பிரதம மந்திரி ஜஸ்டின் ட்ரூடோ CERB நீட்டிப்பை அறிவித்தார், யு.எஸ். எல்லை நடவடிக்கைகளின்தகவல்களை வழங்கினார்.
உடனடி வெளியீட்டுக்காக
ஜூன் 16, 2020
கனேடிய சமஷ்டி அரசின் அவசரகால நடவடிக்கைகளில் புதிதாக அறிவிக்கப்பட்டவை
மேலும் அதிக கனேடியர்கள் வேலைக்குத் திரும்பினாலும், கோவிட்-19 காரணமான சவால்களைப் பலர் தற்போதும் எதிர்கொள்கிறார்கள். பாதுகாப்பான முறையில் பொருளாதார செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிக்க நாம் நடவடிக்கை எடுக்கும் வேளையில், கனேடியர்கள் அவர்களது உடல்நலனையும், பொருளாதார நலனையும் பாதுகாப்பதற்குக் கனேடிய அரசு தொடர்ந்து ஆதரவளிக்கும்.
பிரதம மந்திரி ஜஸ்ரின் ட்ரூடோ, கனேடியர்கள் வேலைகளுக்குத் திரும்பும்போது தேவைப்படும் உதவி கிடைப்பதை உறுதிப்படுத்துவதற்காக கனடா அவசர நடவடிக்கைக் கொடுப்பனவை (Canada Emergency Response Benefit (CERB)) மேலும் எட்டு வாரங்களுக்கு அரசு நீடிக்குமென இன்று அறிவித்தார். தகுதியுள்ள பணியாளர்கள் இந்த நீடிப்புடன் மொத்தமாக 24 வாரங்கள் வரை உதவியைப் பெறக் கூடியதாக இருக்கும்.
சவாலான இந்த வேளையில் உணவைப் பெற்றுக் கொள்வதையும், செலவினங்களை மேற்கொள்வதையும் தொடர்ந்து செய்வதற்கு உதவியாக கோவிட்-19 காரணமாகப் பாதிக்கப்பட்ட பணியாளர்களுக்கு உடனடியான ஆதரவை வழங்குவதற்காக CERB யைக் கனேடிய அரசு அறிமுகம் செய்தது. பொருளாதார செயற்பாடுகளை நாம் மீளவும் ஆரம்பித்து, மக்களை மீண்டும் பணியில் இணைத்துக் கொள்ளும் வேளையில், இந்தக் கொடுப்பனவைப் பெற்றுக் கொள்ளும் கனேடியர்கள், அவர்களால் இயலுமாகவும், நியாயமானதாகவும் இருந்தால் வேலைவாய்ப்புக்களை ஆர்வத்துடன் தேடவோ, வேலைக்குத் திரும்புவதற்குத் திட்டமிடவோ வேண்டும்.
Streamed live @ cpac
இதற்காக, கொடுப்பனவைப் பெறும் கனேடியர்கள் வேலைவாய்ப்பைத் தேடுவதற்கும், வேலை தேடுவதற்கான உதவிகளைக் கொண்டுள்ள கனடாவின் தேசிய வேலைவாய்ப்புச் சேவையான Job Bank கைப் பயன்படுத்துவதற்கும் ஊக்கமளிக்கும் வகையில் CERB இற்கான சான்றுப்படுத்தலில் அரசு மாற்றங்களைச் செய்யவுள்ளது. எதிர்வரும் சில வார காலப்பகுதியில் சர்வதேசத்தில் உள்ள சிறந்த நடைமுறைகளையும், பொருளாதாரத்தையும், வைரஸின் வளர்ச்சியையும் அரசு கண்காணித்துத், தேவைப்படும் உதவியை அதிகமானவர்கள் பெற்றுக் கொள்வதற்கு உதவித் திட்டத்தில் மாற்றங்கள் எவையாவது தேவைப்பட்டால் இந்த மாற்றங்களை அரசு செய்யும்.
CERB, கோவிட்-19 காரணமாக வேலை செய்வதை நிறுத்தியுள்ள, அல்லது பணிபுரியும் நேரம் குறைக்கப்பட்டுள்ள தகுதி பெறும் பணியாளர்களுக்கு நான்கு வார காலப் பகுதிக்கு வரி அறவிடத்தக்க கொடுப்பனவாக 2,000 டொலரை வழங்கும் திட்டமாகும்.
பின்வரும் நிபந்தனைகளை நிறைவு செய்வோருக்கு CERB கிடைக்கும்:
• கனடாவில் வசிக்கும், ஆகக் குறைந்தது 15 வயதானவர்கள்
• கோவிட்-19 தொடர்புடைய காரணங்களால் வேலைசெய்வதை நிறுத்தியோர், அல்லது வேலைகாப்புறுதி அல்லது நோய்காலக் கொடுப்பனவு ஆகியவற்றுக்குத் தகுதிபெற்றோர், அல்லது 2019 டிசம்பர் 29 இற்கும், 2020 ஒக்ரோபர் 3 இற்கும் இடைப்பட்ட காலத்தில் அவர்களது வேலைக்காப்புறுதிக் கொடுப்பனவுகள் முடிவடைந்தோர்
• வேலைவாய்ப்பு அல்லது சுய தொழில் மூலம் 2019 ஆம் ஆண்டில், அல்லது விண்ணப்பத் திகதிக்கு முந்தைய 12 மாத காலப்பகுதியில் குறைந்தது 5,000 டொலரை வருமானமாகப் பெற்றுக் கொண்டோர்
• CERB கொடுப்பனவுக்கான தனித்தனியான காலப் பகுதிகளில் வேலைவாய்ப்பு, அல்லது சுயதொழில் என்பவற்றின் மூலம் 1,000 டொலருக்கு மேற்பட்ட வருமானத்தைப் பெறாதோர்
• சுய விருப்பத்தின் பேரில் வேலையைத் துறக்காதோர்
மே 15 ஆந் திகதி அறிவிக்கப்பட்ட கனடா அவசர சம்பள மானியத்தை (Canada Emergency Wage Subsidy (CEWS)) நீடிக்கும் திட்டம் போன்ற பல நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக இன்றைய அறிவிப்பு அமைகிறது. கனடா அவசர சம்பள மானியம் 2020 ஓகஸ்ட் 29 வரை நீடிக்கப்படுகிறது. வேலைவாய்ப்புக்களைப் பாதுகாப்பதற்கும், வணிக நிறுவனங்கள் பணியாளர்களைத் தொடர்ந்து வைத்திருப்பதற்கும், பணிக்குறைப்புச் செய்தவர்களை மீண்டும் வேலையில் இணைத்துக் கொள்வதற்கும் CEWS உதவியளிக்கும்.
பொருளாதார செயற்பாடுகள் பகுதிகளாக, பாதுகாப்பான முறையில் மீண்டும் இயங்க ஆரம்பிக்கும் நிலையிலும், பல கனேடியர்கள் கோவிட்-19 னின் விளைவுகளைத் தற்போதும் அனுபவிக்கிறார்கள். இந்த நெருக்கடி வேளையில் கனேடியர்களுக்கு விரைவான உதவியை வழங்கும் திட்டத்தின் பகுதிகளாக CERB, CEWS ஆகியன நடைமுறைப்படுத்தப்பட்டன. பொருளாதாரத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் உள்ள கனேடியர்கள், தொடர்ச்சியாகவும், பாதுகாப்பாகவும் வேலைக்குத் திரும்பும் காலம் வரை உதவியளிப்பதற்கு அரசு உறுதிபூண்டுள்ளது.