கனேடிய சமஷ்டி அரசின் அவசரகால நடவடிக்கைகளில் புதிதாக அறிவிக்கப்பட்டவை மே 22.
உடனடி வெளியீட்டுக்காக
மே 22, 2020
கனேடிய சமஷ்டி அரசின் அவசரகால நடவடிக்கைகளில் புதிதாக அறிவிக்கப்பட்டவை
கனேடியர்கள் கடந்த சில மாதங்களாக வீடுகளில் தங்கியிருந்தும், இடைவெளியைப் பேணியும், பொதுச் சுகாதார அறிவுறுத்தல்களைப் பின்பற்றியும் சிறப்பாகச் செயற்பட்டு வருகிறார்கள். கனேடியர்கள் சில செயற்பாடுகளை மீள ஆரம்பிக்கக் கூடியதாக இருக்குமென்பதே இதன் அர்த்தம்.
மாகாணங்களும், பிராந்தியங்களும் அவற்றின் பொருளாதார செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிக்க முற்படும் வேளையில் அவற்றுக்கு உதவியான சமஷ்டி அரசின் திட்டம் ஒன்றைப் பிரதம மந்திரி ஜஸ்ரின் ட்ரூடோ இன்று அறிவித்தார். கோவிட்-19 இன் பரவல் வேகத்தைக் குறைக்கும் விடயத்தில் முன்னேற்றமான போக்குகள் அவதானிக்கப்பட்டாலும், அது தற்போதும் பாரதூரமான ஒரு சுகாதார அச்சுறுத்தலாக விளங்குகிறது. இதுவரை எட்டப்பட்டுள்ள முன்னேற்றத்தைப் பாதுகாப்பதற்கு அவதானத்துடன் செயற்படுவதும், விஞ்ஞான அறிவுறுத்தல்களைப் பின்பற்றுவதும் முக்கியமானது.
பொருளாதார செயற்பாடுகளை வெற்றிகரமாக மீள ஆரம்பிக்கும் திட்டத்தின் மூன்று அம்சங்களாவன:
(1) வைரஸ் தொற்று ஏற்படுவோரை விரைவாக அடையாளம் கண்டு அவர்களைத் தனிமைப்படுத்துவதற்கு பரிசோதனைகளின் அளவை அதிகரித்தல்: பரிசோதனைகளின் அளவை அதிகரிப்பதற்குச் சமஷ்டி அரசு இராசாயனப் பதார்த்தங்களையும் மாதிரிகளைப் பெறுவதற்கான பஞ்சு சுற்றிய குச்சிகளையும் (swab) கொள்வனவு செய்வதுபோன்ற நடவடிக்கைகளின் மூலம் மாகாணங்களுக்கும், பிராந்தியங்களுக்கும் உதவியளிக்கும்.
சில மாகாணங்களிடம் அவற்றின் தற்போதைய தேவைகளுக்குப் போதுமான வல்லமை இருந்தாலும், கனேடியர்களைப் பாதுகாப்பதற்கும், எதிர்கால நோய்ப் பரவலைத் தடுப்பதற்கும் பரிசோதனைகளைக் கணிசமாக அதிகரிப்பதற்குச் சமஷ்டி அரசு இணைந்து செயற்படும்.
(2) வைரஸ் தொற்றியோருடன் தொடர்பில் இருந்தவர்களைத் தேடிக் கண்டறியும் (தொடர்புத் தடமறிதல் – contact tracing) வல்லமையை வேகப்படுத்தல்: புதிதாக நோயுற்றோரைக் கண்டுபிடித்துத் தனிமைப்படுத்திய பின்னர், வைரஸ் தொற்றக்கூடிய நிலையை எதிர்கொண்டிருக்கக் கூடிய அனைவரையும் தொடர்பு கொண்டு அவர்கள் தனிமைப்படுத்திக் கொண்டு சுய கண்காணிப்பை மேற்கொள்வதையும், அல்லது பரிசோதனை செய்து கொள்வதையும் உறுதிப்படுத்துவது முக்கியமானது.