NationNews

இலங்கையில் அரியநேத்திரன் பொது வேட்பாளராகத் தெரிவு

செப்டம்பர் 21 நடக்கவிருக்கும் இலங்கை ஜனாதிபதி தேர்தலில் உதிரித் தமிழ்க் கட்சிகள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் சார்பில் பொது வேட்பாளராக முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட பா.உ.பா.அரியநேத்திரன் களமிறக்கப்படுகிறார். ஜூலை 22 அன்று சில தமிழ்க் கட்சிகளும் சமூக செயற்பாட்டாளர்களும் கூடி தமிழ் மக்கள் சார்பில் ஜனாதிபதி தேர்தலில் ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதாகத் தீர்மானித்திருந்தனர். இலங்கைத் தமிழரசுக் கட்சியும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் இதில் பங்கேற்கவில்லை. உதிரிக் கட்சிகளின் சார்பில் மூன்று பேர் முன்மொழியப்பட்டிருப்பினும் தமிழ் மக்கள் கூட்டணி, ரெலோ, புளோட், தமிழ்த் தேசியக் கட்சி மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எஃப் ஆகியன பா.அரியநேத்திரனை ஆதரித்திருந்தன. பொது தமிழ் வேட்பாளரை நிறுத்துவது தோல்வியைக் காணப்போவது மாத்திரமல்ல அது தமிழ் மக்களுக்குப் பாதகமாகவே அமையுமென தமிழர்சுக்கட்சியின் யாழ் மாவட்ட பா.உ. திரு சுமந்திரன் தெரிவித்துள்ளார். அதே வேளை பொது வேட்பாளர் பெறும் வாக்குகளைக் கொண்டு தமிழரின் பலத்தை நிரூபித்துக் காட்டமுடியுமென திரு விக்னேஸ்வரன் கூறியுள்ளார். இத் தேர்தலை தமிழ் மக்கள் முற்றாகப் பகிஷ்கரிக்க வேண்டுமெனக் கோரி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் பா.உ. செல்வராஜா கஜேந்திரன் பொதுமக்களிடம் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்து வருகிறார்.

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!