NationNews

பாலஸ்தீனியர்களின்=இலங்கை நந்திக்கடல் ஆகிவிடுமோ?

வாடி காசா ஆற்றிற்கு வடக்கே வாழும் பாலஸ்தீனியர்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு 24 மணித்தியாலத்தில் வெளியேறவேண்டுமென இஸ்ரேலிய அரசு உத்தரவிட்டுள்ளது. ஏறத்தாழ 1.1 மில்லியன் மக்கள் இப்பிரதேசத்தில் வாழ்கிறார்கள் என ஐ.நா. மதிப்பிட்டிருக்கிறது.

இப்பெருந்தொகையான மக்கள் குறுகிய கால அவகாசத்தில் நகர்வது இலகுவான காரியமில்லை. துன்பங்களுக்கும் மரணங்களுக்கும் மத்தியில் தான் இது நடைபெறவேண்டும். இத்துன்பங்களை அனுபவித்த ஈழமக்களுக்கு இது மீண்டும் கோரமான வலியைத் தரும் விடயம்.

நந்திக்கடலோரத்தில் பாதுகாப்புக்காக ஒதுங்கச் சொல்லிவிட்டு அந்த இடத்துக்குத் துல்லியமாகக் குண்டுகளைத் தூவிக் கொன்ற சிங்களப் படைகளுக்கு ஏவுகணைகளாக விளங்கிய மேற்குலகம் இப்போது இஸ்ரேலில் அதே கோரத்தை மீண்டும் அரங்கேற்றுகிறது. ஒதுக்கப்படும் மக்களிடையே ஹமாஸ் போராளிகள் நின்றார்கள் என்ற குற்றச்சாட்டுடன் அங்கும் குண்டுகள் பொழியப்படும். ஏற்கெனவே தடை செய்யப்பட்ட பொஸ்பரஸ் கொத்துக்குண்டுகளை பாலஸ்தீனியர்களி மீது இஸ்ரேலிய இராணுவம் வீச ஆரம்பித்துவிட்டது. காசாவில் நடப்பது இரண்டாம் நந்திக்கடல் களப்போரே தான்.

காசவில் இதுவரை 1,400 மக்கள் இஸ்ரேலிய படைகளால் கொல்லப்பட்டு விட்டார்கள். உலகம் பார்த்துக்கொண்டு இஸ்ரேலுக்கு அனுதாபம் தெரிவித்துக்கொண்டிருக்கிறது. இஸ்ரேலில் ஹமாஸ் செய்தது பயங்கரவாதமே என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அது சுமார் 70 கால இஸ்ரேலிய பயங்கரவாதத்தின் எதிர் வினை.

ஹமாஸின் தாக்குதல்களுக்கு இஸ்ரேல் எப்படி எதிர்வினையாற்றும் என்பது பலருக்கும் தெரியும். ஆனால் மேற்குலகம் இப்படியாக இஸ்ரேலிய சார்பை எடுப்பது ஆச்சரியமாக இருக்கிறது. இனிமேல் உலகத்திற்கு அறம் போதிக்க அவர்களுக்கு தார்மீக உரிமையில்லை.

உலகெங்கும் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக மக்கள் போராட்டங்கள் நிகழ்ந்து வருகின்றன. பல அரசுகள் இவற்றுக்குத் தடைகளை விதிப்பதுமல்லாது ஒடுக்குமுறைகளையும் பிரயோகிக்கின்றன. அமெரிக்காவில் வியட்நாம் போருக்கெதிரான போராட்டங்கள் நிகழ்ந்த அளவுக்கு பாலஸ்தீனிய ஆதரவுப் போராட்டங்கள் வீறுபெற்று வருகின்றன. இதில் கலந்துகொள்பவர்கள் அரபுக்கள் மட்டுமல்ல. முற்போக்குவாதிகளும், நியாய விரும்பிகளும் கலந்துகொள்கிறார்கள். இஸ்ரேலின் தாக்குதல்கள்களைப் பொறுத்தே இவ்வூர்வலங்களின் பருமனும் அதிகரிக்கும். இந்நாடுகளின் தலைவர்கள் தாம் எடுத்துக்கொண்ட நிலைப்பாடுகள் குறித்துக் கவலைப்படும் தருணம் நிச்சயமாக ஏற்படும். நந்திக்கடலின் பின்னரும் நிலைமை இப்படித்தான்.

ஐரோப்பாவுக்குள்அகதிகளை அனுமதித்தமை ஐரோப்பாவுக்குத் தீமையாக முடியும் என அமெரிக்காவின் ‘மூளாதிபதி’ ஹென்றி கிஸிங்கெர் கூறியிருக்கிறார். பிரான்ஸில் நடைபெற்ற பாலஸ்தீனிய ஆதரவுப் போராட்டம் குறித்தே அவரது கருத்து இருக்கிறது. ஜேர்மனியிலிருந்து அகதிகளாகத் துரத்தப்பட்ட ஒரு இனத்தைச் சேர்ந்தவர் இதைச் சொல்வது அறம் பொய்த்துப்போனதற்கான ஆதாரம். பாலஸ்தீனியர்களது செயல்களை நியாயப்படுத்துவதற்கு இதுவே ஆதாரமும் கூட.

பாலஸ்தீனம் எரிந்துகொண்டிருப்பது எரிந்துகொண்ட ஈழத்தை ஞாபகப்படுத்துகிறது. வலிகள் மீளவும் உணரப்படுகின்றன. இந்நிலையில் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பது நியாயமெனவே படுகிறது

News source Marumoli

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!