ArticlesNationகட்டுரைகணினித்தமிழ்முனைவர் துரை.மணிகண்டன்

கணித்தமிழும் வேலைவாய்ப்புகளும் – ஒரு பார்வை

முன்னுரை

 “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற கணியன் பூங்குன்றனார் உலக மாந்தர்கள் அனைவரும் உறவினர்கள் என்ற எதிர் காலத் தத்துவத்தை உணர்த்திய புலவன் இன்று மன்னில் இல்லை. இருந்தாலும் அவரின் எழுத்தும், கருத்தும், இன்றும், என்றும் நிலைத்து நிற்கின்றனர். அந்த வகையில் இன்றைய அறிவியல் புரட்சியின் காரணமாகவும் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாகவும் தோன்றியதுதான் கணிப்பொறி. இக்கணிப்பொறி வளர்ந்தவிதம் அனைவருக்கும் தெரிந்த விடயமே! இருந்தாலும் இன்று இதன் பயன்பாடுகள் அனைத்துத் துறைகளிலும், அனைத்துலக மொழிகளிலும் பயன்பாட்டில் உள்ளது. அவ்வாறு பயன்படுத்தப்படும் கணினி இன்று உலகத்தில் வாழும் தமிழ்ச்சமுதாயத்தையும் விட்டுவைக்கவில்லை. கணினித்தமிழில் பல்வேறு வகையான வேலை வாய்ப்புகள் இன்று உள்ளன என்பதைப்பற்றி விவரிப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

ஆய்வுமுறை

உலக அளவிலும் தமிழ்நாட்டிலும்  இணையம், கணிப்பொறியில் தமிழ்மொழியின் பயன்பாடுகள் எப்படி இருக்கின்றது? அதனால் தமிழ்மொழிப் படித்தவர்களுக்கு இத்துறையில் ஏற்பட்டிருக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்தைப் பற்றிய ஒரு சமூக முன்னேற்றத்தை முன்வைத்து இக்கட்டுரை அமைகிறது.

இணையத்தில் மொழிகளின் பயன்பாடுகள்

உலகில் இணையம் பயன்படுத்தப்படும் நாடுகளின் மக்கள் தொகையின் அடிப்படையில் சீனா – 52.7% இந்தியா – 34.4% அமெரிக்கா- 87.9% பிரேசில் – 65.9% இந்தோனேசியா -50.4% ஜப்பான் – 94.0% ரஷ்யா – 72.9% நைஜிரியா – 48.8% ஜெர்மணி –  89.0% மெக்சிகோ – 53.7% என்ற வரிசையில் Internet World Stats மார்ச் -2017 ஆண்டு இறுதியின் கணக்கில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்திய மொழிகளில் தமிழ் 42%, இந்தி – 39%, கன்னடம்- 37%, வங்காளம் 34%, மராத்தி – 34%, தெலுங்கு 31%, குஜராத்- 31%, மலையாளம்- 27% என்ற கணக்கில் 2016 ஆண்டு இந்திய இணையப்பயன்பாட்டுக்  கணக்கெடுப்புக் கூறியுள்ளது.

இதே நிலையில் 2021 ஆண்டு கணக்கின்படி இந்திய மொழிகளில் இந்தி 37.5%, வங்காளம் 42%, தமிழ் 32%, மராத்தி – 51%, குஜராத் – 26%, கன்னடம்-25%, மலையாளம் – 17% பன்யன்படுத்தப்படும் என்று இந்திய இணையப்பாட்டு ஆய்வு நிறுவனம் குறிப்பிட்டுள்ளதாக தேனி. எம். சுப்பிரமணியம் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதில் ஏற்றமும் இரக்கமும் இருக்கும் என்பது பயன்படுத்தப்படுவதைப் பொறுத்து அமையும்.

தமிழ்மொழி

தமிழ்மொழியில் கணிப்பொறியும் இணையமும் பயன்படுத்தப்படும் பயன்பாடு அதிகரித்தாலும் அதில் வேலைவாய்ப்புகள் என்று கூறிக்கொள்ளும்படி மேன்மைப்படுத்தப் படவில்லை என்றே கூறலாம். இருந்தாலும் ஒருசில தனியார் நிறுவனங்களில் பணிபுறியும் பணியாளர்கள் தங்கள் சுயமுயற்சியால் பல்வேறு தமிழ்மொழிச்சார்ந்த மென்பொருள்களை உருவாக்கி சந்தையில் வெளியிட்டுக் கொண்டிருக்கின்றனர். இதுவே ஒரு வளர்முகமாகத்தான் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். இதனை அடிப்படியாகாக் கொண்டு இன்னும் பல்வேறு தமிழ் சார்ந்த வேலைவாய்ப்புகளை இத்துறையில் செயல்படுத்தமுடியும்.

தமிழ்மொழிச்சார்ந்த வேலை வாய்ப்புகள்

  1. யூனிகோடு(ஒருங்குறி) முறையில் தட்டச்சு செய்து கொடுத்தல்
  2. தமிழில் நிரலாக்கம்  எழுதுதல்
  3. தமிழில் மென்பொருள்கள் உருவாக்குதல்
  4. தமிழில் குறுஞ்செயலிகள் உருவாக்கம்
  5. தமிழ்க்கணினித் தொடர்பான ஆலோசனைக்குழு உருவாக்குதல்
  6. இணையதளம்+வலைப்பூக்கள் உருவாக்குதல்
  7. மின்னூல்கள் உருவாக்குதல்
  8. தமிழ் அகராதிகள், புதிய கலைச்சொற்கள் உருவாக்குதல்

இவ்வாறன தலைப்புகளில் வேலைவாய்ப்புகள் உருவாக்கலாம். உருவாக்கி வருகிறார்கள்.

  1. ஒருங்குறி (UNICODE) தட்டச்சு

தொடக்கத்தில் தமிழில் தட்டச்சுமுறை இருந்துவந்தது அனைவரும் தெரிந்த விடயம். பிறகு கணிப்பொறி வந்தவுடன் கணினியில்  தமிழில் தட்டச்சு செய்வது மிகவும் இடர்பாடாக இருந்தது. இதனைப் போக்க 1980 களில் உலக நாடுகளைச் சார்ந்த இணையத்தமிழ ஆர்வலர்கள் மற்றும் மென்பொருள் நிறுவனங்களைச் சார்ந்தவர்கள்  பல்வேறு தமிழ் எழுத்துருக்களை உருவாக்கி வெளியிட்டனர். அவர்களில் குறிப்பிடத் தகுந்தவர்களாக  ஜார்ஜ் எல்.ஹார்ட் உருவாக்கிய ’தமிழ் லேசர்’, பெரியண்ணன் குப்புசுவாமி உருவாக்கிய ’அணங்கு’ K. சீனிவாசன் உருவாக்கிய ‘ஆதமி’, ஆதவின், திருவின், முத்துநெடுமாறன் உருவாக்கிய ‘அஞ்சல்’ ‘முரசு’ விஜயகுமார் உருவாக்கிய ‘சரவஸ்வதி’  கோவிந்தாராசு உருவாக்கிய ‘பல்லாடம்’ போன்ற 500 மேற்பட்ட தமிழ் எழுத்துருக்கள் உருவாயின. தொடக்க காலத்தில் இவ்வெழுத்துருக்கள் உருவாகி தமிழின் பயன்பாட்டில் பயன்படுத்தப்பட்டு வந்தன. காலப்போக்கில்  உலகம் முழுவதிலும் உள்ள கணினி ஆர்வளர்கள் தன் பயன்பாட்டை கொண்டு செல்ல முடியவில்லை. அதற்குத் தீர்வாக ஒருங்குறி (UNICODE) எழுத்துருமுறைத் தோற்றம் பெற்றது. இது உலகில் உள்ள அனைவரது கணினியிலும் தமிழ் எழுத்துரு ஒரே மாதிரியாகத் தெரியும் வண்ணம் கண்டுபிடிக்கப்பட்டுப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இவை இன்றைய தமிழ் மாணவர்களுக்குப் பல பயனுள்ள வேலைவாய்ப்பாக இருந்துவருகிறது. ஏன் என்றால் இன்று தமிழ்நாட்டில் ஒருங்குறியில் தட்டச்சுச் செய்து கொடுக்க தட்டச்சுக் கூடங்கள் தயார்நிலையில் இல்லை என்பதே காரணமாகும். இதனை உணர்ந்து இன்றையத் தமிழ் மாணவர்கள் இந்த தமிழ் ஒருங்குறி முறையிலான தட்டச்சைக் கற்றுக்கொண்டால் நல்ல வேலை உண்டு. இதனை அனைவரும் செயலபடுத்தலாம். இதற்கானப் பயிற்சியை இன்று பலர் வழங்கி வருகின்றனர். இதனை வீட்டிலிருந்தே செய்துகொடுக்கலாம்.  

  • தமிழில் நிராலாக்கம் செய்தல் அல்லது கற்றுக்கொடுத்தல்

இன்றையத் தமிழ்ச்சூழல் தமிழ் மென்பொருள்கள் அதிகமாகத் தேவைப்படுகின்றன. உலக அரங்கில் பல்வேறு மொழிகளில் பல்வேறு மென்பொருள்கள் உருவாக்கப்பட்டு வெளிவந்து கொண்டிருக்கின்றன.

அவ்வாறு உருவாக்கப்படும் மென்பொருள்களுக்கு நிரலாக்கம்செய்து கொடுக்கும் பணி மிக முக்கியமானப் பணியாக உள்ளது.  இஃது இன்றையத்  தமிழ்க்கணினித்துறையில் நல்ல வரவேற்பை பெற்றுத் திகழும். இதுவும் நாம் சுயமாக ஒரு இணையக் கூடத்திலோ அல்லது மேகக் கணிமையிலே செய்யலாம் அல்லது பல்வேறு இடங்களில் தமிழில்  நிரலாக்கம்  தொடர்பான பயிற்சியை வழங்கலாம்.

  • தமிழ் மென்பொருள்கள் உருவாக்கம்.

கணினித்தமிழ் வளந்துவரும் இன்றையச்சூழலில் தமிழ்மொழிக்கான பல்வேறு மென்பொருள்கள் உருவாக்க வேண்டியச் சூழலில் நாம் உள்ளோம். இதுவரை தமிழில் மென்பொருள்கள் ஒருசிலவே வந்துள்ளன. இது இன்னும் அதிகரிக்கவேண்டும். (பேரா.கிருஷ்ணமூர்த்தியின் பொன்மடல், பொன்மொழி; பேரா. தெய்வசுந்தரத்தின் தமிழ்மொழிச் சொல்லாளர்; திரு நீச்சல்காரனின் வாணி போன்றவையே உருவாக்கப்பட்டுப் பயன்பாட்டில் உள்ளது) அதற்குத் இன்னும் பல புதிய தமிழ் மென்பொருள்களான எழுத்துரையை பேச்சுரையாக மாற்றுவதற்கும், பேச்சுரையை எழுத்துரையாக மாற்றுவதற்கும், கற்றல் கற்பித்தலில் மிக இலகுவாக பயன்படக்கூடிய மென்பொருளையும் நாம் உருவாக்கலாம். மேலே குறிப்பிட்ட ஒருசில தமிழ் மென்பொருள்களை இன்னும் பல மென்பொருள்கள் உருவாக்கப்பட வேண்டிய கட்டாயத் தேவை உள்ளது. இதனை இன்றைய கணினித் தமிழ் ஆய்வாளர்கள் உருவாக்க முன் வந்தால் இத்துறையில் பல்வேறு வேலைவாய்ப்புகளை நாம் உருவாக்கிக் கொள்ளலாம். இதற்கு அரசின் நிதியும் ஆய்வு மையமும் தேவைப்படும். அதனை அரசு உருவாக்கிக் கொடுக்க வேண்டும்.

  • தமிழில் குறுஞ்செயலிகள் உருவாக்குதல்

”கற்றது கால்குலேட்டர் அளவு கல்லாத்து கணிப்பொறி அளவு” பழமொழிக்கேற்ப நாளொறு மேனியும் பொழுதொருவண்ணமும் தொழில்நுட்பம் வளர்ந்துகொண்டே செல்கின்றன. நாம் இதனை நினைவில்கொண்டு செயல்பட்டால் இத்துறையில் பல்வேறு வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ளலாம். அவற்றில் தற்பொழுது குறுஞ்செயலி (Application) என்பது வேகமாக வளர்ந்து வரும் ஒரு செயல்பாடாகும். எந்த வேலையையும் மிக இலகுவாக செய்துமுடிக்க இந்தச் குறுஞ்செயலிகள் பயன்படுகின்றன. இன்று தமிழில் பல ஆயிரக்கான குறுஞ்செயலிகள் பயன்பாட்டில் உள்ளன. ஆனால் ஒருசிலமட்டும் பயனுள்ளதாக உள்ளன. இன்னும் பல்வேறு பயனுள்ள குறுஞ்செயலிகளைத் தமிழில் உருவாக்க வேண்டும். இதுவரை விளையாட்டுத் தொடர்பானவை, பல எழுத்தாளர்களின் கதைகள் மற்றும் கவிதைகள், பொழுதுபோக்கான குறுஞ்செயலிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இவை அல்லாமல் இன்றையத் தேவைகளை உணர்ந்து திரு. செல்வமுரளியின் விவாசாய குறுஞ்செயலிகள் போல பல்வேறு தொழில்சம்பந்தாமான (எ.கா  கட்டட தொழிலாளர்கள் பற்றியனவும், தமிழ் மருத்துவம் சார்ந்தனவும், பழங்கால கட்டட  தொழில் நுணுக்களைப் பற்றியும்) குறுஞ்செயலிகளும் கற்றல் கற்பித்தலில் இருக்கும் பல்வேறு இலகுமுறையான குறுஞ்செயலிகளையும் உருவாக்கி வெளியிட்டால் பலவகைகளில் வேலைவாய்ப்புகள் உருவாகக் காரணமாக இருக்கும். மேலும் நாம் உருவாக்கும் குறுஞ்செயலிகள் உலகத் தரம் வாய்ந்தாகவும் இருக்க வேண்டும். ஏன் என்றால் இன்று தமிழ்மொழி தமிழ்நாட்டில் மட்டும் பேசும் மொழியன்று ‘இது இன்று ஒரு குவளையத்தின் தாய் மொழி’ என்று பேரா.வா.செ.குழந்தைசாமி குறிப்பிடுவதை நினைவில்கொண்டு நாம் கணினித்துறையில் பல புதிய செயலிகளை உருவாக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் ”யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற சொற்பொருளை நாம் சென்றைடைய முடியும்.

  • தமிழ்க்கணிமைத் தொடர்பான ஆலோசனைக்குழு உருவாக்குதல்

திரு. நரேந்திரமோடியின் வேலைவாய்ப்பு உருவாக்கம் என்ற திட்டத்தில் அறிவியல் திறன்சார் நிறுவன்ங்கள் அந்தந்த தாய்மொழியில் இந்தியாவில உருவாக்கப்பட்டு வந்துள்ளன என்பது மகிழ்ச்சியே. அவைகளில் இன்று தமிழ் மொழிக்கான இடத்தை நம் இளையத் தலைமுறைகள் தக்க வைக்கவில்லையென்றே கூற்வேண்டும். அதற்கெல்லாம் நாம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அதற்கு அரசு முன்வந்து தமிழ்க் கணிமைத் தொடர்பான மாவட்டம் தோறும் ஆலோசனைக் கூடங்களை நட்த்த வேண்டும், அதன்வழி இன்றையத் திறன் சார்ந்த புதிய கணினிக் கண்டுபிடிப்புகளை உருவாக்க நாம் அவர்களைத் தயார்படுத்த வேண்டும். அப்பொழுதுதான் இந்தக் கணினி இணையத் துறை நாம் எதிர்பார்த்த அறிவு வளர்ச்சியையும் புதிய பயன்பாட்டு மென்பொருளையும் உருவாக்க முடியும். அவ்வாறு உருவாக்க இருக்கும் தமிழ்க்கணிமை சார்ந்த ஆலோசனைக்குழு ஒருங்கிணைப்பில் பல்வேறு துறையைச் சார்ந்த வல்லுனர்களைக் கொண்டு வழிநடத்தப்பட வேண்டும். இல்லையேல் கணினித் தமிழ் தொடர்பான ஆய்வு நிறுவனம் ஒன்று தொடங்கவேண்டும். (இன்று தமிழ் இணையக் கல்விக்கழகம் உள்ளது) இல்லையென்றால் அரசு இத்துறைக்காக ஒரு பல்கலைக்கழகத்தை  உருவாக்க வேண்டும். மேலும் அனைத்துக் கல்லூரிகளிலும் கணினித் தமிழ் துறை உருவாக்க வேண்டும். அப்பொழுதுதான் நாம் எதிர்பார்த்த தமிழ்க் கணிமை ஆராய்ச்சி வளரும் அதனால் பலருக்கு வேலைவாய்ப்பு வழங்க முடியும். எனவே பல்வேறு இடங்களில் கணினித்தமிழ் ஆலோசனை மன்றம் உருவாக்க வேண்டும்.( மாவட்டம் தோறும் தமிழ்வளர்ச்சித் துறை இருப்பதுபோன்று  மாவட்டம் தோறும் தமிழ்க்கணிமை வளர்ச்சித் துறை உருவாக்கப்பட வேண்டும்)

  • இணையதளம்+வலைப்பூக்கள் உருவாக்குதல்

கணினியின் பயன்பாட்டால் இன்று உலகம் வேகம் எடுத்துள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். நாம் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத அளவு அறிவியல் தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது. கணினி முதலில் பாதுகாப்பிற்காகப் பயன்படுத்தப்பட்டது என்பது உண்மேயே. ஆனால் இன்று அதன் பயன்பாடுகள் அனைத்துத் துறைகளிலும் பயன்படுத்தப் பட்டு வருகிறது. மேலும் இன்று அனைத்துத் தொழில் நிறுவனங்களும் தங்களுக்கான இணையதளங்களை உருவாக்கி அதன் வழி செய்திகளை மக்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் வழங்கி வருகின்றன.

இவை இன்றைய வளர்ச்சி நிலை. ஏன் நாம் தமிழ்சார்ந்த இணையப்பக்கங்களை உருவாக்கிக் கொடுக்கக் கூடாது? தொடக்கக் காலக்கட்டத்தில்  இணையதளம் வடிவமைப்பு என்பது கணினித் துறை சார்ந்தவர்கள் மற்றும் தொழில்நுட்பம் சார்தவர்களே உருவாக்கிக் கொடுத்தனர். இன்று கணினி அறிவு பெற்றவர்கள் யார் வேண்டுமானாலும் இணையதளத்தை உருவாக்கலாம் என்ற நிலை இணையத்தில் உள்ளன. ஏன் இதனைப் பயன்படுத்தி பல்வேறு வர்த்தக நிறுவனங்களுக்கு இணையதளம் உருவாக்கிக் கொடுக்க முன்வரலாமே! இது இன்றைய வேலைவாய்ப்பில் மிக முக்கியமான ஒரு பிரிவு. இன்று அனைவரும் இணையதளம் தொடங்க ஆசைப்படுகின்றனர். சிலருக்கு இப்படி ஒரு வழி இருப்பதே தெரியாத நிலையில் உள்ளனர். இவர்களை ? அணுகி நாம் ஏன் இவர்களுக்கு குறைந்த விலையில் ஒரு இணையதளம் உருவாக்கிக் கொடுக்கக் கூடாது? செய்யலாம். இதன் மூலம் பல்துறையைச் சார்ந்தவர்கள் தொழில் நிமித்தமாக நல்ல வருவாயை ஈட்டமுடியும்.

வலைப்பூக்கள் உருவாக்குல்.

தமிழில் வலைப்பூக்கள் தொடங்கியது 2003 ஆம் ஆணடு காலக்கட்டத்தில்தான். இஃது இணையத்தில் இலவசமாக இடம்பெறும் ஒரு வலைப்பக்கம். இதுவரை பல்வேறு வகையான வலைப்பூக்கள் பல ஆயிரம் உருவாக்கப்பட்டு வெளிவந்துள்ளன. இவற்றில் தொழில்சார்ந்த வலைப்பக்கங்க்கள் மிக மிக குறைவு. ஏனெனில் ஒருசிலரைத் தவிர இதில் வருமானம் வருவது என்பதே பலருக்குத் தெரியாது. இன்று வெளிவரும் தமிழ் வலைப்பூக்களில் கவிதை கட்டுரை, கதைகள், பொழுதுபோக்கு நிகழ்வுகள்தான் அதிகமாக உள்ளன. இதனையே மாற்றி அதனை வேலைவாய்ப்புத் தளமாக உருவாக்கலாம். இதன் மூலம் நாம் புதிய வேலைவாய்ப்பை உருவாக்கலாம.

  • மின்னூல்கள் உருவாக்குதல்

நூல்கள் அச்சிட்டு விற்பனைச் செய்த காலம் சென்று இன்று இணையத்தில் மின்னூல்களாக உருவாக்கம் செய்து பலர் வெளியிட்டு வருகின்றன. இதில் பொருட்செலவு  குறைவு. வருமானம் அதிகம். இன்று ஒருசில நூலங்காடி இணையதளங்களில் இத்தகைய மின்னூல்களைக் காணலாம். மேற்குலக நாடுகளில் இன்று அனைவரும் நூல் வாங்குவதைவிட்டு விட்டு மின்னூல் வழியாக நூல்களை தனது தட்டைக்கணினியில் சேமித்து வைத்துக்கொண்டு எப்பொழுது வேண்டுமானாலும் பார்த்து படித்துக் கொள்கின்றனர். அத்றகாக நாம் பலருக்கு மின்னூல்கள் உருவாக்கிக் கொடுக்கலாம்.இனி வரும் காலங்களில் மின்னூல்களுக்கான சந்தை வளர்முகத்தில்தான் இருக்கும். எனவே நாம் பலருக்கு மின்னூல் உருவாக்கத்தில் நன்மைகளைக் கூறி அவர்களுக்கு மின்னூல் உருவாக்கிக் கொடுத்து பயன்பெறலாம்.

  • தமிழ் அகராதிகள், புதிய கலைச்சொற்கள் உருவாக்குதல்

தமிழ்க் கணினி இணையபயன்பாட்டில் ஆங்கிலச் சொற்களுக்குப் பொருத்தமான பல்வேறு புதிய தமிழ்ச்சொற்கள் உருவாக்கப்பட வேண்டிய கட்டாயத்தில் இன்று நாம் உள்ளோம் எனவே தமிழ்சார்ந்த கணினி கலைச்சொற்கள் உருவாக்கப்பட வேண்டும். அவ்வாறு உருவாக்கப்பட்ட கலைச்சொற்களை ஓர் இடத்தில் சேமித்து வைக்க வேண்டும். இதற்கும் ஒரு குழு அமைத்துத் தரப்படுத்தப்பட்ட சொற்களை வெளியிட வேண்டும். இதனால் புதிய சொற்களை உருவாக்கும் திறன் மென்மையடையும். பல்வேறு வலைவாய்ப்புகளை இதன்மூலம் உருவாக்கலாம். ( மைசூர் செம்மொழி நிறுவனத்தில் சொற் தரவுத் தொகுப்புச் சேர்த்தியம் செயல்படுகிறது)  தமிழ்நாட்டில் இதுபோன்ற பல நிறுவன்ங்கள் தொடங்கப்பட வேண்டும்.

ஆய்வு முடிவாக

கணினித் தமிழ், இணையத்தமிழ் துறையில் பல்வேறு வகையான வேலைவாய்ப்புகளை நாம் உருவாக்கிக் கொண்டு செயல்படலாம். அதற்கு அரசு நிறுவனங்கள் முன்வரவேண்டும். நான் குறிப்பிட்டது போல இத்துறைக்கு ஒரு பல்கலைக்கழகம் தொடங்கப்பட வேண்டும். அனைத்து கல்லூரிகளிலும்  கணினிதமிழ் அல்லது இணையத்தமிழ்ச் சார்ந்த பாடத்தை முன்னிலைப்படுத்த வேண்டும். அதனால் இத்துறையில் பல்வேறு வகையான மக்கள் பயன்பெறுவார்கள். குறிப்பாக நூலகத்துறையில் (திரு.பத்திரி ஷேசாத்திரி) என்னிலடங்கா பணிகள் குவிந்துகிடகின்றன.

அடுத்து புதிய தொழில்நுட்ப அறிவை மிக விரைவாக தமிழ்க மக்களுக்குக் கொண்டுசென்றால் அவர்களுக்கு அதன் பயன்பாடு தெரியவரும். அதன் முலம் வாங்குவோரை அதிகப்படுத்தி வேலைவாய்ப்பை உருவாக்கலாம்.

தமிழ்மென்பொருள்கள் பல தேவை அவற்றை உருவாக்கலாம். இணையதளங்கள், வலைப்பூக்களை உருவாக்கிக்கொடுத்து பயன்பெறலாம். மேலும் கணினித்தொடர்பான நிறுவனத்தை மாவட்டத்தோறும் தொடங்கி அதன் பயன்பாடுகளை மக்களுக்கும் உற்பத்தியாளருக்கும் அவ்வப்பொழுது தெரிவிக்க வேண்டும்.

மேலும் தமிழ்சார்ந்த மென்பொருள்களும் வேலைவாய்ப்புகளும் மேன்மையடைய வேண்டுமானால் தமிழ்ப்படிக்கும்  மாணவர்கள் கணினி அறிவையும் பெற்றுக்கொள்ளவேண்டும். அடுத்து பிற மொழி ஒன்றைக் கற்றுக்கொள்ள வேண்டும். மொழியியலை நன்கு படிக்க வேண்டும். இவை அனைத்தும் இன்றையத் தமிழ் மாணவிகள் தெரிந்து வைத்துக்கொண்டால் எதிர்கால கணினித்தமிழில் சாதிக்கலாம்

இவையே இன்றையக் கணினி இணையத்தமிழ் துறையில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் முக்கிய காரணிகளாகும். இவைகள் நடைமுறைப்படுத்தினால் தமிழகத்தில் ஏன் உலகத்தில் உள்ள பல்வேறு நாடுகளில் தமிழ்மொழி சார்ந்த மென்பொருள்கள் விற்பனைக்குச் செல்லும்.

ஆய்விற்குப் பயன்பட்ட நூல்கள்

  1. முனைவர் துரை.மணிகண்டன், இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள், இணையத்தி தமிழ்த் தரவுத்தளங்கள்,  கவுதம் பதிப்பகம், சென்னை.
  2. முனைவர் துரை.மணிகண்டன், த.வானதி தமிழ்க்கணி இணையப் பயன்பாடுகள், கமலினி பதிப்பகம், தஞ்சாவூர். செல்- 9486265886.
  3. முனைவர் மு.பொன்னவைக்கோ, இணையத்தமிழ் வரலாறு, பாரதிதாசன் பல்கலைக்கழகம் செளியீடு, திருச்சிராப்பள்ளி.
  4. டாக்டர் இராதா செல்லப்பன், தமிழும் கணினியும், கவிதை அமுதம் வெளியீடு, திருச்சிராப்பள்ளி.
  5. தேனி. எம்.சுப்பிரமணி, தமிழ் கம்ப்யூட்டர் இதழ், இணையப் பயன்பாடுகள் பட்டியல்.
  6. https://ezhillang.blog/
  7. http://www.internetworldstats.com/top20.htm

முனைவர் துரை.மணிகண்டன் – இணையத்தமிழ் ஆய்வாளர், தமிழ்நாடு

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!