ArticlesNationNews

தமிழர் இனப்படுகொலை நினைவு நாளை முன்னிட்டு ஸ்காபறோ ரூஜ் பார்க் தொகுதி M.P ஹரி ஆனந்தசங்கரி அறிக்கை

Statement by Gary Anandasangaree, Member of Parliament for Scarborough-Rouge Park on Tamil Genocide Remembrance Day, May 18, 2020

உலகம் மௌனமாகப் பார்த்துக்கொண்டிருந்தபோது, 2009 ஆம் ஆண்டு இலங்கை ஆயுதப் படையினர் தமிழர்கள் மீது புரிந்த படுகொலையில் பொதுமக்கள் 70,000 இற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டு 300,000 இற்கும் அதிகமானவர்கள் இடம்பெயர்க்கப்பட்ட இந்த நாளை உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் தமிழர் இனப்படுகொலை நினைவு நாளாக இன்று கடைப்பிடிக்கிறார்கள். மரணமானவர்களையும், காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளையும் வாழ்க்கைத் துணைகளையும், நீதியற்ற முறையில் சிறை வைக்கப்பட்டவர்களையும் இன்று மட்டுமின்றி ஒவ்வொரு நாளும் நாம் நினைவுகூருகிறோம். பதினொரு வருடங்களின் பின்னரும் பல கேள்விகளுக்குப் பதில் கிடைக்கவில்லை. உண்மை, நீதி, பொறுப்புக் கூறல் ஆகியவற்றுக்கான தேடல் இன்றும் தொடர்கிறது.

கோவிட்-19 உலகைத் தாக்கி எமது நாளாந்த வாழ்க்கையில் தடங்கலை ஏற்படுத்துவதற்குச் சற்று முன்பாக இலங்கை சர்வாதிகார ஆட்சிக்குத் திரும்பிக் கொண்டிருந்தது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் (UNHRC), மனித உரிமைப் பேரவையின் 30/1இ 40/1 ஆகிய தீர்மானங்களுக்கான ஆதரவை இலங்கை விலக்கிக் கொண்டதன் மூலம், உலக ஒழுங்கினுள் இடம்பெற்ற ஒரேயொரு நடைமுறையானதும், ஆக்கபூர்வமானதுமான செயற்பாட்டைத் தடம்புரளச் செய்தது. ராஜபக்ச சகோதரர்கள் 2019 ஒக்ரோபரில் ஆட்சியைப் பொறுப்பேற்று, இந்த வசந்தகாலத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் மிகப் பெரும் பெரும்பான்மையைப் பெறவிருந்தார்கள். குடிசார் சமூக செயற்பாடுகளுக்கான சந்தர்ப்பம் சுருங்கி, கொடூரமான பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதிகள் தொடர்ந்து சிறைகளில் வாடி, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நம்பிக்கையிழந்த நிலையில் அவர்களது அன்புக்குரியவர்களைத் தேடி, இலங்கைத் தீவிலும் வெளியேயும் உள்ள தமிழர்கள் நம்பிக்கை இழந்துகொண்டிருந்ததை அனைத்துத் தகவல்களும் காட்டுகின்றன.

இந்த நாளை நாம் வழமையாக மக்களின் ஒன்றுகூடல்கள், கூட்டு நடவடிக்கை என்பவற்றின் மூலம் கடைப்பிடித்தாலும், கோவிட்-19 இன் அச்சுறுத்தல் காரணமாக இவ்வாண்டில் எமது நினைவேந்தல் அதிக துயரமானதாகவும், சுயமீளாய்வானதாகவும் அமைந்திருக்கும். 26 வருட ஆயுதப் போரினூடு வாழ்ந்த தமிழ்க் கனேடியர்களுக்குக் கோவிட்-19 காரணமான கடந்த ஒன்பது வார கால தனிமைப்படுத்தல் நாம் கடக்கவேண்டிய இன்னல்களை நினைவுபடுத்துகிறது. கடந்த தசாப்தங்களில் நாம் கொண்டிருந்த மீண்டெழுந்தன்மை, கோவிட் இன் பின்னரான சகாப்தத்தில் எமது சமூகத்தைக் கட்டியெழுப்ப எம்மைத் தயார்ப்படுத்தியுள்ளது.

போரின் இறுதிக் கட்டத்தில் புரியப்பட்ட போர்க் குற்றங்கள், மனித இனத்துக்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலை என்பவற்றுக்குப் பொறுப்பானவர்களைப் பொறுப்புக் கூறச் செய்வதற்கு உலகெங்கும் உள்ள தமிழர்கள் தொடர்ந்து உறுதிபூணும் சகாப்தமாக இந்தப் புதிய சகாப்தம் அமையவேண்டும். சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், சர்வதேச நீதிமன்றம் போன்ற தற்போதுள்ள /ர்வதேச சட்ட வழிமுறைகளின் ஊடாகவும், தனிப்பட்ட நாடுகள் சர்வதேச நியாயாதிக்கத்தை நிலைநாட்டுவ/ன் மூலமாகவும் பொறுப்புக்கூறல் உறுதி செய்யப்படலாம். அதேவேளையில், உலகெங்கும் உள்ள புலம்பெயர் தமிழர் சமூகம், மேலதிக நடவடிக்கைகளை எடுப்பதற்கு அவரவர் அரசுகளுடன் செயலாற்றவேண்டும். ஷவேந்திர சில்வாவுக்குப் பயணத் தடை விதித்த விடயத்தில் அமெரிக்காவில் உள்ள சமூகம் ஆற்றிய பணி இந்த மூலோபாயத்தின் சிறந்த உதாரணமாகக் குறிப்பிடப்படலாம். இலங்கைத் தீவில் பொறுப்புக் கூறல், நீதி, மனித உரிமைகள் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கு கனேடிய அரசுடனும், தமிழ்க் கனேடிய சமூகத்துடனும், மனித உரிமைச் செயற்பாட்டாளர்களுடனும் நான் தொடர்ந்து பணியாற்றுவேன்.

இறுதியாக, மருத்துவமனைகளிலும், உணவுச்சாலைகளிலும், கோப்பி விற்பனை நிலையங்களிலும், விநியோகப் பணி மூலமும், பலசரக்கு வணிக நிலையங்களிலும் துணிவான செயற்பாட்டாலும், கடின உழைப்பாலும், அர்ப்பணிப்பாலும் எம்மைப் பாதுகாக்கும் தமிழ்க் கனேடியர்கள் உள்ளடங்கலாக அனைத்து முன் வரிசைப் பணியாளர்களுக்கும் இந்த நேரத்தில் நன்றியைத் தெரிவிக்கிறேன். பொறுப்புக் கூறல், நீதி, சமாதானம் ஆகியவற்றை நோக்கிய பாதையில் நாம் கூட்டாகத் தொடர்ந்து செல்வோம். இலங்கை மக்கள் இழந்தவற்றையும், தொடர்ந்து இழக்கப்படுபவற்றையும் மீளக் கட்டியெழுப்ப ஆரம்பிப்பதற்கு இது இன்றியமையாத ஒரு நடவடிக்கையாகும்.

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!