ArticlesHealthகட்டுரைகனடா மூர்த்தி

கொரோனா என்றழைக்கப்படும் கோவிட்-19

கட்டுரை இலக்கம் I…….

கோவிட்-19 கனடாவில் நன்கு பரவிய நிலையில் அது குறித்து மத்திய அரசு, மாகாண அரசு, நகரசபைகள் அனைத்துமே நம்மை விழிப்புணர்வுடன் இருக்குமாறு வலியுறுத்தி வருகின்றன. இதற்கமைய சில தகவல்கள் தொகுக்கப்பட்டு எளிய கட்டுரை வடிவில் தரப்படுகிறது. (ஆக்கத்திற்காக கனடா மூர்த்தி அவர்களுக்கு நன்றி)

முதலில் அது சாதாரணக் காய்ச்சல் என்றுதான் நினைத்தார்கள். பிறகுதான், அது சாதாரணமானதல்ல என்பது மெதுவாகத் தெரியவந்தது. ஒரேவித நோய் அறிகுறிகளைக் கொண்டவர்களாக ஏராளமானோர் மருத்துவமனைகளுக்கு வர ஆரம்பித்தார்கள். நோயின் தீவிரம் அதிரவைத்தது. இது ஒரு வைரஸ் தொற்று… தாக்கியிருப்பது? இதுவரை அறிந்திடாத ஒரு நச்சுயிரி! நோய்க்கு பெயர் கோவிட்-19. 

“கோவிட்-19” சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வூஹான் மாநகரில் ஆரம்பித்த கோவிட்-19 வைரஸ் நோயின் தீவிரம் இன்று உலகையே அலறவிடுகிறது. நோயின் பரவுதலானது ‘உலகளாவிய சுகாதாரப் பிரச்சனை’ என உலக சுகாதார நிறுவனம் 2020 ஜனவரி 30ந் திகதி அறிவித்து, நோயைக் கட்டுக்குள் கொண்டுவர பரிந்துரைகளையும் வழங்கியது. இருந்தபோதும் சில நடைமுறைக் குறைபாடுகளால் கோவிட்-19 பல்வேறு உலகநாடுகளுக்கும் பரவிவிட்டது. நமது கனடாகூட  திணறுகின்றது.

“கோவிட்-19 என்று ஏன் அழைக்கிறோம்?” 1930களில் பறவைகள், பாலூட்டி வகை உயிரினங்களை தாக்கும் தன்மை கொண்ட ஒருவகை நச்சுயிரிகளை அடையாளம் கண்ட மருத்துவ நிபுணர்கள் அதை ‘கொரோனா’ என்ற பெயரில் குறிப்பிட்டார்கள். அரசர் சூடியிருக்கும் முடியின் (Corona) வடிவத்தில் அவை இருந்ததால் அந்தப் பெயர் இடப்பட்டது. 2019ம் ஆண்டு, வூஹான் நகரில் பரவிய நோய் இந்த கொரோனா குடும்பத்தின் இன்னொரு வடிவம் என்பதால் அது ‘கொரோனா வைரஸ் டிஸிஸ் 2019’ (Corona Virus Disease 2019) என்ற பெயரில் அழைக்கப்பட்டது. பெயரின் முதல் எழுத்துக்களை வைத்தும், இந்த வைரஸ் தாக்கத் தொடங்கிய ஆண்டினைக் குறிப்பிடுவதாயும் அமைந்த சுருக்கப் பெயரே கோவிட்-19 (COVID-19).

 “கொரோனா – சுருக்க வரலாறு” கொரோனா குடும்பத்திலிருந்து நமக்கு அறிமுகமான முதல் வைரஸ்கள் கோழிப் பண்ணைகளில் காணப்பட்டவை. அக்காலகட்டத்தில் ‘கொரோனா வைரஸ்கள் விலங்குகளை பாதிப்பவை’ என்றே அவை வகைப்படுத்தப்பட்டன. பின்னர் சில கொரோனா வைரஸ்கள் மனிதருக்கும் பரவும் என்பது தெரிய வந்ததும் மருத்துவ உலகம் அதிர்ந்துபோனது. இதுவரை 7 வகை கொரோனா வைரஸ்கள் மட்டுமே மனிதர்களுக்கும் பரவி நோயை ஏற்படுத்தும் என்று அறியப்படுகிறது.
சார்ஸ் நோயைத் தரும் ‘SARS-CoV” வைரஸ், அதன்பின் வந்த ‘மேர்ஸ்’ என்ற நோயைத் தரும் ‘ஆநுசுளு-ஊழஏ’ வைரஸ் ஆகிய வைரஸ்கள் கொரோனா குடும்பத்திலிருந்தே வருகின்றன. சார்ஸ் நோயைத் தந்த ‘SARS-CoV’ போன்றதே வூஹான் நகரில் பரவிய புதிய வைரஸ் என்பதால் நிபுணர்கள் அதற்கு SARS-CoV2 என பெயரிட்டனர். 
கோவிட்-19 நோயைத் தரும் இந்த SARS-CoV2 வைரஸானது மனிதர்களுக்குத் தொற்றி, தொண்டை, மூச்சுப்பாதை, நுரையீரல் உள்ளே சென்று படிந்து கொண்டு, கலங்களின் உள்ளே சென்று தம்மை பெருக்கி பின்னர் தாக்குதல் செய்யும் வல்லமை கொண்டவை.

“கோவிட்-19 தாக்குதல் படிநிலைகள்” நான்கு வகையான படிநிலைகளில் கோவிட்-19 மனிதர்களுக்குத் தாக்கத்தைத் தருகிறது. 1. மைல்ட் (Mild) எனப்படும் இலேசான தாக்கம் 2. மொடரேட் (Moderate) எனப்படும் மிதமான தாக்கம் 3. செவியர்  (Severe) எனப்படும் கடுமையான தாக்கம் 4. கிரிட்டிகல் (Critical) எனப்படும் சிக்கலான தாக்கம்.
இந்தப் படிநிலைகள் பாதிக்கப்பட்ட நோயாளிகளிடம் எவ்வாறு காணப்பட்டன என்பதை புள்ளிவிபரங்களுடன் சீனாவும் உலக சுகாதார நிறுவனமும் இணைந்து வெளியிட்ட அறிக்கைகள் சொல்லியிருக்கின்றன. சீனா தனது நாட்டின் நோயாளிகளை கையாண்ட விதம் தற்போது மற்றைய நாடுகளுக்கு வழிகாட்டியாக மாறியிருக்கின்றது.
சீனா-உலக சுகாதார நிறுவன கூட்டு அறிக்கை ஒன்றின்படி, கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்களில் 20 வரை 80 வீதம்  மைல்ட்  (Mild) எனப்படும் இலேசான தாக்கம் கொண்டிருந்தார்கள். 17 விகிதத்தினர் செவியர் (Severe) எனப்படும் கடுமையான தாக்கம் கொண்டவர்களாக இருந்தார்கள். 6 வீதத்தினர்  கிரிட்டிகல் (Critical) எனப்படும் சிக்கலான தாக்கத்தினைக் கொண்டவர்கள்.

“தாக்கங்களின் தன்மை எப்படி இருக்கும்?” மைல்ட் (Mild) எனப்படும் இலேசான தாக்கம் கொண்டவர்களுக்கும், மொடரேட் (Moderate) எனப்படும் மிதமான தாக்கம் கொண்டவர்களுக்கும் காய்ச்சல் இருக்கும். தாக்கப்பட்டவருக்கு இலேசான மூச்சுத் திணறல் இருந்தாலும், “பிராணவாயுவான ஒட்சிசன் கொடுக்காமலே நோயாளியைப் பராமரிக்கலாம்” என்பதே இந்தப் படிநிலையின் குறைந்தபட்ச அளவீடாகும்.
செவியர் (Severe) எனப்படும் கடுமையான தாக்கம் இருக்கும் நிலைக்குச் சென்றவர்கள் நிமோனியா ஏற்படும் சாத்தியம் கொண்டவர்களாகிவிடுகிறார்கள். ஒட்சிசன் கொடுத்து உயிரைக் காப்பாற்ற வேண்டிய நிலைக்கு அவர்கள் வருவார்கள்.
கிரிட்டிகல் (Critical) எனப்படும் சிக்கலான தாக்கம் வரும்போது நிமோனியாவின் தாக்கத்தால் நோயாளிகளின் உடல் உறுப்புக்கள் செயல் இழந்து போகும். என்னதான் தடுப்பு மருந்துகள் கொடுக்கப்பட்டாலும், மூச்சு விட முடியாதவாறு நுரையீரல்களை வைரஸ் கெடுத்துப் பழுதடைய வைத்திருக்கும். நோயாளியின் உயிரை உடலுடன் ஒட்டவைக்க மூச்சு இயந்திரத்தின் உதவி தேவைப்படும்;. மூச்சு இயந்திரம் பொருத்தப்பட்டாலும்கூட வைரஸ் நுரையீரலின் உள்ளே பெருகி.., கலங்களை சிதைத்து.., நிமோனியா அதிகரித்து.., நுரையீரலில் நீர்க்கோர்த்து.. இவ்வகை நோயாளிகளில் பெருமளவினர் இறந்து போவர்.

“கிரிட்டிகல் தாக்கநிலை பற்றி மேலும் கொஞ்சம்…” இந்த கிரிட்டிகல் தாக்க நிலை ஏற்பட்டு நுரையீரல் பாதிப்பு மற்றும் இறப்புக்கு உள்ளாகும் ஆபத்து உள்ளவர்கள் அநேகமாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருக்கிறார்கள். உயர் அழுத்தம், நீரிழிவு நோய், இருதய நோய், சுவாச நோய் போன்ற பல்வேறு நோய்களின் தாக்கத்தைக் ஏற்கனவே கொண்டவர்களாகவும் அவர்கள் இருக்கிறார்கள். உதாரணத்திற்கு இத்தாலியில் பலியான முதியோர்களில் மிகப்பெரும்பான்மையோர் இத்தகையோரே. 

“நோயின் முதன்மை அறிகுறி என்ன?” கோவிட்-19 எங்களைத் தாக்கிவிட்டது எனபதற்கான முதல் அறிகுறிகள் தெரிவதற்கு அது எங்களை பீடித்த நாளிலிருந்து இரண்டு வாரங்கள்வரை ஆகிவிடும். அந்நிலை வரும்போது காய்ச்சல் வந்ததுபோல போல முதலில் உணர்வோம்.
சீனா-உலக சுகாதார நிறுவனம் செய்த ஆய்வுகளின்படிக்கும் கோவிட்-19 பீடித்து மருத்துவமனைக்கு வந்தவர்களில் 88 வீதத்தினருக்குக் காய்ச்சல் இருந்திருக்கிறது. ஆனால் சீனாவின் இன்னொரு புள்ளிவிபர ஆய்வுவின்படி மருத்துவமனைக்கு வந்தவர்களில் 44 வீதத்தினருக்குத்தான் காய்ச்சல் இருந்திருக்கிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபின்னர் 89 வீதத்தினருக்கும் காய்ச்சல் வந்திருந்தது. அதாவது நோய் அரும்பு காலத்தில் காய்ச்சல் அறிகுறி இல்லாமலிருப்பதும் சாத்தியம்.

“காய்ச்சல் மட்டும்தான் அறிகுறியா?” காய்ச்சலைத் தவிரவும் வேறு அறிகுறிகளாக களைப்பு, தொண்டைக்கரகரப்பு, தலையிடி, மூட்டுக்களில் வலி, உடல் குளிர்தல், ஈரமான மூக்குச்சளி என்பனவும் இருக்கும். வயிற்றுப்போக்கு, வாந்தி போன்ற அறிகுறிகளும் தெரியலாம்.

 “தொற்றிய பின்னர் என்ன செய்கிறது கோவிட்-19?” கோவிட்-19 சுவாசப் பிரச்சனையை ஏற்படுத்தி நுரையீரல்வரை பாதிப்பை ஏற்படுத்தவெனப் பரவும் நோயாகும். இதற்கு முன் சொல்லப்பட்ட நான்கு படிநிலைகளில் எந்தப் படிநிலையில் தாக்கம் இருந்தாலும், கோவிட்-19 செய்ய நினைப்பது சுவாசப் பாதையை நிர்மூலமாக்குவதுதான்.
இந்த நிர்மூலமாக்கும் செயல்பாட்டிற்காக வைரஸ் தன் எண்ணிக்கையை அதிகரிக்கும் செயல்பாடுகளில் இறங்கும். அதற்காக நுரையிரலின் கலங்களை தாக்கப் புறப்படும். கலங்களின் மேலிருக்கும் சிலியா (Cilia) மயிரிழைகளை முதலில் சேதப்படுத்தும்.

“சிலியா என்றால் என்ன?” சிலியா என்ற மயிரிழைகள் சுவாசக் குழலின் சுவரில் அமைந்திருப்பவை. சுவாசக் குழலின் உள்ளே வந்துவிடும் பக்டீரியாக் கிருமிகளை விசிறித் தள்ளுவதுதான் இவற்றின் பணி. (நாம் இருமுவது அப்போதுதான்.) விசிறித் தள்ளப்பட்ட கிருமிகளை முற்றாக வெறியேற்ற நாம் இருமுகிறோம். இருமி, இருமி கிருமிகளை வெளியேற்றி விடுகிறோம். 

“கொரோனா வைரஸையும் நமது உடல் அப்படி வெளியேற்றலாம்தானே..?” செய்யலாம்தான். ஆனால் முடிவதில்லை என்பதுதான் சோகம். கொரோனா வைரஸ் தனது எண்ணிக்கைப் பெருக்கத்திற்காக சுவாசக் குழலையும் தாண்டி நுரையீரல் பகுதிக்கு வந்துவிடுகிறது. இந்நிலையில் நமது உடலில் இருக்கும் தற்காப்பு போராளிகளான நோய்எதிர்ப்பு செல்கள் சும்மா இருக்காது. அழையாவிருந்தாளிகளாக வந்த எதிரிகளைத் தாக்க ஆரம்பித்துவிடும். இந்தப் போரின் விளைவே நாம் அடுத்த படிநிலைக்குச் செல்வதாகும். தாக்குதல்கள் நிகழும் காலகட்டத்தில் நமது உடல் இயல்பாகவே பலவீனமடைகிறது.

“கொரோனா நுரையீரலில் என்ன செய்கிறது?” உள்ளே வரும் வைரஸ் நமது உடல் கலங்களில் அப்பாவியாக இருக்கும் முளைகளோடு கொடுப்பை ஏற்படுத்துகிறது.  அதன்வழி மெதுவாக கலங்களின் உள்ளே புகுந்துவிடுகிறது. புகுந்து, கலங்களின் உள்ளேயுள்ள டி.என்.ஏ.-புரத பொறிமுறையைக் கைப்பற்றியும் விடுகிறது. அதை வைத்து தன்னை இலட்சக்கணக்கில் பிரதி பண்ண ஆரம்பிக்கிறது.  பிரதி பண்ணப்பட்ட புதிய வைரஸ்கள் கலங்களை விட்டு வெளியேறி, நுரையீரல் கலங்களை உடைக்க ஆரம்பிக்கும். இதனால் நுரையீரலின் பாகங்களில் அழற்சி (வீக்கம்) உருவாகும். கலங்கள் பாதிப்படையும். பாதிப்படைந்த கலங்கள் இறந்து போகும். கலங்கள் விழ விழ நுரையீரலின் செயல்பாடும் பாதிக்கப்படும். கூடவே நிமோனியா உருவாகும். 

“நிமோனியா உயிராபத்தானதா?” ஒரு சிலருக்கே உயிராபத்தற்ற அளவில் இருக்க வாய்ப்புண்டு. உரிய சிகிச்சைகள் அளிக்கப்படுமாயின் நிமோனியா வந்த உடல்; தேறுதல் அடையக்கூடும். அதற்கு பல வாரங்கள் ஆகிவிடக்கூடும். மற்றப்படி நிமோனியா உயிராபத்தின் ஆரம்பம். செவியர் (Severe) எனப்படும் கடுமையான தாக்கப் படிநிலை, கிரிட்டிகல் (Critical) எனப்படும் சிக்கலான தாக்கப் படிநிலைநிலைகளில் இருப்போர்க்கு நிமோனியாவானது ஏ.ஆர்.டி.எஸ். என அழைக்கப்படும் பலமான சுவாசப் பிரச்சனையை (Acute Respiratory Distress Syndrome – ARDS) கொண்டு வந்துவிடும். 

“ஏஆர்டிஎஸ் நிலையின் முடிவு என்ன?” ஏஆர்டிஎஸ் நிலை வருவது உயிராபத்திற்கு நிகரானது. இந்நிலையை எட்டும் நோயாளிகளில் 30 முதல் 40 வரையிலானவர்கள் மரணத்தைச் சந்திக்கிறார்கள். கிரிட்டிகல் படிநிலைக்கு வந்துவிடுபவர்களுக்கு ஏஆர்டிஎஸ் வரும்போது, மேலதிக தீவிர மருத்துவ கவனிப்பு தேவையாகிறது. நுரையீரலின் இயக்கம் பலவீனமடைந்திருக்கும் காரணத்தால், மூச்சு விடுவதற்கு அவர்கள் மிகவும் சிரமப்படுவார்கள். மேலதிக ஒட்சிசன் தரவேண்டிதும் அவசியமாகிவிடுகிறது. நோயாளியை செயற்கையாக மூச்சுவிட வைக்க இயந்திரங்களின் உதவி தேவையாகிறது. ஐசியுவில் அனுமதிக்கப்பட்டு லைவ் சப்போர்ட் எனப்படும் உயிர்ப்பாதுகாப்பு ஆதரவு தரும் இயந்திரக் கருவி பொருத்திக் கவனிக்கப்பட வேண்டிய நிலை வந்துவிடுகிறது. சிகிச்சை பலனில்லாமல் போகும்போது, நுரையீரல் முழுவதும் நீர்கோர்த்து விடுகிறது. நுரையீரல் ஒட்சிசனை இரத்தத்தில் சேர வைக்க முடியாத நிலை ஏற்படுகிறது. விளைவு? மரணம் சம்பவிக்கிறது. 

“மரணத்தைத் தடுக்க என்ன வழி?” கோவிட்-19 வைரஸ்கள் இருமல், தும்மலால் காற்றின்வழி பரவுகிறது. அதனால் ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது இனி இரண்டு மீட்டர் தள்ளி நிற்போம். வைரஸ் உயிர்ப்புடன் இருக்கும் இடத்தைத் கையால் தொட்டு, பின்னர் நாமே அதனை நம்முள் செல்ல வைப்பதன் மூலமும் கோவிட்-19 பரவும். ஆகையால் கைகளை அடிக்கடி கழுவிச் சுத்தமாக வைத்துக் கொள்வோம். கைகளால் முகத்தைத் தொடுவதைத் தவிர்த்துக் கொள்வோம்.
இன்றுவரை கோவிட்-19 நோய்க்கான தடுப்பு மருந்து எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால் கொடிய கோவிட்-19 நோயில் இருந்து தப்புவதற்கு ஒரே ஒரு எளிய வழி, இந்த நோய் நம்மை பீடிக்காமல் பார்த்துக்கொள்வதுதான்! எனவே பொது இடங்களை, சந்திப்புக்களைத் தவிர்த்துவிட்டு, வீட்டில் இருப்போம்!

Global Total
Last update on:
Cases

Deaths

Recovered

Active

Cases Today

Deaths Today

Critical

Affected Countries

ஆக்கத்திற்காக கனடா மூர்த்தி அவர்களுக்கு நன்றி

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!