NationNews

ஒன்ராறியோ வாகன உரிமத் தட்டுகளைப் புதுப்பிக்கத் தேவையில்லை

Getting your Trinity Audio player ready...

இன்று காதலர் தினம் இனிமையான செய்தி! இனிவரும் காலங்களில் ஒன்ராறியோ வாகன உரிமத் தட்டுகளைப் (Ontario License Plate) புதுப்பிக்கத் தேவையில்லை

மார்ச் 13, 2022 இற்கு முன்னர் உங்கள் பிறந்த நாளுக்கு முன் சில வாரங்களுக்குள் ஒன்ராறியோ அரசிடமிருந்து உங்கள் வாகன இலக்கத் தகட்டின் பதிவைப் புதுப்பித்துக்கொள்ளும்படி ஞாபகமூட்டும் கடிதங்கள் வந்திருக்கும். அப்போது வருடமொன்றுக்கு $120 ஆக ( வட ஒன்ராறியோவில் $60) இருந்த பதிவுக் கட்டணத்தை அறவிடுவது அரசாங்கத்தின் தேவையாக இருந்தது. அதனால் ஞாபகமூட்டுவதும் தேவையாக இருந்தது. மார்ச் 13, 2022 இற்குப் பின்னர் இக்கட்டண அறவீடு ஃபோர்ட் அரசாங்கத்தினால் முற்றாக நீக்கப்பட்டிருந்தது. இதற்குக் காரணம் இந்த $120 கட்டணத்தை அறவிடுவதற்கு அரசாங்கம் அதைவிடக் கூடப் பணத்தைச் செலவிடவேண்டி இருப்பதென அப்போது கூறப்பட்டது.

கட்டண அறவீடு நிறுத்தப்பட்டிருந்தாலும் இந்த வருடா வருட ‘புதுப்பித்தல்’ தொடர்ந்து செய்யப்படவேண்டும் என அரசாங்கம் கூறிவந்தது. அது மட்டுமல்லாது ஞாபகார்த்தக் கடிதங்களை அனுப்புவதையும் அரசு நிறுத்தியிருந்தது. பதியாதவர்கள் காவற்துறையினரிடம் அகப்பட்டால் அதிக பட்சம் $500 வரை தண்டமாகக் கட்ட வேண்டும். கட்டணம் அறவிடும் காலங்களில் பின் வாகன இலக்கத் தகட்டில் ஒட்டுவதற்கென ஆண்டு வரையறையைக் குறிக்கும் அழகான ‘ஸ்டிக்கர்’ காவல்துறையின் கவனத்தை ஈர்ப்பதனால் உரிமையாளர்கள் மறக்காமல் புதுப்பித்துக் கொள்வார்கள். அது இலவசம் என அறிவிக்கப்பட்டவுடன் மறதியைப் பஞ்சி மீறி விடுவதனால் ‘பிடிபட்டால் தானே’ என்ற அசாத்திய துணிச்சலுடன் சிலர் தப்பி வந்தார்கள். ஆனால் நிலைமை அதுவல்ல.

ஜனவரி 2024 வரை மாகாண போக்குவரத்து அமைச்சின் புள்ளி விபரப்படி 1,015,139 வாகனங்கள் பதியப்படாத இலக்கத் தகடுகளுடன் ஓடித்திரிவதாக அறியப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கென்ன பிரச்சினை என ஒருவர் தலையைச் சொரியலாம். காரணம் இதுதான்.

நீங்கள் ஒரு சிவப்பு விளக்கில் வாகனத்தை நிறுத்தியிருக்கிறீர்கள்; பின்னால் ஒரு சொகுசான காவற்துறை வாகனமொன்று இரண்டு கட்டுமஸ்தான காவலர்களுடன் நிற்கிறது. ‘ஒன்றும் பாவித்திராவிட்டால்’ நீங்களும் ஹாயாக கண்ணாடியினூடு பார்த்துவிட்டு உள்ளுக்குள் சிரித்துக்கொள்வீர்கள். ஆனால் அவர்களது வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள காமரா உங்கள் இலக்கத் தகட்டைத் தானியக்க ரீதியில் ‘ஸ்கான்’ செய்து தமது பதிவுக் கோப்பில் ஒப்பிட்டு, உங்களது வாகனம் பதிவுசெய்யப்படாமல் இருக்கும் பட்சத்தில், உடனே ‘டிங்’ அடித்து உங்களைக் காட்டிக்கொடுத்துவிடும் என்பது உங்களுக்குத் தெரியாது. பின்னர் அவ்வாகனத்தின் சிவப்பு வெள்ளை வெளிச்சம் சுழர ஆரம்பிக்கும்போதுதான் உங்கள் சிரிப்பு சிறுத்தப்பட்டு ” அட சனியன் பிடிச்சவங்கள்” என்று உங்கள் உதடுகள் உதிர்க்கும். ஒன்ராறியோ பெருந்தெருக்கள் சட்டத்தின்படி இது ஒரு குற்றமாகையால் காவலர்கள் உங்களுக்குக் குற்றத் துண்டு தரவேண்டியது அரச கடமை. உங்கள் நிறத்தையும், தோற்றத்தையும், வயதையும், பாலையும் அவர்களது நிறங்களையும், வயதுகளையும் பொறுத்து இத் தண்டத் தொகை மாறுபடலாம் எனினும் தண்டம் தண்டம் தான். “சரி அதற்கென்ன. ஞாபகார்த்தக் கடிதம் அனுப்பாதது அரசாங்கத்தின் தவறு” என நீங்கள் வாதாடலாம் என நினைத்தாலும் தொகையையும் கால விரயத்தையும் அனுசரித்துத் தண்டத்தைக் கட்டிவிட்டுப் போய்விடுவீர்கள்.

இப்போ மாகாண அரசு உங்களது தலையிடியிலிருந்து உங்களைக் காப்பாற்றப் போகிறது. அதற்கு உங்களைப் போன்ற 1,015,138 பேர்களின் முறையீடுகள் மட்டும் காரணமென்று நினைத்துக்கொள்ளாதீர்கள். அதற்கு முக்கிய காரணம் அந்த உபாதை தரும் ‘டிங்’ ஒலிகள் என்பது உங்களுக்குத் தெரியாது. ஒன்ராறியோ மாகாண காவற்துறை சார்ஜண்ட் கெறி ஸ்மித் இன் கூற்றுப்படி ஓரிரு நிமிட ஓட்டத்தில் குறந்தது இரண்டு டசின் ‘டிங்’ குகள் ஒலித்துவிடும் என்பதும் சட்டப்படி அத்தனை வாகனங்களையும் தாம் நிறுத்தவேண்டும், குற்றத் துண்டுகளைக் கொடுக்க வேண்டும் என்பதும் அவரது முறைப்பாடு. இம்முறைப்பாடு ட்க் ஃபோர்ட் வரை சென்றுவிட்டது. அதனால் தான் இந்த புதிய அறிவிப்பு. இனிமேல் உங்கள் வாகன இலக்கத் தகடுகள் தாமாகவே புதுப்பித்துக் கொள்ளும்.

ஆனால் அதற்கும் ஒரு சிறிய விதி விலக்கு உண்டு. நீங்கள் எப்போவாவது வேறேதும் காரணங்களுக்காக குற்றத் துண்டுகள் ( traffic tickets) பெற்றிருந்தாலோ அல்லது ஆயக் காசு (toll bills) கட்டாமல் இருந்தாலோ உங்கள் இலக்கத் தகடுகள் தாமாகவே புதுப்பிக்கப்பட மாட்டா. அதாவது வாகனத்தைப் பொறுத்தவரை நீங்கள் ‘பொறுப்புள்ள’ ஒருவராக இருந்திருப்பது அவசியம் என்கிறது வரப்போகும் இப்புதிய சட்டம்.

இப்போ மாகாண அரசியல்வாதிகள் தமது வழமையான நீண்ட விடுமுறையில் நிற்கிறார்கள். அவர்கள் அரசவைக்கு மீண்டதும் உடனடியாக இவ்விடயம் கவனத்துக்குக் கொண்டுவரப்படும் என்கிறார் டக் ஃபோர்ட்

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!