NationNews

கனடிய பிரதம மந்திரி ஜஸ்ரின் ட்ரூடோ- தைப்பொங்கலை முன்னிட்டுப் அறிக்கையை இன்று வெளியிட்டார்.

அறிக்கை

உடனடி வெளியீட்டுக்காக

தைப்பொங்கல் குறித்த பிரதம மந்திரியின் அறிக்கை

ஜனவரி 14, 2021     ஒட்டாவா, ஒன்றாரியோ    பிரதம மந்திரியின் அலுவலகம்.

பிரதம மந்திரி ஜஸ்ரின் ட்ரூடோ, தைப்பொங்கலை முன்னிட்டுப் பின்வரும் அறிக்கையை இன்று வெளியிட்டார்:

“கனடாவிலும், உலகம் முழுவதிலும் உள்ள தமிழ்ச் சமூகத்தினர் இந்த வாரம் தைப்பொங்கலைக் கொண்டாடுகிறார்கள்.

“வழக்கமாக இந்த நான்கு நாள் பண்டிகையின்போது குடும்பத்தினரும், நண்பர்களும் ஒன்றுசேர்ந்து அமோகமான விளைச்சலுக்கு நன்றி தெரிவிப்பதுடன், இனிப்பான பொங்கலையும் பகிர்ந்துகொள்வார்கள். கோவிட்-19 இன் பரவலைத் தடுப்பதற்காக நாம் பொதுச் சுகாதார அறிவுறுத்தல்களைப் பின்பற்றுவதால் இவ்வாண்டில் நிலைமை மாறுபட்டதாக இருக்குமென்றாலும், இந்தப் பண்டிகையின் முக்கிய விடயங்களான சமாதானம், சமூகம் ஆகியவற்றை முதன்மைப்படுத்துவதற்கு மக்கள் புதிய வழிகளைக் கண்டுபிடிப்பார்களென்பது எனக்குத் தெரியும்.

“ஜனவரி மாதம் கனடாவில் தமிழ் மரபுரிமைத் திங்களாகவும் விளங்குகிறது. மேம்பட்டதும், அதிகம் நியாயமானதும், அனைவரையும் அதிக அளவில் உள்வாங்கியதுமான நாட்டை உருவாக்குவதில் தமிழ்க் கனேடியர்களின் பங்களிப்பை இந்த மாதத்தில் நாம் நினைவுகூருகிறோம். கனடாவிலும், உலகம் முழுவதிலும் உள்ள உயிர்த்துடிப்புள்ள தமிழ்ச் சமூகத்தின் வரலாறு, மீண்டுவரும் வல்லமை, பலம் என்பன குறித்து அறிந்து கொள்ளுமாறு அனைத்துக் கனேடியர்களையும் நான் கேட்டுக் கொள்கிறேன். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைந்திருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அழிக்கப்பட்டமைக்குக் கண்டனம் தெரிவித்தும், அதை மீண்டும் அமைக்குமாறு கோரியும் கனடா முழுவதும் உள்ள தமிழ்க் கனேடியர்கள் அண்மையில் ஒன்று திரண்டதை நாம் கண்டோம். மீளிணக்கத்திற்கு நினைவுகூருதல் முக்கியமானதென்பதை இது எம் அனைவருக்கும் நினைவுபடுத்துகிறது.

“கனடாவிலும், உலகெங்கிலும், தைப்பொங்கலைக் கொண்டாடும் அனைவருக்கும் எமது குடும்பம் சார்பாக, சோஃபியும் நானும் அமைதிக்கும், உடல்நலத்துக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

“இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துகள்.”

Featured image Photo ஜனவரி 2019 தைப்பொங்கல் கனடிய பிரதமர், MP ஹரி ஆனந்தசங்கரி and மாநகரபிதா (மேயர்) ரோறி

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!