MP ஹரி ஆனந்தசங்கரி, அமெரிக்க ஜனாதிபதியும், துணை ஜனாதிபதியும் பதவியேற்றதை முன்னிட்டு வெளியிட்ட அறிக்கை.
ஸ்காபறோ ரூஜ் பார்க் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி, அமெரிக்க ஜனாதிபதியும், துணை ஜனாதிபதியும் பதவியேற்றதை முன்னிட்டு வெளியிட்ட அறிக்கை

“ஜனாதிபதி ஜோ பைடன், துணை ஜனாதிபதி கமலா ஹரிஸ் ஆகியோருக்கு, அவர்களது வரலாற்று முக்கியத்துவம் மிக்க பதவியேற்பை முன்னிட்டு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒன்றித்த எமது வரலாற்றில் புதியதொரு சகாப்தத்தை அடையாளப்படுத்தும் வரலாற்று முக்கியத்துவம் மிக்க நிகழ்வாக இது அமைகிறது. அமெரிக்க துணை ஜனாதிபதியாக முதன் முறையாகக் கறுப்பினத்தவரும், தமிழருமான ஒரு பெண் பொறுப்பேற்றுள்ளார்.
பல தலைமுறைகளாக அவர்களது உரிமைகளுக்காகப் போராடிய பெண்களையும் – போராட்டத்தைத் தொடரும் பெண்களையும், அனைவருக்கும் பிரதிநிதித்துவத்தையும், சமத்துவத்தையும் ஏற்படுத்துவதற்காகக் களைப்பின்றிச் செயற்படும் இனவெறிக்கு எதிரான செயற்பாட்டாளர்களையும், குடிவரவாளர்களும், குடிவரவாளர்களின் பிள்ளைகளும் எமது நாடுகளுக்குக் கொண்டுவரும் வல்லமையையும், தலைமைத்துவத்தையும் இந்தக் கணம் பிரதிபலிக்கிறது. இந்தப் பயணங்களின் வெற்றியாகவும், இதைக் கொண்டாடுவதாகவும் இன்றைய பதவியேற்பு அமைகிறது.
சம உரிமைக்கான பயணமும் போராட்டமும், அதைப் பிரதிபலிப்பும் இன்றுடன் முடிவடையப் போவதில்லை. கனடாவாக இருந்தாலும், அமெரிக்காவாக இருந்தாலும், உலகின் எந்தப் பகுதியாக இருந்தாலும் தற்போதைய நிலைமையை – இனவெறி, பாகுபாடு, பாலியல் பாகுபாடு, அநீதி ஆகியவற்றை – மாற்றுவதற்கான அவசர தேவை நிலவுகிறது. மாற்றம் கணப்பொழுதில் நிகழாவிட்டாலும், இன்று வரலாறு மாற்றி எழுதப்பட்டதைப்போன்று, மாற்றத்துக்காகப் பணியாற்றினால் அது சாத்தியமாகுமென்பதை நாம் அறிவோம். தடைகளை அகற்றி, கதவுகளைத் திறந்து, முடிவெடுக்கும் இடத்தில் பிரதிநிதித்துவம் இன்றியிருப்போரை அந்த இடங்களுக்கு அழைப்பது ஆகியன எமது தனிப்பட்ட பொறுப்பாகவும், கூட்டுப் பொறுப்பாகவும் தொடர்கின்றன.
ஜனாதிபதி ஜோ பைடன், துணை ஜனாதிபதி கமலா ஹரிஸ் ஆகியோருக்குப் பதவியேற்பை முன்னிட்டு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கனடாவும், ஐக்கிய அமெரிக்காவும் நெருங்கிய தோழமைச் சக்திகளாகவும், நண்பர்களாகவும் இருந்து வருகின்றன. இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவைப் பலப்படுத்துவதற்கு எமது அரசுகளுடன் இணைந்து பணியாற்றுதற்கு நான் ஆர்வமாக இருக்கிறேன்