Nationகட்டுரைகௌசி

ஆணே உன் கதி இதுதானா?

சந்திரகௌரி சிவபாலன் (கௌசி) ஜெர்மனி

பகலவன் கடமையைப் பங்கேற்றுக் கொண்ட வீதிவிளக்குகள், அசைவின்றி அமைதியைப் பேணிப் பாதுகாக்கும் சாலையோர மரங்கள், வியாபாரநிலையங்களின் விடிவிளக்குகள் மட்டுமே தமது கடமையைப் பங்கேற்றுக் கொண்ட மாலைப்பொழுது, உலகமே உறங்கிக் கொண்டிருக்கும் ஆரவாரமில்லாத மாரிகாலப் பொழுது. வெள்ளைப்பனியில் ஜேர்மனி மூழ்கிக் கிடக்கும் – 14 பாகை கடுங்குளிர். ஆனால், அவள் மட்டும் சாளரம் நடுவே  சாலையை நோக்கியவண்ணம் நின்று கொண்டிருந்தாள். அவள்தான் சாரதா. தொடர் மாடி வீட்டின் இடையில் ஒரு வீடு. யாருமின்றி தனிமையில் நாள் முழுவதையும் கழிய விட்ட களைப்பு. கண்கள் மூடத் துடிக்கின்றன. ஆனால், அவளுக்கு கணவனை எண்ணிக் காத்திருப்பதும் ஒரு சுகம். கணவன் வரும் நேரமாகிவிட்டது. புதிதாகத் திருமணம் செய்து வந்திருக்கின்றாள் அல்லவா! தலைமயிரைச் சரி செய்து கொண்டாள். கண்ணாடிக்கு முன் நின்று சிரித்துப் பார்க்கின்றாள். சிரிக்காமல் நின்று பார்க்கின்றாள். எது அழகானது! முடிவாக சிரிப்பதுதான் என்று முடிவெடுத்து விடுகின்றாள். திரும்பவும் அந்த சாளரம். ஒரு வெளிச்சம் வீடு நோக்கி வருகின்றது. மெல்லத் தன்னுடைய சாளரத்து துணியை அகற்றிப் பார்க்கின்றாள். பத்மன் தான். மணி இரவு பன்னிரெண்டை வழியனுப்பி வைத்திருந்தது. அயலவர் ஆழ்ந்த உறக்கத்திற்குத் தன் காலடிஓசை தகராறு செய்யக்கூடாது என்பதற்காக வாடகை வீட்டின் படிகளில் மெல்ல மெல்லத் தாண்டித் தாண்டித் தன் வாசல் கதவை மெதுவாய்த் திறந்தான், பத்மன்.

ஜேர்மனியில் பகல் 1.00 மணியில் இருந்து 3.00 மணி வரையும் இரவில் சில நகரங்களில் 21.00 மணியிலிருந்து அடுத்த நாள் காலை 6.00 மணி வரையிலும் சில22.00 மணியிலிருந்து அடுத்த நாள் காலை 6.00 மணி வரையிலும் சத்தம் செய்தல் கூடாது. ஞாயிற்றுக் கிழமைகளில் முழுநாளும் சத்தம் இல்லாத நாளாக அமைதியைக் கடைப்பிடிக்க வேண்டும். இதுவே சட்டமாக இருக்கின்றது. சனிக்கிழமைகளில் 23.00 மணி வரை பிரச்சினை இல்லை. ஆனால், குடியிருப்பிற்கு அருகிலுள்ள குடியிருப்பாளர்களிடம் முன்னமே அறிவித்து இருக்க வேண்டும். அதனால் தான் வசிக்கும் வீட்டிற்கு அருகிலுள்ள குடியிருப்பாளர்கள்  வீட்டில் தன் காலடிச்சத்தம் இடைஞ்சல் செய்யக் கூடாது என்பதற்காக மெல்லென வீட்டினுள் பத்மன் நுழைந்தான்.

இனிமையான இளமைப் பருவங்கள் கடமைச் சுமையால் கரைந்தோட, காதோரம் வெள்ளிக் கம்பிகள் அவதாரம் செய்ய, நாற்பத்து நான்கு வயதில் பத்மனுக்குத்  தன் மூளையில் தட்டியது தனக்கென்று ஒரு துணை தேவை. இதைக் கருத்தில் கொண்டே சாரதா என்ற துணையை இலங்கையில் இருந்து வரவழைத்தான்.  பல எதிர்பார்ப்புக்களுடன் ஜெர்மன் மண்ணில் கால் பதித்தாள் சாரதா. வெளிநாட்டு ஆசை எதுவுமில்லாது வாழ்ந்த சாரதாவுக்கு சந்தர்ப்ப வசத்தினால் பத்மனைத் திருமணம் செய்யவேண்டிய சூழல் ஏற்பட்டது. வாழ்க்கையை நாம் எழுதுகின்றோமா? அதுவாகவே சில விடயங்கள் அமைகின்றன. அதுபோலவே பத்மனும் ஆர்ப்பாட்டம் இல்லாது ஆலயத்தில் ஆதரவான சில நண்பர்கள் ஆசீர்வாதத்துடன் மங்கலநாணைத் தன் மனைக்கும் மனதுக்கும் சொந்தக்காரிக்கு அணிவித்தான். அவளும் அவன் மனதுக்குப் பிடித்த பெண்ணாய் அன்போடு வாழ்கின்றாள்.

இன்னும் அவனுக்கு இரவே பகல், பகலே இரவு. பகலில் ஒரு நிறுவனத்தில் வேலை முடித்து அங்கிருந்த  உணவகத்தில் சமையல் பாத்திரங்களைக் கழுவித் துப்புரவு செய்யும் தொடர் பணியை முடித்து இரவு முடியும் அதிகாலைப் பொழுது தன் ஓய்வுக்காக வீட்டை அண்மிப்பான். அவ்வேளை வரை அவனுக்காக உறங்காது விழித்திருக்கும் தன் மனைவியுடன் அளவளாவி விட்டு களைப்பில் கண்ணுறங்கிவிடுவது அவனது நாளாந்த வழக்கமாகும். எப்படித்தான் சீன உணவகத்தில் வேலை செய்தாலும் ஐரோப்பிய நாட்டில் வாழ்ந்தாலும் எங்கள் நாட்டுச் சோறும் உறைப்புக் குழம்பும் சாப்பிட்டால்த்தான் எம்மவர்க்கு உணவு உண்ட உணர்வு ஏற்படும். அவன் உணவு அருந்தும் அழகை சுவைத்தபடி மேசையிலே முழங்கையை குத்தியபடி கன்னத்திலே கைவைத்து இருந்தாள். பத்மனுக்கு மனைவி சாரதா கைப்பக்குவத்தில் கோழிக்கறி உறக்கத்தை படுக்கைக்குப் போகாமலே கொண்டு வந்தது. ஆனாலும், அன்றைய செய்திகளை இப்போதே கேட்க வேண்டும் அல்லவா. உணவை வாயில் திணித்த வண்ணம், அடுத்த நாள் கடமைகள் பற்றி மனைவியிடமிருந்து விளக்கத்தைப் பெற்றான்.

. சாரதாவும் காத்திருந்து வெளியிடும் பத்திரிகைத் துணுக்குகள் போல் தன்னிடம் வந்தடைந்த தகவல்களை பிரதியீடு செய்தாள். தாயகத்திலிருந்து தாயாரின் தொலைபேசி வந்ததாம். அத்தானுக்கு ஆரம்பித்துக் கொடுத்த நிறுவனம் அமோகமாய் வெற்றிநடை போடுகின்றதாம். அக்காளுக்குக் கட்டிக் கொடுத்த வீட்டில் இரு மாடிகளுக்கும் இணைப்பை ஏற்படுத்தும் தொலைபேசி ஒன்று அனுப்பப்பட வேண்டியுள்ளது. தங்கையின் திருமணம் தடபுடலாக 500 பேர் வாழ்த்த சொகுசு ஹொட்டலில் தடபுடலாக நடந்தேறியுள்ளது. தம்பிக்குத் தலைநகரில் தலைசிறந்த வியாபாரநிறுவனம் அமைத்தாயிற்று. கடைக்குட்டிக்குப் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இவையனைத்தும் வந்த செய்திகளாய் இருக்க. ”தம்பியை ஒருக்கால் நாளைக்கு ரெலிபோன் எடுக்கச் சொல்லு பிள்ள’ இது நாளைய கடமையாய் இருந்தது. 

அத்தனையையும் கேட்டுச் சிரித்தபடி சாரதா கன்னத்தைத் தடவியபடி, ‘இன்னும் ஒரு கடமைதானே பாக்கி இருக்கிறது சாரதா. அதன் பின் நமக்காக நாம் வாழ்வோம். என்னைப் போலும் உன்னைப் போலும் இரண்டு பிள்ளைகளைப் பெற்று அவர்களுக்காக நானும் நீயும் கண் விழிப்போம். இன்பமான நாளை எமக்காக உருவாக்கிக் கொள்ளுவோம்” என்றான், பத்மன். அவன் கூறிவிட்டான். அது எந்த அளவிற்கு உண்மை என்று சாரதா உணராதவளானாள். ஆனால், அவர்களுக்காக அவர்கள் வாழும் நாளை எண்ணி படுக்கைக்கு பத்மனை அனுப்பிவிட்டு பாத்திரங்களை கழுவினாள். அந்த இரு ஜீவன்கள் ஏங்கிக் கொண்டிருக்கின்றன என்பது மாத்திரம் உண்மை. 


உணவு உள்ளே செல்ல கட்டில் அவனை வரவேற்றது. படுத்த மறுகணமே நித்திராதேவி அவனை அணைத்துக் கொண்டாள். சாரதா வெப்பமூட்டிகளைக் குறைத்தாள், மின்விளக்குகளை அணைத்தாள்,. அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கும் பத்மனைப் பார்த்தாள். அவனை அணைத்து அவளே ஒரு முத்தம் கொடுத்தாள். அவனுடைய போர்வைக்குள் புகுந்தாள். எதுவுமே அறியாது ஆழ்ந்த உறக்கத்தில் பத்மன் உறங்கிப் போனான். திரும்பவும் எழுந்தாள். ஆடை மாற்றிவிட்டு தன்னுடைய படுக்கைக்குள் நுழைந்தாள்.

சாரதா வழமைபோல் காலை கண்விழித்தாள். நேரத்தைப் பார்த்தாள். ஐயோ நேரம் போனது தெரியாமல் தூங்கியிருக்கின்றேனே! இந்த அலாரமும் வேலை செய்யவில்லை என்றபடி திடுக்கிட்டுஃப் பாய்ந்து எழுந்தாள். கட்டிலின் அருகே வேலைக்குப் போகாமல் இன்னும் அசந்து தூங்கிக் கொண்டிருக்கும் கணவனைப் பார்த்தாள். இவரை எழுப்பிவிட மறந்துவிட்டேனே. பேசப்போகின்றார் என்று நினைத்தபடி அருகே சென்று அவனை மெல்லத் தொட்டு எழுப்பினாள். உடல் சில்லென்று குளிர்ந்தது. அவனை மெல்ல உழுப்பினாள். உடல் அசையவில்லை. மீண்டும் உழுப்பினாள். பேச்சில்லை. ஐயோ… என்று அலறியபடி போர்வையை நீக்கினாள். உயிரற்று அவன் உடல் அமைதியாக சலனமின்றி உறங்கிக் கொண்டிருந்தது. சாரதா உடல் நடுக்கம் கண்டது. அழுவதா துடிப்பதா அடுத்த காரியத்தில் இறங்குவதா எதுவாக இருந்தாலும் அவளாகவே செய்ய வேண்டும். தொலைபேசியில் 113 என்னும் இலக்கத்தை அழுத்தினாள். விரைந்து வந்தது அம்புலன்ஸ் வண்டி. உடல்தாங்கி வைத்தியசாலை நோக்கி விரைந்தது. பத்மன் வாழ்வை முடித்துக் கொண்டான் என்னும் வேதனைச் செய்தி உறுதியானது. கடமைகள் முடிக்கப் பிறந்தவன் போல் அந்நியநாட்டில் வாசம் செய்து தன் சொந்தக் கடமை முடிக்காது சொல்லிக் கொள்ளாமல் விடைபெற்றான் பத்மன். சாரதா தனித்து விடப்பட்டாள். நாடு புதிது. நாட்டு மக்கள் புதிது. தொடரும் வாழ்வுக்கு வழி தேடி சாரதா …….

ஆசிரியர் குறிப்பு

ஐரோப்பியநாடுகளில் 50 தாண்டித் தமிழர்கள் வாழ்வது அருமையாகி விட்டது. இரவு படுத்து பகல் எழுந்திருப்பது கேள்விக்குறியாகிவிட்டது. அளவுகடந்த கடமைச்சுமையும் அடுத்தவர்களைப் பார்த்துத் தாமும் அதுபோல் வாழவேண்டும் என்ற அளவுக்கு மீறிய ஆசையும் ஓய்வில்லாத உழைப்பும் மனஅழுத்தங்களையும் இதயச்சுமையையும் கொண்டுவருகின்றது. வைத்தியவசதி அதிகமுள்ள நாடானாலும் இவர்கள் உயிர்களைக் காப்பாற்றாமல் போவதற்கு அவர்களே அவர்களுக்குப் பொறுப்பாகின்றார்கள். 

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!