக்கும் என்பதற்கு இச்சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு.

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!