NationNewsWorld

கனடிய சீக்கிய தலைவரின் கொலைக்கு இந்தியா காரணம்

கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்றூடோ குற்றச்சாட்டு. கனடிய சீக்கிய தலைவரின் கொலைக்கு இந்தியா காரணம்

ஹர்தீப் சிங் நிஜ்ஜார் (Hardeep Singh Nijjar, 11 அக்டோபர் 1977 – 18 சூன் 2023) என்பவர் காலிஸ்தான் இயக்கத்துடன் தொடர்புடைய இந்திய-கனடிய சீக்கிய பிரிவினைவாதி ஆவார். நிஜ்ஜார் இந்திய அதிகாரிகளால் தேடப்பட்டவராகவும், இந்தியாவின் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டவரும் ஆவார்.

கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்றூடோ குற்றச்சாட்டு. கனடிய சீக்கிய தலைவரின் கொலைக்கு இந்தியா காரணம்

ஜூன் 18, 2023 அன்று சறே, பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள சீக்கிய கலாச்சார மையமொன்றில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்ட காளிஸ்தான் பிரிவினைவாதத் தலைவர் ஹார்டீப் சிங் நிஜாரின் கொலைக்குப் பின்னால் இந்திய உளவுப் பிரிவு இருக்கலாம் என கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்றூடோ தெரிவித்த கருத்துக்கள் இந்திய-கனடிய உறவில் பாரிய விரிசலை உண்டாக்கியிருக்கிறது. இதன் விளைவாக உயர் நிலை இந்திய ராஜதந்திரி ஒருவரை கனடா வெளியேற்றியுள்ளது.

இக்குற்றச்சாட்டை மறுத்த இந்திய வெளிவிவகார அமைச்சு “பிரதமர் ட்றூடோவின் இக் குற்றச்சாட்டு நகைப்புக்கிடமானது. ஆதாரமற்ற இப்படியான குற்றச்சாட்டுகள் கனடாவின் பாதுகாப்புடன் உலாவித் திரியும் காளிஸ்தான் பயங்கரவாதிகள் மற்றும் தீவிரவாதிகள் மீதான கவனத்தைத் திசை திருப்பும் முயற்சி. இந்தியாவின் இறைமைக்கும் பிரதேச ஒற்றுமைக்கும் பங்கம் விளைவிக்கும் பிரிவிநைவாதிகளின் நடவடிக்கைகள் தொடர்பாக கனடா அக்கறைப்படாமலிருப்பது குறித்து இந்தியா கவலை கொள்கிறது” என அறிக்கை வெளியிட்டுள்ளது.

சமீபத்தில் இந்தியாவில் நடந்து முடிந்த G20 மாநாட்டின் போதும் பிரதமர் ட்றூடோ இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் இதே போன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். நேற்று (18) அன்று உயர்தர இந்திய ராஜதந்திரி ஒருவரை வெளியேற்றுவதாக கனடிய வெளிவிவகார அமைச்சர் மெலனி ஜோலி அறிவித்ததைத் தொடர்ந்து இந்தியா இவ்வறிக்கையை வெளியிட்டுள்ளது.

காளிஸ்தான் பிரிவினைவாதிகளின் தீவிர ஆதரவாளரான நிஜாரின் கொலைக்குப் பின்னால் இந்திய அரசு இருக்கலாம் எனவும் இது குறித்து கனடிய உளவு நிறுவனங்கள் விசாரணை செய்து வருவதாகவும் பிரதமர் ட்றூடோ பாராளுமன்றத்தில் பேசும்போது ஐயம் தெரிவித்திருந்தார்.

ஹார்டீப் சிங் நிஜார்
இவ்விடயத்தில் இந்திய அரசின் பங்கு ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும் இது தொடர்பான விசாரணைகளில் இந்திய அரசு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் எனவும் G20 சதிப்பின்போது தான் பிரதமர் மோடியைக் கேட்டுக்கொண்டதாக பிரதமர் ட்றூடோ பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து இந்திய தூதரகத்தில் பணியாற்றிய இந்திய உளவுப் பிரிவின் தலைவரை கனடிய வெளிவிவகார அமைச்சர் நாட்டைவிட்டு வெளியேற்றியிருந்தார். இது தொடர்பாக இந்திய – கனடிய உறவு பெரும் விரிசலைக் கண்டுள்ளதுடன் வருட முடிவில் கனடாவிலிருக்கு இந்தியாவுக்குச் செல்லவிருந்த வர்த்தக தூதுக்குழுவின் விஜயம் நிறுத்தப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் வாழும் சீக்கியர் மத்தியில் செல்வாக்குப் பெற்றுள்ள பஞ்சாப் சுதந்திர இயக்கம் போன்றவற்றைக் கனடா கையாளும் விதம் குறித்து தான் அக்கறை கொண்டுள்ளதாக G20 சந்திப்பின்போது கனடியப் பிரதமரிடம் பிரதமர் மோடி முறையிட்டிருந்தார்.

கனடிய பிரஜை ஹார்டீப் சிங் நிஜாரின் கொலையுடன் இந்திய உளவுப் பிரிவிற்குத் தொடர்புகள் இருப்பதாக எழுந்த சந்தேகங்களைத் தொடர்ந்து கடந்த சில வாரங்களாக கனடிய உளவு நிறுவனங்கள் விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றன. அதே வேளை இவ்விடயம் தொடர்பாக கனடா தனது நட்பு நாடுகளுடனும் ஆலோசனைகளை நிகழ்த்திவருகிறது.

கனடிய பிரஜை ஒருவரை கனடிய மண்ணில் வைத்து கொலைசெய்வதில் இன்னுமொரு அரசாங்கத்தின் பங்கு இருப்பதென்பது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது எனக்கூறி தனது கடுமையான முறைப்பாட்டை பிரதமர் மோடியிடம் முன்வைத்ததாகவும் இவ்விடயத்தில் கனடாவுக்கு இந்தியா ஒத்துழைப்பு வழங்கவேண்டுமெனவும் பிரதமர் ட்றூடோ மோடியிடம் கேட்டிருந்தார்.

இந்தியா செல்லும் கனடியப் பயணிகளுக்கு கனடா எச்சரிக்கை

கனடா – இந்தியா நாடுகளிடையே ஏற்பட்டுள்ள இந்த முறுகல் நிலை முற்றிவரும் நிலையில் இன்று (செவ்வாய்) கனடாவின் உயர் ராஜதந்திரியை இந்தியா வெளியேற்றியுள்ளது. கனடிய பிரதமரால் இந்தியா மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை மறுத்த இந்தியா இந்நடவடிக்கையை எடுத்துள்ளது. இதனையடுத்து இந்தியாவுக்குச் செல்லும் கனடியப் பயணிகளை எச்சரிக்கையாக இருக்கும்படி கனடா எச்சரிக்கை விடுத்துள்ளது.

இவ்விடயம் தொடர்பாக பிரதமர் ட்றூடோ அமெரிக்க ஜனாதிபதி பைடன் மற்றும் பிரித்தானிய பிரதமர் ரிஷி சூனாக் ஆகியோருடனும் கலந்துரையாடியுள்ளார். இருப்பினும் இந்திய ராஜதந்திரி வெளியேற்றம் தொடர்பாக அமெரிக்கா அதிர்ச்சியைத் தெரிவித்துள்ளது.

யாரிந்த நிஜார்?

கனடாவில் சீக்கிய சமூகத்தினர் சுமார் 700,000 பேர் வசிக்கிறார்கள். சமீப காலங்களில் காளிஸ்தான் பிரிவினைவாதிகள் கனடாவில் தமது நடவடிக்கைகளை விரிவுபடுத்தி வருகின்றனர். சீக்கிய தாயகத்தை நிர்மாணிக்க முயலும் காளிஸ்தான் இயக்கத்தின் முக்கியஸ்தர்களில் ஒருவர் நிஜார். காளிஸ்தான் இயக்கம் இந்தியாவில் தடைசெய்யப்பட்ட ஒன்று. மூன்று வருடங்களுக்கு முன்னர் இந்தியா நிஜாரைப் பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்த்திருந்தது. கொலை செய்யப்படுவதற்கு முன் 45 வயதுடைய நிஜார் இந்தியாவில் உத்தியோகபூர்வமற்ற கருத்துக்கணிப்பொன்றை ஒழுங்கு செய்திருந்தார் எனக் கூறப்படுகிறது. ஜூன் 18, 2023 அன்று வான்கூவர் மாகாணத்திலுள்ள சறே என்னும் நகரில் ஒரு சீக்கிய கோவிலுக்கு வெளியே வைத்து சுட்டுக் கொலைசெய்யப்பட்டிருந்தார்.

sources: marumoli

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!