கனடா சட்டமூலம் C-281 – நான்கு சட்டங்கள் திருத்த?

ஜூன் 07ம் திகதி கனடிய பாராளுமன்றத்தில் சட்டமூலம் C-281 (Bill C-281) விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வாக்களிப்பு இடம்பெறவிருக்கிறது. சர்வதேச மனித உரிமைகள் சட்டத் திருத்தம் என்ற பெயரில் நொதம்பர்லாண்ட்-பீட்டர்பொறோ கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர் திரு ஃபிலிப் லோறன்ஸ் அவர்களால் தனிநபர் சட்டமூலமாக கொண்டுவரப்பட்ட இத் திருத்தம் மீதான விவாதங்கள் சபையில் நடைபெற்று முடிந்ததும் வாக்களிப்பு இடம்பெறும்.
ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் நான்கு தனித்தனிச் சட்டங்களைத் திருத்துவதன் மூலம் கனடிய வெளிவிவகார அமைச்சருக்கு சில நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதிகாரங்களைக் கொடுப்பது என்பதுவே இத் திருத்தத்தின் நோக்கம். 2021 இல் அறிமுகப்படுத்தப்பட்ட இச்சட்ட மூலம் பாராளுமன்றக் குழுவினால் ஆராயப்பட்டு சில திருத்தங்களும் செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளும் தமது கருத்துக்களையும் திருத்தங்களையும் முன்மொழிவதற்கான சந்தர்ப்பம் இப்போது வழங்கப்பட்டிருக்கிறது. இதன் முடிவில் (ஜூன் 07) அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் வாக்களிப்பதன் மூலம் இச்சட்ட மூலம் சட்டமாக்கப்படும்.
நான்கு சட்டங்கள்
சர்வதேச மனித உரிமைகள் சட்டத் திருத்தம் என்ற பெயரின் கீழ் மேற்கொள்ளப்படும் இத்திருத்தம் வெளிவிவகார, வர்த்தகம், அபிவிருத்தி அமைச்சு (Department of Foreign Affairs Act), வெளிநாட்டு அதிகாரிகளின் ஊழற் செயற்பாடுகளால் பாதிக்கப்பட்டோர் நீதிக்கான சட்டம் (Magnitsky Law), ஓலி,ஒலிபரப்புச் சட்டம் ( Broadcasting Act), மற்றும் கொத்தணிக் குண்டுப் பிரயோகச் சட்டம் Prohibiting Cluster Munitions Act) ஆகிய நான்கின் மீதும் திருத்தங்களைச் செய்யக் கோருகின்றது.
வெளிவிவகார, வர்த்தகம், அபிவிருத்தி அமைச்சு (Department Of Foreign Affairs Act)
வெளிவிவகாரம், வர்த்தகம் அபிவிருத்திச் சட்டத் திருத்தம் சர்வதேச மனித உரிமைகள் தொடர்பாக கனடிய வெளிவிவகார அமைச்சரின் மீது சில கடமைகளைத் திணிக்கிறது. அவற்றில் முக்கியமானவை (1). அமைச்சர் தனது கடமைக் காலத்தில் வருடமொன்றுக்கு ஒரு தடவையாவது சர்வதேச ரீதியில் மனித உரிமைகளை முன்னெடுக்க்கும் வகையில் அதை வெளிவிவகாரக் கொள்கையில் வரித்துக்கொள்வதுடன் அதைப்பற்றிய அறிக்கையையும் வெளியிட வேண்டும். (2) உலகம் பூராவும் மனச்சாட்சியின் கைதிகளாகச் சிறைவைக்கப்பட்டிருப்பவர்களை விடுவிக்க கனடா எடுத்த முயற்சிகள் பற்றி அறிக்கை வெளியிடவேண்டும் (3) மனித உரிமைகள் தொடர்பில் இக்கைதிகளின் உறவினர்களோடும், சிவில் சமூக அமைப்புக்களோடும் மேற்கொண்ட தொடர்பாடல்களையும் அது வெளிப்படுத்த வேண்டும்.
வெளிநாட்டு அதிகாரிகளின் ஊழற் செயற்பாடுகளால் பாதிக்கப்பட்டோர் நீதிக்கான சட்டம் (Magnitsky Law)
வெளிநாட்டு அதிகாரி அல்லது அரசியல்வாதி ஒருவர்மீது கனடிய பாராளுமன்றத்தில் செனட் குழுவினால் ஒரு நடவடிக்கை பரிந்துரைக்கப்பட்டிருந்தால் அக்கோரிக்கை மீது அமைச்சர் என்ன நடடிக்கையை எடுத்தார் என்பதை அவர் செனட் குழுவுக்குத் தெரிவிப்பதோடு அந்த முடிவுக்கான காரணங்களையும் அமைச்சர் தெரிவிக்க வேண்டும்.
ஒளி, ஒலிபரப்புச் சட்டம் (Broadcastinng Act)
வெளிநாட்டு அமைப்பு அல்லது தனியார் ஒருவரினால் கனடாவில் ஒலி, ஒளிபரப்பப்படும் விடயம் வெளிநாட்டின் ஒலி/ஒளிபரப்பு இனப்படுகொலை தொடர்பானது எனக் கருதப்பட்டால் ஒலி, ஒளிபரப்பும் நிலையங்களுக்கு வழங்கப்படும் அனுமதியை மீளப்பெறவோ அல்லது புதுப்பிக்காமல் விடவோ அமைச்சருக்கு அனுமதியுண்டு.
கொத்தணிக்குண்டு தடைச் சட்டம் (Prohibiting Cluster Munitions Act)
கொத்தணிக்குண்டுகளைத் தயாரிக்கும் நிறுவனங்கள், அவற்றில் முதலீடு செய்தல் ஆகியவற்றில் ஒருவர் நேரடியாகவோ மறைமுகமாகவோ பங்காளியாதல் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
தமிழர்கள் மீதான அக்கறை
மேற்கூறப்பட்ட நான்கு சட்டங்களையும் திருத்துவதன் மூலம் உலக மனித உரிமைகளை முன்னெடுக்க அமைச்சர் உதவிசெய்தாலும் தமிழரைப் பொறுத்தவரை முன்னாள், இந்நாள் இராணுவ அதிகாரிகள், அரசியல்வாதிகள் மீது பயணத்தடை, பொருளாதாரத் தடை ஆகியவற்றை விதிப்பதற்கும், தமிழர் மீதான இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்துவதற்கும் கனடிய வெளிவிவகார அமைச்சரைத் தூண்டுவதற்கு இத்திருத்தம் உதவிசெய்யும். எனவே இச்சட்டம் நிறைவேற ஜூன் 07ம் திகதி கனடிய பாராளுமன்றத்தில் நடைபெறவிருக்கும் வாக்கெடுப்பில் சாதகமாக வாக்களிக்கும்படி கனடா வாழ் தமிழர்கள் தத்தம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழுத்தத்தைக் கொடுக்கவேண்டுமென நாம் கேட்டுக்கொள்கிறோம். இதை முன்னிட்டு கனடாவின் கன்சர்வேட்டிவ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் திரு கார்ணெட் ஜென்யூஸ் பல தமிழர் அமைப்புக்களையும் சந்தித்துப் பேசிவருகிறார். மறுமொழி ஊடக வலையம் மற்றும் த தமிழ் ஜேர்ணல் ஆகியவற்றுக்கு திரு கார்ணெட் ஜென்யூஸ் அளித்த பேட்டி இங்கு பகிரப்படுகிறது.