செப்டம்பரில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்
விஜய் தணிகாசலம், மானில சட்டமன்ற உறுப்பினர் ஸ்காபரோ – றூஜ் பார்க்
செப்டம்பரில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வி ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி பள்ளிகளை பாதுகாப்பாக மீளத் திறப்பதற்கான எமது அரசாங்கத்தின் திட்டத்தை முதல்வர் டக் போர்ட்டும் அமைச்சர் லெச்சேயும் அறிவித்தனர்.
முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வளங்களை பள்ளிகளுக்கு வழங்கும் இத்திட்டத்தில் மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. மானிலத்திலுள்ள பொது நிதியுதவி பெறும் அனைத்து ஆரம்ப நிலைப் பள்ளிகளும் வாரத்தில் ஐந்து நாட்களுக்கு மானிலத்தில் மீண்டும் திறக்கப்படும்.
பெரும்பாலான உயர்பள்ளிகள் பகுதிநேர மாதிரியைத் தழுவி ஆரம்பிக்கப்படும். சராசரி 15 மாணவர்களைக் கொண்ட வகுப்புகளில், பள்ளி நாட்களில் குறைந்தபட்சம் பாதி நாட்கள் மாணவர்கள் சமூகமளித்திருத்தல் வேண்டும்.
குறைந்த ஆபத்து உள்ள உயர்பள்ளிகள் வாரத்தில் ஐந்து நாட்கள் மீண்டும் திறக்கப்படும். எப்போதும் எமது அரசாங்கம் பெற்றோரின் தேர்வுக்கு முன்னுரிமை அளிப்பதால், பெற்றோர்களே தங்கள் குழந்தைகள் நேரில் பள்ளி செல்வதா இல்லையா என்ற முடிவை எடுக்கும் அதிகாரம் உடையவர்கள் ஆவர்.
செப்டம்பரில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதற்கு ஆதரவாகவும் ஒன்ராறியோவின் இரண்டு மில்லியன் மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை மேம்படுத்தவும் அரசாங்கம் 300 மில்லியன் டொலர்களை முதலீடு செய்கிறது.