சிம்மாசன உரையும் கனேடியர்களுக்குப் பிரதம மந்திரி ஆற்றிய உரையும் AND வேலைக்காப்புறுதிக்குத் தகுதி பெறாத பணியாளர்கள் புதிய கொடுப்பனவுகள்
PRESS RELEASE By:
PRESS RELEASE: Speech from the Throne
உடனடிவெளியீட்டுக்கு
செப்ரெம்பர் 24, 2020
சிம்மாசன உரையும் கனேடியர்களுக்குப் பிரதம மந்திரி ஆற்றிய உரையும்
கனேடிய நாடாளுமன்றத்தின் மக்களவை புதிய கூட்டத்தொடரை முன்னிட்டு 2020 செப்ரெம்பர் 23 ஆந் திகதி கூடியபோது, கனேடிய அரசின் சார்பான சிம்மாசன உரை இடம்பெற்றது. கோவிட்-19 உலகத் தொற்றுநோய் கனடா இதுவரை எதிர்கொண்ட மிக மோசமான பொதுச் சுகாதார நெருக்கடியாக விளங்குகிறது. எமது சமூகத்திலும், உலகம் முழுவதிலும் உள்ள சமூகங்களிலும் நிலவும் அடிப்படை இடைவெளிகளைக் கடந்த ஆறு மாதங்கள் வெளிக்காட்டியுள்ளன. பெற்றோர், இனப்பிரிவுகளைச் சேர்ந்த கனேடியர்கள், பூர்வகுடி மக்கட் குழுக்கள், இளைய கனேடியர்கள், முதியோர் போன்ற, ஏற்கனவே சிரமங்களை எதிர்கொண்டிருந்தவர்களின் நிலைமை உலகத் தொற்றுநோயால் மேலும் மோசமடைந்துள்ளது. அனைவருக்குமாக நெகிழ்திறன் மிக்கதாகக் கனடாவைக் கட்டியெழுப்புவதற்குச் சுகாதாரம், பொருளாதாரம், சமத்துவம், சுற்றுச் சூழல் என்பன தொடர்பாகத் துணிவான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும். கனேடியர்களான நாம் எத்தகையோர் என்பதை நினைவுபடுத்துவதற்கான நேரம் இது. உலகளாவிய நெருக்கடியைக் கட்டுப்படுத்தி, மீண்டும் சிறப்பாகக் கட்டியெழுப்புவதற்கான வாய்ப்பாக இது அமைகிறது.
சிம்மாசன உரையில் கனடாவை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கான நான்கு அடித்தளங்கள் குறிப்பிடப்பட்டன.
(1) கனேடியர்களைக் கோவிட்-19 இல் இருந்து பாதுகாத்தல்:
இந்தத் திட்டத்தின் முதல் அடித்தளம், கனேடியர்களைப் பாதுகாப்பதற்கு எம்மால் இயன்ற அனைத்தையும் செய்து, உலகத் தொற்றுநோய்க்கு எதிராகப் போராடுவதும் உயிர்களைக் காப்பதுமாகும். அனைத்துக் கனேடியர்களையும் – முக்கியமாக எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்களை – பாதுகாப்பதே எமது முக்கிய நோக்கம்
சமஷ்டி அரசு
• மாகாணங்கள் பரிசோதனை அளவை அதிகரிப்பதற்கு உதவியளிக்கும்
• கனடாவில் பரிசோதனைகள் அங்கீகரிக்கப்பட்டதும், அவற்றைச் செயற்படுத்த அதனால் இயன்ற அனைத்தையும் செய்யும்.
• பரிசோதனைகளின் எண்ணிக்கைகளை விரைவாக அதிகரிப்பதற்கான தேவை ஏற்பட்டால் உதவி புரிவதற்காக சமஷ்டி பரிசோதனை உதவி நடவடிக்கை அணியொன்றை உருவாக்கும்.
• தடுப்பு மருந்தொன்று தயாராகியதும் அதைக் கனேடியர்கள் பெறுவதை உறுதி செய்யும்.
(2) உலகத் தொற்றுநோயின்போது கனேடியர்களுக்கு உதவியளித்தல்:
எமது திட்டத்தின் இரண்டாவது அடித்தளம், இந்த நெருக்கடி எந்த அளவு காலத்திற்கு நீடித்தாலும், அந்தக் காலப் பகுதி முழுவதும் கனேடியர்களுக்கும், வணிக நிறுவனங்களுக்கும் ஆதரவளிப்பது.
இது சிக்கன நடவடிக்கைக்கான நேரம் அல்ல. இந்தச் சுகாதார நெருக்கடியின்போது கனேடியர்களுக்கு ஆதரவு கிடைப்பதை உறுதி செய்வதே பொருளாதாரத்திற்கு நாம் செய்யக்கூடிய சிறந்த விடயம். கனேடியர்கள் உடல் நலமா அல்லது தொழிலா என்ற தெரிவை மேற்கொள்ளவேண்டிய நிலை இருக்கக் கூடாது. இவ்வாறே, அரசால் இலகுவாகத் தாங்கக் கூடிய கடன்களைக் கனேடியர்கள் பெறவேண்டிய தேவையும் இருக்கக் கூடாது.
கனேடியர்களின் வாழ்வாதாரத்திற்கும், வணிக நிறுவனங்கள் செயற்படுவதற்கும், வேலைவாய்ப்புக்கள் உருவாக்கப்படுவதற்கும், பொருளாதாரத்தில் பங்கெடுக்கும் பெண்களுக்கு ஆதரவளிப்பதற்கும், எமது நிதிநிலை சமாளிக்கக் கூடியதாக இருப்பதை உறுதி செய்வதற்கும் நாம் உதவியளிப்போம்.
இந்தத் திட்டத்தில்:
• ஒரு மில்லியனுக்கும் அதிகமான வேலைவாய்ப்புக்கள் உருவாக்குதல்
• கனடா அவசர சம்பள மானியத்தை எதிர்வரும் கோடை காலம் வரை நீடித்தல்
• பயிற்சி, ஆட்சேர்ப்பு, பணியில் இருப்போரைத் தொடர்ந்து வைத்திருத்தல் போன்றவற்றில் நேரடியான முதலீடுகளும்,
• இளைய கனேடியர்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதும்
• நிலைமாறு வேலைக் காப்புறுதித் திட்டம் ஒன்றை உருவாக்குவதன் மூலம் பணியாளர்களுக்கும், அவர்களது குடும்பங்களுக்கும் உதவியளிப்பது
• பாரம்பரியமாக வேலைக்காப்புறுதிக்குத் தகுதி பெறாத தொழிலாளர்களையும் உள்ளடக்கிப் புதிய வேலைக்காப்புறுதித் திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தல்
• உலகத் தொற்றுநோய், அதிலிருந்து மீளுதல் ஆகியவற்றில் பெண்நிலை நோக்கில் இருந்து செயற்படுவதை உறுதி செய்வதற்காகப் பல்வேறு தரப்பினரையும் உள்ளடக்கிய செயலணி ஒன்றின் வழிகாட்டலில் பொருளாதாரத்தில் பங்கெடுக்கும் பெண்களுக்கான செயற்திட்டம் ஒன்றைத் தயாரித்து, அதிகளவு பெண்கள் பணியணியில் மீள இணைவதற்கு உதவியளித்தல்
• கனடா தழுவிய ஆரம்பகால கல்வி மற்றும் சிறுவர் பராமரிப்புப் பொறிமுறை ஒன்றை உருவாக்குவதன் மூலம் செலவு குறைந்ததும், விரிவானதும், உயர்தரமானதுமான சிறுவர் பராமரிப்பு வசதியைப் பெற்றோருக்கு வழங்குதல்
(3) மேலும் சிறப்பாக மீளக்கட்டியெழுப்புதல் – நடுத்தர வகுப்பினருக்கான மீளமைவுத் திட்டம்
இந்தத் திட்டத்தின் மூன்றாவது அடித்தளம், முன்னரிலும் பலமானதும், பழையநிலைக்குத் திரும்பக் கூடியதுமாகக் கனடாவை மேலும் சிறப்பாக மீளக்கட்டியெழுப்புதல் – நடுத்தர வகுப்பினரைப் பலப்படுத்துவதும், கடின உழைப்பாளிகள் அதில் இணைவதற்கு உதவுவதும், எமது சமூகப் பொறிமுறைகளில் நிலவும் இடைவெளிகள் குறித்து நடவடிக்கை எடுப்பதும், சுகாதாரப் பராமரிப்பில் முதலிடுவதும், பலமான பணி அணி (workforce) ஒன்றை உருவாக்குதலும்.
எமது அரசு:
• முதியோருக்குச் மிகச்சிறந்த ஆதரவு கிடைப்பதை உறுதி செய்வதற்காக நீண்டகாலப் பராமரிப்புத் தொடர்பான புதிய, தேசிய தராதரங்களை வரையறை செய்வதற்கு மாகாணங்களுடனும், பிராந்தியங்களுடனும் இணைந்து பணியாற்றும்.
• தமது பராமரிப்பில் இருக்கும் முதியோரைக் கவனிக்காதிருப்போரைத் தண்டிப்பதற்குக் குற்றவியல் சட்டத்தில் மாற்றம் செய்வதற்கு நாடாளுமன்றத்தில் நடவடிக்கை எடுக்கும்.
• முதியவர் ஒருவர் 75 வயதை அடையும்போது ழOld Age Security கொடுப்பனவை அதிகரிப்பதுடன், Canada Pension Plan survivor’s benefit ஐயும் அதிகரிக்கும்.
• Disability Inclusion Plan ஒன்றை உருவாக்குதல். இந்தத் திட்டத்தில்
- முதியோருக்கான Guaranteed Income Supplement ஐப் பின்பற்றி உருவாக்கப்படும் புதிய Canadian Disability Benefit ஒன்றும்
- மாற்றுவலுவுள்ள கனேடியர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் உறுதியான வேலைவாய்ப்பு மூலோபாயமும்
- மாற்று வலுவுள்ளோருக்கான அரசின் திட்டங்களுக்கும், உதவிகளுக்கும் தகுதியானோரைத் தெரிவு செய்வதற்கான மேம்பட்ட பொறிமுறையும் அடங்கியிருக்கும்.
• தூய்மையான வளர்ச்சியின் மூலம் காலநிலை மாற்றத்திற்கு எதிராகப் போராடுவதுடன், நீண்டகால நோக்கில் போட்டியிடும் வல்லமையுள்ள பொருளாதாரத்தை உருவாக்கும்.
• கனடாவின் 2030 ஆம் ஆண்டுக்கான காலநிலை மாற்ற இலக்கை விட மேம்பட்ட நிலையை அடைவதற்கான திட்டத்தை உடனடியாக வெளியிடும்.
• 2050 ஆம் ஆண்டிற்கு முன்பாக நிகர மாசு வாயுக்களின் வெளியேற்றத்தைப் பூச்சியமாகக் குறைக்கும் கனடாவின் இலக்குக்குச் சட்ட வடிவம் கொடுக்கும்.
• மீள்புதுப்பிக்கும் சக்தி, அடுத்த தலைமுறைத் தூய்மைச் சக்தி மற்றும் தொழில்நுட்ப தீர்வுகள் என்பவற்றில் முதலீடுகளை ஆதரிக்கும்.
(4) எத்தகைய கனடாவுக்காக நாம் போராடுகிறோம்:
இந்தத் திட்டத்தின் நான்காவது அடித்தளம் கனேடியர்களுக்காகக் குரல் கொடுப்பதும், எமது விழுமியங்களைப் பாதுகாப்பதுமாகும். கனடாவில் நாம் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருப்போம்.
பால் சமத்துவத்தை ஏற்படுத்துதல், மீளிணக்கத்தை நோக்கிய பயணம், கட்டமைப்பு அடிப்படையிலான இனவாதத்தை எதிர்கொள்ளல் போன்றவற்றில் முன்னேற்றத்தை எட்டுவதற்கு நாம் இணைந்து மேலும் செயலாற்றவேண்டியுள்ளது. இரண்டு உத்தியோகபூர்வ மொழிகளையும் அரவணைத்தல், மாறுபட்ட பாலுறவுத் தெரிவாளர் சமூகங்களின் (LGBTQ2) பங்களிப்பைக் கொண்டாடுதல், புதிதாக நாட்டுக்கு வருவோரை வரவேற்பது, குடும்ப மீளிணைவை ஆதரிப்பது போன்ற, எமது நாட்டுக்கு மதிப்பளிக்கும் விடயங்களை நாம் பாதுகாப்போம்.
கனேடியர்கள் முன்னரும் நிச்சமற்ற நிலைமைகளை எதிர்கொண்டபோதிலும், உறுதி, ஏனையோர் மீதான அக்கறை, துணிவு என்பவற்றால் அந்தச் சவால்களை வென்றார்கள். எமது நாட்டில் பொது அறிவு அணுகுமுறை நிலவுகிறது.
இந்தப் பண்புகள் அனைத்தையும் நாம் மீண்டும் பயன்படுத்துவதுடன், பொது நலனுக்காகவும், மேம்பட்டதும், பாதுகாப்பானதும், நீதியானதுமான சமூகத்துக்காகவும் தொடர்ந்து உழைக்கவேண்டும்.
இவையே எம்மை வரையறை செய்கின்றன. இவையே பிரகாசமான எதிர்காலத்திற்கு எம்மைக் கொண்டுசெல்லும்.
————————————————————————————-“““““““““““——————
PRESS RELEASE செப்ரெம்பர் 24, 2020
வேலைக்காப்புறுதிக்குத் தகுதி பெறாத பணியாளர்கள் புதிய கொடுப்பனவுகள் மூலம் வருமான உதவியைப் பெறமுடியும்
வேலைக்காப்புறுதிக்குத் தகுதி பெறாத பணியாளர்கள் புதிய கொடுப்பனவுகள் மூலம் வருமான உதவியைப் பெறமுடியும்
உலகத் தொற்றுநோய் ஆரம்பமாகிய காலத்தில் இருந்து பல கனேடியர்கள் மீண்டும் வேலைக்குத் திரும்பியுள்ளபோதிலும், கடுமையாகப் பாதிக்கப்பட்ட துறைகளில் உள்ள பணியாளர்களுக்குத் தொடர்ந்தும் உதவி தேவைப்படுவதைக் கனேடிய அரசு புரிந்து கொள்கிறது. இதற்காகவே, துணைப் பிரதம மந்திரியும் நிதியமைச்சருமான கிறிஸ்ரியா ஃபிறீலண்டும் (Chrystia Freeland) வேலைவாய்ப்பு, பணியணி மேம்பாடு, மாற்றுவலுக் கொண்டோரை உள்ளீர்த்தல் ஆகிய துறைகளின் அமைச்சரான கார்ளா குவால்ட்றோவும் (Carla Qualtrough), கோவிட்-19 தொடர்புடைய காரணங்களால் வேலை செய்ய முடியாதுள்ள கனேடியர்களுக்கு உதவியாகத் தற்காலிகமாக மூன்று மீட்சிக் கொடுப்பனவுகளை (Recovery Benefits) உருவாக்குவதற்கான Bill C-2 சட்டமூலத்தை அறிமுகம் செய்வதாக இன்று அறிவித்தார்கள். மேலும் பலமானதும், மீளும் வல்லமை அதிகம் கொண்டதுமாகப் பொருளாதாரத்தைக் மீளக் கட்டியெழுப்ப நாம் முற்பட்டுள்ள வேளையில், கனேடியர்களுக்கு உதவியளிக்கும் கனேடிய அரசின் திட்டத்தின் ஒரு அங்கமாக இந்த மூன்று கொடுப்பனவுகளும் அமைகின்றன.
உலகத் தொற்றுநோயின் ஆரம்ப நாட்களில், கனேடியர்களை வீடுகளில் இருக்குமாறு நாம் கோரிய காலப்பகுதியில், கனடா அவசரகால உதவிக் கொடுப்பனவு (Canada Emergency Response Benefit (CERB)) அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து செலவினங்களை மேற்கொள்வதற்கும், குடும்பங்களுக்கு ஆதரவாகவும் சுமார் ஒன்பது மில்லியன் கனேடியர்கள் இந்தக் கொடுப்பனவைப் பெற்றுள்ளார்கள். இந்தச் சட்டமூலத்திற்கு மகாராணியின் அங்கீகாரம் கிடைத்தால், புதிய கொடுப்பனவுகள் கனேடியர்களுக்கு வருமான உதவியை வழங்குவதுடன், அவர்கள் பாதுகாப்பாகப் பணிக்குத் திரும்புவதை ஊக்குவிக்கும் ஏற்பாடுகளின் மூலம் பொருளாதார மீட்சிக்கும் ஆதரவளிக்கும். குறிப்பாக இந்தச் சட்டமூலத்தில் உள்ளடங்குவன:
1. சுய தொழில் புரிவோர் அல்லது வேலைக்காப்புறுதிக்குத் தகுதி பெறாத, ஆனால் வருமான உதவி தேவைப்படுவோருக்கு வாரமொன்றுக்கு 500 டொலர் வீதம் 26 வாரங்கள் வரை வழங்கும் கனடா மீட்சிக் கொடுப்பனவு (Canada Recovery Benefit (CRB)). இந்தக் கொடுப்பனவு, கோவிட்-19 காரணமாக வேலைக்குத் திரும்பாத அல்லது வருமானம் குறைந்தது 50 சதவீதம் குறைவடைந்த கனேடியர்களுக்குக் கிடைக்கும். இந்தப் பணியாளர்கள் பணிக்குத் திரும்புவதற்கு தயாராக இருப்பதுடன், வேலை தேடும் முயற்சியையும் மேற்கொள்ளவேண்டும். அத்துடன், நியாயமான வேலையை அவர்கள் ஏற்றுக் கொள்ளவேண்டும்.
2. சுகவீனமுற்ற அல்லது கோவிட்-19 தொடர்புடைய காரணங்களுக்காக சுய தன்மைப்படுத்தலை மேற்கொள்ளவேண்டிய பணியாளர்களுக்கு வாரமொன்றுக்கு 500 டொலர் வீதம் இரண்டு வாரங்கள் வரை வழங்கும் கனடா மீட்சி சுகவீன கொடுப்பனவு (Canada Recovery Sickness Benefit (CRSB)). கனேடிய பணியாளர்கள் அனைவருக்கும் சம்பளத்துடன் கூடிய சுகவீன விடுமுறை கிடைக்கவேண்டுமென்ற எமது உறுதிப்பாட்டுக்கு ஆதரவாக இந்தக் கொடுப்பனவு அமைகிறது.
3. பாடசாலைகள், பகல்நேர சிறுவர் பராமரிப்பு நிலையங்கள், அல்லது பராமரிப்பு நிலையங்கள் கோவிட்-19 காரணமாக மூடப்பட்டிருப்பதால் அல்லது குழந்தையோ குடும்ப உறுப்பினரோ நோயுற்றமையாலோ தனிமைப்படுத்தலை மேற்கொள்ளவேண்டியிருப்பதாலோ – 12 வயதிற்கு உட்பட்ட குழந்தை ஒன்றை அல்லது குடும்ப உறுப்பினர் ஒருவரைப் பராமரிப்பதற்காக வேலைக்குச் செல்ல முடியாதிருப்போரில் தகுதி பெறும் கனேடியர்களுக்கு, வீடொன்றுக்கு வாரமொன்றுக்கு 500 டொலர் வீதம் 26 வாரங்கள் வரை வழங்கும் கனடா மீட்சிப் பராமரிப்பாளர் கொடுப்பனவு (Canada Recovery Caregiving Benefit (CRCB)).
கனேடியர்கள் கனேடிய வருமான வரி முகமையின் ஊடாக CRB, CRSB மற்றும் CRCB ஆகிய கொடுப்பனவுகளுக்கு 2021 செப்ரெம்பர் 25 வரையான ஒரு வருட காலத்திற்கு விண்ணப்பிக்கலாம்.