NationNews

மாலைதீவு தேர்தல் elections: இந்தியாவின் அயலுரசல் கொள்கையின் ஆரம்பம்

Getting your Trinity Audio player ready...

நடந்து முடிந்த மாலைதீவு தேர்தலில் சீன ஆதரவுக் கட்சியான மக்கள் தேசிய காங்கிரஸ் கட்சி அமோக வெற்றியீட்டியிருக்கிறது. இதுவரை காலமும் இந்தியாவின் அயலுறவுக் குழந்தையாக இருந்த இத் தீவுக்கூட்டம் பகிரங்க இந்திய எதிர்ப்புவாதியான ஜனாதிபதி மொஹாமெட் முயிசுவின் வழிநடத்தலில் சீனாவின் கரங்களைப் பிடித்துக்கொண்டுவிட்டது. சிறிய படையாயினும் இந்திய இராணுவத்தை வெளியேறும்படி காலக்கெடு விதித்து அதற்கு மக்களிடம் ஆதரவு கேட்டு முயிசு தேர்தலில் களமிறங்கினார். 93 ஆசனங்களில் 70 அவரது கட்சிக்குக் கிடைத்திருக்கிறது. 65 ஆசனங்களை வைத்திருந்த இந்திய ஆதரவுக் கட்சிக்கு 15 ஆசனங்கள் மட்டுமே கிடைத்திருக்கின்றன. இந்தியா வேண்டாம் என மக்கள் தீர்க்கமாக முடிவெடுத்துவிட்டார்கள்.

மாலைதீவுக்கும் நமக்கும் என்ன சம்பந்தம் எனச் சிலர் இதை ஒரு செய்தியாகப் பார்த்துவிட்டு கடந்து போகலாம். இல்லை. இந்திய கொள்கை வகுப்பாளரின், குறிப்பாக பா.ஜ.க. மோடர் கூட்டத்தின், இமாலய தவறின் முதலாவது பெறுபேறுதான் மாலைதீவு. அடுத்தது இலங்கை, பூட்டான், நேபாளம் யார் கண்டது?

மாலைதீவு மக்கள் இப்படியான முடிவை எடுத்ததற்கான காரணத்தை அறிவதற்கு நாம் முனைவர்களாக இருக்கவேண்டியதில்லை. டெல்ஹியின் கழிவறைகளிலும்கூட ராம நாம ஜெபம் ஒலிக்க ஆரம்பித்தது முதல் அதன் அயலுறவுக் கொள்கை சரியவாரம்பித்துவிட்டது. காவிகளின் காலடிகளால் பாரதம் பரிசுத்தமாகிவிடுமென்ற நினைப்பில் மோடி தேர்தலுக்கு முன்னர் குடியுரிமைத் திருத்தச் சட்டம், அயோத்தி ராமர் கோவில் எனப் பல வாணவேடிக்கைகளை நிகழ்த்தி மோடர் கூட்டத்தை உசுப்பேத்தியதன் நேரடி விளைவுகளிலொன்றுதான் மாலைதீவு கைமாற்றம். இனி அது சீனரின் விளையாட்டுத் திடல். நீண்ட கால நிலைமைகள் வேறாக இருப்பினும் இந்தியாவைப் பொறுத்தவரை அது இன்னுமொரு சிக்கிம். குஜராத்திலுஞ்சரி இப்போது இந்தியாவிலுஞ்சரி மோடி கூட்டம் இஸ்லாமிய வெறுப்பரசியல் மூலமே பதவிக்கு வந்தது. இப்போக்கு நிலைக்குமானால் வெறுப்பரசியலை முன்னெடுக்கும் இலங்கை, பாகிஸ்தான் போன்ற நாடுகளைப் போல IMF இடம் கிண்ணத்தைக் கிலுக்கவேண்டியும் ஏற்படலாம்.

மாலைதீவுக்கு ஜனாதிபதி மொஹாமெட் மியுசு இஸ்லாமிய அடையாளத்தைக் கொடுத்து அங்கும் வெறுப்பரசியலையே வளர்க்க முனைகிறார். அவரின் முயற்சிக்கு மோடியின் காவிகள் வலுச்சேர்த்திருக்கின்றனர். இலங்கையில் ரணில் வெறுப்பரசியலை முன்னெடுக்கவில்லையாயினும் அதை அழித்தொழிக்க அவரால் முடியவில்லை. அதற்கான பலம் அவரிடமில்லை. அவரது நாற்காலியைப் பறிக்கப் போட்டியிடும் அனுரகுமார திசநாயக்கா, சஜித் பிரேமதாச போன்றவர்கள் பகிரங்கமாக இதுவரை வெறுப்பரசியலை முன்னெடுக்கவில்லை. ஆனால் இருவரும் திறந்த பொருளாதாரக் கொள்கையின் குழந்தைகள் என்ற வகையில் மாறி வரும் உலகை அனுசரித்து வெறுப்பரசியலைத் தவிர்ப்பார்களென நம்புவோம்.

இலங்கையின் இந்திய எதிர்ப்புக் கொள்கை 2,000 வருடங்களுக்கு மேலான ஒன்று. இங்கும் காவிகளின் மடிகளில் தான் அது தவழ்கிறது. ஜே.வி.பி. உட்பட எந்தவொரு தென்னிலங்கைக் கட்சியும் இதுவரை இந்திய ஆதரவுக் கட்சியாகத் தன்னை இனம் காட்டியதில்லை. சேர, பாண்டிய கூலிப் படைகளை அவ்வப்போது சோழருக்கு எதிராகப் பாவித்து தம் நலம் காத்த அந்தப் பரம்பரையிடமிருந்து 5 பில்லியன் கடனால் விசுவாசத்தைப் பெற்றுவிட முடியாது என்பது இந்தியாவுக்கு ஒருபோதும் விளங்கப் போவதில்லை. அரகாலயா ஒரு அமெரிக்க இயந்திரம் என்பதும் அது எப்போ வேலை செய்யும் எப்போ மக்கர் பண்ணுமென்பதும் அமெரிக்கர்களுக்கு மட்டுமே தெரிந்த சூத்திரம். அந்த இயந்திரத்தின் ஒரு உதிரிப் பாகமாக வேண்டுமானால் இந்தியா இருந்திருக்கலாம் அதற்காக இயந்திரமே என்னுடையது என இந்தியா படம் காட்ட முடியாது. இலங்கையை சீனா மாலைதீவாக மாற்றிவிடக்கூடாது என அமெரிக்கா பகீரதப் பிரயத்தனம் எடுக்கலாம். அதற்காக இந்தியாவின் பணத்தை அது அள்ளி இறைக்கலாம். ஆனால் அது ஒருபோதும் இந்தியாவுக்கு இலங்கையின் விசுவாசத்தைப் பெற்றுத் தந்துவிடாது.

இலங்கையின் கள நிலவரம் இப்போது ஜே.வி.பி. பக்கம் சார்ந்திருக்கிறது என்கிறார்கள். சமூக வலைத்தளங்களின் வரவு இளைய தலைமுறையினரின் ஆதரவை இக்கட்சிக்குப் பெற்றுக்கொடுத்திருப்பினும் வாக்களிக்கும் பெரும்பாலான கிராமிய மக்கள் இன்னும் பெளத்த சங்கங்களின் ஆதிக்கத்திலேயே இருப்பதால் அவர்களைத் திருப்திப் படுத்தாமல் ஜே.வி.பி. / என்.பி.பி. யினால் ஆட்சியைப் பிடிக்க முடியாது. எனவே தேர்தல் காலத்தில் மக்களின் கைகளில் தாமரை மொட்டுக்களைத் திணித்து காவிகள் தீர்மானிக்கும் வழியில் தான் இறுதி முடிவு எட்டப்படும். அதுவும் வெறுப்பரசியலின் வடிவம்தான்.

இந்தியாவைச் சுற்றியுள்ள எந்தவொரு நாடும் இந்தியாவுடன் விசுவாசமான நட்பைப் பேணவில்லை. 200 மில்லியன் இஸ்லாமியர்கள் இந்தியாவில் இந்தியர்களாகவே வாழ்கிறார்கள். தமிழ்நாட்டில் வாழும் இஸ்லாமியர்கள் தமிழர்களாகவே வாழ்கிறார்கள். மோடி தலைமையிலான மோடர் கூடம் மேற்கொண்டுவரும் வெறுப்பரசியல் இவர்களை இந்திய வெறுப்பாளர்களாக மாற்றிவிடக்கூடிய ஆபத்து உண்டு. சீன ஆதரவில் மாலைதீவு எப்படி உருமாறுமோ தெரியாது ஆனால் அது இலங்கையிலும் இந்தியாவிலும் வெறுப்பரசியலுக்கு எண்ணை வார்க்குமென்பதில் சந்தேகமில்லை.

தென்னுலகின் திடீர் வளர்ச்சி இந்தியா, தென்னாபிரிக்கா போன்ற நாடுகளுக்கு புத்துணர்ச்சியைக் கொடுக்கிறது என்பது உண்மை. காலனித்துவ காலத்திற்குப் பிறகு இந்திய உபகண்டம், ஆபிரிக்க கண்டம், ஆசிய கண்டங்கள் முதல் முறையாக பொருளாதார விடுதலை பெறுவது தெரிகிறது. ஆனால் இறக்குமதியான கல்வியும் தொழில்நுட்பமும் தான் இதைச் சாத்தியமாக்கியவை என்பதையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். எமது வளங்களை அவர்களது இயந்திரங்கள் ஏற்றுமதிப் பண்டங்களாக்குவது மட்டும் போதாது அவற்றை நுகரும் வளம் இன்னும் எங்களிடம் போதாது எனபதையும் மனதில் வைத்தே அரசியல் முன்னெடுக்கப்பட வேண்டும். அந்த வகையில் சீன அரசியலில் ஒரு முதிர்ச்சி தெரிகிறது. மோடியின் இந்தியாவில் அது இல்லை. வெறுப்பரசியலில் மட்டுமே அது குறியாக இருப்பது துர்ப்பாக்கியம். மாலைதீவு இதற்கு வெளிச்சம் போட்டு

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!