NationNews

உலகின் மிகப்பெரிய தமிழ் அகராதி

முனைவர் தமிழ்ப்பரிதி மாரி

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் இதழியல், மக்கள் தொடர்பியல் துறையில் துணைப் பேராசிரியராகப் பணியாற்றிவரும் முனைவர் தமிழ்ப்பரிதி மாரி, https://MyDictionary.in/ என்னும் ஒருங்கிணைந்த அகராதியினை (combined dictionary) 65 இலட்சத்திற்கும் மேற்பட்ட சொற்பதிவுகளுடன் கடந்த பத்தாண்டுக்கும் மேற்பட்ட உழைப்பில் உருவாக்கி உள்ளார். தற்போது உலக அளவில் அதிகச்சொற்களுடன் திகழும் முதல் பெரிய தமிழ் அகராதி இந்தத்தளமாகும். உலக அளவில், இணையத்தில் தமிழை அதிகமான சொற்பதிவுகள் கொண்ட முதல் மொழியாக மாற்றும் எதிர்கால நோக்கில் இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திலுள்ள அகராதிகள் அனைத்தும் காப்புரிமை இல்லாமல் (படைப்பாக்கப் பொதும உரிமையில் – creative commons license) வழங்கப்பட்டுள்ளன.
இந்த அகராதித்தளத்திற்கு ”தமிழ்ப்பேழைத் திட்டம்” என்று பெயரிடப்பெற்றுள்ளது. இத்தளத்தில் 150க்கும் மேற்பட்ட துறைகளில் 63க்கும் மேற்பட்ட அகராதிகளின் ஏழு இலட்சம் தலைச்சொற்களும் அதற்குரிய 65 இலட்சத்திற்கும் மேற்பட்ட விளக்கங்களும் அளிக்கப்பட்டுள்ளன. இத்தளத்தின் தேடுபொறியில் ஒரு சொல்லினை அளித்தால் அச்சொல் 63 அகராதிகளிலும் தேடப்பட்டு அதன் அனைத்து விளக்கங்களும் முழுமையாக வருகின்றன. இத்தளத்தில் அறிவியல், பொறியியல், உயிரியல், மருத்துவம், வேளாண்மை, வானியல், கானியல் என 150க்கும் மேற்பட்டத் துறைகளின் சொற்கள் இடம் பெற்றுள்ளன. இத்தளம் தமிழின் இலக்கண, இலக்கிய அகராதிகளையும் ஒருங்கிணைத்துள்ளது. தொல்காப்பியம், அகநானூறு, திருக்குறள், சிலப்பதிகாரம் ஆகிய நூல்களின் சொற்களை அதன் விளக்கத்துடனும் பாடல் எண்களுடனும் ஒருங்கிணைந்த முறையில் தந்துள்ளது.
இத்தளம் தற்போது தேடுபொறிக்கு ஏற்ற வகையில் பழமொழிகள், விடுகதைகள், நூல் தரவுகள், தமிழிதழ்களின் தரவுகள், திரைப்படங்களின் தரவுகளையும் அளித்துள்ளது. இத்தரவுகள் காலவரிசைப்படி அமைந்துள்ளன. இதனால் எந்தத்தரவும் பொருண்மை அடிப்படையில் தேடும் வசதியை இத்தளம் அளித்துள்ளது. இத்திட்டம் இன்னும் மூன்றாண்டுகளில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட தமிழ்ச்சொற்பதிவுகள், 2.5 இலட்சம் பழமொழிகள், முப்பதாயிரம் விடுகதைகள், 4 இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் நூல்களின் தரவுகள், 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ்த் திரைப்படத்தின் தரவுகள், மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் இதழ்கள் போன்றவற்றின் முழு விவரங்களையும் எதிர்காலப் பயன்பாட்டிற்கு உரிய வகையில் எந்திரங்களும் படிக்கும் வகையில் அளிக்க உள்ளது.
ஐம்பது பேர்கள் மூன்று ஆண்டுகளுக்கு முழு நேரமாகப் பணிபுரிந்தால் இணையத்தில் தமிழ் அகராதிகள் முதல் இடத்தினைப் பெறவும் தமிழ் விக்சனரி போன்ற தளங்களில் தமிழ் முதல் இடத்திற்கு வரவும் இத்திட்டம் துணை செய்யும். இத்திட்டம் தன்னார்வளர்கள் சிலரின் நற்கொடையால் உருவாகியுள்ளது. தமிழை இணையத்தில் வலுவான மொழிகளுள் ஒன்றாக செயல்பட்டு வரும் இத்திட்டத்தைச் செயற்படுத்த பத்து கோடிக்கும் மேலனா அளவிலான நிதி தேவைப்படும் என அளவிடப்பட்டுள்ளது. தமிழர்களின் பங்களிப்பால் நடைபெற்றுவரும் இத்திட்டத்திற்கு தங்களால் இயன்ற நிதியை அளித்து இணையத்தில் தமிழ் அகராதிகளை உலக மொழிகளில் முதலிடத்திற்குக் கொண்டுவர உதவுங்கள் தொடர்பிற்கு: முனைவர் தமிழ்ப்பரிதி மாரி, மின்னஞ்சல்:tamil@parithi.org, பேசி: +91-7299397766, இணையம்: https://MyDictionary.in/

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!