NationNews

Toronto – வாடகைக் குடியிருப்பாளர்களை வீட்டுரிமையாளர்கள் எழுப்புவதைத் தடுக்க

Getting your Trinity Audio player ready...

ரொறோண்டோ மாநகரசபை முறையற்ற காரணங்களைக் காட்டி வாடகைக் குடியிருப்பாளர்களை வீட்டுரிமையாளர்கள் எழுப்புவதைத் தடுக்க புதிய சட்டமொன்றை இயற்றுவதற்கு ஆலோசனை செய்து வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் ஹமில்டன் நகரசபையினால் நடைமுறைப்படுத்தப்பட்ட சட்டத்தைபோல் இங்கும் ஒரு சட்டத்தை இயற்றலாமா என ஆராயும்படி ரொறோண்டோவின் திட்டமிடல் மற்றும் வீடமைப்பு ஆணையம் நகரசபை அதிகாரிகளுக்கு ஆணை விடுத்திருந்தது.

சில வீட்டுரிமையாளர்கள் தமது வீடுகளை பாரிய முறையில் செப்பனிட வேண்டும் (extensive renovations) என்ற போலியான காரணங்களைக் காட்டி ஏற்கெனவே இருக்கும் வாடகைக் குடியிருப்பாளர்களை எழுப்பிவிட்டுப் பின்னர் அதிக வாடகைக்கு புதிய குடியிருப்பாளர்களை அமர்த்துகிறார்கள் என்று பல முறைப்பாடுகள் கிடைத்ததன் விளைவாக ஹமில்டன் நகரசபை இச்சட்டத்தை நடைமுறைப்படுத்தியது. ஜனவரி 2024 இல் ஹமில்டன் நகரசபை அறிமுகப்படுத்திய செப்பனிடும் அனுமதி மற்றும் வாடகைக் குடியிருப்பாளர் இடமாற்றம் என்ற உபவிதியின்படி, வீட்டுரிமையாளர் ஒருவர் வாடகைக் குடியிருப்பாளரை எழுப்புவதற்கு முன்னர் (renoviction), வீட்டைச் செப்பனிடுவதற்கு நகரசபையிடமிருந்து செப்பனிடுவதற்கான உத்தரவைப் பெறும் விண்ணப்பமொன்றைச் செய்து அனுமதியையும் பெற்றிருக்க வேண்டும். இதன் பின்னர் தான் அவர் வாடகைக் குடியிருப்பாளரை எழுப்புவதற்கான அறிவித்தலை (N13s) குடியிருப்பாளருக்கு வழங்க முடியும்.

ரொறோண்டோவிலும் இப்படியான காரணமற்ற வகையில் வாடகைக் குடியிருப்பாளர்கள் எழுப்பப்படுகிறார்கள் என்ற முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதைத் தொடர்ந்து, ஹமில்டன் நகரசபையின் இச்சட்டத்தைப் பின்பற்ற ரொறோண்டோ மாநகரசபையும் உத்தேசித்து வருகிறது.

இந்தச் சட்டத்தின்படி, வீடொன்றைப் பாரிய முறையில் செப்பனிட வீட்டுரிமையாளர் ஒருவர் உத்தேசித்து விண்ணப்பம் செய்தால், அவர் செய்யப்படவிருக்கும் வேலைகள் பற்றிய விபரமான தகவல்களுடன், அவ்வீடு ‘குடியிருக்கத் தகுதியற்றது’ என அனுமதி பெற்ற பொறியியலாளர் வழங்கிய உத்தரவாதப் பத்திரத்தையும் இணைத்து நகரசபைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

ஹமில்டன் நகரசபையின் புதிய சட்டத்தின்படி, குடியிருப்பாளர்களை எழுப்புவதற்கு முதல், அவருடைய உரிமைகள் என்ன என்ற விளக்க அறிக்கையுடன் வீட்டுரிமையளரின் கோரிக்கையை மறுதலிக்கும் முதல் உரிமை (first right of refusal) குடியிருப்பாளருக்கு வழங்கும் அறிவிப்பும் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஹமில்டன் நகரசபையின் இந்த புதுமையான சட்டத்தை ரொறோண்டோ மாநகரசபையின் அதிகாரிகளும் வெகுவாக வரவேற்றிருப்பதாகவும், விரைவில் இது சட்டமாக்கப்படும் சாத்தியமுண்டெனவும் கூறப்படுகிறது.

2023 இல் மட்டும் ரொறோண்டோவில் வாடகை அதிகரிப்பு 40% வரை சென்றிருக்கிறது. பெரும்பாலான இவ்வதிகரிப்புகள் மாகாண, மாநகரசபை சட்டங்களில் இருக்கக்கூடிய ஓட்டைகளைப் பயன்படுத்தியே செய்யப்பட்டுள்ளன என வீட்டுரிமை செயற்பாட்டாளர்கள் கூறிவருகின்றனர்.

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!