NationNews

பாடசாலைகள் பாதுகாப்பாக மீளத் திறக்கப்படுவதற்கான உதவியைப் பிரதம மந்திரி அறிவித்துள்ளார்-விளக்கத்தைத் தருகின்றார் MP. Gary Anandasangaree

விளக்கத்தைத் தருகின்றார் பாராளுமன்ற உறுப்பினர் Gary Anandasangaree.

சிறுவர்களின் வளர்ச்சிக்கும், அவர்களது எதிர்காலம் வெற்றிகரமாக அமைவதற்கும் பாடசாலைகள் இன்றியமையாதவை. கோவிட்-19 உலகத் தொற்றுநோய் காரணமாகப் பாடசாலைகள் மூடப்பட்டும், பிள்ளைகள் சக மாணவர்களிடம் இருந்தும், நண்பர்களிடம் இருந்தும் பிரிக்கப்பட்டும் இருந்தமை, குடும்பங்களுக்குச் சிரமமாக இருந்தது. பாதுகாப்பாகவும் படிப்படியாகவும் பொருளாதார நடவடிக்கைகளை நாம் மீள ஆரம்பிக்கும் வேளையில் பெற்றோர் வேலைக்குத் திரும்பக்கூடியதாக இருப்பதும், பிள்ளைகள் ஆரோக்கியமான சூழலில் கல்வி கற்கிறார்களென்ற நம்பிக்கையைக் கொண்டிருப்பதும் முக்கியமானது. இதற்காகவே பாடசாலைகளைப் பாதுகாப்பாக மீளத் திறப்பது, மாணவர்களினதும் பணியாளர்களினதும் உடல் நலத்தைப் பாதுகாப்பது ஆகியவற்றை உறுதி செய்வதற்கு மாகாணங்களும் பிராந்தியங்களும் எடுக்கும் முயற்சிகளுக்கு ஆதரவாகக் கனேடிய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

பாதுகாப்பாக வகுப்புக்களுக்குத் திரும்புவதற்கான நிதியத்தின் ஊடாக மாகாணங்களுக்கும், பிராந்தியங்களுக்கும் 2 பில்லியன் டொலர் உதவி வழங்கப்படுமெனப் பிரதம மந்திரி ஜஸ்ரின் ட்ரூடோ இன்று அறிவித்தார். கல்வியாண்டு முழுவதும் மாணவர்களினதும், பணியாளர்களினதும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக உள்ளுர் பாடசாலைச் சபைகளுடன் இணைந்து செயற்படும் மாகாணங்களுக்கும் பிராந்தியங்களுக்கும் தேவையான மேலதிக நிதியாக இது அமையும். உதாரணமாக, மாகாணங்களும் பிராந்தியங்களும் கல்வி கற்பதற்கான வேறிடங்களைப் பெற்றுக் கொள்வது, காற்றுச் சுற்றோட்டத்தை மேம்படுத்துவது, கைகளைத் தூய்மைப்படுத்துவதையும் சுகாதாரத்தையும் அதிகரிப்பது, தனிநபர் பாதுகாப்புக் கருவிகளையும் துப்பரவாக்கும் பொருட்களையும் கொள்வனவு செய்வது போன்றவற்கு இது உதவியாக இருக்கும்.

இந்த இலையுதிர் காலத்தில் மாணவர்கள் பாதுகாப்பாகப் பாடசாலைகளுக்குத் திரும்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்கு ஒன்றாரியோ மாகாணத்திற்கு 763 மில்லியன் டொலர் வரையான பணம் புதிய நிதியுதவியில் கிடைக்கும். இரண்டு கட்டங்களாக இந்தப் பணம் வழங்கப்படும்.

பூர்வகுடிக் குடியிருப்புக்களில் உள்ள பாடசாலைகளுக்கு மாணவர்கள் பாதுகாப்பாகத் திரும்புவதை உறுதி செய்வதற்கான சமூக செயற்பாடுகளுக்கு உதவியாக மேலதிகமாக 112 மில்லியன் டொலர் பூர்வகுடியினருக்கு வழங்கப்படுமெனவும் பிரதம மந்திரி அறிவித்தார். இந்தக் கல்வியாண்டில் மாணவர்களினதும், பணியாளர்களினதும் உடல் நலத்தையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதற்குப் பூர்வகுடிப் பங்காளிகளுடன் அரசு தொடர்ந்து இணைந்து பணியாற்றும்.

எமது பாடசாலைகளை மீளத் திறந்து, பொருளாதார செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிக்கும் வேளையில், அனைத்துக் கனேடியர்களினதும் உடல்நலத்தையும், பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதற்காக மாகாணங்களுடனும், பிராந்தியங்களுடனும் இணைந்து செயற்படுவதுடன் வழிகாட்டியாகவும் நாம் தொடர்ந்து செயற்படுவோம்.

”முன்னாள் ஆசிரியராகவும், ஒரு தந்தையாகவும், பிள்ளைகளின் சமூகவியல் வளர்ச்சி, மனநலன், கல்வி கற்கும் வல்லமை ஆகியவற்றில் பாடசாலைகளின் முக்கியத்துவம் குறித்து நான் நேரடியாக அறிந்துள்ளேன். பிள்ளைகள் பாடசாலைகளுக்குத் திரும்புவது, பொருளாதார செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிப்பதில் ஒரு முக்கிய கட்டமாகவும், பெற்றோர் பிள்ளைககளின் உடல்நலம் குறித்துக் கவலையின்றி வேலைக்குத் திரும்புவதற்கும் முக்கியமானது. இந்தக் கடினமான வேளையில், பிள்ளைகள், குடும்பங்கள் மற்றும் அனைத்துக் கனேடியர்களையும் பாதுகாப்பாகவும், உடல்நலத்துடனும் பேணும் விடயத்தில் மகாணங்கள், பிராந்தியங்கள், பூர்வகுடியினர் ஆகியோரின் நெருக்கமான பங்காளியாகக் கனேடிய அரசு விளங்கும்.” எனப் பிரதம மந்திரி ஜஸ்ரின் ட்ரூடோ கூறினார்.

Video from facebook
error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!