கனடா & யு.எஸ் எல்லை மேலும் 30 நாட்களுக்கு மூட பிரதம மந்திரி அறிவித்தார் All non-essential travel
உடனடி வெளியீட்டுக்காக
மே 19, 2020
கனேடிய சமஷ்டி அரசின் அவசரகால நடவடிக்கைகளில் புதிதாக அறிவிக்கப்பட்டவை
இந்த உலகத் தொற்றுநோய் வேளையில் கனேடியர்களைப் பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருப்பதிலும், குடும்பங்கள் செலவினங்களை மேற்கொள்வதற்கு உதவியாக நடுத்தர வகுப்பு வேலைவாய்ப்புக்களைப் பாதுகாப்பதற்குப் பலமான நடவடிக்கைகளை எடுப்பதிலும், வணிக நிறுவனங்களுக்கு ஆதரவான நடவடிக்கைகளிலும் கனேடிய அரசு கவனம் செலுத்துகிறது.
Streamed live:cpac
உரிமையாளர்களே இயக்கும் (owner-operated) சிறு வணிக நிறுவனங்களில் பல கனடா அவசர வணிகக் கணக்குக்குத் (Canada Emergency Business Account (CEBA)) தகுதி பெறுவதற்கான விதிகளைத் தளர்த்துவதாகப் பிரதம மந்திரி ஜஸ்ரின் ட்ரூடோ இன்று அறிவித்தார். இந்த விரிவாக்கம், கனேடியர்கள் தங்கியிருக்கும் வேலைவாய்ப்புகளைப் பாதுகாப்பதற்கு சிறு வணிக நிறுவனங்களுக்கு உதவும்.
உலகத் தொற்றுநோய் காரணமாக வருமானம் குறைவடைந்துள்ள கால கட்டத்தில் செயற்படு செலவினத்தை ஈடு செய்வதற்கு மேலும் அதிகமான கனேடிய சிறு வணிக நிறுவனங்கள் வட்டியில்லாக் கடன்களைப் பெற்றுக் கொள்வதற்கு CEBA வில் மேற்கொள்ளப்படும் மாற்றங்கள் உதவியளிக்கும். தமது வணிக நிறுவனங்களிடம் இருந்து நேரடியாக வருமானத்தைப் பெறும் உரிமையாளர்கள், ஒப்பந்தகாரர்களில் தங்கியிருக்கும் வணிக நிறுவனங்கள், சம்பளப் பட்டியலின் மூலம் அன்றி, லாபத்திலிருந்து பணியாளர்களுக்குப் பணம் வழங்கும் குடும்பங்களுக்குச் சொந்தமான நிறுவனங்கள் என்பவற்றில் பெரும் எண்ணிக்கையானவை இனிவரும் காலத்தில் இந்தத் திட்டத்தைப் பயன்படுத்தக் கூடியதாக இருக்கும்.
விரிவாக்கப்பட்ட விதிகளின் கீழ் தகுதி பெறுவதற்கு, 20,000 டொலரிலும் குறைவான மொத்தச் சம்பளங்களை வழங்கும் விண்ணப்பதாரிகளுக்கு:
• திட்டத்தில் பங்கேற்கும் நிதி நிறுவனத்தில் வணிகக் கணக்கு ஒன்று இருக்கவேண்டும்.
• கனடா வருமானவரி முகவரக வணிகக் கணக்கு இலக்கம் இருப்பதுடன், 2018 அல்லது 2019 ஆம் ஆண்டுக்கான வரிக் கணக்கை அவர்கள் சமர்ப்பித்திருக்கவேண்டும்
• ஒத்திவைக்க முடியாத செலவினங்கள் 40,000 டொலர் முதல் 1.5 மில்லியன் டொலர் வரையாக இருக்கவேண்டும். தகுதியுள்ள ஒத்திவைக்க முடியாத செலவினங்களில் வாடகை, வருமான வரி, பயன்பாடுகள், காப்புறுதி போன்றன உள்ளடங்கலாம்.
செலவினங்கள் கனேடிய அரசின் சரிபார்ப்புக்கும், கணக்காய்வுக்கும் உட்படுத்தப்படும். நிதி நிறுவனங்களின் பங்களிப்புடன் பணம் வழங்கப்படும். புதிய தகைமைகளின் கீழ் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் திகதியை உள்ளடக்கிய மேலதிக விபரங்கள் எதிர்வரும் நாட்களில் வெளியிடப்படும்.
இதுவரை 600,000 இற்கும் அதிகமான சிறு வணிக நிறுவனங்கள் CEBA வைப் பெற்றுள்ளன. வணிக வங்கிக் கணக்கைப் பயன்படுத்தாது தனிப்பட்ட வங்கிக் கணக்கைப் பயன்படுத்தும் வணிக நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கும், இதுவரை வருமான வரிக் கணக்கைச் சமர்ப்பிக்காத புதிய வணிக நிறுவனங்கள் போன்றவற்றுக்கும் உதவியளிப்பதற்கான வழிகளைக் கண்டறிய அரசு செயலாற்றும்.
கனேடியர்களுக்கும், நடுத்தர வகுப்பு வேலைவாய்ப்புகளுக்கும் முன்னுரிமை வழங்கும் கனேடிய அரசின் கோவிட்-19 பொருளாதார திட்டத்தின் ஒரு அங்கமாக இது அமைகிறது.
கனடாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான எல்லை மூடப்பட்டமை மேலும் 30 நாட்கள் நீடிக்கப்படுவதாகப் பிரதம மந்திரி மேலும் அறிவித்தார். இரண்டு நாடுகளினதும் மக்களைப் பாதுகாக்கும் நோக்கத்துடனான முடிவின் ஒரு பகுதியாக இது அமைகிறது.