OHCHR உயர்ஸ்தானிகரால் இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை பற்றிய விரிவான அறிக்கையை.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரால் இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை பற்றிய விரிவான அறிக்கையை தமிழர் உரிமைக் குழுமம் வரவேற்கிறது

செப்டம்பர் 12 முதல் அக்டோபர் 7, 2022 வரை சுவிற்சலாந்தின் ஜெனீவா நகரில் நடைபெற இருக்கும் மனித உரிமைகள் பேரவையின் ஐம்பத்தோராவது கூட்டத் தொடருக்கு முன்னதாக இலங்கையின் மனித உரிமைகள் நிலை குறித்த ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர் ஆணையரின் விரிவான அறிக்கையை தமிழர் உரிமைக் குழுமம் வரவேற்கிறது.
இந்த விரிவான அறிக்கையானது, தங்கள் மீது இழைக்கப்பட்ட அட்டூழியக் குற்றங்களுக்காக நீதிக்கும் பொறுப்புக் கூறலுக்குமாக இன்னும் காத்திருக்கும் தமிழர்களைக் காக்கவும் இலங்கையில் நிலவும் அச்சுறுத்தல் மற்றும் பொறுப்புக்கூறல் இல்லாமை காரணமாக மனித உரிமை மீறல்கள் அதிகரித்துவரும் அபாயம் குறித்தும், வலுவான நடவடிக்கை எடுப்பதற்குச் சர்வதேச சமூகத்திற்கான தெளிவான நினைவூட்டலாக அமைந்துள்ளது.
நம்பகமான அல்லது பயனுள்ள உள்ளகப் பரிகார முறைமைகள் இல்லாமலிருப்பதை மீண்டும் சுட்டிக்காட்டியுள்ள உயா் ஆணையர், பொறுப்புக்கூறலை முன்னகர்த்துவதற்குச் சர்வதேச மட்டத்திலிருக்கும் தெரிவுகள் மற்றும் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் ஆதியனவற்றையும் கோடிட்டுக்காட்டியுள்ளார்.
2021 நவம்பர் மாதம், சர்வதேசக் குற்றவியல் நீதிமன்ற வழக்குரைஞரிடம், அந்நீதிமன்றச் சட்டக்கோவையின் 15ம் பிரிவின் கீழ், தமிழர் உரிமைக் குழுமம், சமர்ப்பித்த தொடர்பாடலைப் பொறுப்புக் கூறலுக்கான முன்னேற்றமாக, உயராணையரின் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
61. உயர் ஆணையரது அறிக்கையின் 61வது உரையுறுப்பு நம்பகமான அல்லது பயனுள்ள உள்ளகப் பரிகார முறைமைகள் இல்லாத நிலையில், பொறுப்புக்கூறலை முன்னெடுப்பதற்கு சர்வதேச மட்டத்திலும் உறுப்பு நாடுகளிலும் (இலங்கைக்கு வெளியே) சில முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. உதாரணமாக, 2021 அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ரோம சாசனத்தின் 15 வது பிரிவின் கீழ் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் வழக்குரைஞரிடம், இலங்கையில் இழைக்கப்பட்ட, சர்வதேச சட்டத்திற்கெதிரான குற்றங்கள் தொடர்பாக வழக்குரைஞர் தனது அதிகார வரம்பைப் பயன்படுத்த வேண்டும் என்று கோரப்பட்டது. இலங்கை ரோம சாசனத்தில் கையொப்பமிடாத ஒரு அரச தரப்பாக இருந்தபோதும், கூறப்படும் குற்றங்கள் பகுதியளவாக, கையொப்பமிட்டுள்ள பிற அரச தரப்புகளின் பிரதேசங்களில் நடந்ததாக அந்த தகவல் தொடர்புகள் சமர்ப்பிக்கின்றன.
இந்த விரிவான அறிக்கையானது, குற்றங்களுக்கான தண்டனை விலக்கினை உறுப்பு நாடுகள் எதிர்த்துப் போராடுவதற்கான பல்வேறு வழிகளை கோடிட்டுக் காட்டுகிறது.
மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள் உண்மைக்காகவும் நீதிக்காகவும் காத்திருக்கும் வேளையில் தண்டனை விலக்கின்மை தொடர்கிறது என்று உயர் ஆணையர் எடுத்துள்ள முடிவு தவறற்றதாகவே உள்ளது. குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுப்பதில், இலங்கை அரசு தொடர்ச்சியாகத் தவறி வருகிறது, உண்மையில் பொறுப்புக்கூறல் முயற்சிகளை தீவிரமாகத் தடுத்து வருகிறது.
இது கடுமையான குற்றங்கள் மீண்டும் நிகழ்வதற்கான “வளமான தளத்தை” உருவாக்குகிறது என்று உயர் ஆணையர் சரியாக முடிவு செய்துள்ளார்.
உயர் ஆணையரின் விரிவான அறிக்கையில் உள்ள இந்த அழைப்புகளை தமிழர் உரிமைக் குழு ஏற்றுக்கொள்கிறது, மேலும் இலக்கு விதிக்கப்பட்ட தடைகள் விதித்தலை விரிவாக்கம் செய்வதன் மூலம் தண்டனையின்மையை எதிர்த்துப் போராடுதல் சார்ந்து உறுப்பு நாடுகள் செயல்படுவது, சர்வதேச நியாயாதிக்கம் உட்பட குற்றவியல் வழக்குகளில் ஈடுபடுவதற்கு அனைத்து சாத்தியமான அதிகார வரம்புகளையும் பயன்படுத்துவது; மற்றும் சர்வதேச குற்றங்களுக்குப் பொறுப்பானதாகக் கூறப்படும் இராஜதந்திரிகளின் நற்சான்றிதழ்களை மறுப்பது உள்ளடங்கலான அதன் பரிந்துரைகளையும் பகிர்ந்து கொள்கிறது.
தமிழர் உரிமைக் குழுமம் , சா்வதேச குற்றவியல் நீதிமன்ற வழக்குரைஞருக்கான, தனது 15வது பிரிவு தகவல்தொடர்பாடலுக்கு ஆதரவளிக்குமாறு, ரோம சாசனத்தின் கையொப்பதாரராக இருக்கும் உறுப்பு நாடுகளை, வலியுறுத்துகிறது.
உயர் ஆணையரின் அறிக்கை குறிப்பிடுவது போல், எங்கள் தகவல்தொடர்பு பொறுப்புக்கூறலை முன்னேற்றுவதற்கான ஒரு வளர்ச்சியாகும், மேலும் இது, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உறுப்பு நாடுகளால் பரிந்துரைக்கப்படுமானால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இறுதியாக, உறுப்பு நாடுகள், மனித உரிமை மீறல்கள் மற்றும் தொடர்புடைய குற்றங்களுக்கு பொறுப்புக்கூறல் தொடர்பாக மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்திற்கு 46/1 தீர்மானத்தில் வழங்கப்பட்டுள்ள திறனை வலுப்படுத்துதல்; சர்வதேச குற்றங்களுக்கான குற்றவாளிகள் மீதான விசாரணைக்கும், வழக்குத் தாக்கலுக்கும் ஒத்துழைக்கவும்; தொகையான சர்வதேச மனித உரிமை மீறல்கள் அல்லது கடுமையான மனுக்குலத்திற்கெதிரான சட்ட மீறல்களை செய்ததாக நம்பத்தகுந்த வகையில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக சொத்து முடக்கம் மற்றும் பயணத் தடைகள் போன்ற மேலும் இலக்கு விதிக்கப்பட்ட தடைகளை ஆராயவும் கோருகின்ற உயர் ஆணையரின் முடிவுகள் மற்றும் பரிந்துரைகளையும் தமிழர் உரிமைக் குழுமம் வரவேற்கிறது.