NationNews

“தமிழ்நாட்டின் வேலை தமிழருக்கே” என சட்டம் இயற்றுங்கள்

“தமிழ்நாட்டின் வேலை தமிழருக்கே” என சட்டம் இயற்றுங்கள். M.K. Stalin அவர்களுக்கு வ.கௌதமன் கோரிக்கை.

தமிழ்நாட்டின் பன்னிரண்டாவது முதலமைச்சராகப் பதவி ஏற்கும் மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்குத் தமிழ்ப் பேரரசு கட்சியின் சார்பாக எனது மனம் நிறைந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். கொடுரமான இச்சூழலில் மிகச் சரியான வியூகம் எடுத்துக் கொரோனாவை ஒழிப்பதோடு மட்டுமல்லாமல் எங்கள் வீட்டுப் பிள்ளைகளைக் கொத்துக்கொத்தாகப் பலி எடுத்துக் கொண்டிருக்கிற குரூரமான “நீட்” என்கிற எமனையும், நீங்கள் உடனடியாக ஒழிக்க வேண்டுமென உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன்.

அரியலூர் அனிதா வீட்டில் போராட்டத்தைத் தொடங்கிய நாங்கள், 19.04.2018 அன்று, சென்னை காமராசர் அரங்கத்தில் அனைத்து மருத்துவக் கல்லூரி மாணவர்களோடு நாங்கள் நடத்திய “நீட் எதிர்ப்பு மாநாடு” சம்பந்தமாக உங்களை நேரில் சந்தித்தபோது, தி.மு.க., ஆட்சி அமைந்ததும் உறுதியாக “நீட்”டை அப்புறப்படுத்துவோம் என்கிற வாக்குறுதியினைத் தந்தீர்கள். அதன்படி முதல் சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே, நீங்கள் நல்ல செய்தியினைத் தருவீர்கள் என்று காத்திருக்கிறோம்.

ஏறக்குறைய, இந்திய ஒன்றியத்தில் உள்ள அனைத்து மாநிலங்களிலும், அந்தந்த மாநில அரசு சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் அம்மண்ணின் மைந்தர்களுக்கே 100 விழுக்காடு வேலை எனவும், அம்மண்ணிலுள்ள மத்திய அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் 85 முதல் 90 விழுக்காடு வரை, அம்மக்களுக்கே வேலை எனவும் சட்டம் இயற்றி, நடைமுறையில் இருக்கின்ற நிலையில், இதுவரை “தமிழ்நாட்டில் மட்டும் தமிழருக்கே வேலை” என சட்டம் இயற்றப்படவில்லை. ஆனால் தங்களின் தேர்தல் அறிக்கையில் 75 விழுக்காடு, “தமிழ்நாட்டின் வேலை தமிழருக்கே” என சட்டம் இயற்றப்படும் என்று பிரகடனப்படுத்தியிருந்தீர்கள்.
மற்ற மாநிலங்களைப் போலவே தமிழக அரசு வேலையில் 100 விழுக்காடு மற்றும் மத்திய அரசு, தனியார் நிறுவனங்களில் 85லிருந்து 90 விழுக்காடு வரை என உடனடியாக சட்டம் இயற்றும்படிக் கேட்டுக்கொள்கிறேன்.

தமிழர் மருத்துவமே தரணியின் தலைசிறந்த மருத்துவம் என உலகம் போற்றுகிறது. கொரோனா கொடுந்தொற்று உருவான சீனாவிலேயே தமிழரின் சித்த மருத்துவம்தான் முழுமையாகக் குணப்படுத்தியிருக்கிறது. இந்த உண்மை தெரிந்தும் இந்திய ஒன்றிய மோடி அரசும் இதற்கு முன்பு தமிழ்நாட்டை ஆண்ட எடப்பாடி அவர்களுடைய அரசும், சித்த மருத்துவத்தை உதாசினப்படுத்திவிட்டன. உண்மை நிலை உணர்ந்து தங்களின் அரசாவது போர்க்கால அடிப்படையில் சித்த மருத்துவ முகாம்கள் அமைத்து மனிதர்களை காக்க வேண்டும். அதுமட்டுமல்லாது தமிழ்நாட்டில் சித்த மருத்துவப் பல்கலைக்கழகங்களை நிறுவுவதற்கு திட்டமிட வேண்டும்.

விவசாயத்தையும் விவசாயிகளையும் முற்றிலுமாக அழிக்கின்ற ஹைட்ரோகார்பன் மீத்தேன், இனி தமிழ் மண்ணில் இல்லை என்கிற நிலையையும், உயிர் வளர்க்கும் பயிரை அழித்து, எங்கள் மண்ணின் வளத்தைக் கொள்ளை அடிக்கின்ற எட்டு வழிச் சாலை இங்கு தேவை இல்லை என்றும், எங்களின் தமிழர் கடலின் மீனவக் கிராமங்களை முற்றிலுமாக விழுங்கத் துடிக்கின்ற “சாகர்மாலா” திட்டத்தை ஒருபோதும் நாங்கள் நடைமுறைபடுத்த மாட்டோம் என்கிற நிலையெடுத்தும் தங்களின் அமைச்சரவையைக் கூட்டிக் கொள்கை முடிவு எடுத்துச் சட்டமாக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

கவர்னர் உள்ளிட்ட உச்சபட்ச அதிகாரத்தில் இருப்பவர்கள், நீதிமன்றத்தையே அவமதித்து, 28 ஆண்டுகள் கொடும் சிறை தண்டனை அனுபவித்த பிறகும், ஏழு தமிழர்களை இன்னும் சிறைக் கொட்டடியில் அடைத்து வைத்திருக்கிற கொடுமை நிலைக்கு முற்றுப்புள்ளி வைத்து, தமிழக அரசின் அதிகாரத்தின்படி அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறேன்.

ஜல்லிக்கட்டு உரிமைக்காகப் போராடியவர்கள் மீதும் விவசாயிகளின் உரிமைக்காகப் போராடிய போராளிகளின் மீதும் போடப்பட்ட வழக்குகளை முந்தைய அரசு முழுமையாகத் திரும்பப் பெறவில்லை. மாறாக மண்ணின் உரிமைக்காகப் போராடுபவர்களைப் பொய் வழக்கு போட்டு முடக்கியது. தங்கள் அரசாவது இது போன்ற நிலையினைத் தவிர்க்க வேண்டும். நேர்மை கொண்டு போராடிய அனைவர் மீதும் போடப்பட்ட பொய் வழக்குகளை திரும்பப் பெறுவதோடு, பிரெஞ்சுப் புரட்சிக்கு சமமான “தை”புரட்சியான ஜல்லிக்கட்டு உரிமை மீட்பின் பேரடையாளமாக, தமிழர் கடலான மெரினாவில் காங்கேயம் காளையை அடக்கும் தமிழ் வீரனின் சிலையைக் கம்பீரமாக நிறுவ வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

இனப்படுகொலை நடந்து 12 ஆண்டுகள் கடந்த நிலையிலும், இதுவரை ஈழத்தமிழர்களுக்கு ஒரு நிரந்தரத் தீர்வு இல்லை.
நடந்தது இனப்படுகொலையே என்றும், தனித் தமிழ் ஈழமே ஒரே தீர்வு என்றும் தங்கள் தலைமையிலான அரசு, ஒரு உறுதியான நிலைப்பாட்டை எடுத்து, இந்திய ஒன்றிய அரசுக்கு தெளிந்ததோர் அழுத்தம் தர வேண்டுமென உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன்.

தமிழ் பயின்றால்தான் உயர் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் முன்னுரிமை என்று சட்டம் கொண்டு வந்தால்தான், மாற்றாரும் இவ்வுலகின் ஆதி மொழியான எம் தமிழ் மொழியைக் கற்பார்கள். தமிழ் படிப்பதினால் எந்தப் பயனுமில்லை என்கிற இன்றைய சூழல் தொடர்ந்தால் ஐம்பதாயிரம் ஆண்டுகள் வரலாறு கொண்ட தமிழினமே, இனி தமிழைப் படிக்காது என்கின்ற யதார்த்த நிலையறிந்து உடனடியாக சட்டமியற்றிப் பிரகடனப்படுத்துங்கள். தமிழை தழைக்க தழைக்க வளர்த்தெடுங்கள். இப்பூமிப் பந்தின் முதல் குடியான தமிழ்க்குடியின் தொன்மங்களை ஆதிச்ச நல்லூரிலும் கீழடியிலும் இன்னும் இன்னும் குழிதோண்டிப் புதைக்கவே ஒரு கூட்டம் திட்டமிட்டுச் செயலாற்றிக் கொண்டிருக்கிறது. எதற்கும் அஞ்சாமல் தமிழினத்தின் உண்மை வரலாற்றை உறுதியோடு வெளிக்கொணர, உங்கள் தலைமையிலான அரசு செயல்படட்டும். தமிழ் மண் மீதும் தமிழர்களின் வாழ்வியல் மீதும் தமிழக அரசு மீதும் அதிகார வர்க்கங்கள் அத்துமீறினாலும் இயற்கைப் பேரிடர் நிகழ்ந்தாலும் உங்களுக்கு தமிழ்ப் பேரரசு கட்சி தோளோடு தோளாக என்றும் துணை நிற்கும்.

தெரிந்தோ தெரியாமலோ தமிழினத்திற்குக் கேடு விளைவிக்கின்ற திட்டங்களை தமிழக அரசு கையில் எடுத்தால் எப்பொழுதும் போல எங்களின் சமரசமற்ற, எவருக்கும் தலைவணங்காத போராட்டங்களை நாங்கள் கையில் எடுப்போம் என்பதையும் உறுதிபட தெரிவித்துக்கொண்டு தங்கள் தலைமையிலான அரசு, முன் எப்பொழுதும் இல்லாத அளவுக்கு ஒரு பொற்கால ஆட்சியினை வழங்குவதற்கு மீண்டும் எனது மனம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!