Articlesகட்டுரைகௌசி

தொலைபேசியின் இலவச இணைப்பு – By :கௌசி காணொளியில் கதை

இருமனங்கள் இணையும் போது இதயம் நுழை அன்பு நிலைக்க வேண்டும். தாலி தாங்க மனம் விழைந்த போது தாங்கும் மனம் சேரவேண்டும். நாடு  கடந்து வந்தபோது தேடிவரும் பிரச்சிi னகள் ஓடிச்  செல்ல வழி காணும் மனமும் வலுக்க வேண்டும். இயந்திர உலகு, நிம்மதியற்ற வாழ்க்கை. இப்படித்தான் வாழ வேண்டும் என்ற துடிப்பிற்காய் ஓயாத உழைப்பு. கணவன் படி தாண்டுவது காதல் மனையாளைக் களிப்பில் ஆழ்த்த வேண்டும் என்ற அவாவும் ஒரு காரணமாக அமைகின்றது. உரிமையுள்ள இடத்திலேயே கவலை, களைப்பு, கோபம் அனைத்தும் காட்டமுடியும். ஆடிக் களைத்த பம்பரம் வீட்டில் ஓய்வு காண வேண்டும் அல்லவா! இதை உணர்ந்து கொள்ளாப் பெண் வீட்டில் உறைவதன் அர்த்தம் தான் யாதோ! அடுத்தவரைப் புரிந்து வளைந்து சமாளித்துக் கொள்ளும் பக்குவம் இல்லாவிட்டால், மனையை ஆளும் தகுதி அவளுக்கு ஏது?

By :கௌசி காணொளியில் கதை

https://www.youtube.com/watch?v=WsWzHlOShWE&feature=youtu.be  (இந்த இணைப்பை அழுத்தி கதையை you Tube இல் பார்க்கலாம்)

ஆம். சுபி கணவனுடன் வாழ வந்த இளம்பெண் உறவுகள் சொந்தங்கள் சுகம் விசாரிக்கத் தூக்கும் தொலைபேசி அவள் உள்வீட்டுப் பூசலுக்குத் தூபம் போடும் அழைப்பாகவே இருக்கும். சும்மா இருக்கும் சங்கை ஊதிக் கெடுத்துவிடும் சுகம் விசாரிப்பாய் இருக்கும்.

           அன்று சமயலறைப் பாத்திரங்கள் போட்டபடி கிடக்க, அடுப்பில் கோதுமை மாவை அவிப்பதற்காக வைத்துவிட்டு ஒரு மணித்தியால நேரக் கணிப்பீட்டை மனதிலே பதித்துவிட்டு அதுவரை தொலைக்காட்சியில் தன்னை மறந்திருந்தாள் சுபி. அவ்வேளை வந்த தொலைபேசியைக் கையில் எடுத்தாள். ராணி தான் மறுமுனையில் பேசினாள். இருவரினதும் சுவாரஸ்யமான பேச்சில் தொலைக்காட்சி நாடகம் இணைந்து கொண்டது. இருவரும் நாடகங்களின் விமர்சனத்தை மாறிமாறி வழங்கிக் கொண்டிருந்தார்கள். மணிக்கணக்கில் கதையும் நாடகமும் சுவாரஸ்யமாகப் போய்க் கொண்டிருந்தது. சமையலறையில் மா எரிந்து புகை கிளம்பிய வாடைதான் அடுப்பில் மா அவிய வைத்த நினைப்பையே சுபிக்குத் தட்டி எழுப்பியது.

‘ஐயோ! மா அவிக்க வச்சனான். பிறகு உங்களோட கதைக்கிறன்‘

என்றபடி சமயலறை வந்தாள். புகை மண்டலம் சமையலறை முழுவதும் பரந்திருந்தது. சாளரங்கள் முழுவதையும் திறந்துவிட்டாள். ஆனால், மணம் போக வேண்டுமே. இலேசான காரியமா? மா அவித்த பாத்திரம் கரி பிடித்துக் கிடந்தது. அந்த அளவிற்கு சுவாரஷ்யமாகக் கதை போனது. சிறிது நேரம் கழித்து கணவன் ரமேஸ் வந்தான்.

‘உனக்கு எத்தனை தரம் ரெலிபோன் எடுக்கிறது. ஒரே என்கேஜ்‘

என்றபடி கதவைத் திறந்தவனுக்கு மூக்கினுள் நுழைந்த எரிந்த வாடை ஆத்திரத்தை மேலும் அதிகரிக்கச் செய்தது.

‘என்ன நடந்தது. ஏதோ எரிஞ்சிருக்கே‘

‘அது ராணியோட கதைச்சிக் கொண்டிருந்தனான். மா அவிப்பதுக்கு வச்சத மறந்திட்டன்‘

‘யாரோடையும் அலட்டிறதுக்கு ஒரு அளவு வேணும். உமக்கு எத்தனை தரம் ரெலிபோன் எடுத்தனான். பக்கத்தில மொபைலக் கொண்டு வச்சிருக்கலாமே. வீட்டில போட்டது போட்டபடி கிடக்குது. அது பற்றிய சிந்தனைகள் எதுவும் இல்லை. தேவையில்லாத கதைகள்‘  எனப் பலவாறாக கத்தியபடி

‘மணத்தை முதல்ல வெளிய எடும். நான் திரும்ப வாறன்” என்றபடி வெளியே போய்விட்டான் ரமேஸ்.

திரும்பவும் தொலைபேசி சிணுங்கியது. ராணிதான் எடுத்தாள்.

‘ஏதோ மா எரிந்தது என்றீர். அதுதான் என்னவென்று கேட்க எடுத்தனான்‘

‘பாத்திரமெல்லாம் எரிஞ்சு போச்சு ராணி. அன்றைக்கு மீன் குழம்பும் இப்பிடித்தான். தான் சாப்பிட்ட உடனே அடுத்த வேலைக்குப் போக வேணும். நான் இப்ப வர்றேன். சாப்பாட்டைச் சூடாக்குங்கள் என்று ரெலிபோன் எடுத்துச் சொன்னார். நானும் அடுப்பில வைச்சிட்டு ரிவியோட இருந்ததால கறி எரிஞ்சு மீனெல்லாம் கருகிப் போயிற்றுது. வந்து கத்து கத்தென்று கத்திட்டுப் போனார்‘ என்றாள்.

‘அப்படி அவர் எப்படிப் பேசமுடியும்? நீ என்ன பேசாமடந்தையா? அடங்கிப் போக நீ என்ன அடிமை இல்லையே. இடத்தைக் கொடுத்திடாத. உன்னைக் காலில் போட்டு மிதித்து விடுவார். ரிவி பார்க்கிறது உன்ர சுதந்திரம். பிழை யார் தான் விடுவதில்லை. அதிகம் கத்திக் கை நீட்டினாரென்றால், பொலிஸுக்கு ரெலிபோன் எடுத்துப் போடு. ஊரில ராசாத்தி மாதிரி இருந்த நீ இஞ்ச வந்து அடிமையா இருக்கப் போறியா? இந்த நாடு பொம்பிள்ளைகளுக்கு நல்ல சுதந்திரமும் வசதிகளும் செய்து கொடுக்கும். நீ ஒன்றுக்கும் பயப்பிடாத. பிடிக்காட்டி விட்டுப் போட்டு தனிய போய் வாழ். அரசாங்கம் உன்ர செலவுக்குப் போதிய காசு தரும்‘

என்று அக்கறையான புத்திமதி கூறுவதுபோல் ராணி கூறினாள். 

எப்படி சுகமா? என்றே அழைப்பு வரும். ஆனால், அது தூண்டித் தூண்டிப் பற்றவைக்கும் நெருப்பாகப் போய்விடும். அநுபவசாலிகள் வயதுக்கு வந்த பெரியவர்கள் ஒரு இளங்குடும்பத்தை வாழ வைப்பதற்காகவோ அறிவுரை கூறுவர்? வாழ்வின் அழிவுக்காகவோ அறிவுரை கூறுவர்? கூடி வாழும் கூட்டைக் குலைப்பது பாவமல்லவா? இப்படியும் சில சூத்திரதாரிகளாலேயே மனிதனும் மிருகமாகின்றான். குடும்ப பந்தம் உறுதியானால் மாத்திரம் எதிர்கால உலகம் உருவாகும். இல்லையென்றால், ஆணும் பெண்ணும் திருமணம் செய்வதன் அர்த்தம் தான் என்ன? ஆணையும் பெண்ணையும் படைத்ததன் காரணம்தான் என்ன? தொலைபேசியின் இலவச இணைப்பு நன்றாகத் தொழிற்படுகிறது.

சுபி சிந்திக்கத் தொடங்கினாள்.

‘உண்மைதான் அக்கா. கூட்டிக் கொண்டு வரும்போது எங்களுடைய நிலைய நினைச்சுப் பார்க்க வேண்டும். பொறுங்கள் அக்கா. என்ன நடக்கிறது என்று மட்டும் பாருங்கள்.

அன்று ஞாயிற்றுக் கிழமை. கடைகள் எல்லாம் பூட்டப்பட்டிருக்கும். அவசரத்திற்குக் கூட ஒரு பொருள் வாங்க முடியாது. வீடுகளில் கூட எவ்வித சத்தமும் வரக் கூடாது. ஆனால் சுபி  காலை ஏழு மணிக்கு உரலும் உலக்கையும் எடுத்து விட்டாள். புட்டுக்கு மாசிச் சம்பல் போட வேண்டுமாம். இப்போதுதானே தமிழ் கடைகளில் தாயக உணவுகள் தயாரிப்பதற்கான அத்தனை பலசரக்குச் சாமான்களும் உபகரணங்களும் கிடைக்கின்றனவே. உரல் சிறிதாக இருந்தாலும் இருக்கும் வீடு நடக்கும் சத்தத்தையும் நயமாக கீழ் வீட்டுக்காரருக்கு விவரணம் செய்யக் கூடிய வகையில் தானே கட்டப்பட்டுள்ளது. தனி வீடாக இருந்தாலும் பறவாயில்லை. அக்கம் பக்கம் ஒட்டிய சுவர் இல்லை. கீழ்வீட்டார் மேல் வீட்டார் என்ற கவனிப்புத் தேவை இல்லை. ஆனால் சுபி, குடியிருப்பதோ அடுக்கு மாடி வாடகை வீடு.  அன்று எத்தனை குடும்பம் கிழமை முழுவதும் வேலை வேலை என்று  ஓடிக் களைத்து இன்று ஆறுதலாகத் தூங்கிக் கொண்டிருப்பார்கள்.

உரல் உலக்கையில் போடும் இடியானது, ரமேஷ் மண்டையில் விழுவது போன்ற உணர்வுகளைத் தந்தது. இவள் என்ன செய்கின்றாள். புரியாத ரமேஷ்.

‘சுபி …. சுபி …. அங்கே என்ன செய்கின்றாய். சத்தத்தை நிற்பாட்டு. கீழ் வீட்டுக்காரன் வந்து பெல் அடிக்கப் போறான்”

அவள் எதையும் காதில் விழுத்துவதாய் இல்லை. தான் நினைத்ததைத்தானே அவள் செய்வாள்.

ஆத்திரம் கொண்ட ரமேஷ் எழுந்து வந்து

‘இப்ப என்ன அவசரத்திற்கு இந்த சாப்பாடு செய்கிறாய். இன்றைக்கு ஞாயிற்றுக் கிழமை என்று தெரியாதா? மெதுவாகச் சொன்னான்.

‘அதுக்கு நாங்கள் சமைச்சுச் சாப்பிடக் கூடாதா. அதுகளைப் போல பாணுக்கு பட்டர் பூசித்தான் சாப்பிட வேணுமா. எனக்கு புட்டும் சம்பலும் இன்றைக்குச் சாப்பிட வேணும்’

‘அதுக்கு ஸ்ரீ லங்காக்குப் போ. இஞ்ச வந்து என்னக் கொல்லாத. முதல்ல இந்த சத்தத்தை நிற்பாட்டு”

‘முடியாது என்ன நடக்குது என்று பார்ப்போம். எவன் வர்றான் என்று பார்ப்போம்”

கையில் இருந்த உலக்கையை பறித்தான் ரமேஷ். சுபியும் பிடிவாதமாக உலக்கையை இரும்புப் பிடியாய்ப் பிடித்தாள். எவ்வளவு முயற்சித்தும் முடியாத ரமேஷ் அவள் கன்னத்தில் பளார் என்று ஒன்று விட்டான். அவ்வளவுதான் கையில் இருந்த உலக்கையை வீசி எறிந்தாள். அதுவும் பெரிய சத்தத்துடன் விழுந்தது. பெரிய சத்தத்துடன் அழுதபடி ஓடிப்போய் தொலைபேசியை எடுத்தாள்.

ரமேஷ் தன் படுக்கையில் போய்ப் படுத்தான். அடுத்த நிமிடமே. வாசல்  அழைப்பு மணி ஒலித்தது.

வந்திட்டான் அடுத்த வீட்டுக்காரன் என்றபடி ரமேஷ் ஓடிப்போய் கதவைத் திறந்தான்.

அங்கே போலிஸ்காரர் வந்து கொண்டிருந்தார்கள். கீழ் வீட்டுக்காரரே போலீசுக்கு சொல்லிவிட்டார்கள் என்று எண்ணியபடி

‘சுபி பார்த்தியா கீழ் வீட்டுக்காரர் போலீசுக்கு சொல்லிப் போட்டார்கள்” என்றான்.

‘அவர்கள் ஒன்றும் சொல்லல்லை. நான் தான் சொன்னனான்”

‘என்னது…   என்ன பாசையில சொன்னனீர்”

‘என்னத்துக்குப் பாஷை அழுதனான். விலாசம் சொன்னனான்”

அதற்குள் படி ஏறி வந்த பொலிஸார். முதலில் கேள்வி கேட்டது சுபியிடமே.

அவளின் கையும் காலும் அழுகையும் நடித்ததனால்  பொலிஸார் ரமேஷை அழைத்துக்கொண்டு போனார்கள்.

குதூகலுத்துடன் தொலைபேசியை எடுத்தாள் சுபி.

‘இவருக்கு வச்சேனே ஆப்பு. இப்ப கம்பி எண்ணுறார்”

மறுமுனையில் ராணியும்

‘அப்படியா! சூப்பர் . இப்போ பிள்ளைய டான்ஸ் க்ளாசுக்கு கூட்டிப் போறான் வந்து எடுக்கிறன்”

என்றபடி தொலைபேசியை வைத்தாள்.

இரவு வரைக் காத்திருந்த சுபி. மீண்டுமாய் ராணிக்குத் தொலைபேசியை  எடுத்தாள்.

நாளை டாக்டர் பரிசோதனை இருப்பதனால், ரமேஸ் வேலைக்கு  விடுமுறை எடுத்திருந்தான். ஆனால் இப்போது அவனில்லாமல் யாரைக் கூட்டிக் கொண்டு போகலாம் என்று நினைத்த சுபி ராணிக்கு தொலைபேசி எடுத்தாள்.

‘ஆ … சுபி கொஞ்சம் அலுவலாக இருந்ததனால் கோல் பண்ண மறந்திட்டேன். சொல்லும் சுபி“

‘ஒன்றுமில்லை அக்கா நாளைக்கு டாக்டர்ட appointment இருக்கு என்னோட வாறீங்களா. தண்ணியும் முடிஞ்சு வாங்க வேணும்?

‘அது வந்து சுபி. எனக்கு வேற ஒரு அலுவல் இருக்கு. வேற யாரையாவது கூப்பிட்டுப் பாருமேன். நான் படுக்கப் போறன். நாளைக்கு பிள்ளைய ஸ்கூலுக்குக் கூட்டிப் போகவேணும்” என்றவளாய் தொலைபேசியை நிறுத்தினாள்.

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!