LiVe நேரடி ஒளிபரப்புNationNews

கனடியத் தமிழர் பேரவையிலிருந்து ஒதுங்கியவர்கள் உருவாக்கிய  புதிய கூட்டின் (CTC) ஊடக சாந்திப்பு

Getting your Trinity Audio player ready...

கனடியத் தமிழர் பேரவையிலிருந்து ஒதுங்கியவர்கள் உருவாக்கிய   Canadian Tamil Collective’s  புதிய கூட்டின் (CTC) ஊடக சாந்திப்பு

இமாலயப் பிரகடனம்’ என்ற ஒன்று வெளி வந்ததிலிருந்து, அதற்கு அனுசரணையாக இருந்த கனடியத் தமிழர் பேரவையின்(ctc) நடவடிக்கைகளுக்கு எதிராக கனடா வாழ் தமிழ் சமூகமும், தமிழ் அமைப்புகளும் விமர்சனங்களை வெளியிட ஆரம்பித்துள்ளன. ஒரு சிலரிடமிருந்து ஆதரவும், அதிகளவில் அதற்கு எதிரான விமர்சனங்களும் இணைய ஊடகங்களில் வெளிவந்த நிலையில், பிரகடனத்துடன் சம்பந்தப்பட்டவர்களும், பிரகடனத்துக்கு எதிரானவர்களும்  கனடாவின்  பிரதான தமிழ் ஊடகங்களுடனான  சந்திப்புகள் மூலம் தங்களது நியாயப்பாட்டினை வெளிப்படுத்த முனைந்துள்ளார்கள்.

நேரடி ஒளிபரப்பு

பிரகடனம் சம்பந்தமாக இதுவரை மூன்று ஊடக சந்திப்புகள் ரொறன்ரோவில்   இடம்பெற்றுள்ளன. பிரகடனத்துக்கு எதிரான நிலைப்பாட்டில் உள்ள ‘கனடியத் தமிழ் தேசிய அவை’ (NCCT) முதலாவது ஊடக சந்திப்பை நடத்தியது. அடுத்த சந்திப்பு, இமாலயப் பிரகடனத்துக்கு துணை நின்றதால், குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் கனடியத் தமிழர் பேரவையால்(CTC) நடத்தப்பட்டது. இறுதியாக கடந்த 23.2.2023 அன்று இடம்பெற்ற மூன்றாவது சந்திப்பானது, புதிய கூட்டு முயற்சியாக ஆரம்பிக்கப் பட்டிருக்கும், ‘கனடியத் தமிழ் கூட்டு’ (CANADIAN TAMIL COLLECTIVE) என்ற அமைப்பு  நடத்தியது. ஆங்கில வார்த்தைகளை  சுருக்கினால் அதுவும் (CTC) என்றுதான் வருகிறது. ஏன் இந்த குழப்பமான பெயர் தெரிவு என்று கேட்டதற்கு கிடைத்த பதிலும் குழப்பமானது.

      புதிதாக ஆரம்பிக்கப்பட்டிருக்கும் தமிழர் கூட்டமைப்பானது, இமாலயப் பிரகடனத்தை நிராகரிப்பதோடு, அதன் பங்குதாரராகச் செயல்படும் கனடிய தமிழர் பேரவையின் அண்மைக்கால நடவடிக்கைகளை கண்டிக்கும் அதேசமயம், தமிழ் மக்களின் அபிலாசைகளிலிருந்து விலகிச் செல்லூம் போக்கிலிருந்து அவர்களை மீட்கும் நோக்கோடும், இமாலய பிரகடனத்தில் இருந்து அவர்களை விலகச் செய்வதை நோக்கமாகக் கொண்டும் உருவாக்கப்பட்டதே ‘கனடாத் தமிழ் கூட்டமைப்பு’ என்ற விளக்கம் சந்திப்பின் ஆரம்பத்தில் கொடுக்கப்பட்டிருந்தது.  .

       ஸ்காபரோவில் அமைந்துள்ள ‘EVENT Centre’ மண்டபத்தில் மேற்படி ஊடக சந்திப்பு இடம்பெற்றது. பல ஊடகங்களின் ஆசிரியர்கள், பிரதிநிதிகள் நிகழ்வில் காலந்து கொண்டிருந்தார்கள். ஊடக ஏற்பாட்டாளர்கள் சார்பில் சட்டத்தரணி, அபி சிங்கம் அவர்களின் தலைமையில், சட்டத்தரணிகளான லக்சுமி வாசன், மரியோ புஸ்பரட்ணம், மற்றும் பேராசிரியர் ஜோசப் சந்திரகாந்தன், அரசியல் பிரமுகர் நீதன் சண்முகராஜா ஆகியோர் நிகழ்வு மேடையில் முதன்மை பெற்றிருந்தார்கள்.

  நிகழ்வின் ஆரம்பத்தில் முன்னிலை வகித்த ஐவரும் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டதோடு,  கனடியத் தமிழர் பேரவையோடு இணைந்து கடந்த காலங்களில் தாங்கள் பணியாற்றியதை நினைவு கூர்ந்தார்கள். தேசியத் தலைமையின் அனுசரணை யோடு பல ஆண்டுகளுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட கனடியத் தமிழர் பேரவை, போர் முடிவுக்கு வந்த பின் பாதையை மாற்றிக்கொண்டதால், அதிலிருந்து தாங்கள் ஒதுங்க வேண்டிய நிலை ஏற்ப்பட்டதாக தெரிவித்தார்கள்.

          கனடியத் தமிழர் பேரவையை இல்லாதொழிப்பது தங்கள் நோக்கம் அல்ல என்பதை அழுத்திச் சொல்லிய அவர்கள், தமிழர்களுக்கான அமைப்பாக அது தொடர்ந்து இயங்கவேண்டும். அதே சமயம், பொறுப்புக் கூறல், வெளிப்படைத் தன்மை        என்பவற்றை மையமாக வைத்து தற்போதய இயக்குனர் சபை மாற்றப்பட வேண்டும், தமிழ் மக்களின் உணர்வுகளை மதித்து, இமாலயப் பிரகடனத்துக்கு ஆதரவு வழங்கியதன் மூலம் தாயாகத்திலும், புலம்பெயர் தேசத்திலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை புரிந்து கொண்டு அதிலிருந்து விலக வேண்டும் என்தே தங்கள் எதிர்பார்ப்பு என்றும், அதை நிறைவேற்றும்வரை, அவர்களது செயற்பாட்டுக்கு எதிரான முயற்சிகள் தொடரும் என்பதே இந்த புதிய அமைப்பின் உருவாக்கத்துக்கான அடிப்படைக்  காரணம் என்றும் தெரிவித்தார்கள். தவறை உணர்ந்து பிரகடனத்தில் இருந்து விலகுவார்களானால், CTC என்ற அடையாளத்தோடு கனடியத் தமிழர் பேரவை மட்டுமே தொடர்ந்து இயங்கும் என்பதும் புதியவர்களின் கருத்தாக இருந்தது.  

      ஊடகவியலாளரின் கேள்விகளுக்குப்  பதில் தரும்போது, பலவிதமான கருத்துக்கள் பகிரப்பட்டன. தமிழர் பேரவையின் அண்மைய  செயல்பாடுகள் தொடர்பாக அவர்களால் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் அனேகமானவை ஏற்றுக்கொள்ளும் வகையிலேயே அமைந்திருந்தன. தாயகத்  தமிழ் மக்கள் மேல் இலங்கை அரசு கட்டவிழ்த்துவிட்ட வன்முறைகளை  இனப்படுகொலை என்ற வகையில், அதற்குப்  பொறுப்பான இராணுவ அதிகாரிகளின் வருகையை தடைசெய்து, பல வழிகளில் தமிழ் மக்களுக்கும், அமைப்பு ரீதியாக தமிழர் பேரவைக்கும் உதவிகளை வளங்கிவரும் கனடிய அரசுக்கு, பேரவையின் இத்தகைய செயலபாடுகள் சங்கடத்தை ஏற்படுத்தும் என்பது சுட்டிக்காட்டத் தக்கது.  

     இமாலயப் பிரகடனத்துக்கு சுவிற்சலாந்து அரசு நிதி உதவி செய்ததாக செய்திகள் வெளிவந்திருப்பதைப் பற்றி கேட்கப்பட்டபோது பதிலளித்த அபி சிங்கம் அவர்கள், தமிழர் பேரவை இதுவரை அது பற்றி எதுவுமே வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை என்றும், தமிழர்களுக்காகவே உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு, தமிழர்களின் உழைப்பிலும், கொடுப்பானவுகளிலும் வளர்ந்த அமைப்பு, தமிழர்களை பிரதிநிதிப் படுத்துவதாக கருதும் அமைப்பு, சர்வதேச மயப்படுத்தப்பட்ட தமிழர் பிரச்சனைக்கு, ‘கட்டிப்பிடி வைத்தியம்’ பார்ப்பதே சரியானது என்ற ரீதியில், சம்பந்தப்பட்ட மக்களுக்கு எதையும்  தெரியப்படுத்தாமலே ஒரு வெளிநாட்டின் நிதிப் பங்களிப்பை பெற்று, இனம் காணப்படாத ஒரு பிரகடனத்தை புகுத்த முயல்வது, தமிழர்களுக்கானது என்று சொல்வதை ஒத்துக்கொள்ள முடியாது என்று தெரிவித்தார்.      

      கனடிய தமிழர் பேரவையில் இருந்து ஒதுங்கியிருந்த அதன் ஆரம்ப கர்த்தாக்களே இப்போது  கனடிய தமிழர் கூட்டமைப்பின் உருவாக்கத்துக்கும் அடித்தளம் இட்டுள்ளதால்,  அமைப்பு ரீதியான அனுபவத்தோடும், இன உணர்வோடும் செயல்படக் கூடியவர்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதே சமயம், எதிர்க்கும் நிலைப்பாட்டை எடுத்திருக்கும் இந்த புதிய கூட்டமைப்பின் உடனடித் திட்டம் என்ன..? எடுக்கும் முயற்ச்சி பலன் தரவில்லை என்றால், அடுத்து என்ன…? போன்ற கேள்விகளுக்கு ஊடக சந்திப்பில் பதில் கிடைக்கவில்லை, அடுத்த மாதத்தில் ஒரு பொதுக் கூட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாகச் சொன்னார்கள். அன்று அதற்கான பதிலை எதிர்பார்க்கிறோம்.

                                                                 – ராகவி

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!