NationNews

WikiLeaks : ஜூலியன் அஸாஞ்ஜ் பிரித்தானிய சிறையிலிருந்து விடுவிப்பு

விக்கிலீக்ஸ்: ஜூலியன் அஸாஞ்

விக்கிலீக்ஸ் துணை நிறுவனர் ஜூலியன் அசாஞ்ஜ், கடந்த 5 வருடங்களாக பிரித்தானியாவின் பெல்மார்ஷ் சிறையில் இருந்தார். அமெரிக்காவுடன் சமரச உடன்பாட்டை எட்டியதையடுத்து நேற்று (செவ்வாய்) விடுதலையானார். அமெரிக்க இரகசிய உளவுத் தகவல்களை விக்கிலீக்ஸ் மூலம் உலகுக்கு அம்பலப்படுத்தியதற்காக அவர் மீது 18 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அவரை அமெரிக்காவிற்கு நாடுகடத்தும்படி பிரித்தானியாவை அமெரிக்கா வற்புறுத்தியது. நாடுகடத்தப்படுவதால் உயிருக்கு ஆபத்து எனக்கூறி உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான மக்கள் தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தினர். அவரின் மனைவியும் ஆதரவாளர்களும் பிரித்தானிய நீதிமன்றங்களில் மேன்முறையீடுகள் செய்தனர்.

பெல்மார்ஷ் சிறை ஒரு உயர் பாதுகாப்பு சிறை என்பதால், அங்கு 2 x 3 மீட்டர் அளவுள்ள அறையில் அவர் 1901 நாட்கள் சிறைக்காவலில் இருந்தார். அவருக்கு நாளொன்றுக்கு 1 மணி நேரம் மட்டுமே வெளியே வர அனுமதி இருந்தது.

நாடுகடத்தல் தொடர்பான அமெரிக்கா-பிரித்தானிய பேச்சுவார்த்தை இன்னும் முற்றுபெறவில்லை என்றாலும், இரு தரப்பும் உடன்பாட்டை எட்டியதால் அவர் விடுதலையானார். விக்கிலீக்ஸ் ஸ்தாபனம் அவரது விடுதலையில் பங்கெடுத்த அனைவருக்கும் X செய்தி சேவை மூலம் நன்றி தெரிவித்துள்ளது.

அமெரிக்க பசிபிக் தீவுகளில் உள்ள வட மரியானா தீவின் சேப்பியன் நகரில் உள்ள அமெரிக்க நீதிமன்றத்தில் புதன்கிழமை காலை 9:00 மணிக்கு அவர் தனது குற்றங்களை ஒப்புக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து அவர் தனது பிறந்த நாடான ஆஸ்திரேலியாவிற்கு திரும்புவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

அசாஞ்ஜின் காலத்தில் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போர்கள் தொடர்பாக அமெரிக்கா பரிமாறிய உயர் இரகசிய உளவுத் தகவல்களை மற்றும் அமெரிக்க ராஜதந்திரிகள் வெவ்வேறு நாடுகளிலிருந்து மேற்கொண்ட இரகசியத் தொடர்பாடல்களை விக்கிலீக்ஸ் மூலம் அம்பலப்படுத்தினார். 2007 இல் ஈராக்கில் பொதுமக்கள் மீது அமெரிக்க ஹெலிகொப்டர் தாக்குதல் நடத்தியதை விக்கிலீக்ஸ் வெளியிட்டது, இதனால் அமெரிக்கா அவரை கைது செய்ய பல முயற்சிகள் மேற்கொண்டது.

அமெரிக்காவின் அச்சுறுத்தலால், பிரித்தானிய அரசு அவரை நாடுகடத்திவிடக்கூடும் என்ற பயத்தில் எக்குவடோர் நாட்டின் பிரித்தானிய தூதரகம் அவருக்கு அடைக்கலம் கொடுத்தது. ஏழு வருடங்கள் அங்கு மறைந்திருந்த அவர், 2019 இல் எக்குவடோர் அரசு அவரது அடைக்கலத்தை ரத்து செய்ததால் வெளியேற்றப்பட்டார். பிணையை உதாசீனம் செய்ததற்காக பிரித்தானிய அரசு அவரை கைது செய்து சிறையில் அடைத்தது, அமெரிக்காவிற்கு நாடுகடத்துவதற்கான முயற்சிகளையும் தொடங்கியது. தமிழ் பாடகி மாதங்கி அருட்பிரகாசம் உட்பட பல பிரித்தானிய மனித உரிமை செயற்பாட்டாளர்கள், ஆதரவாளர்கள் இவரின் விடுதலைக்காக போராட்டங்களை நடத்தினர். அவர் சிறையில் இருக்கும் போது மணம் புரிந்த மனைவியும் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தார்.

லண்டனிலுள்ள பெல்மார்ஷ் சிறை சித்திரவதைக்குப் பெயர் பெற்றது என்பதால், அங்கு நீண்ட நாட்கள் இருந்தால் அவர் நோய்வாய்ப்பட்டு இறந்திருக்கக்கூடும் என அவரது வழக்கறிஞர்களும் ஆதரவாளர்களும் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!