ஸ்காபறோ நிலக்கீழ் தொடருந்துப் பாதை நீடிக்கப்படுவது குறித்த ஸ்காபறோ சமஷ்டி லிபரல் நாடாளுமன்றக் குழுவின் கூட்டறிக்கை
ஸ்காபறோ நிலக்கீழ் தொடருந்துப் பாதை நீடிக்கப்படுவது குறித்த ஸ்காபறோ சமஷ்டி லிபரல் நாடாளுமன்றக் குழுவின் கூட்டறிக்கை
________________________________________
மே 11, 2021 ஸ்காபறோ, ஒன்றாரியோ ஸ்காபறோ சமஷ்டி லிபரல்
நாடாளுமன்றக் குழு
ஸ்காபறோ, ஒன்றாரியோ, மே 11, 2021 – பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் அவசரகால தயார்நிலை அமைச்சர் கௌரவ பில் பிளையர் (Bill Blair), ஸ்காபறோ-ரூஜ் பார்க் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி, ஸ்காபறோ வடக்கு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஷோன் சென் (Shaun Chen), ஸ்காபறோ-கில்வுட் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ ஜோன் மக்கே (John McKay), ஸ்காபறோ-ஏஜின்கோர்ட் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஜீன் யிப் (Jean Yip), ஸ்காபறோ மத்தி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சல்மா ஸாஹிட் (Salma Zahid) ஆகியோர் பின்வரும் அறிக்கையை வெளியிட்டுள்ளார்கள்:
ஸ்காபறோ நிலக்கீழ் தொடருந்துப் பாதை நீடிக்கப்படவுள்ளது!
பிரதம மந்திரி ஜஸ்ரின் ட்ரூடோ, ஸ்காபறோ நிலக்கீழ் தொடருந்துப் பாதையைக் கட்டி, நிறைவு செய்வதற்கு 2.26 பில்லியன் டொலர் வரையான பணத்தைச் சமஷ்டி அரசு முதலிடுமென இன்று அறிவித்தார். ஸ்காபறோவில் மேலதிகமாக 7.8 கிலோ மீட்டர் தூரத்திற்குத் தொடருந்துப் பாதை அமைக்கப்படுவதற்கும், TTCs Line 2 (Bloor-Danforth) இல் மேலதிகமாக மூன்று நிறுத்தங்கள் அமைக்கப்படுவதற்கும் இந்த நீடிப்பு வழிவகுக்கும்.
2015 ஆம் ஆண்டில் இருந்து ஸ்காபறோ சமஷ்டி லிபரல் நாடாளுமன்றக் குழுவின் உறுப்பினர்கள் எமது பகுதியில் விரைவுப் பொதுப்போக்குவரத்து மேம்படுத்தப்படுவதற்குக் குரல்கொடுத்து வந்தார்கள்.
பல தசாப்தங்களாகத் தீர்க்கமான முடிவுகள் எடுக்கப்படாதமையாலும், தேவைக்குக் குறைவான முதலீடுகள் செய்யப்பட்டமையாலும், கனடாவில் மிக நீண்டகாலமாகச் தேவைக்கும் குறைவான அளவு சேவைகள் வழங்கப்பட்ட பகுதிகளில் ஒன்றாக ஸ்காபறோ மாறியுள்ளது. ஸ்காபறோ நிலக்கீழ் தொடருந்துப் பாதை நீடிக்கப்படுவது ஸ்காபறோவில் வசிப்பதைப் பெருமையாகக் கருதும் 630,000 இற்கும் அதிகமானோருக்குப் பொதுப்போக்குவரத்தில் சமத்துவத்தை ஏற்படுத்தும் எமது கூட்டு முயற்சியில் ஒரு முக்கிய முன்னேற்றமாகும்.
கெனடி ஸ்ரேஷனில் இருந்து கிழக்கு நோக்கி நீடிக்கப்படவுள்ள ஸ்காபறோ நிலக்கீழ் தொடருந்துப் பாதையில் ஸ்காபறோவில் புதிதாக மூன்று நிலக்கீழ் தொடருந்து நிலையங்கள் அமைக்கப்படும். லோறன்ஸ் அவென்யூ அன்ட் மக்கோவன் றோட், ஸ்காபறோ ரவுன் சென்டர், ஷெப்பேர்ட் அவென்யூ அன்ட் மக்கோவன் றோட் ஆகிய இடங்களில் இவை அமைந்திருக்கும்.
நாளாந்தம் 105,000 இற்கும் அதிகமான பயணங்கள் இடம்பெறவுள்ள ஸ்காபறோ நிலக்கீழ் தொடருந்துப் பாதையின் விரிவாக்கம், இன்றியமையாத மருத்துவ மற்றும் சமூக உதவிச் சேவைகளைப் பெறுவதற்கான வசதியை மேம்படுத்தி, வணிக நோக்குடனான கட்டுமானங்களுக்கு ஊக்கமளித்து, முதியோர், மாணவர்கள், பணியாளர்கள் ஆகியோரின் கடினமான பயண நேரத்தைக் குறைத்து, ஸ்காபறோவில் வசிப்போருக்குச் சம சந்தர்ப்பத்தை ஏற்படுத்துவதற்கு உதவியாக இருக்கும்.
எதிர்வரும் எட்டு வருட காலத்திற்கு போக்குவரத்துத் திட்டங்களில் புதிதாக 14.8 பில்லியன் டொலரை முதலிடுவதற்கும், அதன் பின்னர் வருடமொன்றுக்கு 3 பில்லியன் டொலர் வீதம் வழங்குவதற்கும் கனேடிய அரசு இவ்வாண்டின் முற்பகுதியில் உறுதியளித்தது. ஸ்காபறோ நிலக்கீழ் தொடருந்துப் பாதை நீடிக்கப்படுவதில் செய்யப்படும் வரலாற்று முக்கியத்துவம் மிக்க இன்றைய முதலீடு பெருமாற்றத்தை ஏற்படுத்துவதற்கு எமது அரசு வழங்கிய உறுதிமொழியை அடிப்படையாகக் கொண்டுள்ளதுடன், கனடாவில் நாம் தொடர்ந்து மேம்பட்ட வகையில் மீளக் கட்டியெழுப்புவதையும் உறுதி செய்யும்.
சுருக்கமான தகவல்கள்:
• கனேடிய அரசு ஸ்காபறோ நிலக்கீழ் தொடருந்துப் பாதையை நீடிப்பதற்கு 2.26 பில்லியன் டொலரை வழங்கும்.
• ஸ்காபறோ நிலக்கீழ் தொடருந்துப் பாதையின் விரிவாக்கத்தில் நாள்தோறும் அண்ணளவாக 105,000 பயணங்கள் இடம்பெறும்.
• ஸ்காபறோ நிலக்கீழ் தொடருந்துப் பாதையின் விரிவாக்கத்தால் உள்ளுர் பொதுப்போக்குவரத்தில் மேலதிகமாக நாள்தோறும் அண்ணளவாகப் புதிய பயணிகளின் 52,000 பயணங்கள் இடம்பெறும்
• ஸ்காபறோ நிலக்கீழ் தொடருந்துப் பாதையின் விரிவாக்கம் பயணிகளை ஆறு வரையான பொதுப்போக்குவரத்துச் சேவைகளுடன் இணைக்கும்: ஒரு தொடருந்துத் தடம் – ஸ்ரோவில் கோ தொடருந்துப் பாதை, இரண்டு உள்ளுர் விரைவுப் பொதுப்போக்குவரத்துத் தடங்கள் – Line 5 (Eglinton Crosstown) மற்றும் ஷெப்பேர்ட் நிலக்கீழ் தொடருந்துப் பாதையின் விரிவாக்கத்துடன் ஏற்படுத்தத் திட்டமிடப்படும் தொடுப்பு, மூன்று பேருந்து சேவைகள் – கோ போக்குவரத்து சேவை, டுறெம் பிராந்திய பொதுப்போக்குவரத்து மற்றும் ரீரீசீ பேருந்துகள்.
• ஸ்காபறோ நிலக்கீழ் தொடருந்துப் பாதையின் விரிவாக்கம் ஸ்காபறோவில் வசிக்கும் 38,000 பேரின் இருப்பிடங்களில் இருந்து நடைதூரத்தில் அமைந்திருக்கும்.
• ஸ்காபறோ நிலக்கீழ் தொடருந்துப் பாதையின் விரிவாக்கம் புவி வெப்பமடைவதை ஊக்குவிக்கும் வாயுக்களின் வெளியேற்றத்தை வருடாந்தம் அண்ணளவாகப் 10,000 தொன்களால் குறைக்கும்.