தமிழீழத் தேசியக் கொடிநாள்
கனடாப் பாராளுமன்ற சட்டதிட்டங்களுக்கு அமைய முறைப்படி அனுமதிபெற்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தமிழீழத் தேசியக் கொடிநாள் நிகழ்வினை ஞாயிற்றுக்கிழமை 21/11/2021 நடத்துகின்றது. Video: https://tgte.tv/v/p9G54J
ஈழத்தமிழ் இனத்தின் அடையாளக் கொடியான “தமிழீழத் தேசியக் கொடியை” ஏந்தி தங்கள் கொடிதினத்தை ஈழத் தமிழ் மக்கள் கொண்டாடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தமிழ் ஈழ மக்களுக்கு பூர்வீகமான தனித்துவமான தேசம் உள்ளது. அவர்களுக்கு சுயநிர்ணய உரிமை உள்ளது. சுயநிர்ணய உரிமை தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் உரிமையாகும். அந்த அடிப்படை உரிமைகளின் அடையாளமான எங்கள் தேசியக்கொடியை நாங்கள் ஏந்தும் உரிமையை, கனடா மதித்து தமிழ் மக்களுக்கும், சனநாயகரீதியாக அமைந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கும் அனுமதியை வழங்கியுள்ளது.
கனடா தலைநகரில் கனடாப் பாராளுமன்ற முன்றலில் நடைபெறும் இந்நிகழ்ச்சி மட்டுமல்லாது ரொறன்ரோ, மொன்றியல் மற்றும் ஒட்டாவா நகரங்களிலும் நாடுகடந்த அரசாங்கத்தின் அரசியல் விவகார அமைச்சின் பணிப்பின் பேரில் ‘கனடா நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பணிமனை’ உள்ளரங்க நிகழ்வுகளை முன்னெடுப்பதும் குறிப்பிடத்தக்கது.
** வெளி அரங்க நிகழ்வு**
கனடாப் பாரளுமன்ற முன்றல் – PARLIAMENT HILL
Ottawa Parliament Hill
Wellington St, Ottawa
நேரம் – காலை 11மணி முதல் – மதியம் 2.00 மணிவரை
வாகனப் பேரணி: ரொறன்ரோவில் இருந்து நெடுஞ்சாலை 401வழியாக ஒட்டாவா நோக்கிய கொடி ஏந்திய வாகனப் பேரணி செல்வதற்கும் ழுPPயின் அனுமதியும் பெறப்பட்டுள்ளது. இந்த வாகனப் பேரணியானது 445 மில்னர் அவனியூ யூனிட் இலக்கம் 11 இல் அமைந்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்க அரசவை உறுப்பினர்கள் பணிமனை முன்றலில் இருந்து காலை 6:00 மணிக்கு ஆரம்பமாகும்.
மார்க்கம் வீதியினுடாக சென்று நெடுஞ்சாலை 401 இனுடாக வலது தடத்தில் (றைற் லேன்) தலைநகர் ஒட்டாவாவை நோக்கிய பயணம் தொடரும். பாரளுமன்ற முன்றலில் நடக்கும் நிகழ்வுகளுக்கு ஒட்டாவா பொலீசாரின் அனுமதியும் பெறப்பட்டுள்ளது.
** உள் அரங்க நிகழ்வுகள்**
1) ரொறன்ரோ Toronto:
JC’S Banquet & Convention Centre
1686 Ellesmere Rd , Scarborough, ON M1H 2V5
2) மொன்றியல் Montréal: OMNI Centre
375 Boulevard Cardinal Léger Pincourt, Quebec, J7V 9B6
3) ஒட்டாவா Ottawa: Walter Baker Sports Centre
100 Malvern Drive, Ottawa, Ontario K2J 2G5
Video: https://tgte.tv/v/p9G54J
தமிழீழத் தேசியக்கொடி நாளாக நவம்பர் 21ஐ நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பிரகடனப்படுத்தி முரசறைந்துள்ளது.
24-10-2021 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றிருந்த சிறப்பு அரசவை கூட்டத்தின் போது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களினால் இதற்கான தீர்மானம் கொண்டுவரப்பட்டு ஏகமனதாக முரசறையப்பட்டுள்ளது.
நிறைவேற்றப்பட்ட தீர்மான நகலில் தெரிவிக்கப்பட்டதாவது,
- ஈழத்தமிழ் தேசத்தின் தேசியத்தை தமிழீழத் தேசியக்கொடி வெளிப்படுத்துவத்தைக் கருத்தில் கொண்டு
- ஈழத்தமிழ் தேசத்தின் பண்பாட்டை, தமிழீழர் தேசியக்கொடி பிரதிபலிப்பதைக் கருத்தில் கொண்டு
- ஈழத்தமிழ் தேசத்தின் இறைமையை தமிழீழத் தேசியக்கொடி எடுத்தியம்புவதை நினைவில் நிறுத்தி
- நாளை மலர இருக்கும் தமிழீழத்தின் பொதுச் சின்னமாக தமிழீழத் தேசியக்கொடி மிளிர்வதை கருத்தில் கொண்டு
- தமிழீழத் தேசிய பண்பாட்டுக் கோவையில் நாடு உருவாவதற்கு முன்பே நாட்டு மக்கள் முறைப்படி கொடிவணக்கம் செலுத்தி கொடிவணக்க பாடலை இசைத்து முதன்மை விழாக்களை, நிகழ்ச்சிகளை நடாத்துவத்தன் மூலம் தமிழீழ மண் தேசியக் கொடி வரலாற்றில் ஒரு புதுமை சேர்த்திருக்கின்றது என்ற கூற்றை கவனத்தில் எடுத்துக்கொண்டு
- தமிழீழத் தேசியக்கொடி மாவீரர்களின் குருதியால் நெய்யப்பட்டது என்பதையும் கருத்தில் கொண்டு
-தமிழீழத் தேசியக்கொடி, சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத்தை அமைப்பதில் எமக்குள்ள உறுதியை உலகிற்கு பறை சாற்றுவதை கருத்தில் கொண்டு
- கொடி வணக்கம் தேசப்பற்றுக்கு (patriotism) வலுச்சேர்க்கும் என்பதையும் கருத்தில் கொண்டு
- நாளை மலரவிருக்கும் தமிழீழம் ஐக்கிய நாடுகள் சபை உட்பட அனைத்துலக பரப்பில் இறைமையினதும் சமத்துவத்தினதும் அடிப்படையில் மற்றைய நாடுகளுடன் நிமிந்து நிற்கும் என்ற செய்திக்கு கட்டியம் கூறுவதாக தமிழீழத் தேசியக்கொடி பறப்பதை கவனத்தில் கொண்டு
- எமது சுயநிர்ணய உரிமையையும், சுதந்திரத்தையும், இறையாண்மையையும் (to realize our sovereignty and L right to self determination ) எமது போராட்ட வரலாற்றை இரண்டாம் தலை முறைக்கும் எதிர்கால சந்ததிகளுக்கும் எடுத்துச் செல்லும் சாதனமாக தமிழீழ தேசிய கொடி திகழ்வதை கருத்தில் கொண்டும்
- தாயகத்திலும் புலத்திலும் பரவி வாழும் ஈழத்தமிழர்களை ஒன்றுபடுத்தும் உன்னதமான கருவியாக தமிழீழத் தேசியக்கொடி திகழ்வதை கருத்தில் கொண்டும்
- ஓகஸ்ற் 31ம் தேதி, பிரித்தானிய உள்துறை அமைச்சால் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் தடை தொடர்பாக அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில், தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடிக்கும், தமிழீழத் தேசியக்கொடிக்கும் உள்ள வேறுபாட்டை குறிப்பதின் மூலம், தமிழீழ தேசிய கொடியின் தனித்துவத்திற்கு கிடைத்த உள்ளடக்கமான அங்கீகாரத்தை (implicit recognition) கவனத்தில் எடுத்துக்கொண்டு
- தமிழீழத் தேசியக் கொடி பயன்பாட்டுக்கோவையில் குறிப்பிட்டவாறு எமது தேசியக்கொடியை மஞ்சள், சிவப்பு, கறுப்பு, வெள்ளை ஆகிய நான்கு நிறங்கள் அழகுபடுத்துகின்றன. தனிப்பாங்கான தேசிய இனமான தமிழீழத் தேசிய இனம் தனது சொந்த மண்ணில் தன்னாட்சி அமைத்துக்கொள்ள விழைவது அதனது அடிப்படை அரசியல் உரிமையும் மனித உரிமையுமாகும். தமிழீழ மக்கள் நடத்துகின்ற தேசிய விடுதலைப் போராட்டம் அறத்தின்பாற்பட்டது, நியாயமானது என்பதையும் தமிழீழத்தேசம் எப்பொழுதும் அறத்தின் பக்கம் நிற்குமென்பதையும் மஞ்சள் நிறம் குறித்து நிற்கிறது என்பதை கருத்தில் கொண்டு
- தமிழீழத் தேசியக்கொடி பயன்பாட்டுக்கோவையில் குறிப்பிட்டவாறு தேசிய விடுதலை பெற்ற தமிழீழத் தனியரசை அமைத்துவிடுவதால் மட்டும் முழுமையான விடுதலையைப் பெற்றுவிட்டதாகக் கொள்ளமுடியாது. தமிழீழக் குமுகாயத்திலுள்ள ஏற்றத்தாழ்வுகள் ஒழிக்கப்படவேண்டும். சாதிய, வகுப்பு முரண்பாடுகள் அகற்றப்படவேண்டும். பெண்ணடிமைத்தனம் நீக்கப்படவேண்டும். இதற்குக் குமுகாய அமைப்பிற் புரட்சிகரமான மாற்றங்களைக் கொண்டுவரவேண்டும். சமன்மையும் சமதருமமும் குமுகாய நீதியும் நிலைநாட்டப்படவேண்டும். இத்தகைய புரட்சிகரமான குமுகாயமாற்றத்தை வேண்டிநிற்கும் எமது அரசியல் இலக்கைச் சிவப்பு நிறம் குறியீடு செய்கின்றது என்பதையும் கருத்தில் கொண்டு
- தமிழீழத் தேசியக்கொடி பயன்பாட்டுக்கோவையில் குறிப்பிட்டவாறு விடுதலைப்பாதை கரடுமுரடானது; சாவும் அழிவும் தாங்கொணாத் துன்பங்களும் நிறைந்தது. இவற்றைத் தாங்கிக் கொள்ளவும் விடுதலையடைந்தபின் ஏற்படப்போகும் நெருக்கடிகளையும் அச்சுறுத்தல்களையும் எதிர்கொண்டு தேசத்தைக்கட்டியெழுப்பவும் பாதுகாக்கவும் உருக்குப் போன்ற உறுதியான உள்ளம் வேண்டும்; அசையாத நம்பிக்கை வேண்டும்; தளராத உறுதி வேண்டும். இவற்றைக் கறுப்பு நிறம் குறித்துக் காட்டுகின்றது என்பதையும் கருத்தில் எடுத்து
- தமிழீழத் தேசியக்கொடி பயன்பாட்டுக்கோவையில் குறிப்பிட்டவாறு விடுதலை அமைப்பும் மக்களும் தலைவர்களும் தூய்மையையும் நேர்மையையும் கடைப்பிடிக்க வேண்டுமென்பதை வெள்ளை நிறம் குறித்து நிற்கிறது என்பதையும் நினைவில் நிறுத்தி
- தமிழீழத் தேசியக்கொடி பயன்பாட்டுக்கோவையில் குறிப்பிட்டவாறு எமது தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களால் உருவாக்கப்பெற்ற புலிக்கொடி 1977 ஆம் ஆண்டு முதல் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் கொடியாக இருந்துவருகிறது. விடுதலைப்புலிகள் இயக்கத்தின் கொடியிலுள்ள எழுத்துக்கள் நீக்கப்பெற்ற கொடி தமிழீழத் தேசியக்கொடியாகத் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் 1990 ஆம் ஆண்டு அறிவிக்கப்பெற்றது. தமிழீழ விடுதலைப் போரில் வீரச்சாவடைந்த மாவீரர்களை நினைவுகூர்ந்த இரண்டாவது மாவீரர் நாளில் அதாவது 1990 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21ஆம் நாள் முதல் தடவையாகத் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் அவரது பாசறையில் ஏற்றிவைக்கப்பெற்றது என்பதையும் நினைவில் நிறுத்தி
நவம்பர் மாதம் 21 ஆவது நாளை, தமிழீழத் தேசியக்கொடி நாளாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அசரவை ஒக்ரோபர் 24ம் நாளன்று முரசறைகின்றது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
Transnational Government of Tamil Eelam (TGTE)