இலங்கை குறித்த மையக் குழுவின் அறிக்கை – மனித உரிமைப் பேரவையின் 45 ஆம் கூட்டத்தொடர்
News Release :

உடனடி வெளியீட்டுக்காக
இலங்கை குறித்த மையக் குழுவின் அறிக்கை – மனித உரிமைப் பேரவையின் 45 ஆம் கூட்டத்தொடர்
ஒட்டாவா, ஒன்றாரியோ – செப்டம்பர் 15, 2020: இந்த அறிக்கை கனடா, ஜேர்மனி, வடக்கு மசிடோனியா (North Macedonia), மொன்றநீக்றோ (Montenegro), ஐக்கிய இராச்சியம் (UK) ஆகிய நாடுகளைக் கொண்ட இலங்கை குறித்த மையக் குழுவின் சார்பானது.
உயர் ஆணையாளர் அவரது அறிக்கையில் இலங்கை குறித்து வெளியிட்ட கவலைகளை நாம் கருத்திற் கொள்கிறோம்.
கோவிட்-19 காரணமான சவால்களின் மத்தியிலும், நாடாளுமன்றத் தேர்தலைப் பாதுகாப்பாகவும், அமைதியாகவும் நிறைவு செய்த இலங்கை மக்களுக்கும், தேர்தலை நடத்துவதில் பங்கெடுத்த அனைவருக்கும் மையக் குழு பாராட்டுக்களைத் தெரிவிக்கிறது.
இலங்கையில் மனித உரிமைகள், மீளிணக்கம், பொறுப்புக் கூறல் என்பன தொடர்பாக உயர் ஆணையாளர் வெளியிடவுள்ள முக்கியமான அறிக்கை ஒன்றை எதிர்வரும் மார்ச் மாதத்தில் பேரவை பரிசீலிக்கும். குறிப்பாக, 30/1 தீர்மானத்தை நடைமுறைப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைப் பேரவை பரிசீலிக்கும். இந்தத் தீர்மானத்தின் மூலம், 2015 ஆம் ஆண்டில் இலங்கை அதன் பழைய காயங்களை ஆற்றுவதற்கும், உயர் ஆணையாளர் அறிக்கையிட்ட தீர்க்கப்படாத பாரதூரமான மீறல்கள், அத்துமீறல்கள் என்பன குறித்து நடவடிக்கை எடுப்பதற்குமாக பணிச்சட்டம் ஒன்று இணக்க அடிப்படையில் உருவாக்கப்பட்டது. இந்தப் பணிச்சட்டம் (framework) இந்தப் பேரவையால் இணக்க அடிப்படையிலும், இலங்கையின் வெளிப்படையான ஆதரவுடனும் இரண்டு முறை புதுப்பிக்கப்பட்டது.
30/1 தீர்மானத்தை இனிமேலும் ஆதரிக்கவில்லையென்ற விடயத்தை இலங்கை அரசு இந்தப் பேரவையில் தெளிவுபடுத்தியுள்ளது. இதற்கு மையக் குழு அதன் ஆழ்ந்த ஏமாற்றத்தை மீண்டும் வெளியிடுகிறது.
இலங்கையின் வேறுபட்ட சமூகங்களின் மத்தியில் மீளிணக்கம், நீதி, அமைதியுள்ள சகவாழ்வு என்பவற்றை வளர்ப்பதில் தொடர்ந்து உறுதியுடன் இருப்பதாக இலங்கை அரசு கூறியுள்ளது. புதியதொரு உள்நாட்டு நடைமுறையின் மூலம் இந்த நிகழ்ச்சி நிரல் செயற்படுத்தப்படுமென அது கூறியுள்ளது. தொடரும் இந்த உறுதிப்பாட்டை நாம் புரிந்து கொள்ளும் அதேவேளை, இதைப் போன்ற முன்னைய நிகழ்ச்சி நிரல்கள், குற்றவாளிகள் தண்டிக்கப்படாத நிலையை மாற்றுவதற்கும், உண்மையான மீளிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும் போதுமானவையாக இருக்கவில்லை. புதிய அணுகுமுறை முன்னைய முயற்சிகளில் இருந்து எவ்வாறு வேறுபடுகிறதென்பதையும், போரில் பாதிக்கப்பட்டோரை மையப்படுத்தியதாவென்பதையும் இந்தப் பேரவை முக்கியமாக அவதானிக்கவேண்டும். காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்த அலுவலகம், இழப்பீடுகளுக்கான அலுவலகம் ஆகியன உட்பட்ட சுதந்திரமான ஆணைக்குழுக்களின் எதிர்காலம் குறித்து முக்கியமாகக் கவனம் செலுத்தப்படவேண்டும்.
இதேவேளை, இலங்கையில் குடிசார் சமூகமும் மனித உரிமை அமைப்புக்களும் செயற்படும் சூழல் கடினமடைவதாகக் கவலை வெளியிடப்படுவதை நாம் அறிகிறோம். காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கான மிரட்டல்கள் உட்பட, அச்சுறுத்தல், தொந்தரவு, கண்காணிப்பு என்பன தொடர்கின்றன. வழக்கறிஞர் ஹெஜாஸ் ஹிஸ்புல்லா போன்றோர் நீதிமன்றத்தின் முன்பாக முன்னிலைப்படுத்தப்படாது காலவரையறை இன்றித் தடுத்து வைக்கப்படுகிறார்கள்.
இலங்கையின் உயிர்த்துடிப்புள்ள ஜனநாயகத்தின் மையமாக ஆற்றல் மிக்கதும், பன்முகத்தன்மை கொண்டதுமான குடிசார் சமூகம் விளங்குகிறது. இலங்கையின் குடிசார் சமூகத்திற்கும் மனித உரிமைப் பாதுகாவலர்களுக்கும் மையக் குழு அதன் உறுதியான ஆதரவை வெளியிடுவதுடன், அவர்கள் சுதந்திரமாகச் செயற்படுவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அரசிடம் கேட்டும் கொள்கிறது.
-30-
மேலதிக தகவல்களுக்கும் ஊடகங்களின் கேள்விகளுக்கும்:
Gary.Anandasangaree.C1A@parl.gc.ca
416-283-1414
