NationNews

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு 10M SKR பெறுமதியான மருந்துகள் கனடியத் தமிழர்களால் நன்கொடை

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு பத்து மில்லியன் ரூபாய்கள் பெறுமதியான மருந்துகள் கனடியத் தமிழர்களால் நன்கொடை !

கனடியத் தமிழர்கள் பத்து மில்லியன் ரூபாய்கள் பெறுமதியான உயிர் காக்கும் மருந்துப் பொருட்களை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளனர். கடந்த ஆண்டு கனடியத் தமிழர் பேரவையினால் (Canadian Tamil Congress – CTC) ஒழுங்கு செய்யப்பட்ட நிதிசேர் நடையூடாக திரட்டப்பட்ட நிதியின் இரண்டாவது நன்கொடை இதுவாகும், கடந்த ஆண்டு முதலாவது நன்கொடைத் தொகுதி தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையிடம் கையளிக்கப்பட்டது. கனடியத் தமிழர் பேரவை தமது வருடாந்த நிதிசேர் நடையூடாக வருடந்தோறும் பல்வேறு தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடைகளை வழங்கி வருகின்றது.

இலங்கையின் மோசமான பொருளாதாரச் சரிவால் உயிர் காக்கும் மருந்துகளின் பற்றாக்குறையை நாட்டில் உள்ள அனைத்து மருத்துவமனைகளும் அதிகளவில் எதிர்கொண்டு வருகின்றன. இந்தச் சூழலைக் கருத்தில் கொண்டு மனிதநேய அடிப்படையில் 2022 ஆம் ஆண்டு கனடியத் தமிழர் பேரவையினரால் பதினான்காவது வருடாந்த தமிழ்க் கனடிய நிதிசேர் நடைப ஏற்பாடு செய்யப்பட்டு, அதில் திரட்டப்படும் நன்கொடை மூலம் இலங்கையில் வடக்கு, கிழக்கு, மத்தி மற்றும் தெற்கு ஆகிய நான்கு பிராந்தியங்களில் உள்ள ஆறு மருத்துவமனைகளுக்கு உயிர் காக்கும் மருந்துப் பொருட்கள் வழங்குவதெனத் திட்டமிடப்பட்டது.

இந்த நன்கொடையின் இரண்டாம் கட்டமாக கனடியத் தமிழர் பேரவையினால் ஒழுங்கமைக்கப்பட்ட இரண்டாம் தொகுதி மருந்துப் பொருட்கள் இன்று ஏப்ரல் 12 புதன்கிழமை 2:30 மணிக்கு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கையளிக்கப்பட்டது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இயக்குனர் மருத்துவர் கலாரஞ்சனி கணேசலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த மருந்து பொறுப்பேற்றல் நிகழ்வில் கனடியத் தமிழர் பேரவையின் பிரதிநிதி மற்றும் மனிதாபிமான திட்டங்களின் இணைப்பாளர் இதுரைரத்தினம் துசியந்தன், புற்றுநோய் நிபுணர் மருத்துவர் A இக்பால், நோயியல் நிபுணர் மருத்துவர் அகிலன் சின்னத்துரை மற்றும் பல மருத்துவ நிபுணர்கள், மருத்துவமனை நிர்வாக பொறுப்பதிகாரிகள், வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் பணியாளர்கள் என பலரும் கலந்து கொண்டு நிகழ்வினைச் சிறப்பித்தார்கள்.

எதிர்வரும் மாதங்களில் ஏனைய மருத்துவமனைகளுக்குமான நன்கெடைகள் திட்டமிட்டபடி கனடிய தமிழர் பேரவையினால் ஒழுங்கமைக்கப்பட்டு கையளிக்கப்படும்.

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!