NationNews

பிரித்தானியாவில் வெளிநாட்டவரை வெளியேற்றும்படி ஆர்ப்பாட்டம்

Getting your Trinity Audio player ready...

பிரித்தானியாவில் வெளிநாட்டவரை வெளியேற்றும்படி ஆர்ப்பாட்டம் – இந்திய தூதரகம் இந்தியர்களை கவனமாக இருக்கும் படி வேண்டுகோள்

சவுத்போர்ட்டில் மூன்று குழந்தைகளை கத்தியால் குத்திக் கொன்றவர் ஒரு இஸ்லாமிய குடிவரவாளர் என்ற வதந்தியுடன் ஆரம்பித்தது இந்த நெருப்பு. உண்மையில், இந்த நபர் ருவாண்டா பூர்வீக பெற்றோர்களுக்கு பிரித்தானியாவில் பிறந்த பிரித்தானியர். ஆனால் அவரை ஒரு இஸ்லாமியராகக் கூறியதால் வெள்ளையரல்லாத அனைவரும் பெரும் அசமந்தத்தில் உள்ளனர்.

பிரித்தானிய காலனித்துவ காலத்திலிருந்து இந்திய துணைக்கண்டம், ஆபிரிக்கா, கரீபியன் தீவுகள், ஆசியா போன்ற பல பகுதிகளிலிருந்து குடிவரவாளர்கள் வெள்ளையரால் விரும்பப்படாத வேலைகளுக்காக கொண்டுவந்து குவிக்கப்பட்டனர். இயந்திரமயமாக்கலினால் ஆலைகளும் உற்பத்திகளும் அதிகரிக்க, புதியவகை அடிமைகள் லிவர்பூல் போன்ற வறுமையுள்ள பகுதிகளில் குடியேற்றப்பட்டனர். இப்பிரதேசத்தில் வாழும் வெள்ளை இனத்தவரும் பொருளாதார ரீதியில் அடிமட்டத்தில் இருந்ததால், இவ்விரு சமூகங்களும் ஒதுக்கப்பட்டு வாழ்ந்தனர்.

ஐரோப்பிய ஒன்றியம் என்ற பெயரில் எல்லைகள் தகர்க்கப்பட்ட பின்னர் தெற்கு ஐரோப்பாவைச் சேர்ந்த பல வறுமையுள்ள வெள்ளையர்கள் பிரித்தானியாவுக்கு குடிபெயர்ந்தனர். இவர்களின் வரவால் பிரித்தானியாவில் பாரிய கலாச்சார மாற்றம் ஏற்பட்டதுடன் குற்றச்செயல்களும் அதிகரித்தன. இதே வேளையில், ஈராக், ஆப்கானிஸ்தான், சிரியா, அல்பேனியா, லிபியா போன்ற நாடுகளிலிருந்து தஞ்சம் புகுந்த பலரும் பிரித்தானியாவில் இறுதித் தங்குமடமாக இருந்தனர். இதனால் BREXIT இயக்கம் பிறந்தது மற்றும் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியது. ஆனாலும், குடிவரவாளர்களின் வருகை குறையவில்லை. பிரான்ஸ் எல்லையில் குவியத் தொடங்கிய இவர்களில் பலர் பிரித்தானியாவுக்கு திருட்டு வழிகளில் நுழைந்தனர்.

மூன்று குழந்தைகளை கொன்றவர் சவுத்போர்ட்டில் வாழும் ருவாண்டா அகதிகளுக்குப் பிறந்தவர். அவர் இஸ்லாமியர் அல்ல என்பதையோ அல்லது அவருக்கு மனநோய் இருந்தது என்பதையோ பெருமூடகங்கள் மறைத்துவிட்டன. பிரித்தானியாவின் அதி தீவிர வலதுசாரிகள் இக்குற்றவாளியை ஒரு ‘இஸ்லாமிய குடிவரவாளர்’ என்று அடையாளப்படுத்தி சமூக ஊடகங்கள் மூலம் பெருக்கவிட்டனர். அதற்கு தனவந்தர் இலான் மஸ்க் எண்ணியை ஊற்றி பெருநெருப்பாக்கினார்.

இதில் இன்னுமொரு விஷயம், ரிம் ரொபின்சன் என்ற பெயருடைய தீவிர வலதுசாரி தான் இப்பிரச்சினையை ஒரு ‘இஸ்லாமிய’ பிரச்சினையாக ஆக்கியார் எனவும் அவர் உண்மையில் பிரித்தானியர் அல்லர்; ஒரு மொஸாட் உளவாளி எனவும் கூறப்பட்டது. சமீப காலங்களில், பாலஸ்தீன விடயங்களில் உலகின் பெருநகரங்களில் இஸ்ரேல் எதிர்ப்புக் கூட்டங்களில் முஸ்லிம்களுடன் சகல இன மக்களும் கைகோர்த்திருந்தனர் என்பதால், இவற்றைக் குழப்புவதற்காக ‘றொபின்சன்’ இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

ஐரோப்பிய ஒன்றியம் உருவாக்கம், மத்திய கிழக்கு போர், சோவியத் யூனியன் உடைவு, சிரியப் போர் போன்றவை காரணமாக பிரித்தானியா மட்டுமல்ல, மற்ற மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் கலாச்சார சீரழிவு ஆரம்பித்தது. ஹிட்லரின் தோல்வியாலும் அவமானத்தாலும் உறங்கு நிலையில் வைக்கப்பட்டிருந்த தீவிர வலதுசாரியம் மீண்டும் எழுவதற்கான களத்தை அமைத்துக் கொடுத்துவிட்டது. இத்தாலி, பிரான்ஸ், போலந்து, ஹங்கேரி போன்ற நாடுகளில் வலதுசாரிகள் கணிசமான ஆதரவைப் பெறுவதற்கும் இதுவே காரணம். பிரித்தானியாவில் வலதுசாரிகளின் எழுச்சி காரணமாக கன்சர்வேட்டிவ் கட்சி மட்டுமல்ல, ஏனைய கட்சிகளின் வாக்குகளையும் தீவிர வலதுசாரிக் கட்சி அபகரித்துள்ளது.

அமெரிக்க அரசியலமைப்பின் முதலாம் திருத்தமான ‘பேச்சுச் சுதந்திரத்தை’ பிரித்தானியா மதிக்கவேண்டுமென இலான் மஸ்க் தனது ஊடகப் பெருவெளியில் அலறிக்கொண்டிருக்கிறார். அவரது வாயை அடக்க எவராலும் முடியாது என்பதுவே அச்சம் தருகிறது.

Photo: X

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!