NationNews

தமிழரசுக் கட்சியின் இரா.சம்பந்தன் காலமானார் – TNA leader R.Sampanthan passes away

Getting your Trinity Audio player ready...

இராஜவரோதயம் சம்பந்தன் அவர்கள் தனது 91 வது வயதில் இன்று காலமானர்-Rajavarothayam Sampanthan, 05/02/1933 – 30/06/2024

இலங்கைத் தமிழரசுக் கட்சி முன்னாள் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன்-Rajavarothayam Sampanthan, 05/02/1933 – 30/06/2024

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இராஜவரோதயம் சம்பந்தன் தனது 91 ஆவது வயதில் காலமானார்.

உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், அவர் 30 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தினர்.

1933 ஆம் ஆண்டு பெப்ரவரி 5 ஆம் திகதி பிறந்த சம்பந்தன் இயற்கை எய்தும் போது அவருக்கு 91 வயதாகும்.

இராஜவரோதயம் தம்பதியினரின் புதல்வராக திருகோணமலையில் பிறந்தார்.

1956 ஆம் ஆண்டு இலங்கை தமிழரசுக் கட்சியில் இணைந்தார். 1963 மற்றும் 1970 ஆம் ஆண்டுகளில் தமிழரசு கட்சியின் தலைவர் எஸ்.ஜே. வி செல்வநாயகம் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு வழங்கியபோதும், அவர் அதனை ஏற்கவில்லை.

1977 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் திருகோணமலைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று பாராளுமன்ற உறுப்பினரானார்.

1983 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பாராளுமன்றத்தைப் புறக்கணித்தனர். 1983 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஜூலை கலவரத்திற்கு எதிர்ப்பை தெரிவித்து மூன்று மாதங்களுக்கு மேல் பாராளுமன்ற அமர்வுகளை புறக்கணித்ததால், சம்பந்தன் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை 1983 செப்டம்பர் 7 இல் இழந்தார்.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் இணைப் பொருளாளர், உப தலைவர் மற்றும் பொதுச் செயலாளராகவும் சம்பந்தன் பதவி வகித்திருந்தார்.

2001 ஆம் ஆண்டு சம்பந்தனின் அரசியல் வாழ்வில் மற்றுமொரு மைல் கல்லாக அமைந்தது. 2001 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் களம் இறங்கிய அவர் 18 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டார்.

2004 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் தமிழ் அரசுக் கட்சியின் கீழ் போட்டியிட்டு அந்த கட்சியினை வழிநடத்தும் பொறுப்பினையும் அவர் ஏற்றார். 2004, 2010 ஆகிய இரண்டு பொதுத் தேர்தல்களிலும் திருகோணமலை மாவட்ட மக்களின் அமோக ஆதரவுடன் சம்பந்தன் வெற்றி பெற்றிருந்தார்.

2014 ஆம் ஆண்டு இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமை பதவியை மாவை. சேனாதிராஜாவிடம் ஒப்படைத்தார். எனினும், தொடர்ந்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் அனுபவமிக்க மூத்த உறுப்பினராக செயற்பட்டார். கடந்த பொதுத் தேர்தலிலும் கட்சியினை வெற்றி பாதையில் வழிநடத்திச் சென்று 16 ஆசனங்களை பெற்றுக் கொடுத்தார்.

சம்பந்தன், 2015 முதல் 2018 வரை எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகித்தார். 2015 தேர்தலில் முக்கிய கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி முறையே 106 மற்றும் 95 ஆசனங்களை கைப்பற்றியதால், இவை இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைத்தன. இதனால், 16 ஆசனங்களைக் கைப்பற்றி மூன்றாவது இடத்தில் இருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், 2015 செப்டம்பர் 3 முதல் 2018 டிசம்பர் 18 வரை இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவராகப் பதவி வகித்தார்.

இலங்கை வரலாற்றில் இரண்டாவது முறையாக தமிழர் ஒருவர் பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர் 1977 ஆம் ஆண்டு அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் இந்த பதவியை வகித்தார்.

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!