NationNews

பேச்சுச் சுதந்திரத்தின் மீதான அரசாங்கங்களின் கட்டுப்பாடுகள் களையப்படவேண்டும்

Getting your Trinity Audio player ready...

சர்வதேச மனித உரிமைகள் பிரகடனத்துக்கு (Universal Declaration of Human Rights) முரணாக அரசுகள், அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் சமூக ஊடக நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து ‘பொய்த் தகவல்’ என்ற பெயரில் பேச்சு, எழுத்துச் சுதந்திரத்தை நசுக்குகின்றன என உலகத்தின் பிரபல கல்விமான்கள், செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் போன்ற 130 க்கும் மேற்பட்ட பெருமக்கள் திறந்த கடிதம் ஒன்றின் மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வெஸ்ட்மின்ஸ்டர் பிரகடனம்’ (Westminster Declaration) என்ற பெயரில் நேற்று (அக்டோபர் 18) வெளியிடப்பட்ட இவ்வறிக்கையில் பிரபல ஊடகவியலாளர்களான மற் ராய்பி, கிளென் கிரீன்வால்ட் மற்றும் ஜூலியன் அஸாஞ்; உளவியல் நிபுணர்களான ஸ்டீவன் பிங்கெர் மற்ரும் ஜோர்டன் பீற்றர்சன்; நடிகர்கள் ரிம் றொபின்ஸ் மற்றும் ஜோன் கிளீஸ் உள்ளிட்ட 130 க்கும் மேற்பட்ட உலகப் பெருமக்கள் கையெழுத்திட்டுள்ளார்கள்.

“இடது, வலது, மத்தி என அனைத்துத் தரப்புகளிலுமிருந்தும் நாம் ஒன்றுகூடி பேச்சுச் சுதந்திரம் மற்றும் உலகளாவிய மனித உரிமைகளூக்காக எம்மை அர்ப்பணிப்பதோடு ‘பொய்த் தகவல்கள்’, ‘கட்டுக்கதைகள்’ மற்றும் வரையறைக்கப்பாற்பட்ட சொல்லாடல்களில் எமது கருத்துக்களை நாமமிட எடுக்கப்படும் முயற்சிகள் பற்றி நாம் மிகவும் ஆழ்ந்த கவலையுற்றுள்ளோம்” என அக்கடிதத்தில் இக்குழு குறிப்பிட்டுள்ளது.

பிரித்தானியாவின் ‘வலைத்தளப் பாதுகாப்புச் சட்டம் (Online Safety Bill) மற்றும் அயர்லாந்து, ஸ்கொட்லாந்தில் கொண்டுவரப்படும் ‘வெறுப்பேற்றும் பேச்சுச் சட்டம்” (Hate Speech Bill) ஆகியன பேச்சுச் சுதந்திரத்தை மழுங்கடிக்கவென அரசுகள் முன்னின்று எடுக்கும் முயற்சிகள் எனவும் அரசுகளுக்காகவும் அரசு சாரா நிறுவனங்களுக்காகவும் சமூக வலைத் தளங்கள் உண்மையான தகவல்களை வடிகட்டியும், அவப்பெயரிட்டும், தடைசெய்தும் செயற்படுகின்றன என இக்கடிதத்தில் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பேச்சு, எழுத்துச் சுதந்திரம் தணிக்கை செய்யப்படுவது பற்றி சென்ற வருடம் வெளியான ‘ருவிட்டர் ஃபைல்ஸ்’ என்ற பிரசுரத்தில் இலான் மஸ்க் வாங்கி X எனப் பெயர் மாற்றிய ருவிட்டர் நிறுவனம் எப்படி வெள்ளை மாளிகையுடன் சேர்ந்து கோவிட்-19 பற்றிய நிரூபிக்கப்பட்ட தகவல் ஒன்றைத் தணிக்கை செய்தது; செய்தியொன்றை அமெரிக்க உளவு நிறுவனமான எஃப்.பி.ஐ. கேட்டுக்கொண்டதற்கிணங்க இருட்டடிப்புச் செய்தது; அமெரிக்க இராணுவத்தின் சமூக வலைத்தளப் பிரச்சாரங்களுக்கு உதவி செய்தது; அமெரிக்க உளவு நிறுவனங்களுக்காக யூக்கிரெய்னுக்கு எதிரான கருத்துக்களைத் தணிக்கை செய்தது ஆகியன பற்றி விரிவான விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

கருத்துக்களைத் தணிக்கை செய்யும்படி அரசுகள் தாமாக முன்வந்து சமூக வலைத்தளங்களைக் கேட்காமல் அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் கல்விமான்களைக் கொண்டு இவற்றைச் சாதித்தன என ‘ருவிட்டர் ஃபைல்ஸ்’ குறிப்பிடுகிறது. ‘உண்மையான தகவல்கள் மக்களைத் கோவிட் தடுப்பூசி போடாமல் தடுத்துவிடும்’ எனக்கூறி 2021 இல் சீ.ஐ.ஏ., பெண்டகன், ராஜாங்கத் திணைக்களம் போன்ற பல நிறுவனங்கள் ருவிட்டர் நிறுவனத்துக்கு அழுத்தம் கொடுத்தன என ‘ருவிட்டர் ஃபைல்ஸ்’ மேலும் குறிப்பிடுகிறது.

“தமது மனங்களைத் திறந்து கருத்துக்களை வெளியிட அச்சப்படும் ஒரு உலகில் எமது குழந்தைகள் வாழும் நிலை ஏற்படக்கூடாது. தமது கருத்துக்களை வெளியிட்டு, ஆராய்ந்து, வெளிப்படையாக விவாதிக்கக்கூடிய ஒரு உலகில் அவர்கள் வாழவேண்டும்; ஜனநாயகத்தை ஸ்தாபித்த எமது மூதாதையர் பேச்சுச் ச்சுதந்திரம் அரசியலமைப்பில் சட்டமாக வரிக்கப்படவேண்டுமென நிர்ப்பந்தித்தனர்” என ‘வெஸ்ட்மின்ஸ்டர் பிரகடனம்’ குறிப்பிடுகிறது.

சர்வதேச மனித உரிமைகள் பிரகடனத்தின் 19 ஆவது கட்டளையின் பிரகாரம் அரசாங்கங்களும், சமூக வலைத்தள நிறுவனங்களும் ஒழுக வேண்டும் என இக்கடிதத்தில் கோரிக்கை விடப்பட்டுள்ளது. “தமது கருத்தைச் சுதந்திரமாக வெளிப்படுத்துவதற்கும் அவை எந்த வகையான ஊடகங்களாக இருப்பினும் அவற்றிலிருந்து விடயங்களைத் தடைகளின்றித் தேடவோ, பெற்றுக்கொள்ளவோ அல்லது தத்தம் அபிப்பிராயங்களைக் கொண்டிருக்கவோ ஒவ்வொருவருக்கும் உரிமையுமண்டு” என சர்வதேச மனித உரிமைகள் பிரகடனம் கூறுகிறது.

மொத்தத்தில் தற் தணிக்கை செய்யும்படி கொடுக்கப்படும் அழுத்தங்களை நிராகரித்து பேச்சுச் சுதந்திரத்துக்கான உரிமையைப்பாதுகாக்கும் ஒரு சூழலைக் கட்டியெழுப்ப பொதுமக்கள் முன்வரவேண்டும் என இத் திறந்த கடிதத்தில் உலகப் பெருமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!