கொரோனா என்றழைக்கப்படும் கோவிட்-19
கட்டுரை இலக்கம் II…….
கோவிட்-19 கனடாவில் நன்கு பரவிய நிலையில் அது குறித்து மத்திய அரசு, மாகாண அரசு, நகரசபைகள் அனைத்துமே நம்மை விழிப்புணர்வுடன் இருக்குமாறு வலியுறுத்தி வருகின்றன. இதற்கமைய சில தகவல்கள் தொகுக்கப்பட்டு எளிய கட்டுரை வடிவில் தரப்படுகிறது. (ஆக்கத்திற்காக கனடா மூர்த்தி அவர்களுக்கு நன்றி)
அவள் மருத்துவத் தாதி. போர்க்களத்திற்குப் போகும் ஒரு போர்வீரனுக்குரிய மன உறுதியோடு கொரோனா நோயாளிகள் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் அந்த மருத்துவமனைக்குள் நுழைகிறாள். மருத்துவமனையை விட்டு வெளியே வரும்போது மறுநாளும் களம் புக அவளது உயிருக்கு உத்தரவாதம் இருக்குமா என்பது அவளுக்குத் தெரியாது.
“எதிர்வரும் காலம் முன்புபோல இருக்காது.”
ஐந்து ஆண்டுகள் கழிகின்றன – இப்போது 2025ம் ஆண்டு! கைத்தொலைபேசியில் பொருத்தியிருக்கும் லேசர் வெப்பமானியால் எமது உடல் வெப்பநிலையை அவ்வப்போதுசோதித்துக் கொள்கிறோம். பொருட்களின் விலைகள் 2019இல் இருந்ததைவிட இரண்டு மூன்று மடங்கிற்கு மேல் அதிகரித்துவிட்டன. வீட்டில் இருந்து கொண்டே வேலை செய்யும்கலாச்சாரம் உருவாகிவிட்டது. சிறுவர் பாடசாலைகள் முதல் பல்கலைக்கழகங்கள் வரை இணையம்வழி பாடங்கள் நடத்தப்படுவது வழக்கமாகிவிட்டது. உணவகங்களில் உட்காருவதற்கான ஆசனங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு தள்ளித்தள்ளிப் போடப்பட்டிருக்கின்றன. கோயில்களில் குறிப்பிட்ட எண்ணிக்கை பக்தர்களுக்கே உள்ளேவரஅனுமதி என்பதால் பக்தர்கள் குழுக்குழுவாக உள்ளே வருகிறார்கள். அர்ச்சனைகள், ஆராதனைகள் இணையம்வழி ஒளிபரப்பாகிறது. மக்களிடையே கடவுள் பக்தி மிகவும் அதிகரித்துவிட்டது. விமான நிலையங்களில் வந்து இறங்கி குடிவரவு உள்நுழைவுப் பத்திரங்களை நிரப்பும்போது, கொரோனாவுக்கும் டிக் செய்யவேண்டியிருக்கிறது.
மேலே சொல்லப்பட்டவை கற்பனைபோல இருந்தாலும், இவையெல்லாம் நடக்கமாட்டாது என்பதில்லை. எதிர்காலம் கற்பனையில்கூட மிகவும் மோசமானதாக இருக்கப்போகிறது. ‘வீடடங்கு நிலையிலிருந்து இனியாவது மக்களை விடுவித்து மீண்டும் அவர்களை வேலைகளுக்கு அனுப்ப வேண்டும்” என்ற யோசனைகளின் மத்தியில் அரசாங்கங்கள் கட்டுப்பாடுகளை விதிக்கத் தொடங்கிவிட்டன. காத்திருப்பு தொடர்கிறது. எதிர்காலம் முன்புபோல இருக்காது.
“காத்திருப்பு தொடர்கிறது.”
இந்த இதழ் பிரசுரமாகும் 2020 மே மாதம்வரை கோவிட்-19க்கான தடுப்பு மருந்துகள் எதுவும் உறுதிபட உருவாக்கப்படவில்லை. ஒருவேளை அப்படி ஏதாவதொரு தடுப்பு மருந்து இந்த மாதமே உருவாக்கப்பட்டாலுங்கூட, அது சோதனை செய்யப்பட்டு பாவனைக்கு ஏற்றது என்ற உறுதி வர மாதக்கணக்கில் நாம் காத்திருக்க வேண்டும். அமெரிக்காவின் National Institute of Allergy and Infectious Diseases நிறுவன இயக்குனர் அந்தனி பவுசி (Anthony Fauci) தெரிவித்ததன்படிக்கும் அதற்கு 12 இலிருந்து 18 மாதங்கள்வரை ஆகிவிடுமாம் (அதாவது அடுத்த 2021ம் ஆண்டு கோடைக்காலம் தாண்டும்வரை..). அதன்பின்னரே மருந்து பெருமளவில் தயாரிக்கப்பட்டு, உலகத்தின் பல பாகங்களுக்கும் வேகமாகக் கொண்டு செல்லப்பட வேண்டும். அதுவரை கோவிட்-19 பரவுவதைத் கடவுளாலும் தடுக்க முடியாது. அதுவரை நமக்குள்ள ஒரே வழி நாமே நம்மை “தீண்டத்தகாதவர்கள்” என்ற நிலையில் ஒடுக்கி தனிமைப்படுத்தலுடன் வாழ்வது ஒன்றுதான்.
“தீண்டத்தகாதவர்கள்”
முதல் நோயாளி வூஹாங்கிலுள்ள மருத்துவமனைக்கு டிசம்பர் 8ந் திகதி வருகிறார். அந்த இனம்காண முடியாத நோயுடன் வந்த அனைவரும் வூஹாங்கிலுள்ள குறிப்பிட்டதொரு ஈரச் சந்தையில் தொடர்பிலிருந்தவர்கள். திணறிய சீனா ‘அடையாளம் காண முடியாத வைரஸ் தொற்று ஒன்று குடிமக்களிடம் பரவிக் கொண்டிருக்கிறது” என்பதை உலக சுகாதார நிறுவனத்திடம் டிசம்பர் 31ந் திகதி தெரிவிக்கிறது. ஜனவரி 7ந் திகதி அந்த வைரஸ_க்கு 2019-என்கோவ் (2019-nCov ) என்ற பெயர் தரப்படுகிறது. தனது குடிமக்களில் ஒருவர் 2019-nCov தொற்று காரணமாக மரணமடைந்துவிட்டதை ஜனவரி 11ந் திகதி முதன்முறையாக சீனா உறுதிப்படுத்துகிறது. ஜனவரி 13ந் திகதி உலக சுகாதார நிறுவனம் சீனாவிற்கு வெளியேயும் இந்த நோய் பரவி விட்டதை அறிவிக்கிறது. ஜனவரி 23ந் திகதி வூஹான் மாகாணத்தை மூடி அங்கிருக்கும் தனது குடிமக்கள் அனைவரையும் தீண்டத்தகாதவர்கள் நிலையில் வைத்து கோவிட்-19 பரவலைக் குறைக்க முனைகிறது சீனா.
இவையெல்லாம் நடந்த ‘2019 டிசம்பர் 08க்கும் 2020 ஜனவரி 23க்கும் இடைப்பட்ட காலகட்டத்தில்” சீனாவிலிருந்து வெளியேறியவர்களே அந்த 2019-nCov வைரஸை பல்வேறு நாடுகளுக்கும் முதலில் காவிச் சென்றவர்களாவர். ஆக டிசம்பர் 08க்கும் ஜனவரி 23க்கும் இடைப்பட்டிருந்த காலகட்டத்தில் உலகம் ஏனோ 2019-nCov வைரஸை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. (தற்போது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உலக சுகாதார நிறுவனத்தின்மீது பழி சுமத்துகிறார்.) எது எப்படியாயினும், அரசாங்கங்கள் (நம் கனடா உட்பட) இந்த வைரஸை எதிர்கொள்ளத் தேவையானவற்றை வேகமாக செய்யாமலிருந்ததன் விளைவாகவே இன்று சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரையும் கொரோனா தாக்கிக்கொண்டிருக்கிறது.
“முதியவர்கள்”
கொரோனா சாவுகளில் 90 விழுக்காடு அறுபது வயதிற்கும் மேற்பட்டவர்களுக்கே நடந்திருக்கிறது. குறிப்பாக கனடாவில் நடக்கும் கொரோனாச் சாவுகளில் பெரும்பான்மை எண்ணிக்கை முதியோர் இல்லங்களிலேயே நடந்து கலங்க வைக்கிறது. கொரோனா பரவிய முதியோர் இல்லங்கள் வெளியாருக்கு மூடப்படுகின்றன. இரத்த சொந்தங்கள்கூட உள்ளே அனுமதிக்கப்படுவதில்லை. கண்ணாடி ஜன்னல்கள் ஊடாக உள்ளிருப்போர் வெளியே ஏக்கத்துடன் பார்ப்பதும், வெளியே நின்றுகொண்டிருக்கும் பிள்ளைகள் குமுறிக் கதறுவதுமான காட்சிகள் நெஞ்சைப் பிளக்கின்றன. தனிமைப்படுத்தப்படும் முதியோர் தமது உறவுகளைக் காண முடியாமலே இறந்து கொண்டும் இருக்கின்றனர். உடல்கள் – இறுதிச் சடங்குகள் இல்லாமல் – மூடப்பட்ட பைகளுள் போடப்பட்டு விரைவாக அப்புறப்படுத்தப்படுகின்றன. ஆம். முதிய வயதை எய்திய உடலின் இயல்பாகக் கருதப்படும் நோயெதிர்ப்புச் சக்திக் குறைவு மூத்த குடிமக்களைத்தான் விரைவாக கொரோனாச் சாவுக்குத் தள்ளிக்கொண்டிருக்கிறது.
“நோயெதிர்ப்புச் சக்தி”
வைரஸ், பக்டீரியா போன்ற அந்நிய சக்திகளுக்கு எதிராகப் போரிடும் விதத்தில்தான் நம் உடல் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அந்நிய படைகளை நமது உடலுள் நுழைய விடாமல் பார்த்துக் கொள்ள பல தடுப்புகளை நம் உடல் கொண்டிருக்கிறது. உதாரணத்திற்கு நமது தோல் (Skin) அவ்வாறான ஒன்று. அந்நிய சக்திகள் நமது உடலின் உள்ளே நுழைய விடாமல் தோல் தடுத்துக் கொண்டிருக்கிறது. காயம்பட்டு தோல் கிழிந்ததால் மட்டுமே ‘கிழிஞ்சுதுபோ” என அந்நியப்படை உள்ளே போய்விடும். காயப்பட்ட இடத்தில் வீக்கம் (அழற்சி) உருவாவது நோய்த் தடுப்புத் தந்திரோபாயமாகும். அழற்சியானது சமிக்ஞைகளைத் தந்து, உடலுள்ளிருக்கும் தற்பாதுகாப்புப் போராளிகளை வரவழைத்து எதிரிகளான அந்நியப் படையைக் கொல்ல ஆரம்பிக்கும்.
உடலின் தற்பாதுகாப்புப் போராளிகளுக்கு இன்னொரு உதாரணமாக வயிற்று அமிலங்கள், கணைய நொதிகள், பித்தம் போன்றவையும் குறிப்பிடலாம். நமது சமிபாட்டுப் பாதையில் (Digestive Tract) நாம் எதிர்கொள்ளும் கெட்ட பக்டீரியாக்களை அவை கொல்கின்றன அல்லது பெருகவிடாது தடுத்து விடுகின்றன. அதேபோலவேதான், நமது சுவாசக் குழல் பாதையின் (Airways) உள் அமைப்பானது நாம் சுவாசிக்கும்போது உள்ளெடுக்கும் தேவையற்ற அந்நியர்களை தும்மி இருமி வெளியேற்றிவிடுகிறது. இன்னுமொரு உதாரணம்? நமக்கெல்லாம் காய்ச்சல் வருகிறதே.. அது நமது உடல் தனது வெப்பநிலையை உயர்த்தி அதன் மூலம் அந்நியப்படைகளை வறுத்தெடுக்கக் கையாளும் உபாயமாகும். இதுபோன்ற இன்னும் பல நோயெதிர்ப்புப் பொறிமுறைகளைக் நமது உடல் கொண்டிருக்கிறது.
“நோயெதிர்ப்பு பொறிமுறை”
கோவிட்-19 நோயைத்தரும் 2019-nCov ;வைரஸ் உடலுள் நுழைந்துவிட்டால் அதற்கு எதிராக நமது உடல் முதலில் தனது இயல்பான நோயெதிர்ப்பு பொறிமுறைகளைக் கையாண்டு போரிட ஆரம்பிக்க முயலும். அதனால்தான் கொரோனா அறிகுறிகளாக இருமல், காய்ச்சல் வருமாயின் – முதலில் முன்னெச்சரிக்கையுடன் நம்மைத் தனிமைப்படுத்தி – உடலின் நோயெதிர்ப்பு சக்தி வலுவடைய வைக்கப் பார்க்க வேண்டும். இப்போராட்டத்தில் நம் நோயெதிர்ப்பு தோல்வி கண்டு, 2019-nCov அந்நிய சக்திகள் வெற்றியடைவதாக உணரும்பட்சத்திலேயே மருத்துவமனைகள் நோயாளிகளை சேர்த்துக் கொள்ளும். அங்கும் முதலில் நோயெதிர்ப்பு வலுவை தற்காலிகமாக கொண்டுவர மருத்து, மாத்திரைகள் தரப்படுகின்றன. தற்போது பலரது கவனத்தை ஈர்த்துவரும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் (Hydroxychloroquine-HCQ) போன்ற சில மருந்துகள் அவ்வாறானவையே.
“ஹைட்ராக்ஸிகுளோரோகுயின்”
உலகில் அதிகளவு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றது. மாத்திரை வடிவில் கிடைக்கும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மலேரிய, முடக்குவாதம் உள்ளிட்ட சில நோய்களுக்காகத் தரப்படும் வைரஸ் எதிர்ப்பு மருந்தாகும். கோவிட்-19இற்கு எதிராகவும் இதை பயன்படுத்த முடியும் என்று சில மருத்துவ நிபுணர்கள் நம்புகிறார்கள். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்த ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தினை Azithromycin உடன் இணைத்து கொரோனா நோயாளர்களுக்குத் தரலாம் என்று அறிவித்த கையோடு, இந்தியாவிலிருந்து அதைப் பெற தீவிர முயற்சிகள் செய்து (மிரட்டி?) ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகளை இறக்குமதி செய்திருக்கிறார். இருந்தபோதும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் உலக சுகாதார நிறுவனத்தால் இன்னும் ஏற்கப்படாததொரு கொவிட்-19 தடுப்பாகும்.
சீனாவில் கோவிட்-19 உச்சத்திலிருந்தபோது வுஹான் பல்கலைக்கழகத்தின் ரென்மின் மருத்துவமனையில் கோவிட்-19 பாதித்த 62பேருக்கு (29 ஆண்கள், 33 பெண்கள்) ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் தரப்பட்டு ஆராயப்பட்டது. மருத்துவ மீட்புக்கான நேரம் (TTCR) மருத்துவ பண்புகள் (Clinical Characteristics) மற்றும் கதிரியக்க முடிவுகள் (Radiological Results) மதிப்பீடு செய்யப்பட்டன. முடிவுகளின்படி அவர்களில் பாதிப்பேருக்கு ‘உடல் வெப்பநிலை மீட்பு நேரம்” மற்றும் ‘இருமல் நீக்கும் நேரம்” கணிசமாகக் குறைந்திருந்தது. ஆனால் 4 பேருக்கு நிலைமை கடுமையாகிவிட்டது. 2 நோயாளிகள் மிகப்பாதகமான விளைவுகளுடன் இருந்தனர்.
மொத்தத்தில், ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் பயன்பாடு கோவிட்-19 தடுப்பு அல்ல. அது ‘மருத்துவ மீட்புக்கான நேரத்தை TTCR) கணிசமாகக் குறைப்பதுடன் நிமோனியாவை எதிர்க்கிறது” என்பதை மட்டும்தான் இன்று ஆய்வுகளால் உறுதியுடன் சொல்லமுடிகிறது. அதனால் கோவிட்-19 தடுப்பு மருந்தொன்றை உருவாக்குவதற்கான மருத்துவ ஆய்வுகள் தொடர்ந்தும் வேகமாக நடை பெறுகின்றன.
“மருத்துவ ஆய்வுகள் – ஒரு எளிய விளக்கம்”
காமுகனான 2019-nCov ;வைரஸ் ஒரு மன்மதன்போல தான் வைத்திருக்கும் “Spike” என்றழைக்கப்படும் புரதத்தின் உதவியுடன் நம் மனிதக் கலங்களிலிருக்கும் “Receptor” என்ற புரதத்துடன் கைகுலுக்கிக் கொள்கிறது. இந்த “Receptor” என்ற அபலைப்பெண் அக் கைகுலுக்கலில் ஏனோ மயங்கி வந்தவனை முத்தமிட்டுக் கொள்கிறது. அதன் தொடர்ச்சியாக அவை இரண்டும் முயங்கிக் கொள்கின்றன. அபலைப்பெண்ணாகிய “Receptor” காம மயக்கத்தில் “Spike” உடன் கலவி செய்யும்போது மன்மதன் வேடத்திலிருக்கும் 2019-nCov நமது கலத்தினுள் புகுந்து கொள்கிறான். கலத்தினுள் புகுந்து தன்னைப்போல லட்சக்கணக்கான 2019-nCov வைரஸ்களை அசுரத்தனமாக உருவாக்குகிறான்.
மருத்துவ ஆய்வுகில் மேலே சொன்ன கைகுலுக்கலை “Attachemet” என்று அழைக்கிறார்கள். முயங்குதலை “Fusion” என்றழைக்கிறார்கள். மருத்துவ ஆய்வாளர்கள் இன்று செய்ய நினைப்பதெல்லாம் இந்த “Attachemet” அல்லது “Fusion” இரண்டில் ஒன்றை அல்லது இரண்டையுமே இல்லாமல் செய்யும் மந்திரத்தை கண்டு பிடித்து ஓதுவதுதான். அவ்வாறு ஓதினால் 2019-nCov வைரஸ் மனிதக் கலங்களுக்குள் புகுவது தடுத்து நிறுத்தப்படுமல்லவா! அந்த மந்திரத்தையே நாம் தடுப்பு மருந்து என்கிறோம்.
“தடுப்பு மருந்துகள்”
2019-nCov வைரஸ் நம் உடலின் கலங்களுடன் செய்யும் “Attachemet” & “Fusion” ஒரு மர்மம் கலந்த புதிர். இதை தடுக்க 70க்கும் மேற்பட்ட தடுப்பு மருந்துகள் உலகளாவிய நிலையில் தொடர்ந்தும் ஆய்வுநிலையில் இருந்து வருகின்றன. அமெரிக்காவின் பிரபல Moderna Inc நிறுவனம் ஏற்கனவே ஒரு மருந்து உருவாக்கப்பட்டு விட்டதாயும், பெருமளவிலான சோதனைகள் ஜூன் மாதத்தில் நடக்கும் என்றும் அறிவித்துவிட்டது. அமெரிக்காவின் இன்னொரு நிறுவனமான Inovio Pharmaceuticals தனது சோதனையானது தடுப்பூசிகள் தரும் நிலைக்கு சென்றுவிட்டதாக அறிவித்திருக்கிறது. சீனாவின் CanSino Biologics நிறுவனம் கோவிட்-19 தடுப்பு மருந்து உருவாக்கத்தில் முன்னிலை வகிப்பதாகவும் சொல்லப்படுகிறது. அந்நிறுவனம் தனது இரண்டாம் கட்ட சோதனைகளை நிறைவேற்றிக் கொண்டிருப்பதாக சீனாவின் விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சு தெரிவித்திருக்கிறது.
எதிர்மறைத் தடுப்பு மருந்தியல் (Reverse Vaccinology) முறையில் தமிழகத்தில் உள்ள மருத்துவப் பல்கலைக்கழகம் கொரோனா வைரஸை நம் கலங்களுள் புக விடாது தடுக்கும் இரசாயனக்கூறு ஒன்றை அடையாளம் கண்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. (தினமணி 22 – ஏப்ரல் – 2020) அந்த ஆய்வின்படிக்கும் கடுக்காய், கற்பூரவள்ளி, சிற்றரத்தை, அழிஞ்சல், எழிலைப்பாவை, நீர்ப்பிரம்மி, திப்பிலி, கோரைக்கிழங்கு, அமிர்தக்கொடி, நொச்சி, ஆடாதொடை உள்ளிட்டவற்றில் இருக்கும் இரசாயனக்கூறுகளின் உதவியுடன் அந்த தடுப்பு மருந்து ஆய்வறியப்பட்டுள்ளது. சோதனைகள் தொடர்கின்றன.
இதற்கிடையே, உலகின் தலைசிறந்த மருத்துவ ஆய்வு நிபுணர்களும், நிறுவனங்களும் ஒன்ராறியோவில் இருக்கின்ற காரணத்தினால் ஒன்ராறியோவில் கோவிட்-19 மருத்துவ ஆய்வுகளைத் துரிதப்படுத்த ஒன்ராறியோ முதல்வர் டக்போர்ட் ஏப்ரல் 18ந் திகதி இருபது மில்;லியன் டொலர்களை ஒதுக்கியிருப்பதாக அறிவித்திருக்கிறார். நம்பமுடியாத விதத்தில் கோவிட்-19 நம்மிடையே வந்ததுபோல மின்னாமல் முழங்காமல் அதற்கான தடுப்பு மருந்தும் எங்கிருந்தாவது வரட்டும் என்று பிரார்த்திப்பது ஒன்றுதான் இன்று நாம் செய்யக்கூடியது.
Cases
Deaths
Recovered
Active
Cases Today
Deaths Today
Critical
Affected Countries
ஆக்கத்திற்காக கனடா மூர்த்தி அவர்களுக்கு நன்றி