கனேடிய சமஷ்டி அரசின் அவசரகால நடவடிக்கைகளில் புதிதாக அறிவிக்கப்பட்டவை மே 15
உடனடி வெளியீட்டுக்காக
மே 15, 2020
கனேடிய சமஷ்டி அரசின் அவசரகால நடவடிக்கைகளில் புதிதாக அறிவிக்கப்பட்டவை
கனடாவில் உள்ள ஆயிரக்கணக்கான ஆய்வுப் பணியாளர்கள், உயிர்காக்கும் புற்றுநோய் சிகிச்சை முதல் சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் தூய்மையான தொழில்நுட்பங்கள் வரை எமது நல்வாழ்வுக்கும், பொருளாதாரத்திற்கும் உதவியாகக் கண்டுபிடிப்புகளையும் புத்தாக்கத்தையும் மேற்கொள்கிறார்கள். கோவிட்-19 உலகத் தொற்றுநோய் காலப்பகுதியில் கனேடிய கல்வித்துறை ஆய்வாளர் சமூகத்திற்கு 450 மில்லியன் டொலர் நிதியுதவியை வழங்குவதாகப் பிரதம மந்திரி ஜஸ்ரின் ட்ரூடோ இன்று அறிவித்தார். இந்த முதலீடு:
Streamed live:cpac
• தொழிற்துறையினதும், கொடையாளிகளினதும் நிதி உதவியைப் பெறும் ஆய்வாளர்களால், அரசு ஏற்கனவே அறிவித்த கோவிட்-19 உதவிகளைப் பெற முடியாதிருந்தால், அவர்களை பல்கலைக்கழகங்களும், சுகாதார ஆய்வு நிறுவனங்களும் தொடர்ந்து வைத்திருப்பதற்கு உதவியாக சம்பள உதவி வழங்கப்படும். அவர்களது பணி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தாலும் இந்த உதவி வழங்கப்படும். ஒவ்வொருவருக்கும் வாரமொன்றுக்கு ஆகக் கூடியது 847 டொலர் வரை, சம்பளத்தின் 75 சதவீதம் வரையான பணத்தை அரசு வழங்கும்.
• பல்கலைக்கழகங்களும், சுகாதார ஆய்வு நிறுவனங்களும் நெருக்கடி நிலையிலும் இன்றியமையாத ஆய்வு தொடர்பான பணிகளைத் தொடர்வதற்கும், இடைவெளி பேணும் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பின்னர் ஆய்வுப் பணிகளை முழு அளவுக்கு அதிகரிப்பதற்கும் உதவி வழங்கப்படும். தகுதிபெறும் செலவினங்களின் 75 சதவீதம் வரை வழங்கப்படும். ஆபத்தான பொருட்களைப் பாதுகாப்பாகச் சேகரித்து வைத்தல், உலகத் தொற்றுநோயின்போது தடைப்பட்டுப் போன தரவுகளை மீண்டும் சேகரித்தல் போன்றவற்றுக்கு உதவி வழங்கப்படும்.
கனடா அவசர சம்பள மானியம் (CEWS) 2020 ஓகஸ்ட் வரை, மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிக்கப்படுமெனப் பிரதம மந்திரி இன்று உறுதி செய்தார். வணிக நிறுவனங்கள் மீண்டும் செயற்பாடுகளை ஆரம்பிக்கும்போது, நீடிக்கப்படும் CEWS வேலைகொள்வோருக்கும், வேலைக்குத் திரும்பும் பல மில்லியன் கனேடியர்களுக்கும் உதவியாகவிருக்கும். மேலும் அதிகமான வேலைகொள்வோர் CEWS ஐப் பயன்படுத்தி வணிக முயற்சிகளை மீளச் செயற்படுத்துவதற்கு உதவியாக, இந்த மானியத்தைப் பெறுவதற்கான தகுதிகளை அரசு விரிவுபடுத்தவுள்ளது.
கனடா கோடை வேலைத் (Canada Summer Jobs) திட்டத்தின் தற்காலிக நீடிப்புக்கள் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், கனடா முழுவதிலும் உள்ள வேலைகொள்வோர் எதிர்வரும் மாதங்களுக்குத் தற்போது மாணவர்களைப் பணிக்கு அமர்த்துகிறார்கள். கோவிட்-19 காரணமாக கனடா கோடை வேலைத் திட்டம் 2021 ஃபெப்ரவரி வரை நீடிக்கப்பட்டுள்ளதுடன், கோவிட்-19 காரணமாக நிறுவனங்களின் செயற்பாடுகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு அமைவாகப் பகுதி நேரமாகவும் மாணவர்கள் பணிக்கு அமர்த்தப்படலாம். வேலைவாய்ப்பைத் தேடும் மாணவர்களும், அண்மையில் பட்டம் பெற்றோரும் JobBank.gc.ca யில் அல்லது Job Bank செல்பேசி செயலியில் வேலைவாய்ப்பு அறிவித்தல்களைப் பார்வையிடலாம். எதிர்வரும் வாரங்களில் Job Bank கில் மேலும் அதிக வேலைவாய்ப்புக்கள் இணைக்கப்படும்.
வேலை செய்ய முடியாதுள்ள அல்லது வேலைவாய்ப்புத் தேடும் மாணவர்கள் கனடா மாணவர் அவசர கொடுப்பனவுக்கு (Canada Emergency Student Benefit (CESB)) இன்று, மே 15 ஆந் திகதி முதல் My CRA கணக்கின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
கனடா சிறுவர் கொடுப்பனவைப் (CCB) பெறும் பெற்றோருக்கும், GST/HST வரி மீளளிப்பைப் பெறுவோருக்குமான கொடுப்பனவுகள் செப்ரெம்பர் மாதத்தின் இறுதி வரை நீடிக்கப்படுவதாகவும் பிரதம மந்திரி அறிவித்தார். உரிய நேரத்தில் வருமான வரிக் கணக்கைச் சமர்ப்பிக்க முடியாதுள்ளோர் செப்ரெம்பரின் இறுதி வரை கொடுப்பனவுகளைப் பெற இது வழிவகுக்கும். வருமானத்திற்கு மேலதிகமான உறுதிக் கொடுப்பனவைப் (Guaranteed Income Supplement (GIS)) பெறும் முதியோருக்கும் இதைப் போன்ற நடவடிக்கை இந்த வாரத்தின் ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்டது. CCB, GST/HST, GIS ஆகிய கொடுப்பனவுகள் செப்ரெம்பரின் இறுதி வரை நீடிக்கப்பட்டாலும், அனைத்துக் கனேடியர்களும் ஜூன் முதலாந் திகதி என்ற காலக்கெடுவுக்குள் அவர்களது வருமான வரிக் கணக்குகளைச் சமர்ப்பிப்பதற்கு தம்மாலியன்ற அனைத்தையும் செய்யவேண்டும்.