கூட்டமைப்பின் வாக்கு வங்கி சரிவை எதிர்நோக்கும்!
இலங்கையின் பாராளுமன்ற பொதுத் தேர்தல்2020 பிரச்சாரம் இறுதி நிமிடங்களை அடைந்துள்ளது. இதில் வடக்கு கிழக்கு பிரதேசம் முக்கியமான அரசியல் தீர்மானத்திற்கான காலத்தில் உள்ளது. போர் முடிந்த ஒரு தசாப்த காலம் தமிழ் அரசியலை கையாண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு விட்ட தவறுகளை சரிசெய்ய வேண்டிய பொறுப்பாண்மைக்குள் தமிழ் அரசியல் கட்சிகளும் புதிய வேட்பாளர்களும் தமிழ் வாக்காளர்களும் உள்ளனர்.வடக்கு கிழக்கின் புறத் தோற்றத்தை மட்டும் அவதானமாகக் கொள்ளாது அதன் அகத்தோற்றம் எப்படியான நியமங்களைக் கொண்டுள்ளது என்பதை தெரிந்து கொள்;ளுதல் அவசியமானது.
முதலாவது தமிழ் வாக்காளரிடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீதான அதிருப்தி ஒன்றி செம்மையான பதிவு வெளிப்படையாக அவதானிக்க முடிகிறது. காரணம் கடந்த ஒரு தசாப்த காலம் கூட்டமைப்பினால் எதனையும் செய்ய முனையவில்லை என்ற குற்றச்சாட்டாகும் அதிலும் ரணில் விக்கிரமசிங்ஹ-மைத்திரி அரசாங்கத்தின் ஆட்சி முழுவதும் வாய்ப்புக்கள் இருந்தும் எதனையும் தமிழ் மக்களுக்காக பயன்படுத்தாது தமது சுயநலனுக்கான அரசியலை மேற்கொண்டதாக அக்குற்றச்சாட்டு எழுவது நியாயமானதாக உள்ளது. அது மட்டுமன்றி கூட்டமைப்பு நிறுத்தியுள்ள வேட்பாளர்கள் திறமையற்றவர்களாகவும் சுயநலவாதிகளாகவும் நீண்டகாலம் பாராளுமன்றத்தை அலங்கரித்தவர்களாகவும் இருப்பதுடன் புதியவர்களோ இளம்தலைமுறையினரோ புரட்சிகரமான அணுகுமுறையில்லாதவர்களாக உள்ளனர் என்ற குற்றச்சாட்டும் அனுதாப வாக்குகளுக்காக பெண்வேட்பாளர்களை நிறுத்தியுள்ளதாகவும் குற்றச்சாட்டு மக்களாலும் பிற கட்சிகளாலும் முன்வைக்கப்படுகிறது. இதனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வாக்கு வங்கியில் பாரிய சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது.
இரண்டாவது தமிழ் வாக்காளர்கள் விரக்தி நிலையில் காணப்படுகின்றனர். இதனால் வாக்களிக்காது போகும் நிலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. காரணம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீதான அதிருப்தி அரசியல் பங்குபற்றலில் இருந்து விலகியி-ருக்க விரும்புகின்றனர்.இதனால் வடக்கு கிழக்கில் வாக்களிப்பு விகிதம் குறைவடைய வாய்பட்புள்ளது.
மூன்றாவது பிரச்சாரத்தை வைத்து பார்க்கும் போது கணிசமான ஆசனங்கள் மாற்று அணிகளுக்கு செல்வதற்கான வாய்ப்பு அதிகமுண்டு என்பது தெரிகிறது.அதிலும் வடக்கில் கூட்டமைபுக்கு எதிராக மாற்றுத் தரப்பினை நோக்கிய வர்களிப்பு செல்வதற்கான சூழல் அதிகமாக தென்படுகிறது.மாற்றுத் தரப்பு ஒன்று சேரவில்லை என்ற குற்றச்சாட்டும் தமிழ் மக்களிடம் உண்டு என்பது கவனிக்கப்பட வேண்டிய விடயமாகும்.
நான்கு தென் இலங்கை அரசியல் கட்சிகளது செல்வாக்கு கடந்த தேர்தலை விட அதிகரித்துள்ளது. அவர்கள் வேலைவாய்ப்பினையும் பொருளாதார வளர்ச்சியையும் முன்னிறுத்தி பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர். உரிமை அரசியலை முற்றாக புறம்தள்ளி செயல்படுகின்றனர்.ஆனால் இவர்களது வாக்கு வங்கியாக இளையோர் வறுமைக் கோட்டிலுள்ளோர் மற்றும் பின்தங்கிய சமூகத்தவர் மற்றும் வேலைவாய்ப்பினை நாடியுள்ளவர்கள் உள்ளனர். அதில் உள்ள குழப்பம் எதுவெனில் ஐக்கிய தேசியக் கட்சி சிறிலங்கா சுதந்திரக்கட்சி ஈபிடிபி அதிகமான சுயேட்சைக் குழுக்கள் அனைத்துடனும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் அந்த வாக்காளரை நோக்கியே அதிக பிரச்சாரத்தை செய்து;ளளன. அதனால் அந்த வாக்குகள் சிதறடிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. இது தமிழ் தேசியக் கட்சிகளுக்கு வாய்ப்பினை கொடுக்கும் என்றும் கருதப்படுகிறது.
ஐந்து சுயேட்சைக் குழுக்கள் அதிகம் திட்டமிட்டு களம் இறக்கப்பட்டுள்ளது. சில குழுக்கள் நியாயமானவையாக அமைந்தாலும்சாதிரீதியிலும் மதரீதியிலும் பிரதேச அடிப்படையிலும் அத்தகைய குழுக்கள் இறக்கப்பட்டு போட்டியிடுகின்றன. இவற்றின் நோக்கம் வாக்குகளை சிதறடிப்பதே அன்றி வெற்றியல்ல என்பதுவும் தமிழ் மக்களின் புரிதலாக தெரிகிறது.
ஆறாவது இத்தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட அனைத்துக் கட்சிகளும் சுயேட்சைக்குழுக்களும் கோடிக்கணக்கில் பிரச்சாரத்திற்காக பணவிரயம் செய்ததுடன் புதிய உத்திகள் எதனையும் இவர்கள் பயன்படுத்தவில்லை என்பது பெரும் குற்றச்சாட்டாக பதிவாகியுள்ளது. சமூகவலைத்தளங்களை நம்பிய வேட்பாளர்கள் கட்சிகள் கடந்த காலத்தில் தேற்றது போலவே தற்போதும் அதன் அபிப்பிராயங்கள் பலவீனமானதாகவே அமையும் என கருதப்படுகிறது.
ஏழாவது முன்னாள் நீதியரசர் மீதான இராணுவக் கெடுபிடியும் புலனாய்வுத் துறைகளின் தகவலும் ஏனைய அனைத்துக் கட்சிகளும் அவர் மீதான தாக்குதலும் அவரது செல்வாக்கு அதிகரித்துள்ளது என்பதை உணர்த்துகிறது. அது மட்டுமன்றி ஏனைய தரப்புக்களை விட கிழக்கு மாகாணத்திலும் அவ்வணி பேட்டியிடுவது வடக்கு கிழக்கு தளுவிய அணி என்பதை ஏற்படுத்தியுள்ளது.இதனால் இவ்வணி வெற்றி பெறப் போகும் ஆசனங்கள் என்பதைக் கடந்து வடக்கு கிழக்கு என்ற தமிழர் தாயகக் கோட்பாட்டை பலப்படுத்தும் அணியாக மாறியுள்ளது.இது ஏனைய மாற்றுக்களை விட வாக்குகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்ற மதிப்பீடு எழுந்துள்ளது.
எனவே மாற்று இணியினர் முழுமையான வெற்றியை அடைவதற்கான வாய்பு குறைவானாலும் கணிசமான மாற்றத்தை ஏற்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தமிழரின் எதிர்கால அரசியலுக்கு அடித்தளமாக அமையும். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேல்விக்காக பலர் தனித்தும் அமைப்புக்களாகவும் உழைகிறார்கள். ஆனால் மக்கள் எப்படியான முடிபை நோக்கி நகரப் போகிறார்கள் என்பதிலேயே அது தங்கியுள்ளது.ஜனாதிபதி தேர்தல் போல் வாக்குகள் ஒரு பக்கம் சேர்வதற்கு வாய்ப்பு குறைவானது. இதனால் ஆசனங்கள் பங்கு போடப்படுவதும் ஐந்து சதவீதத்’திற்கு குறைவான வாக்குகளைப் பெறும் கட்சிகளும் சுயேட்சைகளும் அதிகமான வாக்குகள் வீணாவதற்கும் வாய்ப்பு உண்டு.
கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்