NationNewsTechnology

ரொறோண்டோவில் வாகனத் திருட்டு: உங்கள் வாகனங்களைப் பாதுகாப்பது எப்படி?

$3M worth of stolen vehicles in GTA theft ring investigation

கடந்த சில வருடங்களாக ரொரோண்டோ பெரும்பாகத்தில் வாகனத் திருட்டுகள் அதிகரித்து வருகின்றன. திருடப்படும் வாகனங்களாக அறியப்பட்ட பெரும்பாலான வாகனங்கள் உயர் ரக சொகுசு SUV, Truck வகைகளாக இருக்கின்றன. கோவிட் வருகையின் தாக்கத்தால் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலையைத் தொடர்ந்து வாகனங்களின் தயாரிப்புக்கான கணனி சிப்ஸ் (computer chips) பற்றாக்குறை காரணமாக புதிய வாகனங்களைத் தருவிப்பதிலும் பழைய வாகனங்களைத் திருத்துவதிலும் ஒன்ராறியோ மாகாண வாகன விற்பனையாளர்கள் நீண்டகால தாமதத்தை எதிர்கொள்கிறார்கள். சிப்ஸ் பற்றாக்குறை காரணமாக 2021 இற்குப் பின்னர் தயாரிக்கப்பட்ட பல வாகனங்களில் பழைய வாகனங்களிலுள்ளதைப் போல சொகுசு வசதிகள் செய்யப்படவில்லை. இதன் காரணமாக 2016 முதல் 2021 வருட காலத்தில் தயாரிக்கப்பட்ட வாகனங்கள் திருடர்களிடையே மிகப் பிரபலம் பெற்று வருகின்றன.

மே 2023 இல் ஒன்ராறியோ பீல் பிரதேசத்தில் பொலிசார் மேற்கொண்ட தேடுதல் வேட்டையின்போது $2.8 மில்லியன் பெறுமதியான 31 வாகனங்கள், $30,000 காசு, ஸ்கானர் கருவிகள், திறப்புகளை புரோகிராம் செய்யும் கருவிகள், 100 க்கும் மேற்பட்ட மாஸ்டர் திறப்புகள் ஆகியன மீட்கப்பட்டுள்ளன. இது சம்பந்தமாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

2022 இல் ஒன்ராறியோ மாகாணத்தில் அதிகம் திருடப்பட்ட வாகனங்கள்

எக்குயிட்டே (Équité) என்ற நிறுவனத்தின் ஆய்வின்படி 2022 இல் ஒன்ராறியோவில் அதிகம் திருடப்பட்டவையாகப் பின்வரும் வாகனங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

 1. 2016-2021 Lexus RX Series
 2. 2016-2021 Honda CR-V
 3. 2015-2020 Ford F-150 Series
 4. 2013-2019 Toyota Highlander
 5. 2016-2021 Honda Civic
 6. 2015-2021 Land Rover Range Rover Sport
 7. 2018-2021 Honda Accord
 8. 1999-2006 Chevrolet/GMC Silverado/Sierra 1500 Series
 9. 2009-2018 RAM 1500 Series
 10. 2016-2021 Toyota Tacoma

திருடர்களின் வித்தைகள்

திருடர்களிடமிருந்து மீட்கப்பட்ட ஸ்கானர் கருவிகள் (Sorce: Peel Police)

பெரும்பாலான வாகனங்களின் திறப்புகள் எலெக்ட்றோனிக் வகைகளாலானவை. திறப்புக் கோர்வையில் கையடக்கமாகக் கொழுவிக்கொள்ளும் ஒரு சிறு கருவியிலிருக்கும் (Fob) பொத்தான்களை அழுத்தும்போது புறப்படும் மின்காந்த அலைகள் (transmitters) வாகனத்திலுள்ள இன்னுமொரு கருவியினால் (receivers) பெறப்பட்டு சரிபார்க்கப்பட்ட பின்னர் கதவுகள் திறக்கப்படுவதோடு எஞ்சினை ஸ்ரார்ட் பண்ணுவதற்கான ஆயத்தத்தையும் அது செய்துவிடுகிறது. இதற்காகவே இக் கருவிகளில் (fobs) உள்ளே சிறிய மின்கலம் வைக்கப்பட்டிருக்கிறது. இக்கலம் பலமிழந்து போகையில் இக்கருவியிலிருந்து புறப்படும் மின்காந்த அலைகளும் பலமிழந்து போவதால் சிலவேளைகளில் பூட்டுகள் திறக்கப்படுவதில்லை.

இக் கருவிகளை வாகன உரிமையாளர்கள் பொதுவாக வீட்டு வாசலினுள்ளே கொழுக்கியில் தொங்கவிடுவதோ அல்லது தட்டுகளில் வைப்பதோ வழக்கம். வீட்டுக்கு வெளியே தமக்கு விருப்பமான வாகனத்தைக் காணும் திருடர்கள் தம்மிடமுள்ள ஸ்கானர் கருவிகளால் ஸ்கான் செய்து பார்க்கும்போது வீட்டினுள்ளே வைக்கப்பட்டிருக்கும் திறப்புக் கருவிகள் என்ன அதிர்வெண்ணில் அல்லது சங்கேதக் குறிகளை (codes) எழுப்பி கதஹ்வைத் திறக்கின்றன என்பதை அறிந்துவிடுவார்கள். பின்னர் அவ்வெண்ணைத் தமது கருவியில் புரோகிராம் செய்து வாகனத்தைத் திறந்து அதைத் திருடிச் சென்று விடுவார்கள். இதற்கு அவர்களுக்குத் தேவையானது சில நிமிடங்கள் மட்டுமே.

தவிர்க்கும் வழிகள்

வாகனத் திருட்டைத் தவிர்க்க சில வழிகளைப் பொலிசார் பரிந்துரைக்கிறார்கள். அவற்றில் சில:

Faraday Box
 1. திறப்புக் கருவிகளை வாசலுக்கு அருகில் வைக்காதீர்கள். வாகனத்திலிருந்து எவ்வளவு தூரத்தில் அவை வைக்கப்படுகின்றனவோ அவ்வளவுக்கு மின்காந்த அலைகள் பலமிழந்து போகின்றன. அதே வேளை இம் மின்காந்த அலைகளைத் தடுக்கும் பெட்டிகளை மிக மலிவான விலையில் அமசோன் அல்லது பெஸ்ட் பை போன்ற இடங்களில் வாங்கலாம். Faraday Box என அழைக்கப்படும் இப்பெட்டிகள் மின்காந்த அலைகளைத் தடுக்கும் சுவர்களால் ஆக்கப்பட்டவை. சகல எலெக்ட்றோனிக் திறப்புக்களையும் இப்பெட்டிக்குள் போட்டு மூடிவிட்டால் திருடர்களால் ஸ்கான் செய்ய முடியாது.
 2. கராஜ் வசதி உள்ளவர்கள் வாகனத்தை உள்ளே வைத்துப் பூட்டிக்கொள்ளுங்கள். கராஜ் திறப்பும் எலெக்ட்றோனிக் வகையானால் அதைத் திறக்கும் மோட்டாருக்கு ஒரு தனி சுவிட்சைப் போட்டு உள்ளே போனதும் அதை ‘ஓஃப்’ செய்துகொள்ளலாம். அல்லது கராஜ்க்கு உள்ளே மெக்கானிக்கல் பூட்டு இருப்பின் அதைப் பூட்டிக் கொள்ளலாம்.
 3. வாகனங்களில் ஸ்டீயரிங் வளையத்துக்கு பூட்டுப் போடலாம். திருடர்கள் இதைக் கண்டவுடன் இதை வெட்டுவதற்கு அதிக நேரமெடுக்கும் என்பதால் திருட்டில் மினக்கெட மாட்டார்கள்.
 4. வாகனத்தின் ‘டேற்றா போர்ட்’ (Data Port) இற்கு ஒரு எலெட்றோனிக் பூட்டு ஒன்றைப் போடுங்கள். இதை ஒரு அதிகாரம் பெற்ற மெக்கானிக் ஒருவரே செய்யலாம். இப்பூட்டு திருடர்கள் எஞ்சினை ஸ்டார்ட் செய்ய முடியாமல் எஞ்சினின் டேற்றா போர்ட்டை மூடிவிடுகிறது (ignition immobilizer). Anti Theft System எனப்படும் இந்நடைமுறை பல புதிய வாகனங்களில் இணைக்கப்படுகிறது. மேற்குறிப்பிட்ட திருடப்படும் வாகனங்கள் இவ்வசதிகளைக் கொண்டிருக்கவில்லை.
 5. வீட்டுக்கு வெளியே சீ.சீ.ரி.வி. வீடியோ வசதிகளைச் செய்துகொள்ளுங்கள்.

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!