ரொறோண்டோ TDSB கல்விச்சபையில் ‘சாதி ஒடுக்குமுறை பிரேரணை’ வெற்றி!
பல காலமாக மறைக்கப்பட்ட ரொறோண்டோ கல்விச்சபையில் ‘சாதி ஒடுக்குமுறை பிரேரணை’ வெற்றி! அறங்காவலர் (Toronto School Trustee) யாழினி ராஜகுலசிங்கத்தினால் பிரேரணை முன்மொழியப்பட்டது

ஒன்ராறியோவில் வாழும் தென்னாசிய மற்றும் கரீபிய மக்கள் மத்தியில் நிலவும் சாதி ஒடுக்குமுறை பற்றிய விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என ஒன்ராறியோ மனித உரிமைகள் ஆணையத்தைக் கோரும் பிரேரணை ஒன்று கனடாவின் மிகப் பெரிய கல்விச்சபையான ரொறோண்டோ கல்விச்சபையில் (TDSB) நிறைவேற்றப்பட்டுள்ளது. கல்விச்சபையின் அறங்காவலர் யாழினி ராஜகுலசிங்கத்தினால் முன்மொழியப்பட்ட இப் பிரேரணைக்கு ஆதரவாக 16 பேரும் எதிராக 5 பேரும் வாக்களித்திருந்தனர்.
கல்விச்சபையின் இப்பிரேரணை, பொதுக் கல்வி வழங்குதலின் பின்னணியில் ஒன்ராறியோவில் சாதி ஒடுக்குமுறையின் தாக்கம் இருக்கிறதா என ஆராய்ந்து அதை நிவர்த்தி செய்ய நடவடிக்கைகளை எடுப்பதற்கு ஒன்ராறியோ மனித உரிமைகள் ஆணையத்திற்கு அனுமதி வழங்குகிறது.
சாதி ஒடுக்குமுறை பற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்க இரண்டு அம்சத் திட்டமொன்றை பெப்ரவரி 8 அன்று ரொறோண்டோ கல்விச்சபையின் ஆளுகை மற்றும் கொள்கைக்குழு முன்வைத்திருந்தது. ஆனாலும் இப்பிரச்சினை ஒன்ராறியோ மாகாணம் எங்கும் இருக்கின்ற ஒன்று என்பதனால் அதை ஒன்ராறியோ மனித உரிமைகள் ஆணையத்திடம் கையளிக்கவேண்டுமென நேற்று (மார்ச் 8) நடைபெற்ற கல்விச்சபைக் கூட்டத்தில் அறங்காவலர் யாழினி ராஜகுலசிங்கத்தினால் பிரேரணை ஒன்று முன்மொழியப்பட்டிருந்தது.
இருப்பினும் இப் பிரேரணை சமூகங்களிடையே பிரிவினையை வளர்க்கும் எனவும் ஒன்ராறியோவில் சாதி ஒடுக்குமுறை இருக்கிறது என்பதற்கான ஆதாரங்கள் எதுவுமில்லை எனவும் கூறி அறங்காவலர் வேடோங் பே உட்பட 5 அறங்காவலர்கள் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர். ‘இந்து பாரம்பரியக் கல்விக்கான கனடிய அமைப்பு’ என்ற பெயரில் மண்டபத்துக்கு வெளியில் சிலர் பதாகைகள் சகிதம் எதிர்ப்புக்களைத் தெரிவித்திருந்தனர்.
ரொறோண்டோ கல்விச்சபையின் கீழ் இயங்கும் 583 பாடசாலைகளில் சுமார் 235,000 மாணவர்கள் கல்வி பயில்கிறார்கள். இவர்களில் பலர் தென்னாசிய மற்றும் கரீபிய சமூகங்களைச் சேர்ந்தவர்கள். இச்சமூகங்கள் மத்தியில் சாதி ஒடுக்குமுறை இருக்கிறது என்பதற்கான ஆவணப்படுத்தப்பட்ட பதிவுகள் இருக்கின்றன எனக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக ஒன்ராறியோ மனித உரிமைகள் ஆணையத்தின் அறிக்கை தயாரிக்கப்பட்டதும் கல்விச்சபையின் குழுவுக்கு அது அறிவிக்கப்படும் என கல்விச்சபையின் பணிப்பாளர் தெரிவித்தார்.
Phtio:tdsb web