NationNewsWorld

UK பிரித்தானியாவில் அம்பிகை செல்வக்குமார் அறப் பயணம் 12 ஆவது நாள்

Hunger-striker Ambihai K Selvakumaran

இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டுவரும் தமிழினத்திற்கு நீதி கோரி திருமதி அம்பிகை செல்வக்குமார் ஆகாரம் உண்ண மறுத்து இன்றுடன் பன்னிரு நாட்களாகின.
இனப்படுகொலையாளர்களை காப்பாற்ற சர்வதேச விசாரணையை நிராகரித்து தொடர்ந்தும் இன அழிப்பை மேற்கொண்டு வரும் இலங்கை அரசுக்கு, மேலும் இன்னுமொரு கால அவகாசத்தை வழங்குவதற்கு பிரித்தானியா இடமளிக்கக்கூடாது உட்பட நான்கு அம்சக்கோரிக்கைகளை முன்னிலைப்படுத்தி, அவற்றை பிரித்தானியா நிறைவேற்றும் வரை நீர் மட்டும் அருந்தி அம்பிகை உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.
உண்ணாமல் இரு வாராங்களை அண்மித்துக்கொண்டிருக்கும் அவரின் உடல் நிலை மிகவும் மோசமடைந்துள்ளது என மருத்துவர்கள் அறிவித்துள்ள போதிலும் கோரிக்கை நிறைவேறும்வரை தனது போராட்டத்தில் உறுதியாக இருக்கும் அவர் அகிம்சை வழியில் உயிர் தியாகிகளான திலீபன், அன்னை பூபதி ஆகியோரை வணங்கி அவர் இன்றைய 12 ஆவது நாளினை தொடர்ந்துள்ளார்.
இந்நிலையில், அம்பிகையின் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் ஒவ்வொரு நாழும் நடைபெறும் மெய்நிகர் எழுச்சி நிழகழ்வு வழமைபோல் இன்று பிரித்தானிய நேரம் பி.ப. 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. மும்மதத் தலைவர்களின் ஆசியுரைகளுடன் ஆரம்பமாகவுள்ள இன்றைய நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள் மற்றும் ஆதரவாளர்களின் சிறப்புரைகளும் எழுச்சி கலை நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன .
இதேவேளை, நேற்றைய 11 ஆவது நாள் மெய்நிகர் நிகழ்வு ஜனார்த குருக்கள் (கந்தசாமி ஆலயம், கனடா) பிரான்ஸிலிருந்து அருட்தந்தை கில்லறி கிறகரி மற்றும் லண்டனிலிருந்து மௌலவி உமர் அலி ஷேக் ஆகிய மும்மத தலைவர்களின் ஆசியுரைகளுடன் ஆரம்பமானதுடன் அம்பிகையின் போராட்டத்திற்கு ஆதரவாக அவுஸ்திரேலிய எம்.பி. DAVID SHOEBRIDGE ( Greens NSW MP, Australia) வெளியிட்ட ஆதரவு அறிக்கை வாசிக்கப்பட்டது.
தொடர்ந்து, தமிழ் மக்களின் விடுதலைக்காகவும் தமிழீழ விடுதலைப்புலிகளின் மீதான தடையை நீக்குவதற்கும் தொடர்ச்சியாக குரல் கொடுப்பவரான Dr. Les Levidow , ஓவியர் புகழேந்தி, இந்தியாவிலிருந்து தமிழ் தேசிய பேரியக்க கட்சியின் தலைவர் மணியரசன் ஆகியோரின் சிறப்புரைகள் திருமதி. திருமகள் பத்மநாதனின் கவிதை (Walthamstow தமிழ் பாடசாலை ஆசிரியர்) கலாலய நாட்டியக்கல்லூரி மாணவிகளின் நடனம் – ஒழுங்கமைத்து வழங்கியவர் திருமதி. சுஜாதா சதீஸ் (திருமதி. அம்பிகை செல்வகுமாரின் மாணவி) ஆகியன இடம்பெற்றன.
இதேவேளை, தொழிற்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ஸ்ரிபன் கினோக் (Shadow Minister, Foreign and CommonwealthAffairs) பிரித்தானியாவின் தலைமையில் மார்ச் 24 ஆம் திகதி ஐ.நா மனிதவுரிமைகள் பேரவையின் ஒப்புதலிற்காக தாக்கல் செய்யப்படவுள்ள இலங்கை மீதான வரைவுத்தீர்மானம் தொடர்பில் தனது அதீத அதிருப்தியையும் வரைவுத்தீர்மானத்தில் உள்ளடக்கப்பட்ட விபரங்கள் தெளிவற்றதாகவும் போதுமானதாகவும் இல்லை எனவும் சுட்டிக்காட்டி ஆசியப்பிராந்தியத்திற்கான அமைச்சரிற்கு (Foreign and Commonwealth Office, UK ) அனுப்பிய கடிதத்தின் கண்ணோட்டமும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!