ArticlesDr.N.Janakiramanகட்டுரை

புறநானூற்றுப் போர் நெறிகள் – அறங்கள்- அண்டைநாடுகளின் இன்றைய போர்க்குற்றங்கள் By : Dr.N.Janakiraman

ஆய்வுச்சுருக்கம் (abstract)

     பறநானூறு என்னும் இலக்கியம் தமிழர்களின் பழம்பெறும் வீர இலக்கியம் ஆகும். இது போர்மரபினையும் சித்தாந்தத்தினையும் எடுத்துரைக்கின்றது. இன்று உலகளாவிய நிலையில்  பேசப்படும் போரியல் செய்திகள் உலக நாடுகளின் கவனத்தைப் பெற்றதாகும். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பொன்மொழியினைத் தந்தது புறநானூறு. தமிழர்கள் அன்பிலும் பண்பிலும் ஒப்புவமையி்ல்லாதவர்களாக வாழ்ந்து வந்தனர் என்பதற்குத் பழந்தமிழிலக்கியங்கள் சான்று பகர்கின்றன. போர் செய்வதற்கான அறங்கள், நெறிமுறைகள், இன்று நாடுகளிடையே நிலவும் போர்க்குற்றங்கள் கவனிக்கப்படவேண்டியவையாகும். போர்க்களங்கள், போர்வீரர்கள், போர் செய்முறைகள் போன்றன சங்க இலக்கியங்களில் போற்றப்பட்ட முறைகளை இலக்கியங்கள் காட்டுகின்றன. சங்கப்போரியல் செய்திகளில் நெறிபிறழ்ந்ததாகவோ, முறை தவறியதாகவோ இதுவரை சான்றுகள் இல்லை. இன்றைய காலக்கட்டங்களில் உலகளாவிய போர்செல்நெறிகள் எவ்வாறு உள்ளன என்பதும், சங்கப்போர்முறைகள் எவ்வாறு சிறந்து நிற்கின்றன என்பதும் நினைக்கத்தகுந்ததாகும்.

கலைச்சொற்கள் அறம்-குற்றம்- திருவில் கொலைவில்- மறம்- போர்மறம்- வன்கொடுமை- உலகளாவிய போர்நிலைகள்- போர்முறைகள்- இனப்படுகொலை ( genocides)

முன்னுரை

புறநானூறு என்ற மாபெரும் இலக்கியம் தமிழர்களின் நேரிய சிந்தனைகளையும் திறத்தையும் அறவழியினையும் பறைசாற்றுகின்றது. அரசர்கள்,புலவர்கள், மக்கள் எனும் இந்த மூன்று பாலத்தையும் முறையே இணைக்கின்றது. உறவினையும் பகையினையும் சரிவரக் கையாண்ட சமூகமாய் பண்டையச் சமூகம் விளங்குகின்றது. ஒருவரையொருவர் அடுதலும் தொலைதலும் புதுவதன்று இந்த உலகத்து இயற்கை என்றாலும் அந்த அடுதலும் தொலைதலும் கொண்டாடுதலும் சிறப்பாக நிகழ்ந்த சமுதாயமாய் புறநானூற்றுச் சமூகம் விளங்கியுள்ளது. பர்மா, மலேசியா, இந்தோனேசியா, சீனா என்று பல்வேறு நாடுகளில் இன்றைய தமிழ்ச்சமூகம் பரந்து விரிந்து பலதரத்தில் உயர்ந்து காணப்படுகின்றது. மாற்றாரை மாற்றழிக்க வல்லானுக்கும் நண்பனைத் தக்கவாறு போற்றுதலுக்கும் பெரிய வேறுபாடு ஒன்றுமில்லை. எதுவாக இருப்பினும் அது நேரிய முறையில் இருக்கவேண்டும் என்பதைச் சங்கநூல்கள் வலியுறுத்துகின்றன. அதிலும் குறிப்பாக,  போர் பற்றிய செய்திகளை அதிகமாகப் பாடும் புறநானூற்றுப்பகுதியும் சேரமன்னர்களின் புகழ்பாடும் பதிற்றுப்பத்தும் தமிழ் இலக்கியக் களத்தைச்  செம்மைப்படுத்துகின்றன. கல்தோன்றி மண்தோன்றக்காலத்தே வாளொடு முன்தோன்றிய மூத்தக்குடியாக விளங்கும் தமிழ்க்குடி வீரம் விளைந்த விளைய வைத்த மறக்குடியாக விளங்கி நிற்பதில் தமிழ்ச்சமூகத்திற்கு மட்டற்ற மகிழ்ச்சியாகும்.

போர்நெறிகள், அறங்கள், போர்க்குற்றங்கள்

நேருக்குநேர் நின்று போரிடலே சாலச்சிறந்தது. அது நெறியும் ஆகும். இவற்றை மீறுவது குற்றமாகும். இராமயணத்தில் இராமன் மறைந்து நின்று வாலியைத்தாக்கிய காட்சியையே இது ஒரு நேர்மைத்திறமற்றது எனக் கூறுகின்றனர். அவ்வகையில் பழந்தமிழ் இலக்கியமான தொல்காப்பியமும், புறப்பொருள் வெண்பாமாலையும் பல்வேறு போர்நெறிகளை தமிழர்கள் கையாண்ட போர் உத்திகளை எடுத்துரைக்கின்றது.  பகைநாட்டினை வெற்றிகொள்ளல் என்ற அடிப்படையில் அமைந்த போர் முழக்கம் எதிரியின் உயிருக்கு முதலில் குறிவைப்பது இல்லை. அவன்நாட்டு உடைமைகளையும் பொருளதாரங்களையும் எடுத்துவந்து தன் நாட்டினையும் தாம் சார்ந்த மக்களையும் வளமையில் வாழவைப்பதே போரின் இலக்கணமாகக் கொண்டனர். அது முடியாமல் போக இன்னுமொரு படி கீழிறங்கி பகைநாட்டுச் செல்வங்களைக் கொள்ளையடித்தல் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டனர். இன்னும் சில நேரங்களில் பகை நாட்டுச் செல்வங்களைத் தீயிட்டுக் கொளுத்தினர். இதுதான் பண்டையச் சமூகம் கையாண்ட போர்நிலையாக இலக்கியங்கள் தெரிவிக்கின்றன. இதுவும் எந்த அளவிற்குச் சரியானதாக எடுத்துக்கொள்ளப்பட்டது என்ற புரியவில்லை. ஆயினும் சில அடிப்படை நெறிகளை இந்தச் சமூகத்திற்கு விட்டுச்சென்றுள்ளது. அதனாலேயே புறநானூற்று  நெறிகளை நினைவு கொள்ளவைக்கின்றது.

போர்க்குற்றங்கள் (sins of war)

ஜனநாயகமுறையிலான தீர்வுகளில் நம்பிக்கையில்லாதோரும், பொதுவான போர்நெறிகளைப் பின்பற்றாதோரும் பேர்க்குற்றவாளிகளாகக் கருதப்படுகிறார்கள். புறமுதுகில் குத்துவதும் புறமுதுகு காட்டி ஓடுவோர்களை மன்னிக்காது துரத்திக் கொல்வதும், பலமற்ற ஒருவனைப் பலசாலி ஒருவன் களத்தில் நில்லாது கள்ளத்தனமாக கொல்ல நினைப்பதும், கொல்வதும்  போர்க்குற்றத்தின் பால் வைக்கப்படுதலாகும். இன்று நடந்து முடிந்த இலங்கை உட்பட வடகொரிய, தென் கொரியப் போர்களும் இதனுள் அடக்கமாகும். குற்றங்களின்பால் நின்று வென்ற வெற்றி என்று மார்தட்டிக்கொள்வதும், அதனை குற்றமே இல்லை என்று மறுப்பதும் உலக நாடுகளிடையே அதனை ஞாயப்படுத்துவதும் அதனைவிடக் குற்றமாகும். இனப்படுகொலை என்பது சாதாரணமானது அல்ல. இதற்கு அங்கு ஆளும் கட்சிகளே காரணமாகும். மாநில ஆளும் வர்க்கமே இதற்குக் காரணமாகும். இராணுவத்திற்குக் கூட இந்த அனுமதி இல்லை. இது தண்டனைக்குரிய குற்றமாகும். சர்வதேச நீதிமன்றத்தில் இதற்கு தக்க சான்றுகள் இருந்தபோதிலும் இதைத் தடுக்க முன்வரவில்லை என்றால் சர்வதேச சமூகம் எதற்காக இருக்கின்றது.மனிதநேய மாண்பு என்பது எங்கே போனது? இது ஒரு மாபெரும் போர்க்குற்றமாகும். 1970 களில் கம்போடியா, ருவாண்டா, போஸ்னியா போன்ற நாடுகளில் இனப்படுகொலை தொடர்பான குற்றங்கள் அரங்கேறின. இதுவெல்லாம் மறப்பதற்கில்லை[i] குழந்தைகள், பெண்கள், வயது முதிர்ந்தவர்கள், மனநோயாளிகள்,தொடர்பற்றவர்கள் என இவர்களைத் துன்புறுத்துவதும் அவர்களைக் கொல்வதும், அவர்களின்மேல் குற்றங்களைச் சுமத்திச் சிறையில் அடைப்பதும் வாய்ப்பொத்தி மௌனிகளாக அவர்களை இருக்கச்சொல்வதும் கூட போர்க்குற்ற அறிகுறிகளாகும். மாறாக, போர்நடைபெறும் பகுதிகளில்  தமது வாழ்வாதாரத்தை நம்பாத மக்கள் அவ்விடம்விட்டு பெயர நினைக்கையில் அவர்களை வலுக்கட்டாயமாகப் பிணைத்து வைப்பதும் நெறியாகாது. இவை போன்ற நிகழ்வுகளின்அடிப்படையினை மனதில் கொண்டு நாம் புறநானூற்றை நோக்கவேண்டும். இவற்றில் போர்க்கொள்கையில் தொடர்புடைய பலவற்றை இன்று நடந்து முடிந்த நடக்கவிருக்கின்ற போர்த்தன்மைக்கேற்ப  புறநானூற்றை அணுகுவதில் இக்கட்டுரை விளக்குகின்றது.

திரியா போர் மறம் (un ethics of war)

     பாடாண்திணையில் பாடப்பட்ட பாடலில் செவியறிஉறுவாக முரஞ்சியூர் முடிநாகராயர் பின்வருமாறு பாடுகின்றார். சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதனை வாழ்த்திப்பாடுவதாக பாடியபாடலில் கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் இடையே நடைபெற்ற போர்க்காட்சிகளை வருணித்துள்ளார். அத்தகைய மாபெரும் போர் நடந்துகொண்டிருக்கும்போது கூட பெருஞ்சோற்று மிகுபதம் கொடுத்தவன் உதியஞ்சேரலாதன். அவன்,

பால்புளிப்பினும், பகல் இருளினும்

நால்வேத நெறிதிரியினும்

திரியாச்சுற்றமொடு  முழுதுசேண்விளங்கி

நடுக்கின்றி நிலியரோ அத்தை – அடுக்கத்து (பாடல்-2)

ஆகிய தன்மை உள்ளவன். நிலம் பெயர்ந்தாலும் சொல் பெயராதவன். நின்எதிரிகளைக் கொன்றுகுவித்த பிணங்கள் குவிந்திருக்க அதன்மீது சிறகினையும் வளைந்தவாயினையும் உன்ன மரங்கள் வளர்ந்தனவாகவும் பிரிந்து  செல்கின்றன. பிணக்குவியலின் மீது தன் கொடியினை ஏற்றி தன் வெற்றிச்செறுக்கை கொண்டாடுகின்றான் பெரும்பெயர் வழுதி. சேரமான் ஒள்வாள் கோப்பெருஞ்சேரல் இரும்பொறையைக் கண்டபொழுது நிலைத்த உடம்புபெறுவாயாக என வாழ்த்துகின்றார் நரிவெருத்தலையார். காரணம், அவனது போர்நெறி. வலிமையில் கானகநாடனான அரசனே ஒன்று கூறுகின்றேன். அருளையும் அன்பையும் நீங்கப்பெற்று காக்கும் காவல் மதிப்பற்றது. அது நீடிக்காது எனவே, நீ குழந்தையைக்காக்கும் காவல் தந்தையாக இருந்து காப்பாற்றவேண்டும் அதுவே நிலைத்துநிற்கும் என்கிறார். அருளும் அன்பும் நீக்கி, நீங்கா நிரயம் கொள்பவரோடு ஒன்றாதே என வேண்டுகின்றார். அத்தகைய புகழ்நிலைக்காது. மறத்தொழிலிலும் அறம்வேண்டும் என்பதற்கு இதுவே ஓர் எடுத்துக்காட்டு. மக்களின் இறப்பில் போர்க்குற்றத்தினை அளவிடமுடியும். அது என்றும் அழியாத நினைவுகளை உள்ளடக்கியது. கடந்தகால வரலாறுகள் மனித இறப்பிற்கு முரண்பாடான காரணங்களைத்தான்  சொல்கின்றன. வன்முறையிலும், அதனால் பெற்ற வெற்றியிலும் நீதியைக்  கொல்வதிலும், பாகுபாட்டை விதிப்பதிலும், அதிலிருந்து மீள்வதிலும் ஒரு பெரிய சவாலாக விளங்கிய இடம் அமெரிக்கா என்பதில் ஐயமேதுமில்லை. இந்த நினைவினை என்றும் அழிக்கமுடியாது.[ii]

மறத்திலும் அறம்

போகம்வேண்டி பொதுச்சொல் பெறாமல் வாழ்தல் என்பது அரிது. ஆனால் பண்டையமக்கள் அதன்படியே வாழ்ந்துள்ளனர். இன்று பகை மூள்வதே போகம் வேண்டித்தான் என்பது வெட்கித்தலைகுனியவேண்டியுள்ளது.போகம் வேண்டிப் பொதுச்சொல் பெறாமல் ஒரு அரசன் இல்லை பலபேர் வாழ்ந்துள்ளனர். அவற்றில் ஒருவன் சேரமான் கடுங்கோ வாழியாதன். கபிலர் இவனை வாழ்த்துகின்றார். உனது புகழ் கதிரவன் போல் விளங்குகின்றது. கரணம் என்னதெரியுமா? நீ போகம் வேண்டி பொதுச்சொல் பெறாதவன் என்பதாலேயே.(பாடல்-8) மேலும் பல்யாக சாலை முதுகுடுமி பெருவழுதியை நெட்டிமையார் பாடும்போது போர்நெறிமுறைகளை வகுத்துக்க்கூறியுள்ளார். அது பின்வருமாறு,

ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும்

பெண்டிரும் பிணியுடையீரும் பேணித்

தென்புல  வாழ்நருக்கு அருங்கடன் இறுக்கும்

பொன்போற்புதல்வனைப் பெறாதீரும்

எம் அம்பு கடிவிடுதும் நும் அரண் சேர்மின் என

அறத்தாறு நுவலும் புட்கை, மறத்தின்(பாடல்-9)

போர் நிகழவிருக்கும் நேரத்திற்குமுன் ஓர் அறிவிப்பு வரும். அது போர் தர்மத்தைக் குறிப்பதாக உள்ளது. சிலப்பதிகாரத்தில் கூட கண்ணகி மதுரையை எரிக்கும் போது ‘பார்ப்பார் பசு பத்தினிப்பெண்டிர் எனும் இவரைக் கைவிட்டுத்  தீத்திறத்தார் பக்கமே சேர்க’ என்றாள். இது இளங்கோவடிகள் வரைந்த புறநானூற்றை ஒட்டிய சித்திரமாகும். ஆனால், இன்று பல தமிழர்கள் கொல்லப்பட்டுவிட்டனர். அவர்களைக் கேட்க, அவர்களுக்காக கேட்க உலக நாடுகள் எவற்றுக்கும்  போர்விதிமுறைகள் இல்லை.கட்டுப்பாடு இல்லை.கண்ணியம் இல்லை. நவீன உலகைநோக்கி அடியெடுத்துவைத்துக் கொண்டிருப்பது ஒருபுறம். மற்றொருபுறம் மனசாட்சியைக் கொன்றுவிட்டு வாழும் வாழ்க்கை. இதுவே உலக நியதியாகிவிட்டது. மாகபாரதப்போரில் கூட நிரயாயுத பாணியைத் தாக்குவதாக எந்த இடத்திலும் இல்லை. இன்றுபோய் நாளைவா என்ற கட்டளையிடலும் ஆயுதம் இன்றி வந்தவனைத் தாக்க கூடாது என்பதற்கே ஆகும்.

போரில் இரக்கம் வேண்டும். அந்த இரக்கம் வழிபடுவோனை விட்டுவிட வேண்டும் என்பதும், பிறர் சொல்வதை அப்படியே நம்பக்கூடாது என்பதும் அடிப்படையாகும். செய்து இரங்காவினையில் புகழ் இருக்கின்றது. இரக்கத்தில் நிகழ்வதுதான் புகழ். பெருஞ்சோற்று மிகுபதம் கொடுப்பதும், வருநர்க்கு வரிசையில் அறிந்து பொருள் வழங்குவதும் அரசனின் கடமையாகும். ‘பண்டைய போர் நாகரிகம் என்பது பகைநாடுகளைப் பாழ்செய்தலும், கழுதைகளைக்கொண்டு பாழ் மனைகளை உழுதலும், விளைகின்ற வயலை அழித்தலும், நீர்த்துறைகளைக் கலக்குதலும், வளமிக்க பகுதிகளை எரியூட்டுதலும்  ஆகிய பண்பினைக் காட்டுகின்றது. இது எந்த அளவிற்குச் சரியானதென்று புலப்படவில்லை (பதிற்று.25)  தமக்கு கிடைக்காத ஒன்றை பகைநாட்டினருக்கும் கிடைக்க வேண்டாம் எனக் கருதியுள்ளனர். அவ்வாறான சான்று இலக்கியத்தில் பல உள.

திருவில் கொலைவில்

ஒருநாட்டிற்குத் திருவில்தாம் முக்கியமே தவிர கொலைவில் அன்று. யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையை குறுங்கோழியூர் கிழார் பாடுகின்றார். தலைவனே உமது நாட்டில் திருவில்தான் உள்ளதே தவிர கொலைவில் இல்லை. ஏனெனில் போர் நிகழ்ந்த தென்றால் பல உயிர்கள் போகும். பொருள் நாசமாகும். இதனால் அழிவுதான் மிஞ்சுமேயன்றி ஆக்கம் நடைபெறாது எனப்பாடுகின்றார். மேலும் உழவுத்தொழில்தான் முக்கியம். விளைச்சல்தான் மக்களுக்குப் பசியைப்போக்கும் எனவே நீ ஆக்கத்தில் கவனம் செலுத்துபவன் என்ற இயன்மொழிவாழ்த்தாகவும் போற்றியுரையாகவும் கூறியுள்ளார்.

‘செஞ்ஞாயிற்றுத்தெறல் அல்லது

பிறிது தெறல்அறியார் நின் நிழல் வாழ்வோரே

திருவில் அல்லது கொலைவில் அறியார்

நாஞ்சில் அல்லது படையும் அறியார்

திறன் அறி வயவரொடு தெவ்வர் தேய, அப்

பிறர் மண் உண்ணும் செம்மல் (பாடல்-20)’

     என்பதாகவுள்ளது அப்பாடல். உன்னை இகழுநர் இசையுடன் மாய்ந்தார்களென்றால் அதற்கு நீ வாழ்ந்த வாழ்க்கைதான் காரணம். எந்நாளும் தும்பை மலரை அணிந்து அடுபோர்க்களம் நோக்கிச் செல்லும் நீ ஒருமுறை வாழும் மக்களை எண்ணிப்பார் என வேண்டுகோள் விடுக்கின்றார் ஐயூர் மூலங்கிழார்.ஆன்றோர்களுக்குக் களவேள்வி செய்த முறையைப் புறநானூறு காட்டுகின்றது. அடுகளம் வேட்ட அடுபோர்ச்செழியனே களவேள்வி செய்வதோடு அறமுறைக்கேள்வி அந்தணர் வேள்வியும் செய்தாய். பகைவனும் துறக்கம் அடையவேண்டும் என்ற பண்டைய அரசர்களின் உள்ளம். அவர்களும் துறக்கம் அடையவேண்டும் என நடத்திய வேள்வி வியப்பிற்குரியதாகும். அதனால்தான், புறநானூறு பெரியோரை வியத்தலும் இலமே சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே என பறைகொட்டுகின்றது. இந்த நாகரிகப் பண்பு எங்கும் இல்லை. பகைவனுக்கும் நாடு உண்டு. பகைவனுக்கும் விருப்பு வெறுப்பு உண்டு. பகைவனுக்கும் சொர்க்க நரகம் உண்டு என உணர்ந்து நடந்த காலம் சங்க காலம்.

வருத்தம் அறிதல்

தன்னிடம் வருகின்றவரை உவந்து வரவேற்று பரிசளித்து மகிழ்வித்து பாராட்டி அனுப்பும்  அரசன் தம்மிடம் போரிடவரும் அரசர்களையும் இணையாகவே நடத்தினர். ஒற்று, தூது, மதிநுட்பம் போன்றவற்றால் பகைநாட்டினை உணர்தலும் போர்க்காலங்களில் தங்களின் நீதியை மறக்காமல் கடைபிடித்தனர். அடைத்துவைத்தல் கிடையாது ஆனால் முற்றுகையிடல் உண்டு. பட்டினி போடுதல் இல்லை மாறாக உணவு வேண்டிய அளவும் படைத்தனர். களத்தில் மட்டும்தான் மரணம் சதியில் இல்லை. எதிரியின் வருத்தம் அறிந்து போரைத் தள்ளி வைத்தனர். வலிமையாளன் ஒருவன் வலிமையாளனிடம் தான் போரிடவேண்டும் என்ற தார்மீக ஒப்பந்தம் இருந்தது. இன்று இவையனைத்தும் மாறிவிட்டது. தோற்றபின்பு கூட அரசனை மதித்தனர். தோற்றதற்காக வருத்தப்பட்டாலும் அடிமையைப்போல் நடத்தவில்லை. இதுவெல்லாம் புறநானூறு நமக்குத் தரும் பாடம்.

‘தேய்தல் உண்மையும் பெருகல் உண்மையும்

மாய்தல் உண்மையும் பிறத்தல் உண்மையும்

அறியாதோரையும் அறியக்காட்டி

திங்கள் புத்தேள் திரிதரும் உலகத்து

வல்லார் ஆயினும் வல்லுனர் ஆயினும்’ (பாடல்-27)

முதுமொழிக்காஞ்சித்துறையில் உள்ள இப்பாடலை முதுகண்ணன் சாத்தன் பாடியது. இன்று வெற்றிவரலாம். நாளை போய்விடலாம். ஆனால், மனிதப் பண்பு மாறாக்கூடாது. தேய்தலும் பிறகு வளர்தலும் பிறத்தலும் பின்பு இறத்தலும் மாற்றவியலா உண்மை. ஆனால் ஒருவன் இறந்த பிறகு தாம் சர்ந்தவர்களிடம் எவ்விதம் நடந்தான் என்பதைவிட பகைவனிடம் எவ்விதம் நடந்து கொண்டான் என்பதில்தான் உலகம் ஒருவனைப் போற்றும். வள்ளுவர், இன்னா செய்தாருக்கும் இனியவே செய்ய வேண்டும் என்று சால்பின் பண்பை வலியுறுத்துகின்றார். கும்பகர்ணன் போர்க்களத்தில் சென்று அண்ணா இப்போதும் ஒன்றும் குறைந்துவிடவில்லை. இனியாவது சீதையை இராமனிடத்து ஒப்படைத்துவிடலாம். அவனிடம் சரண் புகலாம். யுத்தம் வேண்டாம் எனக் கூற இராவணனோ மறுத்துவிடுகின்றான். போர் என்பது மூண்டுவிட்டால் இருபக்கத்திலும் அழிவு நிச்சயம் இதனை உணர்ந்து கும்பகர்ணன் இராவணனிடத்து வேண்டுகின்றான். பின் செஞ்சோற்றுக் கடனுக்காக தர்மத்துக்கு மாறான போரில் பங்கெடுத்துத் தன் உயிரைப் பணயம் வைத்தான் கும்பகர்ணன்.

வன்கொடுமை செய்தல்

வன் கொடுமை என்பது இயற்கைக்கு மாறான கொடுமை என்று பொருள்படும். இப்படித்தான் போர் புரியவேண்டும் என இருந்தாலும் எப்படி வேண்டுமானாலும் இதனை நிகழ்த்தலாம் என வந்துவிட்டால் நெறிமுறைகள் ஏதும் கிடையாது. இன்றைய தமிழர்கள் புலம்பெயர்வதும், அழிக்கப்படுவதும், ஆண்மைநீக்கப்படுவதும், பசியால்வாடவைப்பதும், முள்வேலிகள் அமைத்து அதற்குள் வாழவைப்பதும், வெளியில் செல்கிறவர்களை கருணையே காட்டாமல் பிறர் அறிய கொன்று குவிப்பதும்தான் இன்றைய போர்நிலை. உலகளாவிய தமிழர்கள் என்று சொல்வதைப் பெருமையாக கருதினாலும் சிலநேரங்களில் அது கண்ணீர்விடவைக்கின்றது. ஒருமனிதன் ஒரு இனம் ஏன் தம் புலத்தைவிட்டு மற்றொரு புலத்திற்குப்பெயர்கின்றது. அவ்விடத்து வாழவழியில்லாமல்தானே. உலகத்தமிழர்கள் வியாபாரங்களாலும், நுட்பத்திறனாலும், பொருள்தேடும் வகையிலும் உலகம் பல கடந்துவந்தார்கள் என்றால் பெருமையாக இருக்கும். மாறாக, பிழைப்புத்தேடி, உயிரைக்காத்துக்கொள்ள, பசியைப்போக்க, உயிரைக் காக்க என புலம்தப்பிப்போனால் ஒரு சமூகம் வாழ்வது எப்போது? என்ற கேள்வி எழுகின்றது. இவ்வாறான வினாக்களோடு புறநானூறு  ஒரு கருத்தினை முன்வைக்கின்றது.

ஆன்முலை அறுத்த அறனிலோர்க்கும்

மாண் இழை மகளிர் கருச்சிதைவோர்க்கும்

பார்ப்பார் தப்பிய கொடுமையோர்க்கும்

வழுவாய் மருங்கில் கழுவாயும் உள என

நிலம் புடை பெயர்வது ஆயினும், ஒருவன்

செய்தி கொன்றோர்க்கு உய்தி இல்லென

அறம்பாடிற்றே ஆயிழை கணவ’ – (பாடல்-34)

பசுவின் காம்பினை அறுத்தவன் கெடுங்கோலாளன். மகளிர் கருவினைச் சிதைத்தவன் மனிதநேயம் அற்றவன். அந்தணர்களுக்குக் கொடுமை இழைத்தவன் என இம்மூன்று பேரை மன்னிக்கலாம். ஆனால், தவறான செய்தி சொல்லி பெரும் கேடுவிளைவிப்பவனுக்கு மன்னிப்பே இல்லை. அவனுக்கு மேலுலகத்திலும் உய்தி இல்லென என்று கூறி இதுவே அறநெறி போற்றும் வழியாகும் என உவமை கூறுகிறது. தமிழனின் சிரம் அறுக்கப்படுதலும், பெண்கள் என்றும் பாராமல்  அவர்களைத் துன்புறுத்தி, வன்புணர்ந்து, குழந்தைகளின் முன்னே தாயினைக்கொன்று, தாயின் முன்னே தந்தையினைக் கொன்று, உறவுகளைக் கொன்றழித்த ஒரு வெறிக்கூட்டம் தழுவுவதோ அகிம்சை நெறிக்கடவுளை. சர்வதேச மனிதஉரிமைச் சட்டம் பின்வரும் கூறுகளை முன்வைக்கின்றது.

 1. மனித உரிமை பாதுகாப்பு தரப்படல் வேண்டும்
 2. பல்வேறு நிலைகளில் உள்ள வேறுபாடுகளைக் களைய வேண்டும்.
 3. மனித நேயமற்ற நடத்தை மற்றும் தோல்வி கண்டவர்களை மாண்பற்ற முறையில் அணுகக் கூடாது
 4. உணவு,உடல்நலம்,தங்குமிடம் போன்ற அமைப்பில் நீதிநெறியான பாதுகாப்பு அவசியமாகிறது.
 5. பெண்களும், குழந்தைகளும் அவர்களை வன்மையாக நடத்தக்கூடாது

என்ற அம்சங்களை உன்னிப்பாக உற்றுநோக்கி போர்க்கால நடைமுறைகள் அமைதல் உலக அளவில் மனிதநேய சட்டத்தை மதித்து நடக்கும் செயலாகும்.[iii]

இந்துவாயினும், இஸ்லாமியனாயினும், கிறித்துவனாயினும், புத்தனாயினும் உயிர்க்கொலை தவிர்க்க இறைமார்க்கங்கள் சொல்கிறதே அன்றி உயிரை எடுப்பதற்காகவல்ல என்பதை அவர்கள் உணரவேண்டும். அவர்களுக்கு உணர்த்துவது நம் பண்டைய பாரம்பரிய நூல்கள்.

தூற்றுதல் தவிர்த்த போர்க்களங்கள்

ஒருவரால் எண்ணி இகழப்படாத அளவிற்கு போர்நெறியும், பூசலும் அமைந்தால் சிறப்பு. வெள்ளைக்குடி நாகனார் பின்வருமாறு பாடுகின்றார். எல்லோரும் அரசு என புகழ்ந்துகொள்கின்றனர். ஆனால் நான் பார்த்ததிலே நீ செய்வதுதான் உண்மையான அரசு. இந்த ஆளுகைதான் சிறப்பாக உள்ளது என வாழ்த்துகின்றார்.ஏனெனில், வளங்கள் பல பெருகிய நாட்டிலும் ஏச்சுக்களும் பேச்சுக்களும் மன்னர்களுக்கு உண்டு. அது உன்னிடம் இல்லை. நீதிநிலை சரியாக உள்ளதாலேயே மண்சிறக்கும். மழைவளம் பெருகும். அறக்கடவுள் வந்து  குடியேறுகின்ற அளவிற்கு ஆட்சி அமையவேண்டும். இதனை,

நொதுமலாளர் பொதுமொழி கொள்ளாது

பகடு புறந்தருநர் பாரம் ஓம்பி

குடி புறந்தருகுவை ஆயின், நின்

அடி புறந்தருகுவர், அடங்காதோரே(பாடல்-35) என்ற பாடல் மெய்ப்பிக்கின்றது.

மற்றுமொரு பாடல் வஞ்சித்திணையில், துணைவஞ்சித்துறையில் அமைந்த பாடல். கருவூர் முற்றியிருந்தானை ஆலத்தூர் கிழார் பாடுகின்றார். நீ பகைவன் என்றெண்ணி படையெடுத்துச்சென்று அவனது காவல் மரங்களை வெட்டுகின்றாய். அவனோ, நீ வெட்டுவதைக் கேட்டும் பராமுகமாய் வெளியே வராது உள்ளே கிடக்கின்றான். அவனிடம் நீ போரிடுதல் தகுமோ? எனக்கேட்கின்றார்.பகைவேந்தனை நீ கொன்றாலும் கொல்லாமல் விட்டுவிட்டாலும்  அவற்றால் உனக்கு நேரும் உயர்ச்சியை நாங்கள சொல்லவேண்டியதில்லை. நீயே நன்கு எண்ணி அறிவாய். எனவே, இப்போரினைத் தவிர்த்துவிடுவாயாக என வேண்டுகின்றார். இதனை,

அடுநை ஆயினும், விடுநை ஆயினும்

நீ அளந்து அறிதி, நின் புரைமை – வார்கொல் (பாடல்-36) எனும் பாடல் காட்டுகின்றது. போரில் புறமுதுகிட்டு ஓடுபவனும், போர்க்களம் அஞ்சி வாளா இருப்பினும் அவர்களை விட்டுவிடுதல் மனிதாபிமானம். அதைவிடுத்து அவனைத் துரத்திச் சென்று கொன்று அதனில் மகிழ்ச்சி காண்பது என்பது கீழ்த்தரமனது. உலகநாடுகளிடையே நடைபெறும் தமிழர்களுக்கு எதிரான போரினை இங்கு நினைவில் கொள்ளல்வேண்டும். மனிதநேய போர்முறை என்பது முக்கியமனது.ஒரு நாட்டின் இராணுவமும் மற்றொரு நாட்டின் இராணுவமும் போரிடுதல் கூட மனிதநேயத்தின் அடிப்படையில் அமைதல் வேண்டும்.இல்லையெனில் அந்த நாடு மனிதஉரிமை பற்றிய பிரச்சினையை எழுப்பக்கூடும்.சர்வதேச சட்டங்களுக்கும், உலகளவிய அரசியலுக்கும் நிர்வாகத்திற்கும் பதிலளிக்க வேண்டியிருக்கும். பின் அது வரலாற்றுப்பிழைக்கும் காரணமாகும். [iv]

புறநானூறு குறிப்பிடும் போர்நெறிப்பாடல்கள்

அ) வேல் ஈண்டு தானை விழுமியோர் தொலைய

வேண்டு இடத்து அடூம் வெல் போர் வேந்தே (பாடல்-41)

ஆ) தம்மைப்பிழைத்தோர்ப் பிழைக்கும் செம்மல்

இக்குடிப் பிறந்தோர்க்கு எண்மை காணும் என

காண்தகு மொய்ம்ப (பாடல்-43)

இ)ஒருவீர்தோற்பினும் தோற்ப நும் குடியே

இருவீர் வேறல் இயற்கையும் அன்றே (பாடல்-43)

ஈ) கேட்டனை ஆயின் வேட்டது செய்ம்மே (பாடல்-46)

உ) அமர் மேம்படுகாலை நின்

புகழ் மேம்படுதலைக் கண்டனம் எனவே (பாடல்-48)

ஊ) நீர்மிகின் சிறையும் இல்லை தீ மிகின்

மன் உயிர் நிழற்றும் நிழலும் இல்லை

வளிமிகின் வலியும் இல்லை ஒளிமிக்கு

அவற்று ஓர் அன்ன சினப்போர் வழுதி

தண்தமிழ் பொது எனப்பொறாஅன் போர் எதிர்ந்து (பாடல்-51)

எ) நான்குடன் மாண்டது ஆயினும் மாண்ட

அறநெறி முதற்றே அரசின் கொற்றம்

அதனால் ‘நமர்’ எனக் கோல் கோடாது

பிறர் எனக் குணம் கொள்ளாது (பாடல்-55)

இவ்வாறு பல பாடல்கள்  போர்விதிகளையும், அறநெறிகளையும், வீரர்கள், போர்க்களம் பற்றிய கருத்துக்கள் அமைந்த பாடல்களையும் புலவர்கள் பாடியுள்ளனர்.

தொகுப்புரை

புறநானூற்றுப்பாடல்களில் பல்வேறு தனித்தன்மைகள் இருந்தாலும் போர்க்களம் பற்றிய செய்திகளே முக்கியத்துவம் பெற்றனவாக உள்ளன. போர்க்கள நடைமுறைகள், போரின் முகமைகள், போர்க்காலங்கள் பற்றிய செய்திகள் முக்கியத்துவம் பெற்றனவாக இருக்கின்றன. இன்று உலகமெங்கும் போர்நெறிகள் பின்பற்றப்படுவதில்லை. ஜனநாயக அடிப்படையிலான போர்முறைகள் பின்பற்றப்படல் வேண்டும். போர்க்காலத்திலும் பஞ்சக்காலத்திலும் திரியா போர்மரபினை பின்பற்றியவர்கள் புறநானூற்று மக்கள். அறத்தில் அன்பு என்பதுபோல் மறத்தில் அறத்தைப் பின்பற்றியவர்கள் நம் முன்னோர்கள். பெரும்பாலும் போரினை விரும்பக்கூடாது. சந்துசெய்வித்தல் என்னும் சமாதான முறையினைக் கொண்டு போர்தவிர்க்கப்பட்டது. கொலைவில் அறியாமல் திருவில் பெருக்குதலில் கவனம் செலுத்தவேண்டும். தன் துன்பம் பார்க்கும்போது பிறர்துன்பத்தையும் தம்துன்பம் போல் கருதி எதிரிநாட்டு மக்களையும், எதிரிநாட்டு அரசர்களையும் நடத்திய முறை வரவேற்கத்தக்கது. அது இன்றளவில் பின்பற்றினால் நன்று. போரிலும்  போரில் அடிமைப்பட்ட மக்களையும் வன்கொடுமை செய்தலில் இருந்து தவிர்க்க வேண்டும். இரு நபர்களிடையே நடக்கும் போரும், இரு நாடுகளிடையே நடத்தப்படும் போரும் மற்ற நாடுகள் மற்ற மனிதர்களால் முகம் சுழிக்கும் அளவிற்கும் கேலிப்பேசும் அளவிற்கும் இருத்தல் கூடாது.  இதற்குப் பல உதாரணங்கள் புறநானூற்றில் உள்ளன. போரும் அன்பும் எடுத்துக்கொள்ளும் பெருண்மையில் சிறப்பு பெறுதல் நன்று.

சான்றுக்குறிப்புகள்


i  The Genocide Convention, at least in intent, does more than define the crime; it holds state parties responsible for preventing and punishing genocide. It does not, however, require military intervention within or outside of sovereign borders. While there have been international efforts to punish genocide (see chapter on “International Courts and Tribunals”), there have been no cases of large-scale international humanitarian intervention that have effectively prevented genocide. InCrimes of War, there are chapters on Cambodia, Rwanda, Bosnia, and Darfur that discuss wars since the Genocide Convention entered into force that have resulted in systematic extermination of groups of people. Two examples are the Pol Pot regime in Cambodia during the 1970s and Rwanda in 1994.    

[ii] While trials offer hope for justice for victims of war crimes, they also play an important role in memorializing victims and people who have died. The United States Institute for Peace says the following about this important healing process: “Memorialization is a process that satisfies the desire to honor those who suffered or died during conflict and as a means to examine the past and address contemporary issues. It can either promote social recovery after violent conflict ends or crystallize a sense of victimization, injustice, discrimination, and the desire for revenge.”

[iii]  There is often confusion between the laws that constitute international humanitarian law (IHL) and international human rights law. They both protect civilians and soldiers, but differ in the specifics of what they cover and how they are enforced. Both IHL and international human rights law: 

 • protect human life and dignity;
 • prohibit discrimination on various grounds;
 • protect against torture or other cruel, inhuman and degrading treatment;
 • seek to guarantee safeguards for persons subject to criminal justice proceedings, and to ensure basic rights including those related to health, food and housing;
 • include provisions for the protection of women and vulnerable groups, such as children and displaced persons.

International humanitarian law applies in all situations of armed conflict. International human rights law applies in all situations, including those of armed conflict and internal strife, as well as normal situations.

[iv] The concept of humanitarian intervention is not the same as humanitarian aid. Though closely related, intervention is when a state or group of states employs military force within another country’s territory to protect civilians from atrocities and/or the consequences of a humanitarian crisis. Aid is often provided by international or non-governmental organizations (NGOs), such as the Red Cross, which attempt to bypass political affiliation and “neutrally” deliver food, shelter, and medical care to civilians. This distinction within international humanitarian law, “the leap from provisions providing for the delivery of humanitarian relief to military intervention is a long one, but not too long for those politically motivated to do so.” This distinction is further blurred because humanitarian intervention has no formal legal definition. The concept of such intervention can be found in tenets of international law, political science, ethics and international affairs. There are varying definitions and historical understandings of the idea.

துணை நூல்கள்

 1. Aravanan.K.P ( 1992), Thamizhar mel nigazhntha padaiyeduppugal, Thamizh kottam,  puducherry
 2. Aravanan.K.P ( 1992), Tamilikya samoogaviyal, Tamizh kottam, Puducherry
 3. Mathaiyan. P ( 2004) Sangakala Inakuzhu samuthayamum arasu uruvakkamum, NCBH, Chennai.
 4. shanmugam pillai.Mu ( 2000), Sangath tamizhar vazhviyal, IITS, chennai-113.
 5. Thamizhannal ( 2009), Sangamarabu, Chinthamani Pathippagam, Madurai

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!