NationNews

ரொறன்ரோ நகரசபையினால் தமிழ்ச் சமூக மையத்திற்கான அமைவிடம் அறிவிப்பு

311 ஸ்ரெயின்ஸ் வீதியில் அமைந்துள்ள நிலத்தை எதிர்காலத்தில் தமிழ்சமூக மையம் அமைவதற்கான இடமாக ஒக்டோபர் மாதத்தில் நகரசபைக்குப் பரிந்துரைக்கப்படும்.

City of Toronto’s real estate division, CreateTO, is recommending that City Council designate 311 Staines Road as the future location of the Tamil Community Centre and to work with the Steering Committee on a land lease. 

தமிழ்ச் சமூக மையம் ஒன்றை அமைக்கும் எமது முயற்சிகளுக்கு நீங்கள் வழங்கிவரும் ஆதரவுக்கு முதற்கண் எமது நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

ரொறன்ரோ நகரசபையின் நில-ஆதனப் பகுதியின் (City of Toronto’s real estate division) ரொறன்ரோ நகரவாக்கச் சபை (Create TO), 311 ஸ்ரெயின்ஸ் வீதியில் அமைந்துள்ள (அண்ணளவாக 16,722 சதுர மீட்டர் பரப்பளவுள்ள) நிலத்தை எதிர்காலத்தில் தமிழ்சமூக மையம் அமைவதற்கான இடமாக நகரசபைக்குப் பரிந்துரைத்துள்ள செய்தியை எமது தமிழ்ச் சமூக மைய முன்னெடுப்புக் குழுவானது உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றது.

ரொறன்ரோ நகரவாக்கச்சபை மேற்குறிப்பிட்ட பரிந்துரையை இன்று நகரசபையின் உபகுழுவிற்குச் சமர்ப்பித்துள்ளது. அதை இங்கு வாசிக்கலாம். இது ரொறன்ரோ நகரசபை உபகுழுவினால் ஒக்டோபர் 5ம் திகதி, 2020 இலும், ரொறன்ரோ நகரசபையினால் ஒக்டோபர் 27, 2020 இலும் அங்கீகாரத்துக்காக எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. 

நாம் இந்த நிலத்தை மிகக்குறைந்த வாடகையில்,வருடம் ஒன்றுக்கு ஒரு டொலர் ( அத்துடன் HST – இக்கட்டணத்துக்கான ஒருங்கிணைந்த விற்பனை வரியும் சேர்த்து) எனும் குத்தகைக் கட்டணத்தில் எமக்குப் பெற்றுகொள்வதற்காக ரொறன்ரோ நகரசபையுடனும், நகரசபை முதல்வரின் அலுவலகத்துடனும், நகரசபை உறுப்பினர் மக்கெல்வி அவர்களுடனும் மற்றும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுடனும் கடந்த ஒருவருட காலமாக நெருக்கமாகச் செயற்பட்டு வந்துள்ளோம். 

”தமிழ்ச்சமூக மையத்துக்கான இடத்தை இனங்காண்பதற்காக நகரசபையானது முழுத் தமிழ்ச்சமூகத்துடனும் இணைந்து செயற்பட்டது” என்று நகரசபை முதல்வர் ஜோன் ரோறி கூறியுள்ளார். 

”இந்த அமைவிடத்தை பெற்றுக்கொள்வதுடன் மட்டுமல்லாது இவ் வருங்காலக் கனவை நனவாக்கலிலும் இதே அயராத அர்ப்பணிப்புடன் கூடிய கடின முயற்சி தேவை. தமிழ்ச்சமூகத்தின் இம் முயற்சிக்கு எனது முழுமையான ஆதரவு உண்டு. நாம் எல்லோரும் ஒருங்கிணைந்து உழைத்து இத் தமிழ்ச்சமூக மையத்தை உங்கள் முன்னிலைக்குக் கொண்டுவருவோம் என்று நான் உறுதியாக நம்புகின்றேன். ரொறன்ரோ நகர சபையானது நகரவாக்கச் சபையினூடாக 311 ஸ்ரெயின்ஸ் வீதியில் உள்ள நிலத்தை தமிழ்ச் சமூக மைய அமைவிடத்துக்கு வழங்க முன்வந்தமையையிட்டு நான் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றேன். கனடியத் தமிழர்கள் மட்டுமல்லாது ரொறன்ரோ பெரும்பாகத்தில் வசிகும் ஏனைய சமூகத்தினரும் இங்கு அமையவுள்ள சமூக மையத்தின் விளையாட்டு, பண்பாட்டு, பொழுதுபோக்கு நிகழ்ச்சித் திட்டங்களினால் பயனடைவார்கள். இக்கனவினை நனவாக்கும் முயற்சியின் அடுத்த கட்ட நடவடிக்கைகளில் பங்கேற்று உங்களுடன் இணைந்து செயற்பட நான் ஆவலாக உள்ளேன்” என்று நகரசபை உறுப்பினர் ஜெனிபஃர் மக்கெல்வி தெரிவித்துள்ளார்.   

311 ஸ்ரெயின்ஸ் வீதியில் உள்ள இந்த உபரி நிலமானது ரொறன்ரோ நகரசபையினால் ஒரு சமூக மையத்தின் கட்டுமானத்துக்காகக் கொள்வனவு செய்யப்பட்ட ஆதனமாகும். இது வெற்று நிலமாக இவ்வளவு காலமும் இப்படி ஒரு சந்தர்ப்பதிற்காகக் காத்திருந்தது. இந்த அமைவிடம் தமிழர்கள் செறிந்து வாழும் ரொறன்ரோ, மார்க்கம், டுறம் ஆகிய பகுதிகள் யாவற்றுக்கும் மையமாக அமைந்துள்ளமை குறிப்பித்தக்கது. இப்பகுதியில் சமூக மையங்கள், அத்தியாவசிய சமூக சேவைகள் ஆகியவற்றின் பரம்பல் மிகவும் குறைவாகவே உள்ளமையை இப்பகுதியில் செயற்பாட்டில்உள்ள இவற்றின் பரம்பலை மேலோட்டமாகப் பார்த்தாலே புரிந்துகொள்ளலாம். 

நாம் கடந்த 2019 நவம்பர் மாதத்தில், கனடிய மத்திய அரசினதும், மாகாண அரசினதும் சமூக, பண்பாட்டு, பொழுதுபோக்கு உள்ளகக் கட்டுமான முதலீட்டுத் திட்டத்தின் கீழ் எமது சமூகமையக் கட்டுமானப் பணிக்கு நிதிஒதுக்கீடு கோரி விண்ணப்பித்திருக்கின்றோம். இவ்வருட இறுதிக்குள் இதற்கான பதிலை இவ்வரசாங்கங்களிடமிருந்து எதிர்பார்க்கின்றோம்.  

நாம் இது சம்பந்தமான விடயங்களை உங்களுக்கு அறியப்படுத்தி வருவோம். இதே வேளை எமது முயற்சிகள் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ளவும், எமது செயற்திட்டங்களில் ரொறன்ரோ பெரும்பாகத்தில் தமிழ்ச்சமுதாயத்தின் வாழ்விடப் பரம்பல் பற்றிய புள்ளிவிபர ஆய்வுடன் கூடிய வரைபடம், இணைய வழியில் மக்களிடம் நாம் நடாத்திய கருத்துக்கணிப்புகள், ஸ்காபரோவில் சமுதாய மையம் அமைவதற்கான தேவைகள் பற்றி அறிந்துகொள்ளவும் www.tamilcentre.ca என்னும் எமது இணையத்தளத்தை நாடுங்கள்.   இவ்வாறு அவர்கள் நன்றி கூறி மின்னஞ்சல் அறிவித்திருந்தார்கள்

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!